பயணத்தின் பிம்பம்
திருநங்கையின் ஆசீர்வதிப்பில்
தொடங்கிய பயணம்
இருக்கைப் பிரச்சினையொன்றில்
அடிதடி வரை செல்கிறது
சற்று நேர நிறுத்தத்தில்
வாசனையால் பரவசமூட்டுகிறார்
சமோசாக்காரர்
இறங்க வேண்டிய நிறுத்தம்
மறந்த நபர்
கவலை மறந்து உறங்குகிறார்
கடைசியிலும்
இருக்கைகள் இருப்பதை மறந்த ஓட்டுநர்
வேகத்தடைகளில் வேகம் கூட்டுகிறார்
தாமதமாகத் தருவதாய்க் கூறிய
சில்லறைக்காக நடத்துநரைப்
பின்தொடர்கின்றன கண்கள்
அடிக்கடி அலையும்
மனத்தை ஓரிடத்திலேயே
கட்டிப்போட்டுப்
பயணிக்க வைத்துவிடுகின்றன
சில பேருந்துப் பயணங்கள்.
- சாமி கிரிஷ்
*****
தேநீர் தவம்
காகிதக் கோப்பையில் வைக்கும் தேநீரை
நாவினால் தொட்டு
சூடு பார்க்கிறது காத்திருக்கும் தெருநாய்
ஆற்றி வைக்கப்பட்ட தேநீரை
நாவைச் சுழற்றி சுழற்றி
நக்கிக் குடிக்கும் அதன் வேகத்தில்
பெரும்பசியின் அகோரம் தெரிகிறது
முழுக்கோப்பையையும் காலி செய்த
அதன் வேகத்தில்
இன்னொரு கோப்பை
தேநீர் கிடைக்குமா என்ற
ஏக்கம் வெளிப்படுகிறது
மாஸ்டர் இன்னொரு டீ என்று
ஒலிக்கும் குரலில்
நாய் என்ன புரிந்துகொண்டதோ
காலிக் கோப்பையை ஆவலுடன் பார்க்கத் தொடங்குகிறது.
- விகடபாரதி

கீழ்நோக்கி...
விண்மீன்களற்ற நிலவையும்
நிலவற்ற விண்மீன்களையும்
இரண்டுமற்ற சூரியனையும்
இருவகை மேகத்தையும்
எல்லாம் சுமக்கும் வானத்தையும்
என்னை நனைக்கும் மழையையும்
பார்த்தாயிற்று
இனி ஒன்றுமில்லை மேலே
பூமியில்
சிதறிக் கிடக்கும்
கற்களையும் முட்களையும்
கடப்பதற்குக் காலம் காலமாய்
குனிந்தே நடை பயில வேண்டும்
இனிமேல் வானம்
பார்ப்பதற்கு ஒன்றுமில்லை
பூமியில்தான்...
- காரைக்குடி சாதிக்
*****
காலத்தின் அறிவிப்பு
பள்ளியில் படிக்கும்போது அம்மாவும்
பருவகாலங்கள் பற்றியும் படித்திருக்கிறாளாம்
வசந்தம் முடிந்து கோடை வரும்
மழை முடிந்து பின்னர் பனி தொடங்கும்
என்று எனக்கும் தெரியும் என்பாள்
கிராமத்தை விட்டு வந்தபின்பு
அம்மாவுக்கு அத்தனை பருவத்தையும்
அறிவிப்பது வியாபாரிகள்தான் என்றாள்
கம்பளி வியாபாரி வந்தால்
பின்னாலேயே வரும் குளிர்காலம்
குடை வியாபாரி வந்தால்
கூடவே வரும் மழைக்காலம்
எல்லாப் பருவமும் முடிந்து
கோடை ஆரம்பிப்பதை மட்டும்
ஐஸ் வியாபாரி வருவதற்கு முன்னரே
அவள் பிள்ளை சொல்லிவிடுவான்
``அம்மா, அடுத்த மாசம் பூரா லீவு..!’’
- சாய்மீரா