காத்திருக்கும் கடவுள்
வருஷம் கழித்துப்
பிறந்த பிள்ளைக்கு
பெயர் வைக்கும் வைபவம்
`சுடலைமாட சாமி, நம்ம
குலதெய்வம் பேர்தான்’
என்றார் அப்பா
`ஐயனாரப்பன்தானே நல்லா இருக்கு’
இது அம்மா;
அவங்க வீட்டு சாமியாச்சே
`எல்லாம் சற்று பழசு’
சிணுங்கினாள் மனைவி
கடைசியில்
புதுப்பெயருக்குச் சீட்டெடுக்க
முடிவாகியது
குலுக்கலில்
தன் பெயர் அறிய
சற்றே
வாசலில் வந்தமர்ந்தார்
கடவுள்!
- சிவஞானம் வெற்றிவேல்

பிஞ்சு உலகம்
இடதுகால் செருப்பை வலதிலும்
வலதை இடதிலும் அணிந்துகொள்கிறார்கள்
தண்டவாளமில்லாத
ரயிலை வானில் பறக்க விடுகிறார்கள்
மயிலிறகைப் புத்தகத்தில் மறைத்து
குட்டிபோட மந்திரம் புரிகிறார்கள்
யார் கைநீட்டினாலும்
அப்படியே அள்ளித் தந்துவிடுகிறார்கள்
இருக்கும் அரிசியை
எறும்புக்கு உணவாக்கி ரசித்து நிற்கிறார்கள்
தாலாட்டுகையில்
பொம்மையோடு சேர்ந்து
தானும் உறங்கிப்போகிறது இரவும்
கபடமற்ற மனத்தோடு
காண்கிறவர்களைச் சிரிக்க வைக்கும்
இப்பிள்ளைகள்
பின்னாளில் எங்குதான்
அநீதியைக் கற்றார்கள்..!
- கார்த்திகா
மறைதல்
மிக நீண்ட வெயிலின்
கூட்டுக்குள்
உறைந்து கிடக்கிறது
கூறுபோடாத
வானவில்லின்
நிறப்பிரிகை...
- அழகிய மணவாளன்
மகிழ்ச்சியின் வண்ணம்
சந்தோஷத்தில் குதிக்கிறாள்
வண்ணத்துப்பூச்சியைப்
பிடித்த சிறுமி
முள்ளில்லாத ரோஜா தன்னைப்
பற்றியதுபோல
பரவசத்தில் படபடக்கிறது
பட்டாம்பூச்சி.
- வல்லம் தாஜுபால்
சிறுமியும் மழையும்
பாதைமுழுக்க
ஆடுகளோடு போகிறாள்
சிறுமி
இருள் கவிந்த
மேகத்திற்குள்ளிருந்து
மழை பார்க்கிறது
அவள் தலைச்சுமையாய்
பொறுக்கிப் போகும்
சுள்ளிகளை.
- சுஜய் ரகு, திருப்பூர்