Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

கவிதை

மழைத்தடம்

மழை கலைத்தாடிய
உடைகளின் சிதறலில்
இரவு கலைந்த
படுக்கையறைச் சாயல்
தண்டமென சபிக்கப்பட்ட
கிளிப் இன்னமும்
ஒருதுளி மழையைக் கவ்வியிருக்கிறது
நெற்றி முத்தமாய்.

- கீர்த்திவாசன்

அதன் பின்னே

ஒரு பெண்ணின் அழுகை
ஒரு தந்தையின் தேடல்
அம்மாவின் பிரார்த்தனை
கடவுள்மீதான நம்பிக்கை
நல்ல வரனுக்கான காத்திருப்பு
ஓடிப்போக அழைக்கும் காதலன்
தடுக்கும் ஜாதி
இடிக்கும் பொருளாதாரம்
மூடநம்பிக்கைகளின் மீதான கோபம்
திருமணமே வேண்டாம் என ஒதுக்கும் மனம்
வாழ்க்கையே வேண்டாமெனத் தூக்கி எறியும் கோபம்
என என்னென்னவோ இருக்கின்றன
தோஷமென்று ஒதுக்கப்படும் ஒரு ஜாதகத்தின் பின்னே.

- திருமயம் பெ.பாண்டியன்

பெயர் முரண்

அரண்டிருக்கும் கடுகளவு கண்கள்
அமுக்கப்பட்ட கூரலகுகள்
ஒடுங்கிப்போயிருக்கும் சிறகுகள்
வெளிறிப்போன நிறங்கள்
என அருகருகில் இருப்பதனால்
`லவ் பேர்ட்ஸ்' என்றழைத்துவிட முடிவதில்லை
பறக்கவியலா தவிப்புகளைக் காட்டும் முகங்களை!

- ரகுநாத் வ

சொல்வனம்

தனித்த வீதி

ரீங்காரமிடும் பூச்சிகள்
ஊளையிடும் நாய்கள்
அலறும் ஆந்தைகள்
சிறகடித்தெழும் பறவைகள்
இவை யாவும் கொடுக்கின்றன
நிலவில்லா இரவிற்கு
தனித்ததொரு கம்பீரத்தை
நடமாட்டமேதுமில்லா இவ்வீதியில்
இப்போதைக்கு நானொரு ரசிகன்.

- மகேஷ் சிபி

இன்மை

திரையரங்கின்
பெயர் சொல்லி நிறுத்தத்தில்
இறக்கி விட்டார்கள்

இப்போது
அந்தத் திரையரங்கு அங்கில்லை

என்னைப்போலவே
பார்க்காத எத்தனையோ பேர்
பெயர் சொல்லி
விசாரித்தபடி வருகிறார்கள்

பார்த்திருந்தவர்களும் ஒருமுறை
இல்லாத திரையரங்கை ஏறிட்டுப் பார்த்தபடி
இறங்கிக்கொள்கிறார்கள்

இல்லாத திரையரங்கு
எங்கோ இருக்கிறது
இவை அனைத்தையும் பார்த்தபடி.

- வெள்ளூர் ராஜா