Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

சன்னலுக்கு உள்ளேயிருந்து கையை நீட்டுகிறாள் எட்டாத தூரத்திலிருக்கும் குழந்தைக்கு பிரசாதம் தருவதைப் போல

சொல்வனம்

சன்னலுக்கு உள்ளேயிருந்து கையை நீட்டுகிறாள் எட்டாத தூரத்திலிருக்கும் குழந்தைக்கு பிரசாதம் தருவதைப் போல

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அக்கறை

மரம் வளர்ப்பது பிடிக்குமென்கிறாய்

தினம் இரண்டு முறை

செடிகளுக்கு நீர் விடுகிறாய்

பூச்சி பிடித்த இலைகளை

களையெடுக்கிறாய்

கொடிகளைப் படரவிட

மறப்பதேயில்லை

சருகுகளுக்காகக் கண்ணீர் விடுகிறாய்

கூட்டுக் குடும்பமெனும் மரம் நன்றாகத்தான் வளர்கிறது

நம்‌ அறையைச் சுற்றி நீக்கமற நிறைந்திருக்கும்

பசலைக் கொடி மட்டும்தான்

உன் பார்வையில் தெரிவதே இல்லை.

- ச.ஆனந்தகுமார்

****

புரளும் புத்தகம்

அம்முலுவின் தளிர் விரல்கள்

மேசையில் இருக்கும் புத்தகத்தின்

தாள்களைத் திருப்புகின்றன

ரத்தம் சிந்திய வரலாற்றின்

பக்கங்களில் இருந்து

குட்டி போட்ட தோகைமயிலொன்று

தவழ்ந்து வெளியில் வருகிறது

அம்முலு அகவியபடி பின்வருகிறாள்

நரிக்கு வடையுடன்

வானம் பரிசளித்த காகத்தின்

கால் விரல்களில்

அணைந்துகொள்கிறது தோகைமயில்

காகம் சிறகு விரிக்கிறது

அம்முலு பறக்கிறாள்

வரலாறு புரண்டுகொள்கிறது

நீங்கள் வசை பாடியபடி

மேசையை

சுத்தம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

- அகராதி

சொல்வனம்

ஆறுதல்

காரணம் சொல்லத் தெரியாமல்

அழுதழுது ஓய்ந்து

பெரும் இரைச்சலுக்கு நடுவே

சலனமின்றித் தூங்கும் குழந்தை

கனத்த மேகப்பொதிகளைத்

தரையிறக்கி விட்ட நிம்மதியில்

ஆசுவாசமடையும் வானம்

அடியோடு வெட்டப்பட்டபின்

அமைதியில் ஊன்றி நிற்கும்

ஆணி வேர்

எல்லாம் இழந்த பிறகு

இனி தொலைக்க ஒன்றுமில்லை எனத்

தேற்றிக்கொள்ளும் மனோதிடம்

உன் வாழ்வில்

இனி நான் இல்லவே இல்லை

என்றுணர்ந்து

அரற்றி முடித்து

ஆறுதல்பட்டுக்கொள்ளும்

காதல்.

- தி.கலையரசி

****

பிரசாதம்

சன்னலுக்கு உள்ளேயிருந்து

கையை நீட்டுகிறாள்

எட்டாத தூரத்திலிருக்கும்

குழந்தைக்கு

பிரசாதம் தருவதைப் போல

கொஞ்சூண்டு நீரைத் தருகிறது

காற்றின் திசையிலாடும்

சாரல்

கையை உள்ளிழுத்துக்கொள்கிறாள்

திருப்தியோடு.

- ந.சிவநேசன்