Published:Updated:

ஊசிப்புட்டான் | `இனி அவென் உன் வழிக்கு வரமாட்டான் ரெவி’ | அத்தியாயம் - 23

ஊசிப்புட்டான்

அன்றைய தினம் சகாயத்தின் கதைச் சொல்லும் திறனால், வகுப்பு மாணவர்கள் மத்தியில் ரவி மிகப்பெரிய ரௌடியாக ஒரே நாளில் மாறியிருந்தான்.

ஊசிப்புட்டான் | `இனி அவென் உன் வழிக்கு வரமாட்டான் ரெவி’ | அத்தியாயம் - 23

அன்றைய தினம் சகாயத்தின் கதைச் சொல்லும் திறனால், வகுப்பு மாணவர்கள் மத்தியில் ரவி மிகப்பெரிய ரௌடியாக ஒரே நாளில் மாறியிருந்தான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

வலி மனிதனை உடல் மட்டுமாகவே சுருக்க முனையும் மகத்தான சக்தி என்பதை கிருஷ்ணக்குமார் கொடுத்த அடிவயிற்றுக் குத்தில் ரவி உணர்ந்தான். அவனது கருத்து, கவனம் எனச் சகலமும் கிருஷ்ணக்குமார் உதைத்த இடத்தில் ஒன்றுக் கூடியது. வாயைத் திறந்துக் கத்தினால் வலி குறையுமென்று அவனுக்குத் தோன்றினாலும், ஏதோவொரு நினைப்பு அவனை வாயைத் திறக்க விடாமல், பல்லை இறுக்கமாகக் கெட்டித்துக் கொண்டாலும், அவனுடைய கை ஏதோவொன்றைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டிருந்ததை அவனால் உணர முடிந்தது. அதே நேரம் அவனைத் தூக்கி நிறுத்திய கிருஷ்ணக்குமார் மீண்டும் அவனுடைய வயிற்றில் குத்த, மீண்டும் தரையில் சுருண்டு விழுந்த ரவியைப் பார்த்து, “என்னல வாயத் தொறந்து கத்தமாட்டியோ. அவ்வளவு நெஞ்சழுத்தமால உனக்கு” என்றுக் கோபமாகக் கேட்டபடியே தரையில் விழுந்துக் கிடந்த ரவியின் வயிற்றில் உதைக்க அவன் காலை வீச, அந்தக் காலை அப்படியே தன் உடலோடு சேர்த்துப் பற்றிக் கொண்டான் ரவி.

“கால விடுல நாயே” என்று கத்தியபடியே கிருஷ்ணக்குமார் தன் உடல் பலம் முழுவதையும் அந்தக் காலிற்கு கொடுக்க, இது தான் சமயமென ரவியும் தன் கையிலிருந்தக் கல்லைக் கொண்டு நிலையாய் நின்றுக் கொண்டிருந்த கிருஷ்ணக்குமாரின் இடது கால் கரண்டையில் அடித்தான்.

கரண்டையில் விழுந்த அடி, கிருஷ்ணக்குமாரின் தலை வரையிலும் ஏற, அதே நேரம் ரவி தன்னுடைய பிடியையும் தளர்த்த, கிருஷ்ணக்குமார் நிலைத்தடுமாறி கீழே விழுந்தான். அவனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. கீழே விழுந்ததை விடவும்,

இம்மாதிரியான ஒரு சிறுவன் அடித்து விழுந்தது அவனை வெகுவாகக் கோபத்திற்கு உள்ளாக்கியது.

நிலைத்தடுமாறி விழுந்த அவனும் எழ, விழுந்துக் கிடந்த ரவியும் தன் கையை ஊன்றி எழுந்து நிற்க, கிருஷ்ணக்குமாரின் பார்வையில் அவன் சற்றுமுன் பார்த்த ரவியாகத் தெரியாமல், ஏதோவொரு மிருகமாகத் தெரிந்தான். இருப்பினும் அவனது காலிலிருந்து எழுந்த வலி அவனுடைய அகங்காரத்தைத் தூண்ட, ரவியின் முகத்தைக் குறிவைத்து அவன் தன் கையை வீச, ரவியும் தன் கையை வீசினான்.

