Published:Updated:

சொல்வனம்

 சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கண்மணிகளை அசைக்காமல் முகம்பார்த்து கடைக்காட்சியென உறையவைத்துக்கொண்டு

விடைபெறுதலெனும் பொய்

பெருங்காலக் காத்திருப்புக்கு
மருந்தும் நோவும்
சிறு சந்திப்பு


காபிக்கு பில் கொடுத்தாயிற்று
இனி நீட்டிக்கப்படும் நிமிடங்கள்
காலத்திடம் நேசத்தின் யாசகம்

பேருயிரின்
இன்மையும்
இருப்பும்
ஒன்றுக்கொன்று உறுதியளிக்கும்
விடைபெறுதல் தருணம்

இமை விளிம்புகளில்
வெள்ளப் போராட்டம்
தோல்வியடையும் நேரம்


பேச்சை நிறுத்திக் கிடக்கும்
பிரியத்துக்கு
உயிர்குன்றி அணைந்த
திரிச்சுடரின் மணம்

கண்மணிகளை அசைக்காமல் முகம்பார்த்து
கடைக்காட்சியென உறையவைத்துக்கொண்டு
திசை பிரிந்தன பாதங்கள்


வழியனுப்பிய
தேவகி யசோதை ராதாவின் பரிதவிப்புகள்
ஒருத்திக்குள் ஒன்றாய்த் திரண்டிறங்கும்
ஓலம்

ஒருமணி நேரத்தின்
பின்பாதி நிமிடம் ஒன்றில்
எதிரிலும் கண்கள்
நீர்பூத்து அடங்கிய கணம் நினைவெழும்ப

நாளங்களில் உதிரமெல்லாம்
கண்ணீராய் மாறி ஓடிப் பாய்ந்து
வற்றுகிறது உயிர்.

- அமுதா

****

மழை ஆசிரியர்

வான் உறிஞ்சும் சமுத்திரம்

விளக்கப்படம்

சுவரில் தொங்குகிறது


வகுப்பறையின்

உடைந்த சாரம் வழி

சொட்டுகின்றன

மழைத்துளிகள்


புகலிடமாய் மாறியிருந்த

வகுப்பறையினுள்

மக்காச்சோளமென மக்கள்

குழுமியிருக்க


நெளிந்த சத்துணவுப்

பாத்திரமொன்றில்

சேகரமாகியிருக்கிறது

பசியும் மழையும்


மறுபுறம் கரும்பலகையின்

நெற்றியில் கரைந்துகொண்டிருக்கிறது

`யாவரும் கேளிர்!'

- வ.ரகுநாத்

****

 சொல்வனம்

தேநீராட்டம்

அதிகாலையில் கூடிவிடுகிறது
வேலு கடைத் தேநீருக்குக் கூட்டம்
சுப்ரபாதம் தொடங்கி
வீரமணியின் கணீர்க் குரல்வரை ஓங்கி ஒலிக்கும்
நொடிப்பார்வையில் யாருக்கு
எப்படி எது தூக்கல் எது கம்மி
என்றுணர்ந்து லாகவமாகக் குவளை வீசி வித்தை காட்டி கிளம்பிவிடலாமா என்ற வெறுப்பின் விளிம்பில்
கைக்கு வந்து
அன்றைய புத்துணர்வைத் தொடங்கிவைக்கிறது
ஒரு குவளைத் தேநீர்.

- சுகுமாறன்.சி