Published:Updated:

ஊசிப்புட்டான்: `அவசரப்பட்டு ஒளறிக் கொட்டிட்டியே ரவி’ | அத்தியாயம் - 11

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

``அவெம் சாவத்தான் கெடக்கான். அவெம் பொழச்சான்னா இவெம் வெளிய வருவான். இல்லேன்னா உள்ளயே கெடந்து களியெத் திம்பான். உனக்கு ஏம்மாரி இவனுவ சவவாசமெல்லாம்...”

புறவெளிச் சத்தங்கள் என்பவை மனதின் ஓங்காரக் குரலை மறைக்க உதவுவதைப்போலவே, புறவெளியில் உறைந்துபோயிருக்கும் நிசப்தம் என்பது மனதின் ஓங்காரத்தை, பரிதவிப்பை மண்டை முழுக்கவும் தார் ரோட்டில் உருளும் மாட்டுவண்டியின் சக்கரத்தைப் போன்று ஓடச்செய்வது. ரவியின் தலையினுள் மட்டுமல்ல, அவன் வீட்டின் முன் விரவிக்கிடந்த ஜல்லிக்கற்களின் மேல் உருண்டு சென்றுகொண்டிருந்த மாட்டுவண்டியின் சக்கர ஒலியும், மாட்டின் குளம்பொலியும், கழுத்து மணி ஒலியும்கூட அவன் காதில் உரக்க ஒலித்தன. நின்ற இடத்திலிருந்து நகராமல் தலையை மட்டும் திருப்பி ஜன்னல் வழி வெளியே பார்த்தான். சுமையெதுவும் இல்லாதபோதும் அந்த மாட்டுவண்டி மிக நிதானமாக அவனுடைய வீட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்த சற்று நேரத்துக்கெல்லாம்,  அடுக்களையினுளிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தமும், உருட்டும் சத்தமும் வெளியே வந்ததேயன்றி அம்மாவின் குரல் எதுவும் அங்கிருந்து வெளிவரவில்லை. 

ரவியின் மனதினுள்ளோ விஜயாவின்

சேலையைப் பற்றி வைகுண்டமணி இழுப்பதைப்போலவும், அவரது பிடியிலிருந்து விஜயா தப்பிக்க முயல்வதைப்போலவும் பலவிதமான கற்பனைகள்

உருண்டோடின. ‘அந்த வைகுண்டமணி நாயி உங்ளை என்ன செய்தாம்மா?’ என்று ஆத்திரம் பொங்க அவனுக்குக் கேட்கத் தோன்றினாலும் கூட அவனைக் கேட்க விடாமல் ஏதோவொன்று தடுத்தது. அதேவேளையில் அவனால் என்ன முயன்றும் அதற்கு மேல் கற்பனைச் செய்து பார்க்கவும் முடியவில்லை.

ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, ``ம்ம்மா...” என்றான். வறண்டுபோயிருந்த தொண்டையிலிருந்தே வெளிவராத குரல் கீச்சென்றே ஒலிக்க, உமிழ்நீரை ஒரு முறை விழுங்கிக்கொண்டு, மீண்டுமொரு முறை, ``ம்ம்ம்மா...” என்றழைத்தான். இம்முறை அவனுடைய குரல் அவனுக்குத் தெளிவாகக் கேட்டது.

அடுக்களையினுள் பாத்திரம் உருளும் சத்தம் நின்றது என்றாலும், விஜயாவிடமிருந்து எந்தவொரு பதிலும் வராதிருக்கவே, `ஒருவேளை அம்மா அழுதுட்டு இருக்காவளோ’ என்கிற நினைப்போடு அடுக்களையின் வாசலை நோக்கி நடந்த ரவிக்கு ஏமாற்றமே மிஞ்சியிருந்தது.

வீட்டின் புறவாசலில் அமர்ந்து அடுப்புக்கரியை வைத்துத் தேய்த்திருந்த பாத்திரத்தைத் தொட்டியிலிருந்த நீரால் கழுவிக்கொண்டிருந்தாள் விஜயா.

``ம்ம்மா...” என்றான் ரவி.

அடுக்களையின் நிலைப்படி வாசலில் நிற்கும் ரவியைத் திரும்பிப் பார்த்தவள், பதிலெதுவும் சொல்லாமல் மீண்டும் தன்னுடைய வேலையைத் தொடரலானாள்.

