பரிதாப அய்யனார்
நெடிதுயர்ந்த அரசமரமே குடை
தன் பரிவாரங்களுடன் வீற்றிருந்தார் அய்யனார்
வருஷந்தோறும் கொடைத் திருவிழா
அமர்க்களமாய் நடக்கும் ஊரில்
சாமியாடிகள் சலங்கை கட்டியாட
பகலிரவு எனப் பத்துநாளும்
ஊர் அமர்க்களப்படும்
வானம் பார்த்தபூமியில்
வசதியாக வாழமுடியாதென
வயல்வெளிகளை விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு
மனிதர்கள் நகரத்தொடங்கினர்
வர்தா புயலில் வேரோடு சாய்ந்தது அரச மரம்
முதியோர் இல்லம் சென்றும் வாழும்
வயதானவர்கள்போல
பழசையெல்லாம் மறந்துவிட்டு
புது இடத்தில்
வாழப்பழகிக்கொண்டார் அய்யனார்
கொஞ்சம் பேர்
நினைவில் வைத்திருக்கலாம்
அவரின் பழைய பிரமாண்டத்தை
கொஞ்சம் பேர்
வைத்திருக்கலாம்
தங்களின் புரொபைல் படமாக.
- பெ.பாண்டியன்
நடவு
அணில் தின்ற கனியில் இருந்து
தப்பிய விதையொன்று
எறும்பின் கால்களால்
நடந்து செல்கின்றது
தேனூறிய
அதன் பிசுபிசுப்பு
தீரும் வரை சுவைத்துவிட்டு
தூறல் விழுகின்ற
ஈர நிலம் பார்த்து
விதைத்து விட்டுப்போகின்றன
வரிசை மாறாத எறும்புகள்.
- அமீர் அப்பாஸ்
முடிவுகளின் சுமை
டோக்கன் தந்து
ரத்த மாதிரி பெற
சாப்பிட்டு வரச்சொல்லி
அலைக்கழிக்கப்படும் மதியங்களில்
சத்தியமாய் பசிப்பதில்லை
பரிசோதனை முடிவுகளெனக் கூறி பத்திரமாய் தரும்
உறைக்குள் உறங்கும் அடுத்தநாளின்
நிச்சயத்தன்மைக்கு அவ்வளவு கனம்
அடுத்தது நீங்கள்தானென
அழைப்பாளினி
சொல்லும் வார்த்தைகளை
நேரடி அர்த்தம் கொள்ள மறுக்கிறது மனம்
வரப்போவது
நற்செய்தியா துக்கச் செய்தியாவென
அறைக்கு வெளியே காத்திருக்கும்
ஐந்து நிமிடங்களுக்குள்
சதிராட்டம் ஆடிவிடுகிறது காலம்.
-ந.சிவநேசன்

அப்பாவும் பட்டாணிக்கடலையும்
மழைநாள்களில்
யாசின்கடை பட்டாணிக்கடலை
பொட்டலத்தோடுதான்
வீட்டுக்கு வருவார் அப்பா
அப்படியே அரிசி புடைக்கும்
சொளகில் கொட்டி தூசி தட்டி
பங்கு வைப்பாள் அம்மா
குளிருக்கு இதமாயிருக்குமென்று
அதிகம் விரும்பிச் சாப்பிடுவார் அப்பா
மஞ்சள் நிறத்தில் மாவுக்கடலையே
என் பங்கில் அதிகமிருக்கும்
அண்ணன் கறுப்புக்கடலையை
கடுக்முடுக்கென்று கடித்து
வலிதாங்காமல்
பல்லே விழுந்தமாதிரி பதறிப்போவான்
கொஞ்சம் பெரிய கடலையாய்
பொறுக்கியெடுத்து தங்கை
பல்லாங்குழி விளையாடுவாள்
இப்பவும் மழைநாளில்
அப்பாவைப்போல பட்டாணி வாங்க
ஆசைப்பட்டாலும்
பிள்ளைகளுக்குப் பிடிக்குமென்று
சம்ஸா வாங்கிப் போகிறேன் வீட்டுக்கு.
- காசாவயல் கண்ணன்