தொடர்கள்
சினிமா
Published:Updated:

சொல்வனம் - வேண்டுதலின் பயணம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ரயில் வண்டிகளின் காட்சி மழைக்காலங்களில் கூரையிலிருந்து உதிர்ந்து வீட்டுக்குள் ஊறி வரும்

ஏறுவதும் இறங்குவதும்

எவ்வளவு மேலே ஏறி

இருப்பேன் என்று தெரியாது

எவ்வளவு கீழே இறங்க

வேண்டும் தெரியாது

ஏறிய தலைக்கனமும்

இறங்க வேண்டிய பயமும்

இல்லாமல் இருப்பது

இலக்குகளைத்

தெரிந்துகொள்ளாமல்

இருப்பதால்தானே!

- மணிவண்ணன்

****

ரயில் வண்டிகளின் காட்சி

மழைக்காலங்களில்

கூரையிலிருந்து உதிர்ந்து

வீட்டுக்குள் ஊறி வரும்

மரவட்டைதான் ரயில்பூச்சி

நெல்லுக்கட்டு கட்டிய

வைக்கோல் பிரி வளையத்துள்

நாலைந்து பேர் சேர்ந்தால்

வரப்புத் தண்டவாளத்தில் போகும்

ரயில் வண்டி

பஞ்சம் பிழைக்க

கேரளா சென்ற

முதல் ரயில் பயணம்

வாரம் ஒரு முறையோ

இரு வாரம் ஒரு முறையோ

அப்பா எனும் சொல்லை

உயிர்ப்பிக்கத் தொடரும் ரயில் பயணம்

ரயில் பெட்டியின் ஜன்னலோரத்தில்

அவ்வப்போது தோன்றி மறைகின்றன

பின்னோக்கி நகரும் இக்காட்சிகள்.

- பூர்ணா

****

வேண்டுதலின் பயணம்

தேங்காய்ப்பூத் துண்டு

தோளில் கிடத்தி வேகநடைபோடும்

தந்தையொருவனைப்

பண்டிகைக்கால சாலையில்

பின்தொடர்ந்தனர்

பூப்பாவாடை சிறுமியும்

அரைக்கால் டவுசர் சட்டையணிந்த

சிறுவனும்

வழியெங்கும்

உள்ள கடைகளை

விழி விரிய வேடிக்கை பார்த்தபடியே

அவசர வேலையால்

பின்தொடரவில்லை

ஆயினும்

அவ்விருவரின்

வேண்டுதல்கள் நிறைவேற

பிரார்த்தித்துக்கொண்டேன்.

- அரியலூர் ச.வடிவேல்

சொல்வனம் - வேண்டுதலின் பயணம்

வானத்தின் ஆசை

வானம் பூமியில் வாழ ஆசைப்பட்டது

புல் மீதுள்ள பனித்துளி

குழந்தை ஊதிவிட்டுக் குதூகலிக்கும்

சோப்புக் குமிழ்

வாசலில் வைத்திருக்கும் அண்டா நீர்

உடைந்து குப்பையில் கிடக்கும் கண்ணாடித்துண்டு

செடிகளில் படிந்துள்ள மழைநீர்

அனைத்திலும் புகுந்து பார்த்தது வானம்

எதுவும் நிரந்தரமில்லை

நொடியில் முடியும் வாழ்க்கை

பேசாமல் மேலேயே நின்றுவிட்டது

நிரந்தரமாக.

- டி.தெய்வானை