Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

தேவதைக் கதை

கொஞ்சமாய்க்

கதவு திறந்திருந்த

அந்தக் கூண்டுக்குள்

சின்னதாய்

ஒரு

தங்கக் கிரீடமும்

சில ரோஜா இதழ்களும்

மிதந்துகொண்டிருப்பதாய்

கனவொன்று

கண்டு விழித்த நள்ளிரவில்

என் ஜன்னலினோரம்

வெண்ணிற இறகொன்று

கிடந்ததைப் பார்த்த

அன்றுதான்

எழுதத் தொடங்கினேன்

அந்த

தேவதைக் கதையை.

- கிருத்திகா தாஸ்

சொல்வனம்

நிழற் பறவை

ருண்ட வானில்

இன்னமும் இருக்கிறது

பறவையை

எப்போதும்

கடந்திடவியலா

பறவையின்

நிழல் ஒன்று.

- கே.ஸ்டாலின்

சுய மறதி

ஆக்ரோஷமற்று

கம்பீரம் இழந்து

வீடு வீடாய்

யாசித்துக்கொண்டிருக்கிறது

காளை என்பதை மறந்த

பூம்பூம் மாடு.

- மகா

துப்புரவுப் பணிப்பெண்

மஞ்சள் வண்ணப்புடவையின் மீது

அணிந்த சட்டையின் ஓரங்களில்

ஒளிர்கின்றன வண்ணக் கோடுகள்.

விரல்களைவிட வீக்கமானதாக இருக்கிறது கையுறை.

பச்சை வண்ண உருளை வண்டியைத் தள்ளி

பிகில் ஊதி வருகிறார் துப்புரவுப் பணிப்பெண்.

அடுக்ககக் குப்பைகளைச் சேகரித்துச் செல்லுமுன்

சதுரக்கற்கள்மீது உதிர்ந்து கிடக்கும்

பன்னீர்ப் பூக்களைக் குனிந்து திரட்டுகிறார். கையுறை கழற்றி

சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு

மூச்சை ஆழமாய் இழுத்து

நுகர்ந்துவிட்டுத் தூவுகிறார் வண்டியினுள்

மணக்கத் தொடங்குகிறது திடக்கழிவு

- ஸ்ரீநிவாஸ் பிரபு

விசாரிப்பு

‘அம்மா வந்து பாரேன்’

சின்னுக்குட்டி குரலிலேயே மழை

முன்பக்க வாசல்

செண்பகப்பூ இதழ்களாலும் நித்தியகல்யாணியாலும்

நிறைந்திருக்க

இடது சுவர் ஏறியிருந்த ஜாதிப்பூவும்

தோள் தொடும் கறிவேப்பிலையும்

மழைக்கு மினுமினுத்தன.

இடுப்புக்குத் தாவிக்கொண்டு அவன் துளி சேர்க்க

மழை வலுக்கிறது

சின்ன குடம் நிரம்பி

பெரிய குடமும் நிறைந்ததும்

கொஞ்சம் பதற்றமாகிக் கேட்டான்

‘அம்மா மிச்ச மழையை

யார் புடிப்பாங்க...?’

- இந்து