இரவின் பாடல்
இரவின் பாடலை இசைத்தபடி
சென்றுகொண்டிருக்கிறது நதி
இருட்டில் தொலைந்த
வானத்தைத் தேடி
அருகில் சென்றுவிட்டது நிலா
இரை தேடிய களைப்பில்
பகலை முனகிக்கொண்டிருந்தன
புறாக்கள்
இரவைத் திருட வந்தவர்களைக்
காட்டிக்கொடுப்பதுபோல்
இரவின் காதில் ரகசியமாய்க்
கூவுகிறது குயில்
இவ்விரவைக் கடந்து
பகலுக்குள் சென்றுதான்
ஆகவேண்டுமா?
- பிரபு
***
தளும்பும் மனம்
பாதியளவே நிரம்பிய
உண்டியலோடு வீடு திரும்பும்
பார்வையற்ற ரயில் பாடகனின்
மனம் அவ்வளவு முழுமையாய்த்
தளும்பிக்கொண்டிருக்கிறது
சிறுமியொருத்தியின்
கைத்தட்டல் சத்தம்
கேட்ட நொடி முதல்.
- கி.சரஸ்வதி
***

கற்றல்
குப்பையைக் கிளறிவிட்டு
சாணம் தெளித்த
ஈரத் தரையில் குந்தி
மண்ணை இறக்கைகளில் வாரும்
கோழிகளுக்குத் தெரிந்திருக்கிறது
சூட்டைத் தணிப்பது எப்படியென்று
வாய்க்காலில் நகரும்
நத்தைகள் ஒருநாளும்
கூடு நனைந்துபோனதற்காகப் புலம்பியழுததில்லை
உலாப் போய்க்கொண்டுதான் இருக்கின்றன
நல் மண்ணில் வாழும்
கறையான் காற்று மழையில் கரைந்தாலும்
விரைந்து
கரையெழுப்பி வாழுகிறது...
வழிகளிருந்தும் நாம்தான்
கற்பதேயில்லை எப்போதும்.
- கலை
*****
இயலாமை
தடங்கலின்றிப் போய்வருகிறது
வெயில்
பாவம் காற்று
மூடப்பட்ட சன்னல் கண்ணாடியைக்
கடந்துபோக இயலாமல்
மோதித் திரும்பிக்கொண்டிருக்கிறது.
- மு.நந்தனா
*****
உருமாற்றம்
பட்டமரத்திலிருந்து பறக்கும்
பறவைகள்
இலையுதிர் காலத்தை வான்நோக்கி
அழைத்துச் செல்கின்றன.
- அஜித்