சினிமா
Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

மொட்டைமாடி போதிமரம்

நடைப்பயிற்சியென்று

தரையினை அதிர்ந்து உதைத்தபடி

நடப்பவர்களை

விட்டுத்தள்ளுங்கள்

பறந்துகொண்டிருக்கும்

காத்தாடிக்கு நூல் விட்டுக்கொண்டிருக்கும் சிறுவன்

ஒருபுறம் இருக்கட்டும்

கோடையிலும் மின்சாரம்

தடைப்பட்ட சமயத்தில் மட்டுமே

காற்றைத் தேடி வருபவர்களைக்

கணக்கிலேயே சேர்க்காதீர்கள்

வானம்

நிலவு

நட்சத்திரமென்று

காகிதத்துடன் மேலே நிற்பவன்

ஒரு நாடோடி

கண்டுகொள்ளாதீர்கள்

பாத்திரத்தில் சாதத்தை

எடுத்துக்கொண்டு

தள்ளாத வயதில்

பிடிப்புடன் படியேறி தினமும் காலையில்

சுற்றுச்சுவரில்

படையலிட்டு வியக்க வைக்கும்

அந்தப் பாட்டிக்காகவும்

அவளைச் சூழ்ந்து நிற்கும் காக்கைகளுக்காகவும்

இன்னும் படைக்கப்பட்டுக்கொண்டேயிருக்கட்டும்

வானம் பார்க்கும் பல மொட்டைமாடிகள்.

- சரண்யா சத்தியநாராயணன்

அற்புத வாழ்வு

கோயில் வாசலில்

பிச்சையெடுப்பவனின் பிரார்த்தனை

என்னவாயிருக்கும்?

காலகாலத்துக்கும்

பலூன் விற்பவனின்

ஆசைகள் என்னவாயிருக்கும்?

யாசகம் கேட்க

எத்தனையோ வழிகள் இருந்தும்

ரயில் பயணத்தில்

புல்லாங்குழல் இசைப்பவனின் விருப்பம் என்ன?

நாய்கள் குரைக்க நடுநிசியில் வந்து

நல்வாக்கு சொல்லிப்போகும்

சாமக்கோடங்கி

என்ன எதிர்பார்க்கிறார்?

எதுவும் தெரியாது.

ஆயினும்

குப்பைகள் பொறுக்கி

பிழைப்பு நடத்துபவளின்

சிரிப்பைப்போல

அவசரமில்லாமல்

வாழ்ந்துவிட்டுப் போகமுடிந்தால்

எவ்வளவு அற்புதம் இந்த வாழ்வு?!

- திருமயம் பெ.பாண்டியன்

வரிசை

இந்த வரிசைக்கு எப்படி வந்தேன்

என்று தெரியவில்லை

பின்னால் என்னைவிட உயரமாக

இரண்டு பொய்கள்

முன்னால் என்னிலும் வலுவான

நாலைந்து துரோகங்கள்

வஞ்சகம்தான் வரிசையை

நடத்திக்கொண்டிருந்தது

கட்டக் கடைசியில் பேராசை

நின்று தள்ளிக்கொண்டிருந்தது

நிற்க முடியாமல் விழுந்த

என்னைக் கண்டு எல்லாம் சிரித்தன

என்ன சத்தம் என்று வஞ்சகம்

திரும்பிப் பார்த்தது

உண்மை விழுந்துவிட்டது என்றது

என் பின்னாலிருந்த பொய்!

- அசோக்ராஜ்

சொல்வனம்

தொலைவு

அவசர அவசரமாக

பூக்கடைக்குச் சென்று

தொங்கும் மாலைகள்

ஒவ்வொன்றாய்

பார்த்தபடி

விலை விசாரிக்கிறேன்

சாமிக்கா

இல்ல வேறெதுக்காகவா எனக்

கேட்கும் பூக்காரியிடம்

சாவுக்கு என்கிறேன்

சாமிக்கு அறுபது

சாவுக்கு அறுபத்தஞ்சு என்றபடியே

எடுத்துத் தருகிறாள்

ஐந்து ரூபாய்

வித்தியாசத்தில்

இன்னும் முகிழ்க்காமல் இருந்தன

நாம் தேடும் கடவுளுக்கும்

விலக்கும் மரணத்துக்கும்

இடைப்பட்ட தொலைவில்

இருந்த மொட்டுகள்.

- தி.கலையரசி