
வெளியிலிருந்து பார்ப்பதற்கு எப்போதும் இறுக்கமாகக் காணப்படும் காவல் நிலையங்களிலும் காமாட்சி விளக்குகள் ஒளிரக் கடவுள் புகைப்படங்கள் காட்சியளிக்கின்றன
இன்னும் கடக்காதது!
பச்சை சிக்னல் விழுந்ததும்
சாலையைக்
கடந்துவிட்டதாக
நினைக்க வேண்டாம்
கையேந்தி
காசு கேட்ட ஒருவனின்
பசியை
இன்னும் நீங்கள்
கடக்கவேயில்லை.
- காமராஜ்
****
சாட்சி
தனக்காக
ஒற்றைக்காலில் தவமிருக்கும்
கொக்குகளையோ
வலைவீசிக் காத்திருக்கும்
மீனவனையோ
எல்லோரும்
தடம் பதிக்க ஆசைப்படும்
கடற்கரையையோ
அதை வந்து வந்து மோதும்
அலையையோ
வானத்தை எப்போதும்
பிரதிபலித்துக்கொண்டிருக்கும்
கடலையோ
ஆழ்கடலில் இருக்கும்
முத்துக்களையோ
கடலில் மையம்கொள்ளும்
புயலையோ
பிற உயிரினங்களையோ
நேரில் பார்த்த கடல் மீன்கள் வந்து
சாட்சி சொல்லும் வரை
தொட்டி மீன்களுக்குத்
தீர்ப்பு எழுத முடியாது
தான் அடைபட்டிருக்கும் தொட்டி
சொர்க்கமா நரகமா என.
- கெளந்தி மு
*****

சிவப்புச் சுவர் உலகம்!
வெளியிலிருந்து பார்ப்பதற்கு
எப்போதும் இறுக்கமாகக்
காணப்படும் காவல் நிலையங்களிலும்
காமாட்சி விளக்குகள் ஒளிரக்
கடவுள் புகைப்படங்கள்
காட்சியளிக்கின்றன
உறவுமுறைகள் கூறி
அழைத்துக்கொள்ளும்
அண்ணன் தங்கைகள் உலாவுகிறார்கள்
உடல்நலம் குன்றிய
நண்பனுக்காக
எக்ஸ்ட்ரா டூட்டி பார்த்து
ஓய்வளிக்கிறான் ஒருவன்
பழைய பாடல்களை முணுமுணுத்தபடி
முதல் தகவல் அறிக்கையை
எழுதிக்கொண்டிருக்கிறார்
ஒரு மத்திம வயதுக் காவலர்
பூ விற்கும் பாட்டியிடம்
வாங்கிய மலர்களைப்
பகிர்ந்து சூட்டிக்கொள்கிறார்கள்
இரு பெண் காவலர்கள்
சிவப்புச் சுவர்களுக்குள்
அழகான இயல்புகளை
அடக்கிக்கொண்டுதான்
பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கின்றன
காவல் நிலையங்கள்.
- பிரபுசங்கர் க
****
சூரிய நாடகம்
மரங்களும் மனிதர்களும்
தத்தம் இயல்பிலேயே இருக்க
சூரியன் வந்து
காற்றின் வெப்பத்தைக் கூட்டி
மரத்தின் நிழலையும் காட்டி
நாடகத்தை முடிக்கிறது.
- ரவிகுமார் ஷண்முகம்