Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

பேரிரைச்சல்கள் இன்றி தன்னைக் கொஞ்சம் மௌனித்துக்கொண்டது பேருந்து நிலையம்

சொல்வனம்

பேரிரைச்சல்கள் இன்றி தன்னைக் கொஞ்சம் மௌனித்துக்கொண்டது பேருந்து நிலையம்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மர்மம்

மூடப்பட்டேயிருக்கிறது கதவு

உள்ளே கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்

உள்ளே

தூக்குப் போட்டுச் செத்துப்போன பெண்

பேயாக மாறி வசிப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்

உள்ளே

பாம்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்

உள்ளே

எப்போதோ ஏற்றி வைக்கப்பட்ட தீபமொன்று

இன்னமும் அணையாமல்

எரிந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்

உள்ளே

குட்டிச்சாத்தானைப் பழக்கி

அடைத்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் சிலர்

மூடப்பட்ட கதவு

எல்லாவற்றையும் உண்மையென்றே

சொல்லிக்கொண்டிருக்கும்

திறக்கப்படும் வரை.

-சௌவி

மௌனத்தால் மூடப்பட்ட பேருந்து நிலையம்

பேரிரைச்சல்கள் இன்றி

தன்னைக் கொஞ்சம் மௌனித்துக்கொண்டது

பேருந்து நிலையம்

முழம் இட்டவளின் தட்டுக்கூடையும்

மழை வந்தால் நனையா வண்ணம்

தார்ப்பாய் இட்டு மூடப்பட்டிருக்கின்றன

பக்கத்துணையாய்ப் பழக்கடைகளும்

பிஞ்சுப்பாதங்களில் இருந்து வழிதவறிய

காலணி ஒன்று

தன் வாழ்வு முடிந்ததை எண்ணி

குப்புறக் கவிழ்ந்து குமுறிக்கொண்டிருக்கிறது

கடைசி பஸ்ஸைத்

தவற விட்ட விளிம்புநிலை

மனிதர்களுக்காக மட்டுமன்றி

மனம்பிறழ்ந்த ஒருவனுக்காகவும் நீளும்

இந்த இரவெல்லாம் அவனுடனே

உளறிக்கொண்டிருக்கிறது தூறல் மழை.

- ச. வடிவேல்

குளவி இல்லம்

சமையலறை

ஜன்னல் வழியே நுழைந்து

வீட்டுக்குள் வட்டமடித்த

குளவியொன்று

கதவுக்குப் பின்னே மறைந்து

ஒரே மூச்சில் கூடுகட்டிக் குடியேறியும்விட்டது

அகற்றும் அவசரத்தில்

அப்பாவும் பிள்ளைகளும்

ஏக்கப்பெருமூச்சோடு

அவள் சொன்னாள்

அதுவாச்சும் சொந்தமாய்க் கட்டிய வீட்டில்

இருந்துவிட்டுப் போகட்டுமென.

-காசாவயல் கண்ணன்

சொல்வனம்

ரோஜா மாஸ்க்

மைதிலி அக்கா தைத்துக் கொடுத்த

வெண்ணிறத் துணி மாஸ்க்கில்

ரோஜாப்பூவின் வாசம் இருப்பதாக

அடம்பிடிக்கிறாள் புவனா

பூவை உட்பக்கம் வைத்து அணிந்தபடி

பிறந்த நாளுக்கு அப்பா

எடுத்துக் கொடுத்த

மஞ்சள் நிற ஃபிராக்கோடு

கதைபேசித் தூங்கிப்போகிறாள்

கனவில் ரோஜாப்பூவைத் தேடி

நிறைய வண்ணத்துப்பூச்சிகள் வந்ததாகச்

சொல்லிக்கொண்டே இருக்கிறாள்

ஒருநாள் மழைக்குப் பிறகு

கைபிடித்துக் கட்டாயமாய்

இழுத்துச் செல்கிறாள் மாடிக்கு

வயர்க் கொடியில்

கிளிப் மாட்டியபடி தன்னந்தனியாய்

நனைந்து சொட்டிக்கொண்டிருந்தது

மைதிலி அக்காவின்

ரோஜாப்பூ!

-தக்ஷன்