``ஸ்கூலுக்கு வந்திருந்தீங்களாம்மா?” மிகவும் சன்னமான குரலில் கேட்ட ரவியைப் பார்த்தபடியே எழுந்த விஜயா, இடுப்பில் சொருகிவைத்திருந்த சேலையைக் கீழே இறக்கி விட்டுக்கொண்டு, கழுவி வைத்த பாத்திரங்களை எடுத்து அடுக்களையினுள் அதனதன் இடத்தில் அடுக்கிவைத்தாள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

`ஏம்மா பேசமாட்டேங்கிறீங்க’ எனக் கேட்கத் தோன்றினாலும், எதுவுமே கேட்காமல் அமைதியாக விஜயா செய்யும் ஒவ்வொரு வேலையையும் பார்த்தபடியே நின்றான் ரவி.

அடுப்பில் விறகைவைத்து, அடுக்களையின் ஓர் ஓரமாக இருந்த பாட்டிலில் கொஞ்சமாக இருந்த மண்ணெண்ணெயை அதில் ஊற்றி விறகைப் பற்றவைத்து, அடி கறுத்திருந்த ஓர் அலுமினியப் பாத்திரத்தைவைத்து, அதில் நீரூற்றி, கருப்பட்டியைத் தட்டிப் போடுவது வரை பொறுமையாகப் பார்த்தவன், ``ம்ம்மா...” என்று அழைத்தான். குரல் கேட்டுத் திரும்பிய விஜயா, அவனைப் பார்த்து முறைத்தாள். ரவி தன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

கொதிக்கும் நீரில் கரைந்த கருப்பட்டியின் மணம், தலை தாழ்ந்து நின்றிருந்தவனின் நாசியைத் தாக்கித் தலையை நிமிர்த்தியது.

நிமிர்ந்து பார்த்தவனின் எதிரே விஜயா நின்றுகொண்டிருந்தாள்.

``நான் இனி ஒழுங்கா ஸ்கூலுக்குப் போறேம்மா” சொல்லும்போதே ரவியின் குரல் தழுதழுத்தது.

``இனி நீ ஒழுங்கா ஸ்கூலுக்குப் போ - போகாத, ஒழுங்கா படி - படிக்காத. எனக்கு அதெப் பத்தில்லாம் எந்தக் கவலையுங் கெடையாது. ஆனா இனி ஒரு தடவைகூட ஒனக்காச் சட்டி அந்தக் கண்டாரப்பய… அவம் பேரென்ன சொன்ன...”

``வைகுண்டமணி...”

``ஹான், அந்தக் கண்டாரப்பய வைகுண்டமணிய நான் இனி பாக்கெக் கூடாது. இனி ஒருதரம் அவனெ நான் பாத்தேன்...

அவன வெட்டி வெலி கொடுத்துருவேன் பாத்துக்க...” படபடவென்று கோபமாக பொரிந்து தள்ளிய விஜயாவை ஆச்சரியமாக பார்த்தான் ரவி.

``நாஞ்சொன்னது கேட்டுச்சா?” சத்தமாகக் கேட்டாள் விஜயா.

`கேட்டது’ என்பதற்கு அத்தாட்சியாகத் தலையை மட்டும் ஆட்டினான் ரவி.

``போ, போய் டிரெஸ்ஸ மாத்திட்டு வா, நல்ல சசூடா கட்டங்காபி போட்டுத் தரேன். அதெ குடிச்சிட்டு எம்மானத்தெ இன்னும் எவ்ளோ வாங்க முடியுமோ வாங்கு.”

ரவிக்கு ஒருபக்கம் விஜயா அப்படி பேசியது அதிர்ச்சியாக இருந்தாலும், மறுபக்கம் விஜயா இப்படிப் பொரிந்து பேசும் அளவுக்கு ஸ்கூலில் என்ன நடந்திருக்கும் என்கிற சந்தேகமும் கிளம்பியது.

இப்போதைக்குத் தனக்கு எதுவும் நிகழவில்லை என்கிற திருப்தியோடு அங்கிருந்து நகர்ந்தான் ரவி.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

மறுநாள் காலை சின்னத்தம்பியின் கடையில் அமர்ந்திருந்த ரவிக்கு, முந்தைய நாளின் இரவில் அவன் தூங்கும் வரையிலும் காதில் விழுந்த விஜயாவின் விசும்பல் ஒலியும், அதைத் தொடர்ந்து முந்தைய தினம் பள்ளியில் என்ன நிகழ்ந்திருந்திருக்கும் என்பதை அறியாததால் வந்த குழப்பமும், எப்போதுமே இவன் வெளியே செல்கையில் `எங்கே போகிறாய்... எதற்காகப் போகிறாய்?’ என்கிற கேள்விகள் ஏதுமின்றி வெளியே செல்ல அனுமதித்த அம்மாவின் நடவடிக்கையும் புதிராகவே இருந்தது. இவையனைத்தையும் யாரேனும் ஒருவரிடம் கொட்டித் தீர்த்துவிட வேண்டுமென்கிற ஏக்கமும் நிறைந்திருந்தன.

