Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

கழுத்துப் பட்டையின்றி தெருவெங்கும் சுற்றுகிறது

சொல்வனம்

கழுத்துப் பட்டையின்றி தெருவெங்கும் சுற்றுகிறது

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

மறுபக்கம்

இலைகளின் இருப்புதான்
மலர்களை அழகாக்குகிறது
வெக்கை கழுவித்தானே
வாழ்ந்துவருகிறது மழை
பயணங்களின் சுவாரசியங்களெல்லாம்
பாதம் தாங்கிய பாதைகளால் ஆனவை
நிலா நட்சத்திரம்
பறவை குறித்த சிலாகிப்பெல்லாம்
ஆகாயத்தின் அடக்கி வாசித்தல்
நீரின் சலசலப்பெல்லாம்
நதியின் மௌனம்
வலிகளின் வரமே
சிரிப்புகளின் சிறப்பு
எப்போதும்
மறைந்திருக்கும் மறுபக்கங்களும்
மகத்தானவை.

- சாமி கிரிஷ்

ஞமலி

கழுத்துப் பட்டையின்றி
தெருவெங்கும் சுற்றுகிறது

நடுவயதுப் பெண்ணொருத்தியின்
பின்னங்கால்களை முகர்ந்தபடி
பின்தொடர்கிறது

பின் மதியங்களில்
புதிதாக வருபவர்களைப் பார்த்து குரைக்கிறது

காருக்கு அடியில்
குட்டியாக ஆசையாய்க்
கையில் எடுத்து
அப்பா திட்டியதால்
திரும்பக் கொண்டு வந்து விட்ட பையன்
இப்போதும் கடக்கும்போதெல்லாம்

அதோ அம்மா... நம்ம டைகர் என்று
சொல்லும்போது மட்டும்
கண்கள் மின்ன
வால் தூக்கிச் சிலிர்த்துப் பார்க்கும்
அதன் பார்வை
நான் உன்னைப் பார்ப்பதுபோலவே இருக்கிறது.

- வெள்ளூர் ராஜா

புரியாத கேள்வி

மேய்த்த களைப்பில்
உறங்குகிறான் பாகன்
அவன் முகம் மேல்
படரும் அடர் வெயிலை
குட்டிக் கண்களிரண்டில் படம் பிடித்ததும்
கால் பரப்பி
நிழல் புரிகிறான்
வாலினைக் கவரியாக்கி
சாமரம் வீசுகிறான்
தந்தமெனும் வில்
பிடுங்கப் பெற்ற கோதண்டராமன்

வீதி முழுவதும்
பாகனைச் சுமந்த தன் பாதங்களை
மட்டும் ஏன்
சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள் என்பதுதான்
புரியவில்லை அவனுக்கு!

- ரகுநாத் வ

சொல்வனம்

ஒரு தேநீர் என்ன செய்துவிடும்

தனிமையின் பின்கழுத்தை
மெல்ல வருடிவிடுகிறது தேநீர்
நோய்மையின் வாதைகளுக்கு
சிறு இடைவெளி உண்டுபண்ணுகிறது
வைகறையிலும் அந்தியிலும்
கடக்கவேண்டிய பாதையை நினைவூட்டுகிறது
உள்ளங்கைகளுக்குள் படரும்
இளஞ்சூட்டில் பிடி ஆதூரத்தை சிந்துகிறது
ரோட்டோரத்தில் அலையும்
மனம்பிறழ்ந்தவனின் மரணத்தை
ஒரு நாள் தள்ளிப்போடுகிறது
பிச்சையெடுக்கையில் ஒரு கணம்
ஓய்வெடுக்க வைக்கிறது
சாதி மாறித் திருமணம் செய்துகொண்ட
இளம் பிள்ளைத்தாச்சிக்கு
கொஞ்ச நேரம் அம்மாவை மறக்கடிக்கச் செய்கிறது
ஒரு தேநீர் என்ன செய்துவிடும்?
கடைசி மிடறில்
ஒரு தற்கொலை முடிவை
மாற்றவும் வலிமையானது
கசப்பும் பழுப்புமான ஒரு தேநீர்!

- திருவெங்கட்