Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

தகிக்கும் பெருவெளியாக வட்ட வடிவிலான தோசைக்கல் வெண்ணிற மாவினால் உருவாகும் சிறுவட்டம்

அவதாரம்

முப்பத்தைந்து ரூபாய் என்றதில்

ஒரே யோசனை அம்மாவுக்கு


இயேசு கிறிஸ்துவும்

பிள்ளையாரும்

மெக்கா மதீனாவும்

நாட்காட்டியில் காட்சியளிக்க

கிடைத்துவிட்டது

பிள்ளை வேண்டிய

எழுதும் அட்டை.

- ஆ. கிருஷ்ணதாஸ்

****

கண்மாய் தடம்

வாழ்வைச்

சொல்லித்தருகின்றன

கண்மாயின்

கால் பதிந்த தடங்கள்


கொக்கு விட்டுச் சென்ற மீனை

அலகு பதியம் செய்கிறது

வாழ்க்கையின் வளையங்களை


என்னவெல்லாமோ செய்திட்ட

அந்த நீர்த்துளிகளை என் டவுசர் பைகள்

சேமித்து வைத்திருக்கின்றன



குளமும் அதையொட்டிய ஆலும்

கதை கதையாய்ச் சொன்னதை

கடந்து போகும்போதெல்லாம்

காற்றுக்குமிழ் வரைந்துவிட்டுச் செல்கிறது

வாழ்வின் ரகசியங்களை.

- வீரசோழன் க.சோ. திருமாவளவன்

****

புகையூற்று


இரண்டு முறை ஊதியும்

அணையாமல்

காற்றில் ஊஞ்சலாடும் தீபம்

போக்குக் காட்டி

சிரித்துச் சிணுங்கும் குழந்தை

மூன்றாவது முறை

பட்டென அடிவாங்கி

அணைந்துவிடுகையில்

புகையாய்க் கசியத் தொடங்குகிறது

அழுகை.

- ந.சிவநேசன்

சொல்வனம்

பால்வீதி

தகிக்கும் பெருவெளியாக

வட்ட வடிவிலான தோசைக்கல்

வெண்ணிற மாவினால் உருவாகும் சிறுவட்டம்

பால்வெளியில் தூரத்துக் கோளாகிறது

பின் வட்டம் பெரிதாகப் பெரிதாக

சுழற்சியில் அருகே வருவதுபோல

மேல்புற நுண்துளைகளெல்லாம்

கோளின் சிறு சிறு பள்ளங்கள்

புரட்டிப் போடுகையில்

பகலிரவாக மற்றொரு பக்கம்

இறுதியாகச் சுழன்று ஓய்கிறது

உண்ணக் காத்திருப்பவர் முன்.

- அ.கோ.விஜயபாலன்

******

வேப்பம்புராணம்

இன்னும் சற்று நேரத்தில்

ஆரம்பமாகும் காத்திருங்கள்

மௌன அறிவிப்புகளை வெளியிட்டன

வேப்ப மரங்கள்

என்ன நடக்கப்போகிறது

அறிந்துகொள்ளும் ஆவலில்

தொங்கிக்கொண்டு இருந்த வவ்வால்கள்

அங்குமிங்கும் அலைந்தன

செய்திகளைச் சேகரிக்க

புயல் அறிவிப்பு உண்டா

மேகத்திலிருந்து எட்டிப்பார்த்த நிலா

தொலைக்காட்சி அலைவரிசைகளின்

மனதைப் படிக்க முயன்று தோற்றுப்போக

கும்பாபிஷேகம் நடந்த சிவன் கோயிலின்

புதிய மணியோசை ஒலித்து

ஆரம்பமான தேவாரப் பாடலுக்கு

அதிரடி ட்ரைலர் வெளியிட்ட சந்தோஷத்தில்

அந்த வேப்ப மரங்கள்.

- திருமாளம் எஸ். பழனிவேல்