சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம் - சத்தங்களின் காலம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

அம்மன் அழைப்பிற்காக ஊர் எல்லையில் கிடா பலியிட்டு கோயில் திரும்புவது வழக்கம்

மீண்டும் ஒரு கப் காபி

காபி ஒத்துக்கொள்ளாமல்போய்

ஆறுமாதம் ஆகிவிட்டது

ஒரு காலத்தில்

காபியை அவ்வளவு பிடிக்கும்

அனைத்து வண்ணப் பூனைக்குட்டிகளையும்

அணைத்துக்கொள்வதைப்போல

எத்தனை மோசமான காபியாக இருந்தாலும்

அதை அத்தனை அன்போடு ருசிப்பேன்

கடைசியாக உன்னோடு அருந்திய காபி

இன்னும் நினைவில் இருக்கிறது

அத்தனை கசப்பான காபியை

நான் அருந்தியதேயில்லை

பிரிவின் சுவை

காபியில் இறங்கியது அப்போதுதான்

மீண்டும் மீண்டும்

ஒரு நல்ல காபி

கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான்

ஒவ்வொரு கோப்பையையும்

சுவைக்கத் தொடங்குகிறேன்

உன்னிடமிருந்து

ஏதேனும் செய்தி வந்துவிடும்

என்று எதிர்பார்ப்பதைப் போல.

- கௌரி சிவா

சொல்வனம் - சத்தங்களின் காலம்

பலியிடல்

அம்மன் அழைப்பிற்காக

ஊர் எல்லையில்

கிடா பலியிட்டு

கோயில் திரும்புவது வழக்கம்

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு

இப்போது அம்மன் அழைப்பு

தீப்பந்தத்தோடு கூட்டம்

பேருந்து நிலையத்தைக் கடந்து

எல்லையை நோக்கி நடக்கிறது

எல்லையென வரையறுத்த

புளியமரம் இருந்த இடத்தில்

இப்போது

பெரிய பெரிய கடைகள்

சாமியாடி வந்தவர்கள்

கிடாக்குட்டியோடு சேர்த்துத்

தங்கள் எல்லையையும்

பலி கொடுத்துவிட்டுத்

திரும்பினர்.

- ச.ஜெய்

***

காரணம் அறிதல்

தான் எதற்காக

அங்கு கட்டப்பட்டிருக்கிறோம்

என்று அதற்குத் தெரியாது

தன்னோடு பிணைக்கப்பட்ட

கயிற்றைப் பிடித்து

கண்ணீரோடு யாரோ ஒருவர்

முன்னும் பின்னும்

இழுத்து அடிக்கையில்

அசைகிறது கோயில் மணி

சிறு ஆறுதலாய்

உச்சிக்காலப் பூசையின்போது

பிரசாதம் பெற

எங்கிருந்தோ ஓடி வரும்

குழந்தைகளுக்கு

அழைப்பு மணியாகி

கணப்பொழுதில்

தான் அங்கு கட்டப்பட்டதற்கு

இப்போது கூடுதலாக

மகிழ்ந்திருக்கக்கூடும்

அக்கோயில்மணி.

- அன்றிலன்

****

சத்தங்களின் காலம்

காலம் உருளும் சத்தம்

கப்பியில் கேட்கிறது

தொப்பென்று விழுந்து

வாளி நீரள்ளும் சத்தமும்

பெண்களின் பேச்சு சத்தமும்

தெளிவாய்க் கேட்கிறது

கை வளையல்களின்

உரசல் சத்தம்

பின்னிசை மீட்டுகிறது

புதர் மண்டிய நிலையிலும்

கொலுசு சத்தம் கேட்டு

கிறங்கிக்கொண்டிருக்கிறது

ஒற்றையடிப் பாதை

நேரம் கிடைக்கும்போது

கைவிடப்பட்ட

ஏதாவதொரு கிணற்றினருகே செல்லுங்கள்

வியாபித்துக் கிடக்கும்

கிணற்றின் மௌனத்திற்குள்

காலம் சுழன்றுகொண்டு

அங்கேயே நிற்பதை

உங்களாலும் கேட்க முடியும்.

- மகேஷ் சிபி