Published:Updated:

ஊசிப்புட்டான்: `நீரு ஒண்ணும் அவ்ளோ நல்லவென் இல்லியேவேய்’ | அத்தியாயம் - 12

ஊசிப்புட்டான்
News
ஊசிப்புட்டான்

சின்னத்தம்பியின் கடையில்வைத்துத் தனக்கு அறிமுகமான மனிதர்கள் மிகச் சாதாரண மனிதர்கள் அல்ல. அசாதாரண மனிதர்களோடு பழகும் நாமும் சாதாரண மனிதன் அல்ல.

அதிகாரவர்க்கம் ஓர் இனத்தை ஒடுக்கியும் ஒதுக்கியும் வைப்பதன் வாயிலாக அந்த இனம் கிளர்த்தெழப் போதுமான ஊட்டத்தை அளிக்கிறது. அதே ஒடுக்குதலும் ஒதுக்குதலும் ஒரு தனிமனிதனுக்கு எதிராக அந்த அதிகாரவர்க்கம் நிகழ்த்துகையில், அந்தத் தனிமனிதனுக்கு அது இரண்டு வாய்ப்பை அளிக்கிறது. ஒன்று, என் அதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு என்னை அண்டி வாழும் ஓர் அடிமையாக வாழ்ந்து, அடிமையாகவே இந்த மண்ணுக்குள் புதைந்துவிடு அல்லது ஒற்றைக் களையாக ஓர் ஓரமாக வாழ்ந்து மடிந்து மண்ணோடு மக்கிப்போய்விடு. ஆனால் எல்லாக் காலத்திலும் எல்லாக் களைகளும் மடிந்துவிடுவதில்லை. ஒரு சில களைகள் தங்களுடைய வேரை மண்ணுக்குள் செலுத்தி, தங்களுக்குத் தேவையான உரத்தைத் தங்கள் பாதத்தின் கீழிருக்கும் மண்ணிலிருந்து உறிஞ்சி, தங்களை மரமாக வளர்த்துகொள்வதும் உண்டு. வெறும் குத்துச்செடியாக வளர்ந்து, மடிந்து போகவேண்டிய ஒரு களையை, மரமாக மாற முதல் செம்பு நீரை ஊற்றியது அந்த நடுநிலைப் பள்ளியின் அதிகார மட்டம்.

அன்றைய தினம் ரவி பள்ளிக்குச் சென்றபோது அவனது இதயத்தின் துடிப்பு அவன் காது வரையிலும் கேட்டது. ஒவ்வோர் அடியையும் நிறுத்தி நிதானமாகவே எடுத்துவைத்தான். ஒவ்வோர் அடிக்கும் தன்னை யாரேனும் பார்க்கிறார்களா என்று ஒரு முறை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டான். யாருமே தன்னை வித்தியாசமாகப் பார்க்கவில்லை என்கிற நினைப்பு அவனுக்கு மிகப்பெரிய ஆசுவாசத்தைக் கொடுத்தது. அடுத்ததாக வைகுண்டமணி அவருடைய லேம்பி ஸ்கூட்டரை நிறுத்திவைக்கும் இடத்தைப் பார்த்தான். அந்த இடம் காலியாகவே இருந்தது. நிதானத்துக்குத் திரும்பியிருந்த இதயம், மீண்டும் உச்சஸ்தாயியில் துடிக்க ஆரம்பித்தது. ஒருவேளை இன்று அவர் நடந்து வந்திருக்கலாம் என்று தன்னைத் தானே சமாதனப்படுத்திக்கொண்டான் என்றாலும் அவனது உள்ளுணர்வு ஏதோவோர் அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டிருப்பதாக அவனுக்குச் சொன்னபடியே இருந்தது.

