சொட்டும் நிழல்
அடித்துப் பெய்கிறது
வெயில்
அங்கொன்றும் இங்கொன்றுமாக
மரங்களில் சொட்டுகிறது
நிழல்.
- காசாவயல் கண்ணன்
****
ஆச்சி
கோடை விடுமுறைக்கு
ஊருக்குப் போகும்போதெல்லாம்
புளியமரத்திலிருந்து பழங்களை உலுப்பி
கூடைகளில் அடைந்துவைத்திருப்பாள் ஆச்சி
புளியோடுகளை
உடைத்து புளியம்பழத்திலிருந்து
பிரிக்கும் பணி துரிதமாக நடைபெறும்
தன் மூன்று பிள்ளைகளுக்கும்
வருடத்திற்குத் தேவையான புளியை
பங்கு வைத்தது போக
விற்பனைக்கென்று ஒதுக்கிவைப்பாள் ஆச்சி
அவளுக்குப்பின்
குத்தகைக்குப்போனது மரம்
பின்னொரு நாள்
இல்லாத மரத்தின் நிழலில் கால் நீட்டியமர்ந்து
தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்
ஆச்சியின் சித்திரத்தில் புளியம்பழங்கள்
விழுந்துகொண்டிருந்தன.
- பாண்டிச்செல்வி விஸ்வநாதன்
*****

நிழல்
‘நிழல் எனக்கு மிகப் பிடிக்கும்’ என்கிறாள்
‘இதிலென்ன வியப்பு’ என்றேன்
‘எப்போதும் சூரியனின்
எதிர்த்திசையில் தோன்றும் வானவில்லைவிட
நிழல் மிகப்பிடிக்கும்’ என்கிறாள்
‘இரவென்பது இரவல்ல... நிழல்’ என்கிறாள்
‘நிழலின் கரிய நிறம் வெகுதொலைவில்
நீலநிறமாய் கண்ணாமூச்சி காட்டும்’ என்கிறாள்
‘நிழலுக்குள் நிறங்கள் அடக்கம்’ என்கிறாள்
அவள் சென்றபின்
இருக்கையில் தங்கிவிட்ட
அவளின் ஒற்றை முடியைச்
சேகரித்துக்கொள்கிறேன்
அவள் நிழலின் ஒரு பிரதி என!
- பாப்பனப்பட்டு வ.முருகன்
****
பயணிக்காத பறவை
வாகனங்களெதுவும் பயணப்படாத
நெடுஞ்சாலையொன்றின்
மைல் கல்லின் மேல்
நெடுநேரமாய் அமர்ந்துகொண்டிருக்கிறது
பறவையொன்று
இளைப்பாறலா அல்லது
இணையின் வரவொன்றிற்கான
காத்திருப்பா தெரியவில்லை
தூரத்து மரமொன்று
விடுக்கும் அழைப்புக்களை நிராகரித்துவிட்டு
அமர்ந்திருக்கும் பறவையின்
பிரயாணத்திட்டமெதுவும் தெரியவில்லை
எழுதப்பட்டிருக்கும்
ஊருக்கு இன்னமும்
எண்பது கிலோமீட்டர்கள்
பயணிக்க வேண்டும்
எனச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது
மைல்கல் பறவையினடத்து.
- சௌவி