சின்னத்தம்பியைப் பார்த்தான், அவன் அவனுடைய தினசரி வேலைகளில் மும்முரமாக இருந்தான். போனதும், அவனிடம் தன்னுடைய மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்க ஏனோ அவனுக்குத் தோன்றவில்லை.

ஒருவேளை ரவி கடைக்கு வந்ததும், அவனிடம் அன்பாக ஏதும் விசாரித்திருந்தால், அவனிடம் சொல்லியிருந்திருப்பான். ஆனால் சின்னத்தம்பியோ ரவி வந்ததும் வராததுமாக, ``ஏம்மாரி... இன்னிக்கும் நீ பள்ளியோடத்துக்குப் போவலியா?” என்று சலிப்போடு கேட்டிருந்தான். திடீரென்று ரவிக்கு பால்ராஜின் நினைவு வந்தது.

``ஏன் சின்னத்தம்பிண்ணே மாமா வரலியா..?” என்று கேட்டான். பின்னர் சுதாரித்துக்கொண்டு, ``இன்னிக்கு பால்ராஜ் மாமா வருவாவியளா..?” என மீண்டும் கேட்டான்.

``அவெம் வர மாட்டான்” என்கிற பதில் சின்னத்தம்பியிடமிருந்து வரவும், வேறு யாரிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுவது என்பதை அறியாமல்,

``ஏம்ணே” என்றான்.

``அவெம் தூத்துக்குடி கோர்ட்டுக்குப் போயிருக்கான். இன்னுங் கொஞ்ச நாளெக்கி இந்தப் பக்கம் அவெனப் பாக்க முடியாது.”

சின்னத்தம்பியின் பதில் ரவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

`மாமா ஏங் கோர்ட்டுக்குப் போயிருக்காவ..?’ என்று கேட்க நினைத்த கேள்வியை, தொண்டைக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அடுத்து என்ன கேட்பது என்பது தெரியாமல் சின்னத்தம்பியையே பார்த்தபடி அமர்ந்திருந்த ரவியைப் பார்க்காமலேயே சின்னத்தம்பி, ``முந்தா நேத்து ராத்திரி மேலக்ருஷணம்புதூர் பார்ல பால்ராஜும் இன்னும் ரெண்டு பேருமா சேந்து ஒருத்தென் மண்டெய பொளந்துட்டானுவ... அதாம் இவென் தூத்துடி கோர்ட்டுல சரண்டராவப் போயிட்டான்” எனக் கூறினான்.

``என்னது மண்டெயப் பொளந்துட்டாவளா!” அதிர்ச்சியோடு கேட்ட ரவி, அடுத்ததாக, ``ஆளுக்கு ஒண்ணுமில்லேல்லண்ணே” எனக் கேட்டான்.

``அவெம் சாவத்தான் கெடக்கான். அவெம் பொழச்சான்னா இவெம் வெளிய வருவான். இல்லேன்னா உள்ளயே கெடந்து களியெத் திம்பான்.

உனக்கு ஏம்மாரி இவனுவ சவவாசமெல்லாம்...” சின்னத்தம்பி பேசிக்கொண்டிருக்கும்போதே, அங்கே வந்த தங்கப்பாண்டியன், ``என்னடே பீப்பி... எவெம் சவவாசமெல்லாம் வேணாமுனுட்டு ரவிட்ட சொல்லிட்டு இருக்குத” என அவருக்கே உரிய கணீர் குரலில் கேட்டார்.

``ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லண்ணாச்சி. நம்ம பால்ராஜப் பத்தி பேசிட்டு இருந்தேன்” சட்டெனச் சின்னத்தம்பியின் குரலில் ஒரு குழைவு வந்து ஒட்டிக்கொண்டது.

``என்னடே ரவி... இன்னிக்கும் ஸ்கூலுக்குப் போவலியா நீ?” எனக் கேட்டவர், “ஓ இன்னிக்கி சனிகெழமல்ல. மறந்துட்டேன்” என்றார்.

ரவி, சின்னத்தம்பியின் கடையைச் சுற்றிப் பார்வையைச் சுழலவிட்டான். நேற்றைப்போலவே இன்றும் நிறைய மனிதர்கள் அங்குமிங்கும் உலாவிக்கொண்டிருந்தார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஏ எப்பா ரவி, ஒரு கிளாஸு தண்ணிய எடுத்துக் குடுடே” என்று ரவியிடம் தண்ணீர் கேட்டு வாங்கியவர், ரவி கொடுத்த டம்ளரிலிருந்த நீரை அண்ணாந்து வாயில் ஊற்றி, வாயிலிருந்த நீரோடு தன்னுடைய வலக்கை ஆட்காட்டி விரலால் பல்லைத் தேய்த்துக் கொப்பளித்து புளிச்செனத் துப்பினார்.