வைகுண்டமணிக்கு பதிலாக, செல்வராஜ் வருகைப் பதிவேட்டோடு வகுப்பினுள் நுழையவும்,

மாணவர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு எழவும், “லேய் ஏம்ல கத்துதீங்க..? அமெதியா இருங்கல” என்று செல்வராஜ் எரிச்சலோடு கத்தவும், வகுப்பு மொத்தமும் சட்டென்று அமைதியானது.

“அட்டெண்டன்ஸுக்கு வரிசையா உங்க நம்பரச் சொல்றீங்களா இல்ல பேர வாசிக்கணுமால..?”

வகுப்பறையில் எவருமே வாய் திறக்கவில்லை. ஒரு முறை மாணவர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு, “ஒங்க பெயரை எல்லாம் வாசிச்சு அட்டெண்ட்டன்ஸ எடுத்து முடிக்கிறதுக்குள்ள என் க்ளாஸு முடிஞ்சு போவும். எல்லாவனுவளும் அவனவன் நம்பர மட்டும் சொல்லுங்கல. எவனாச்சும் லீவா இருந்தா அவன் நம்பர மட்டும் லீவுன்னு சொல்லிட்டு அடுத்தவன் அப்படியே கண்டினியூ பண்ணுங்க. செரியா?”

ஆங்கில எழுத்தின் வரிசைப் பிரகாரம் ஒவ்வொருவரும் எழுந்து அவரவர் எண்களைச் சொல்ல ஆரம்பித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“வைகுண்டமணி சாரு இன்னிக்கு லீவுன்னு தோணுது, அதாம் செல்வராஜு சாரு வந்திருக்காவ.

ஒனக்கு இன்னிக்கு ஜாலிதான” ரவியின் அருகிலிருந்த சகாயம் அவன் காதில் குசுகுசுத்தான். ரவி, சகாயத்தைத் திரும்பிப் பார்க்கவும், சகாயத்தின் முகத்தில் துணியாலான டஸ்டர் வந்து மொத்தென்று விழுந்தது. சகாயமும் ரவியும் அதிர்ச்சியோடு டஸ்டர் வந்த திசையை ஒருசேரத் திரும்பிப் பார்த்தனர்.

செல்வராஜ் கடுகடுத்த முகத்தோடு அங்கே நின்றுகொண்டிருந்தார்.

“லேய் இஞ்ச வால” அவரது குரலின் திடுக்கிடலில் அட்டெண்டன்ஸ் எண்கள் சட்டென நின்றன.

சகாயமும் ரவியும் இருக்கையிலிருந்து எழுந்து நின்றனர்.

“ரெவி சார் நீங்க உக்காருங்க சார். உங்களையெல்லாம் கண்டிக்க நாங்க யாரு சார்..?”

என்று ரவியைப் பார்த்து நக்கலாகப் பேசியபடியே வந்தவர், சகாயத்தின் காதைப் பிடித்துத் திருகி வகுப்பின் முன்வரிசைக்கு இழுத்துச் சென்று, “சாருக்கு அவர்கிட்ட பேசாமா இருக்க முடியாதோ!” என்று கேட்டபடியே சகாயத்தின் காது மடலை மேல் நோக்கித் திருப்ப, “சார் சார் சார்... வலிக்குது சார். இனி அவங்கூட பேச மாட்டேன் சார். மன்னிச்சிருங்க சார். வலிக்குது சார்” என்று அலறிய சகாயத்தின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“இனி வாயத்தொறந்த... காதுல ஓட்டையப் போட்டு சீலிங்ல கெட்டி தூக்கிருவேன் பாத்துக்க. போல”

தன் அருகில் வந்தமர்ந்து, தலை குனிந்து அழும் சகாயத்தைப் பாவமாகப் பார்த்த ரவியின் மனதில் தோன்றிய, ‘வைகுண்டமணிய மட்டுமில்ல... இவனப் பத்தியும் மூத்தப்பாட்ட சொல்லிருந்துருக்கணும்’ என்கிற எண்ணம் அவனையே ஒரு கணம் திகைப்புள்ளாக்கியது.

