Published:Updated:

சொல்வனம்

சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

உன் நினைவு நூல் அறுபடும் வரை வந்து வந்து போகும் தையலியந்திர ஊசியாய்

சொல்வனம்

உன் நினைவு நூல் அறுபடும் வரை வந்து வந்து போகும் தையலியந்திர ஊசியாய்

Published:Updated:
சொல்வனம்
பிரீமியம் ஸ்டோரி
சொல்வனம்

அழகாய் ஒரு சோம்பல்

பிரபஞ்சத்தின் சோம்பல் முறிக்க

கைகளை மேலே உயர்த்தினாள்

அங்கே வானம் இருந்தது

அதில் சூரியன் இருந்தது

அவளைச் சுற்றிலும் பறவைகள்

இப்பொழுது அவள் ஒரு வனம்

அவள் பாதங்களிலிருந்து

பூமி மெல்ல மெல்ல நழுவுகிறது

கரங்களில் முளைக்கின்றன இறகுகள்

அவள் பறவைகளின் மூதாயாகிறாள்

பறவைகளே பறந்து பறந்து

பகலைத் துரத்துங்கள்

இரவு காத்திருக்கிறது

நட்சத்திரங்கள் ஜொலிக்க

நிலவிற்கு நிலவைப் பரிசளிக்க.

- வலங்கைமான் நூர்தீன்

****

காணவில்லை

பெயரும் அந்நியமல்ல

வயதும் அருகில்தான்

கன்னத்து மச்சமும்

கடைசியாக அணிந்திருந்த ஆடையும்

என எல்லாம் பழக்கம்தான்

மெல்லிய தேகம்

நெற்றி மேல் சிறு தழும்பு

என்பதுகூட பொதுவான அடையாளமே

சொல்லொணா இருத்தலின்

அவசரகால வெளியேற்றம்

அந்தத் தலைமறைவு

உலகைச் சுழல விட்டு

ஓரத்தில் நின்று கவனிக்கிறது

உள்ளொடுங்கிய கண்களின் நிகழ்

சுவர் கண்ட இடமெல்லாம்

கறுப்புவெள்ளைச் சிலுவையை

சுமந்து நிற்கும்

‘காணவில்லை’ புகைப்படம்

ஒரு சாக்குதான்

மற்றபடி

காணாமல்போனதில்

கிடைத்திருக்கலாம் தொலைந்தவர்.

- கவிஜி

****

சொல்வனம்

திறப்பு

தாழிடப்படவில்லை

வெறுமனே சாத்தி இருக்கிறது கதவு

அந்தப்பக்கம் நீயும்

இந்தப்பக்கம் நானுமாக

காலடி ஓசைக்கே

நூறு முறை திறந்துகொண்ட கதவுதான்

ஆயிரம் முறை கைகளால் அறைந்தும்

இறுக மூடிக்கொண்ட

காலத்திற்கு நகர்ந்திருக்கிறது

கதவு

இப்போது எனக்கு

ஆசையாய்த் தட்டும் கைகள் இல்லை

ஆவலாய்த் திறக்கும் கைகளும்

உன்னிடம் இல்லை

இருபுறமும் கைவிடப்பட்ட கதவு

காற்றில் அடித்துக்கொள்கிறது

அத்தனை நிராதரவாக.

- வெள்ளூர் ராஜா

****

தையல்

உன் நினைவு நூல்

அறுபடும் வரை

வந்து வந்து போகும்

தையலியந்திர ஊசியாய்

என்னுள்

எவர் மிதித்தாலும்

நூல்கண்டின் நிர்வாணம் வரை

துகிலுரித்தல் தொடருமென்பதை

நானறிவேன்

அதற்குள் நமக்கான ஆடை

தைக்கப்பட்டுவிடும்.

- ப்ரியா வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism