Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
சொல்வனம்

யாருமற்ற பின்னிரவில் ஏதாவதொரு வனத்திற்குள் நடந்து போய்விடலாமாவென்று தலையைப் பிய்த்துக்கொள்கிறது

பரிசு

குழந்தைநல மருத்துவமனை முன்பாக

மழையிலும் வெயிலிலும் கால்கடுக்க நிற்கும்

பலூன்காரர்

எப்படியும்

அழுது வடியும்

ஒரு மழலைக்காவது

சிரிப்பினைத் தந்துவிடுகிறார்

இலவசமாக.

- தி.கலையரசி

*******

ஒளிமயமான நிகழ்காலம்

மென் கறுப்பு பூசிக்கொண்ட

மாலைப் பொழுதொன்றில்

வானத்தில் வலசை போகிறது பாதி நிலா

ஓட்டைகளின் வழியே

நட்சத்திரங்களாக நிரம்புகிறது

சந்திர வெளிச்சம்

நேற்றைய மழைநீரை

வீட்டுக்குள் சேமித்துக்

களைத்திருக்கின்றன

தலையில்லாப் பானைகள்

கோணிக்கதவை விலக்கி

உள்ளே நுழையும் ஊதற்காற்றால்

உயிருக்கு ஊசலாடுகிறது சிம்னியின் ஒளிமொக்கு

பஞ்ச பூதங்களும்

நிறைந்திருக்கும் வீடு

என்று பெருமைகொள்கிறது

குடிசை!

- திருவாரூர் ந.இராஜசேகரன்

******

சொல்வனம்

பரிதவிக்கும் மரம்

யாருமற்ற பின்னிரவில்

ஏதாவதொரு வனத்திற்குள் நடந்து

போய்விடலாமாவென்று

தலையைப் பிய்த்துக்கொள்கிறது

நகரத்துச் சாலையில் நிற்கும் மரம்

கிளைகளில் கூடுகட்டிக் கரையும் காகங்கள்

மரம் என்ற தோரணையை

அதற்குக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன

புழுதி படிந்த இலைகளை

சிரமத்துடன் அசைத்துவிட்டு

சுவாசிக்கத் தொடங்கும் மரம்

வாகனங்களின் இரைச்சலில்

எதுவும் கேட்பதில்லை

நேயம் கொண்ட வானம்

பூமிக்கு அனுப்பி வைக்கிறது

தன் முதல் துளியை.

- மகேஷ் சிபி

******

நெய்தல்

முழுநிலவையும் தின்றுவிட்டு

வயிறு புடைத்து வானில் படுத்திருக்கின்றன

நட்சத்திரங்கள்

கடலுக்குள் விழுந்த நட்சத்திரங்களை

உறங்க வைப்பதற்காகத்

தாலாட்டிக்கொண்டிருக்கின்றன

கடலலைகள்

ஆட்களற்ற கரைக்கு வந்த நண்டுகள்

நாளை முதன்முதலாய்

கடற்கரைக்கு வருபவர்களுக்காக

ஓவியங்களை வரைந்து வைத்துவிட்டு

கடலுக்குள் செல்கின்றன

தங்கள் பழைய கடல் பயணம் பற்றி

எண்ணியபடி தூங்காமல் படுத்திருக்கின்றன

கரையிலிருக்கும் உடைந்த படகுகள்

தொடுவானத்தைத் தொட்டபடி

தூரத்தில் வந்துகொண்டிருக்கிறது

ஒரு கப்பல்

உற்றுப்பார்த்தபடி

உயரமாக நின்றுகொண்டிருக்கிறது

எந்த இரவிலும்

தூங்குவதற்குக் கொடுத்துவைக்காத

கலங்கரை விளக்கு.

- சௌவி

*****

பிடிக்காதவன்

அறுந்த செருப்புகளை

அவர் அமர்ந்துகொண்டிருக்கிற

சிறிய குடையைச் சுற்றி

அடையாளமாக

அடுக்கி வைத்திருக்கிறார்

நிழல் நகர நகர

நிழலுக்கு நகர்ந்துகொள்வார்

இந்தச் சாயங்கால வேளையில்

நிழல் சாலையோரத்திற்கே

வந்துவிட்டது

எதை எதையோ

நினைத்துக்கொண்டு

சாலையிலிருந்து அவரை நோக்கி

ஒன்றிரண்டு அடி வைத்து

வரத் தயங்கிய கால்களுக்கு

இப்போது தயங்க

அவசியம் இருக்காது.

- ச.ஜெய்