அதற்கு அடுத்தடுத்த நாள்களிலும் வைகுண்டமணி பள்ளிக்கு வரவில்லை என்பது மற்ற மாணவர்களுக்குக் கொண்டாட்டமாக இருக்க,

ரவிக்கோ இதுவரையிலும் வைகுண்டமணியின் உயிருக்கு எதுவும் ஆபத்தாக நேரவில்லை என்கிற நினைப்பே ஆறுதலாக இருந்தது.

வைகுண்டமணியின் தொல்லை இல்லாததால் சின்னத்தம்பியின் கடைக்குச் செல்வதை வெகுவாகவே குறைத்திருந்தான் ரவி. ‘வைகுண்டமணி சாருக்கு என்ன ஆச்சு... முத்துலிங்கண்ணனைவெச்சு மூத்தப்பா அவர என்ன பண்ணினாவ..?’ என்கிற கேள்விகள் அவனுள் முளைக்கும் நேரத்திலெல்லாம் சின்னத்தம்பியின் கடைக்குச் சென்று கேட்டுப் பார்க்கலாமா என்று தோன்றும். ஆனால் விஜயாவின் முகமும், அன்றைய தினம் காதில் விழுந்த விசும்பல் ஒலியும் அவன் கருத்தில் நிறையும்.

மூக்கின் நுனியை ஒட்டினாற்போல வைத்திருக்கும் காகிதத்தில் தெரியும் மங்கிய கோடுகள் எழுத்து வடிவமா அல்லது கோட்டோவியமா என்பதைக் கண்களால் அந்த இடைவெளியில் கண்டறிய முடியாது. அந்தக் காகிதத்தில் இருப்பது எழுத்தா, கோட்டோவியமா அல்லது கிறுக்கல்களா அல்லது கிறுக்கல்கள் போன்ற தோற்றத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியமா என்பதை அறிய சில அங்குலத்திலிருந்து பல அடி தூர அவகாசம் கண்களுக்குத் தேவையாக இருக்கிறது. அதுபோலத்தான் ரவியும் சின்னத்தம்பியின் கடைக்குச் செல்வதிலிருந்து விலகியிருந்த காலத்தில், அது ஏன் ஒவ்வொரு முறையும் பால்ராஜைப் பற்றிப் பேசுகையிலும் சின்னத்தம்பி சினத்தைக் காட்டுகிறார்... நிஜத்தில் பால்ராஜ் யார்... அவர் தொழில்தான் என்ன... தங்கப்பாண்டியன் யார்… அவர் ஏன் எப்போதும் சினிமாவில் அடியாட்களோடு வரும் வில்லனைப்போலத் தன்னோடு ஒருசிலரைக் கூட்டி வருகிறார்… அவரைப் பார்த்ததும் சின்னத்தம்பி ஏன் பம்மிப் பதுங்குகிறான்... அவருக்கேன் தன்னைப் பார்த்ததுமே பாசம் பொங்கியது… `என் கழுத்துக்கு வரவேண்டியதை உன் அப்பா தலையில் வாங்கிக்கொண்டார்’ என்று சொன்னாரே... எனில், அப்பாவுக்கும் அவருக்கும் இடையில் என்ன மாதிரியான உறவு இருந்தது... முத்துலிங்கத்துக்கும் தங்கப்பாண்டியனுக்கும் என்ன உறவு... வைகுண்டமணியைப் பற்றிச் சொன்னதும், அழைத்தவனை விட்டுவிட்டு முத்துலிங்கத்திடம் பொறுப்பை ஒப்படைத்தார்... நிஜத்தில் அப்பா செய்துகொண்டிருந்த தொழில்தான் என்ன?