கையிலிருந்த தம்ளரை ரவியிடம் திருப்பிக் கொடுக்கையில், ரவியின் வாடிய முகத்தைப் பார்த்தார்.

``ஏன் ரவி முகமெல்லாம் வாடிப்போயிருக்கு..? ஒடம்பு கெடம்பு ஏதும் முடிலியா?” என அக்கறையோடு கேட்டார்.

``அதெல்லாம் ஒண்ணுமில்ல” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டான் ரவி.

``ஏ எனனைப் பாருடே” தணிந்த குரலில் கனிவோடு தங்கப்பாண்டியன் கேட்கவும், அதுவரை ரவியின் மனதினுள் முட்டிக்கொண்டிருந்த அழுத்தம் கண்களில் கண்ணீராக வெளியேறியது.

``ஏ ரவி ஏம்டே அழுவுற..? என்னாச்சிடே..?” என்று தங்கப்பாண்டியன் பதறவும், ரவி அவனையும் அறியாமல் அத்தனை நேரமும் அவன் மனதை அழுத்திக்கொண்டிருந்த  அனைத்தையும் அவரிடம் கொட்ட ஆரம்பித்தான்.

அவன் பேசப் பேசத் தங்கப்பாண்டியனின் முகம் மாறுவதை கவனித்த சின்னத்தம்பி,

ரவி ஏதேனும் ஒரு கணத்தில் தன்னைத் திரும்பிப் பார்த்துவிட மாட்டானா என எதிர்பார்த்து அவன் முகத்தையே வைத்த கண்ணெடுக்காமல் பார்த்தான். ஆனால் ரவியோ தன் எதிரிலிருந்த தங்கப்பாண்டியனைக்கூட நிமிர்ந்து பார்க்காமல் கதையைப் பகிர்ந்துகொண்டிருந்தான். 

``ஒன் அம்மெய கூப்ட்டுவெச்சு அவமானப்படுத்தினது எவெம்ல?” தங்கப்பாண்டியனின் குரலில் இருந்த கடுமை ரவியை பயமுறுத்த, `எதையும் சொல்லிவிடாதே’ என்று சைகை காட்டிய சின்னத்தம்பியையும் பொருட்படுத்தாமல், ``வைகுண்டமணி சாரு” என்றான்.

``வாரியக் கொண்டைக்கு சாரு ஒண்ணுதான் கொறச்சலு” உறுமிய தங்கப்பாண்டியன் தன் வலக்கையைத் தூக்க, தூரத்திலிருந்து ஒருவன் அவரை நோக்கி ஓடி வந்தான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

அவன் தங்கப்பாண்டியனின் அருகே வரவும், முத்துலிங்கம் அந்த இடத்துக்கு வருவதும் ஒரே நேரத்தில் நிகழ, ஓடி வந்தவனைச் சைகையால் நிறுத்தித் திரும்பிப் போகச் சொன்ன தங்கப்பாண்டியன், முத்துலிங்கத்தைப் பார்த்து, ``எடே முத்துலிங்கம்.. ஒன்னவெச்சு எனக்கொரு காரியம் ஆவணும். செய்வியாடே?” என அதிகாரம் தொனிக்கும் குரலில் கேட்டார்.

``சொல்லுங்கண்ணாச்சி” முத்துலிங்கத்திடமிருந்து பவ்யமாய் வார்த்தை வெளியேறியது.

``இவென் யாருன்னு தெரியுந்தான?”

``ஆமாண்ணாச்சி, நேத்தே சொன்னிய...”

``ம்ம்ம். இவனுக்கு ஸ்கூல்ல ஒரு பிரச்ன.”

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

``என்ன பண்ணணுண்ணாச்சி” முத்துலிங்கம் நிமிர்ந்து நின்றான்.

அவன் அப்படி நிமிர்ந்து நிற்பதைப் பார்க்கையில், ஒரு மிகப்பெரிய ராட்சஷன் தன் முன்னே நிற்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை ரவிக்கு உண்டு பண்ணியது. கூடவே `அவசரப்பட்டு உளறிட்டோமா’ என்கிற பயமும் அவனுள் மூள, அவசர அவசரமாக ரவியின் கண்கள் முத்துலிங்கத்தின் இடுப்பைப் பார்த்தன. சட்டையைக்கொண்டு மறைத்திருந்தாலும், கத்தியின் கைப்பிடி புடைத்துக்கொண்டு வெளித் தெரிந்தது.

'அவசரப்பட்டு ஒளறி கொட்டிட்டியே ரவி' என்று நினைத்தபடியே சின்னத்தம்பி சோர்ந்துபோய் அமர்ந்தான்.

(திமிறுவான்...)