நதியின் புன்னகை
நீர் வரத்து குறைந்த பின்னாலும்
தரையோடு பரவி
தன்மொழியில் ஏதேதோ பேசிக்கொண்டு
பொடி நடையாகச் செல்லும் சிறுநதியொன்றில்
கைகளில் கொள்ளும் கற்களை ஒவ்வொன்றாக
எடுத்து எறிகிறது குழந்தையொன்று
ஒவ்வொரு எறிதலுக்கும்
ஒரு புன்னகையைத் தெறிக்கவிட்டு ஓடுகிறது அந்நதி.
- நேசன் மகதி
****
யாரோ ஒருத்தி
வீட்டில் பெண் பார்க்கும்
வைபவம்
வீட்டில் தான் பெயர்ந்து வரும் திசை கிழக்கென
இன்றைக்குத்தான் அறிந்தாள்
துள்ளலிட்டு ஒலியெழுப்பாத
கொலுசுகள் வியப்பைத் தந்தன
தாழப் பழகியிராத கண்களுக்குத்
தரையில் துடிதுடிப்பு
ஒவ்வாது விரவிய பெரு மணம்
சூடிய பூக்களில்
பிடித்த பாடல் முணுமுணுப்பை மறக்க
குரல்வளைக்குள் கரைந்தன வரிகள்
ஏந்தி நின்ற தம்ளர்களின் நீரில்
யாரோ ஒருத்தியின் முகம்
கண்டாள்
வீடு கலைந்து வெறுமையான
பின்னர் கடிந்தபடி
அந்த யாரோ ஒருத்தியைத்
துரத்தலானாள்
கலகலத்தது அவளின் அறைக் கண்ணாடி.
- சுஜய் ரகு
****
காவல்
கடிவாளம் ஏதுமில்லை
கால்களில் இரண்டு
உடைந்து வருடங்களாகிவிட்டன
மழையிலும் வெயிலிலும்
காய்ந்த உடம்பின் காரைகள் பெயர்ந்து
சிதிலமாகிவிட்டிருந்தன
குறையுள்ள குதிரையென்றாலும்
நம்பிக்கையுடன்
வைக்கும் வேண்டுதல்களுக்காகவே
ஊரைச் சுற்றி
இன்னும் காவல் காத்துக்
கொண்டுதானிருக்கிறார்
குதிரை மீதமர்ந்த அய்யனார்.
- வைகை சுரேஷ்

நீலம்
பசுமை கப்பிய கானகத்தினூடே
ஏகாந்தமாய் ஓங்கி உயர்ந்த
ஒரு மூங்கிலின் காது வரை
உரசிக் கிசுகிசுக்கிறது
ஒரு வண்ணத்துப்பூச்சி
அக்கணம், காடு மலை வனம் என பாடிக்கொண்டிருந்த
அப்புள்ளின் சுருதி லயம்
காற்றின் அடுக்குகளில்
மாறி அமர்கிறது
அந்த வண்ணத்துப்பூச்சியின் ஸ்பரிசத்தை
தனது உடலெங்கும் துளைத்தெழுந்த துளைகளினூடே
காதலாகிக் கசிந்துருக
சரேலென விலகும் பசுமையில்
அக்கானகமெங்கும் வியாபிக்கிறது நீலம்.
- குரு பழனிச்சாமி
******
திருவிழா
பத்து தினங்களுக்கு
முன்னதாகவே களைகட்டி
ஒரு தினத்தில்
ஊர் கூடும் வீதியில்
தேர் ஒன்று வரும் கம்பீரத்திற்கு
சற்றும் சளைத்தவையல்ல
ஒற்றைக் கிழவனின் உழைப்பில்
மிதிபட்டு
அசைந்துவரும் மிதிவண்டி.
- அரியலூர் ச. வடிவேல்