அப்பாவின் பெயரைச் சொன்னதுமே அங்கிருக்கும் ஒவ்வொருவர் முகத்திலும் இரக்கம் சுரப்பதேன்… வெறுமனே வெட்டிக் கொல்லப்பட்ட மனிதனுடைய மகனுக்குக் காட்டும் கருணையாக அது தெரியவில்லையே... எனில், அது குற்றவுணர்வா... குற்றவுணர்வுகொள்ளும் அளவுக்கு இவர்கள் அப்பாவுக்கு அப்படி என்ன செய்துவிட்டார்கள்... நிஜத்தில் அப்பாவைக் கொன்றது யார்… இப்படி விடை காண முடியாத பல கேள்விகள் அவனுள் தோன்றி அவனை அலைக்கழித்தன என்றாலும், அவனுக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது. சின்னத்தம்பியின் கடையில் வைத்துத்

தனக்கு அறிமுகமான மனிதர்கள் மிகச் சாதாரண மனிதர்கள் அல்ல. அசாதாரண மனிதர்களோடு பழகும் நாமும் சாதாரண மனிதன் அல்ல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தான் ஒரு சாதாரண மனிதன் அல்ல என்கிற நினைப்பு அவனுக்குத் தோன்றியதிலிருந்து வகுப்பில் அவனுடைய தோரணையும் மாறியது. வகுப்பில் உடன் படிக்கும் மாணவர்களிடமிருந்து விலகியிருக்க ஆரம்பித்தான்.

அவனது கீச்சுக் குரலும் உடைந்து, அடித்தொண்டை திறந்துவிட்டிருந்தது.

ஆனால் உண்மையில் பள்ளியில் அவனுக்கு நிகழ்ந்தது என்னவென்றால், அனைத்து ஆசிரியர்களாலும் அவன் விலக்கிவைக்கப்பட்டிருந்தான். மற்ற மாணவர்களோடு இவன் பேசினாலும், இவனோடு மற்ற மாணவர்கள் பேசினாலும், இவனை விட்டுவிட்டு அந்த மாணவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஆசிரியர்களின் தண்டனைக்கு பயந்து ரவியைக் கண்டு அவன் உடன்படித்த மாணவர்கள் ஒதுங்குவதும், இவன் என்ன செய்தாலும் ஆசிரியர்கள் எதுவுமே கண்டுகொள்ளாமல் ஒதுங்குவதும்,

தான் ஓர் அசாதாரணமானவன் என்கிற அவனுடைய எண்ணத் தீயில் எண்ணெய் வார்த்து அதைக் கொழுந்துவிட்டு எரியவைத்திருந்தது.

முழு ஆண்டுத் தேர்வு முடிவைத் தயார் செய்துகொண்டிருந்த தலைமை ஆசிரியர் மாசிலாமணியின் முன்னால் வந்து நின்ற வைகுண்டமணி, ``ரிசல்ட்ட எப்ப நோட்டீஸ் போர்டுல ஒட்டப் போறோம் சார்?” எனக் கேட்டார்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

தன்னுடைய வேலையில் மும்முரமாயிருந்த மாசிலாமணி, புன்னகைத்தபடியே, “வைகுண்டமணி சாரா... வாங்க சார் வாங்க. நாளைக்குத்தான் ரிசல்ட் ஒட்டப் போறோம். ரிசல்ட்டை ஒட்டுறதுக்கு முன்ன நானே உங்ளைப் பார்க்கணும்னு இருந்தேன்.”

“என்னையா…? என்ன சார் விசயம்..?”

“அதொண்ணுல்ல சார். அந்தப் பய. அதாம் அந்த ட்டி.ரவி. அவெனுக்கு எல்லா பாடத்துலயும் பார்டர் மார்க்தான் போட்டு விட்டுருக்கு. தேவைன்னா சொல்லுங்க, ஏதாச்சும் ஒரு பாடத்துல ரெண்டு மூணு மார்க்கத் தட்டிவிட்டு ஃபெயிலாக்கிவிட்டுறலாமான்னு கேக்கத்தான்...”

வைகுண்டமணி பதிலெதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

“அம்மெயும் மவனுமா சேந்து ஒங்களை ஆளவெச்சு அடிச்சாங்கல்ல... அதுக்கு தண்டெனயா அந்தப் பய ஒரு வருசத்தைத்  தொலைக்கட்டுமே சார்.” 

