Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

இணைய வகுப்பில் மிஸ் சொல்லச் சொல்ல ம் ம் என்று தலையாட்டியபடி கிறுக்கிக்கொண்டிருந்தான்

மகிழ்ச்சியின் வண்ணம்

சந்தோஷத்தில் குதிக்கிறாள்

வண்ணத்துப்பூச்சியைப்

பிடித்த சிறுமி

முள்ளில்லா ரோஜா தன்னைப்

பற்றியதுபோல

பரவசத்தில் படபடக்கிறது

பட்டாம்பூச்சி.

- வல்லம் தாஜுபால்

****

திண்ணைக்கு வரும் நிலா

இணைய வகுப்பில்

மிஸ் சொல்லச் சொல்ல

ம் ம் என்று தலையாட்டியபடி

கிறுக்கிக்கொண்டிருந்தான்

இளவேனில்

வெள்ளைத்தாள் வண்ணமாக மாறியது

மரத்தில் அணிலுக்குப் பதில்

பூனையை வரைந்திருந்தான்

ஆச்சியின் குரலுக்கு

‘வர்றேன்’ என்று

குப்பையைப் பிரித்துத்

தொட்டியில் போட்டான்

மிஸ் பேசிக்கிட்டே இருக்க

டேட்டா காலியாகிக்கொண்டிருந்தது

தாத்தாவுக்கு இப்போது

நண்பரிடமிருந்து அழைப்பு

தர மறுத்த செல்போனை

செல்லம் கொஞ்சி வாங்கினார்

மிஸ் பேசிட்டே இருக்க

வகுப்பறை முடியும் முன்

தூங்கிப்போனான்

நிலா நிலா ஓடி வா

நில்லாமல் ஓடி வா

ஓங்கிப் பாடிக்கொண்டிருந்தான்

எதிர்த்த வீட்டுத் திண்ணையில்

தமிழழகன்.

- வீரசோழன் க.சோ.திருமாவளவன்

***

அவதாரம்

எஞ்சாமி என்றுதான் பெரியவர் அழைப்பார்

படக்கென தாயிதான் வரும் அப்பாவுக்கு

தேவதை எங்கன்னுதான் சித்தப்பா கேட்பார்

குலசாமி பேர்தான் பெரியாத்தாவுக்கு

குட்டிம்மா என்பது எல்லாருக்கும் பொதுவான பேர்

காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டவன்

மாமியார் வீடு வரும்போதாவது

காதல் பொண்டாட்டியைச் செல்லமாக

ஏய் பிசாசு என்றழைப்பதைத் தவிர்க்கலாம்

குடும்பமே குலைநடுங்கப் பார்க்கிறது.

- கவிஜி

சொல்வனம்

வினோதம்

வாசலில் புதுக்கோலம்

வெற்று நாற்காலியின் காவலுடன்

தாண்டிச் செல்லும்

ரசனையுள்ளவர்களையெல்லாம்

விட்டுவிட்டு

மிதித்துச் செல்லும்

ரசனையற்றவர்களை மட்டுமே

எச்சரித்தும் ஏமாந்தும்விடுகின்றன

நாற்காலியும் கோலமும்.

- நல முத்துக்கருப்பசாமி

*****

பயணம்

சொந்த ஊருக்கு

நான்கு வழிப்பாதையில்

செல்லும் மகிழுந்தை

ஓட்டுபவன் மனமோ

நடந்து போகிறது

முன்னொரு காலத்தில்

அதே இடத்தில் இருந்த

ஒற்றையடிப் பாதையில்.

- கி.ரவிக்குமார்