Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

எனக்குப் பிடிக்காத பாடல்தான் அலைவரிசையை மாற்றிவிட நினைத்த கணத்தில் சமையலறைக்குள்ளிருந்து

சொல்வனம்

எனக்குப் பிடிக்காத பாடல்தான் அலைவரிசையை மாற்றிவிட நினைத்த கணத்தில் சமையலறைக்குள்ளிருந்து

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

வேலி

அங்கே

உண்மையில் ஒரு பெயர் இருந்தது

ஒரு சாலை இருந்தது

அவசரமாகச் செல்ல ஒரு திசை இருந்தது

வந்தும் போகவுமாக

வழிப்போக்கன் இருந்தான்

போவதறியாது திகைத்து

நின்ற இரண்டு

நாய்க்குட்டிகளிருந்தன

பாதச்சுவடுகளின் மீது

மழைத்துளிகள் தூறின

நினைவிருந்தது

இருவேறு நட்சத்திரங்களாக

வானில் தாத்தா இருந்தார்

கிழவி இருந்தாள்

கதைகளிருந்தன கனவுகளிருந்தன

எல்லாம் நேற்று குறுக்காய்

வேலி முளைத்து

‘இது பொதுவழியல்ல’

என்னும்வரை.

- சுஜய் ரகு-திருப்பூர்

*****

மாறும் அலைவரிசை

எனக்குப் பிடிக்காத பாடல்தான்

அலைவரிசையை மாற்றிவிட

நினைத்த கணத்தில்

சமையலறைக்குள்ளிருந்து

அந்தப் பாடலின் அடுத்த வரியைப்

பாடியபடி மனைவி வெளியே வர

ஒருகணம் நான்

சமையலறைக்குள்ளும்

மனைவி ஹாலிலும் இருக்கும்படி

அலைவரிசையை மாற்றியது ரிமோட்.

- கே.ஸ்டாலின்

சொல்வனம்

அவதாரங்கள்

முதல் தெரு சந்திப்பில்

சாலையைக் கடக்க

நின்றிருந்த பாதசாரிக்கென

வண்டியின் வேகம் குறைத்து நிறுத்தினேன்

கடவுளென வணங்கிச் சென்றார்

என்னை

அடுத்த சந்திப்பில் இன்னுமொருவர்

நிற்பதைக் கவனித்தேன் - ஆனால்

சட்டென்று நிறுத்த முடியா வேகம்

அவர் நின்று வழிவிட்டார்

இப்போது அவரைக் கடவுளாக நினைத்து நன்றி கூறினேன்

இப்படித்தான்

அவ்வப்போது கடவுளாவதும்

கடவுளைக் காண்பதுமாக

எளிதாக நகர்கிறது வாழ்க்கை.

- மதுரை சத்யா

*****

நகரும் கணங்கள்

பக்கத்தில் கண்டதும்

கூடுதலாய் நீந்திக் காட்டும்

மீன்கள்

நதிக்குள் விடத்தான்

கரங்கள் நீள்வதாக

நம்புகின்றன

விலை பேசி வாங்கி

வீட்டுக்குள் நுழையும் வரை.

-ந.சிவநேசன்

****

கப்பல்

சின்னக் காகிதத் துண்டொன்றை

மடக்கி விரித்ததில்

கைகளில் மிதக்கிறது

ஒரு பேரதிசயம்

சிறு பூவிதழை அதில் சேர்த்தவுடன்

தன் பெருங்கடலைத்

தேடத் தொடங்குகிறது அது.

- கி.சரஸ்வதி