“இல்ல சார். வேணாம் சார்” என்று மறுத்த வைகுண்டமணியைப் பார்த்து,

“என்னவேய் வேணாம்ங்கிறீரு. இத விட்டாச்சுன்னா அந்தப் பயல பழி வாங்க வேற சந்தர்ப்பம் கெடைக்காதுவேய்.”

“இல்ல வேணாம் சார். இப்ப நான் உங்களப் பார்க்க வந்ததே அந்த விசயமாத்தான்.”

என்ன என்பதைப்போலப் பார்த்த மாசிலாமணியைப் பார்த்து, “அவசரப்பட்டு அவனெ ஃபெயில், கியில் ஆக்கிப்போட்டு, மறுபடியும் ஒரு வருசம் இங்க வரவெச்சுடாதீங்கன்னு சொல்லத்தான் வந்தேன்” என்றார் வைகுண்டமணி.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“வேய் நீரு ஒண்ணும் அவ்ளோ நல்லவென் இல்லியேவேய். என்ன பயந்துட்டீராக்கும்.”

“நா அந்தப் பயலெ ஃபெயிலாக்க வேணாம்னுதான சார் சொன்னேன்” சொல்லி நிறுத்திய வைகுண்டமணி, நாட்டு மருத்துவ எண்ணெயில் முக்கியத் துணியைக்கொண்டு கட்டப்பட்டிருக்கும் வலது கையை ஒரு முறை இடக்கையால் தொட்டுப் பார்த்துக்கொண்டு, மாசிலாமணியைப் பார்த்துப் புன்னகைக்க, அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்தவராக மாசிலாமணியும் வைகுண்டமணியைப் பார்த்துப் புன்னகைத்தார்.

அதே நேரத்தில் இது எதுவுமே அறியாத ரவியின் வீட்டில், “ரிசல்ட் என்னைக்குல” என்ற விஜயாவின் குரலுக்கு, “நாளைக்காதான் இருக்கும்” என்று அசிரத்தையோடு பதிலளித்த ரவியிடம், “பாஸாயிருவேல்ல?” என்று சந்தேகத்தோடு கேட்டாள் விஜயா.

‘எங்க போட்டுப் பாஸாவ... ஃபெயில்தான்’ என மனதினுள் நினைத்துக்கொண்டாலும், ``ஹ்ம்ம்ம்...’’ என்ற ஒலியை பதிலாகக் கொடுத்தான்.

“என்னலே ம்ம்ம் ம்ம்ம்ன்னுட்டு கெடக்க..?”

“பாஸாயிருவேன்னு சொன்னேன்” அவனது குரல் ஓங்கி ஒலித்தது.

“கொரல ஒசத்துறதெல்லாம் ஒங்கூட படிக்கவனுக்ககிட்டவெச்சுக்க. எங்கிட்டவெச்சுக்கிட்டன்னா கட்டவாரிய பிஞ்சிடும் சொல்லிட்டேன்”

“ஆமா பிய்யும் பிய்யும்” என்று கோபமாக பதிலளித்துவிட்டு, விஜயாவின் பதிலுக்குக்கூடக் காத்திருக்காமல் வெளியே சென்ற ரவியைப் பார்த்து, “ஒருவா சாப்ட்டுட்டு போயேம்ல” என்று கத்திய விஜயாவுக்கு, ரவி நடந்து செல்லும் தோரணை தங்கசாமியை நினைவுறுத்த, “அய்யா வைகுண்டரே, அந்த மனுசனப்போல இவனும் ஆயிடக் கூடாதுய்யா. நீதா அவனுக்குத் தொணையா இருக்கணும்” வாயைத் திறந்து வேண்டிக்கொண்டவளைப் பார்த்து விதி ஏளனமாகச் சிரித்தது.

(திமிறுவான்...)