கட்டுரைகள்
சினிமா
தொடர்கள்
Published:Updated:

சொல்வனம் - ஆகி வந்த மனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

ஒரு சோகப்பாடலைப் பற்றிக்கொண்டு தவிக்கையில் எங்கிருந்தோ கரைந்து வரும் காதல் பாடல்

கண்ணீரான மழை

ஒரு பண்டிகைக்கென்றோ

திருவிழாவுக்கென்றோ

நான்கைந்து நாள்கள் தொடர் விடுமுறையில்

ஊருக்கு வந்துவிட்டுத் திரும்புவதென்பது

மனத்தை அழுத்தி அழுத்தி

கண்களில் நீரேற்றிவிடுகிறது

என்னதான் கட்டுப்படுத்தினாலும்.

பால்யத்தில் தன் விழுதுகளால்

ஊஞ்சல் விளையாட்டைச் சொல்லிக்கொடுத்த

இரட்டை ஆலமரம்

எல்லாச் சாயங்காலமும் காற்றில் பரவும்

ஒலிபெருக்கிப் பாடல்கள்

தலையுயர்த்திப் பார்த்தபடி

அன்பின் பாஷையைக் கண்களால் தெளிக்கும்

கட்டுத்தறி மாடு

முகர்ந்து பார்த்தபடி

கால்களை உரசிக்கொண்டு

போகாதே எனும் நாய்

‘‘அடுத்து எப்ப வருவே’’ எனக்கேட்ட அம்மா

‘‘போய்ச் சேர்ந்ததும் போன் பண்ணுங்க’’ என்ற அப்பா

நிறுத்தம் வரை வந்து

வழியனுப்பிய தம்பி

எல்லாமும் சேர்ந்து அழவைக்கின்றன

கட்டுப்படுத்தவே முடியவில்லை

பேருந்தில்

முன்புறச்சீட்டின் கம்பியில் குனிந்தபடி

யாருக்கும் தெரியாமல் அழத்தொடங்குகிறேன்

திடீரென ஆரம்பித்து

பேருந்தின் கண்ணாடிக் கதவுகளில்

கண்ணீரென வழிகிறது மழை.

- சௌவி

சொல்வனம் - ஆகி வந்த மனம்

ஆகி வந்த மனம்

ஒரு சோகப்பாடலைப்

பற்றிக்கொண்டு தவிக்கையில்

எங்கிருந்தோ கரைந்து வரும்

காதல் பாடல்

ரப்பர் போல சோகத்தை

அழித்து மேலே ஏறி

அமர்ந்துகொள்கிறது

சட்டெனக் கேட்கும்

ஒரு தத்துவப் பாடலின் விசில் சத்தம்

அதனை மாற்றிவிட

தொலைக்காட்சியில்

ஒலிக்கும் குத்துப்பாடல்

தத்துவங்களை மீட்டுக்கொள்கிறது

அதிரக் குதித்து

ஆடிக்கொண்டிருக்கையில்

நண்பரின் பதிவில்

பாராட்டப்பட்டிருக்கும்

மென்மையான குழந்தைப் பாடல்

நிறைத்துத் ததும்ப

இப்படியாக

பாடல்களால் ஆகிறது

மனம்.

- செந்தில் விஜி

****

காலத்தை உதைத்தல்

பழைய கடிகாரத்தை

புதியதென

வாங்கி வருகிறேன்

உறங்கினால்

இறந்துவிடுவோமென

ஓடும் கடிகாரத்திற்கு

இது எத்தனையாவது

பிறவியென

கடைக்காரனுக்கே வெளிச்சம்

இதயத்தை அடிக்கடி மாற்றும்

புதிய ஓட்டமானாலும்

பழைய பாதைதான்

இருப்பைக் காட்ட

சத்தமிட்டுக்கொண்டிருந்த

கடிகாரம் இன்று

சாவி கொடுக்க வேண்டாமென

ஓட்டையை அடைத்து

மௌனமானது

மூன்று காலில் ஓடிய கடிகாரம்

டிஜிட்டல் அவசரத்தில்

கால்களின்றி

காலத்தை உதைத்துத் தள்ள

உடைந்து கிடக்கிறது

ஏணி.

- காரைக்குடி சாதிக்