சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம் - மழைக்காலப் பறவைகள்...

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

கைகளின் கொடூரம்!

கூண்டுக்குள் துழாவும்

அந்தக் கைகளைத் தெரியும்

அதில் கத்தி இருக்கிறது

கழுத்தை லாகவமாய் நெரிக்கும்

வித்தை இருக்கிறது

ஓடி ஒதுங்கிக் குறுகி ஒளியும்

சிறு கோழியை

முடிந்த அளவு தவிர்த்துச் செல்லும்

அந்தக் கைகளில்

கருணையும் இருக்கிறது

விழிபிதுங்கி உயிர் போகும்

மூத்த கோழி

படபடக்கப் பார்க்கிறது

கத்தி உள்ள

இவன் கைகளைவிடவும்

வாசலில் நிற்கும்

காசுள்ள கைகளின் கொடூரம்.

- கவிஜி

சைக்கிளிங்

அம்மாவின் வாரக்கடைசி

சம்பள நாள் வரை காத்திருப்போம்

வாடகை சைக்கிள் ஓட்ட

நண்பர்களிடமிருந்து பெறப்பட்ட

இரவல் சைக்கிள் காலம் அலாதியானது

சீட்டு போட்டு

வாங்கிய புது சைக்கிளை

முன்பு

இரவல் தந்தவனுக்குக்கூட

இரவல் தராமல்

ஒளிந்தும் மறைந்தும்

இரும்பு மின்மினியில்

சிறகடித்ததும் ஒரு காலம்

கொழுப்பைக் குறைக்க மருத்துவர்

ஜிம்மில் சைக்கிள் மிதிக்கச் சொல்ல

மீண்டும் வாடகை சைக்கிளிலிருந்து

தொடங்கு என்கிறது காலம்

‘க்ளிங்' எனச் சிரிக்கிறது

வாடகை சைக்கிள் பெல்.

- இளந்தென்றல் திரவியம்

சொல்வனம் - மழைக்காலப் பறவைகள்...

பெரியசாமி!

பெரியசாமி என் கணவர் பெயர்

பெரிய பணக்காரர் இல்லை

ஓட்டு வீட்டுக்கு வாடகை

ஓட்டிச்செல்லும் மொபெட்டுக்கு பெட்ரோல்

ஒன்னரை ஜி.பி. இன்டர்நெட்

வீட்டில் எல்லோருக்கும்

இரண்டு தட்டு சோறு

இரண்டு டம்ளர் காபி

இவை தாண்டி

பிள்ளையின் ஃபீஸ் கட்டவே

பெரும்பாடுபடுவார் பெரியசாமி

அன்பு காதல் பற்றிப் பேசும் அளவுக்கு

ஆடம்பர வாழ்க்கையில்லை

எல்லாச் சண்டையின் முடிவிலும்

எழுந்து கோபமாய் வெளியே போனால்

இரவில் வீடு திரும்பி

எவரும் அறியாமல் படுத்துக்கொள்வார்

இன்றும் அப்படித்தான்

பிள்ளை கேட்ட சைக்கிளை மறுத்து

பேச்சு பெரிதாய் ஆன கணத்தில்

ஓங்கிய கையை அப்படியே விட்டுப் போனவர்

பிள்ளை உறங்கிய பின்னர் வந்து

பெருமூச்சுடன் அமர்ந்திருந்தார்

அட்சய திரிதியை அன்றும்

அவர் என் காலடியில்

நானறியாமல் அமர்ந்திருந்திருக்கலாம் இப்படி.

- சாய்மீரா

மழைக்காலப் பறவைகள்...

மழைக்காலப் பறவைகள் வாழ்வு

அவ்வளவு செழிப்பாய் இருப்பதில்லை

தூவானமென்பது

மழை நனைந்த குருவிகளின்

சிறகுச் சிலிர்ப்புகள்

மழை முடிந்து

மரம் வடிக்கும் துளிகள்

கூடு தங்கிய

குருவிகளின் கண்ணீர்

நடுங்கி நிற்கும்

குருவிகள்

கூறுவதெல்லாம்

மரம் ஒதுக்கிய மழை வேண்டுமென்றுதான்.

- சாமி கிரிஷ்