கிருஷ்ணக்குமார் ஏதேதோ வார்த்தைகளால் கத்துவது மட்டுமே ரவிக்குக் கேட்டது. அடுத்த நொடி அவன் தலையைச் சுற்றி விதவிதமாக நட்சத்திரம் சுற்ற அப்படியே கீழே சரிந்தான்.

**

யாரோ சிலர் தன்னைத் தூக்கி நிப்பாட்டுவதை உணர்ந்தான் ரவி, அவனால் அவனுடையக் கண்களைத் திறக்க முடியாத அளவிற்கு வலியும், கடுப்பும் சேர்ந்திருந்தது.

கூட்டத்தில் ஒருவர், “ஏய் எப்பா ஸ்கூல்ல படிக்கிற பசங்க தானடா நீங்க” என்று கேட்பதும், மற்றொருவர், “ஐய்யோ எவ்ளோ ரத்தம் போகுது” என்பதும், இன்னொருவர், “பய சின்னப்பயலா இருந்தாலும் ஒரு வார்த்தை கத்தினானான்னு பாரு. சரியான நெஞ்சழுத்தம் பிடிச்ச பயலா இருப்பான் போல” இன்னும் என்னென்னவோ யார் யாரோ பேசும் குரல்கள் ரவியின் காதில் விழுந்தாலும்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“சரியான நெஞ்சழுத்தம் பிடிச்ச பயலா இருப்பான் போல” என்கிற வார்த்தை மட்டும் அவனுக்கு அந்த வலியிலும் பரவசத்தைக் கொடுத்தது.

இடது கண் கலங்கி, அந்தக் கண்ணைச் சுற்றி ரத்தம் கன்றியதன் விளைவாக உருவாகியிருந்த கருவளையத்தோடு வீட்டை நெருங்கியவன் உள்ளுக்குள்ளே, ‘அம்மெகிட்ட என்ன சொல்லிச் சமாளிக்க’ என்கிற கேள்வி எழ, அத்தனை நேரமும் அவனுள் இருந்த பரவசவுணர்வு காணாமல் போயிருந்தது.

தலையைக் குனிந்தபடியே வீட்டினுள் நுழைந்தவனின் அழுக்கேறிய சட்டையைக் கவனித்த விஜயா, “இன்னைக்கு என்னல சட்டையும் பேண்டும் இவ்ளொ அழுக்காயிருக்கு…?” இயல்பாய் கேட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டவளை நிமிர்ந்துப் பார்க்கத் தயங்கிய ரவி, “ஸ்கூல்ல கிரிக்கெட் விளையாடும்போ கீழ விழுந்துட்டேன்” என்கிற பொய்யைச் சொல்ல, அவனுள் திடீரென ஓர் திட்டம் உதயமானது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“இப்படியே ஸ்கூலு செம்மண்ல கெடந்து உருண்டு பொறண்டு போட்டுட்டு போற ட்ரெஸை எல்லாம் பீ மாதிரி ஆக்கிட்டு வந்தேன்னா, துணிய தொவைக்கிறது யாரு…?” என்று கேட்டுவிட்டு, அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல், “நாளைக்கி போட வேற யூனிஃபார்ம் இல்லேல…?” என்கிற அடுத்த கேள்வியையும் கேட்டாள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“சட்ட இருக்கு பேண்ட்ஸ் தான் இல்ல” ரவியின் பதில் தயக்கத்தோடு வெளிவர, “அந்தப் பேண்ட்ட கழத்தி குடு, இப்ப தொவைச்சு போட்டா காலையில கொஞ்சமாச்சும் காஞ்சிருக்கும். எல்லாம் என் தலெயெழுத்து. உன்ன மாதிரி தானல சந்திரனும்…” எனும் போதே ரவி விஜயாவை நிமிர்ந்துப் பார்க்க, விஜயா பேச்சை நிறுத்தினாள்.

“லேய் இங்க வெளிச்சத்துக்கு வா… ஆமா உன் கண்ணுல என்னல” எச்சரிக்கையும் கோபமும் ஒன்று சேர விஜயா கேட்க, “கிரிக்கெட் விளையாடும்போ பந்து…. கண்ணுல… பட்டு….” ரவி தயக்கத்தோடு ஒவ்வொரு வார்த்தையாய் சொல்லவும், “பந்தெறிஞ்சவன் கையை உடைச்சு அடுப்புல வைக்க, இப்படியால ரத்தம் கன்னிப் போறளவுக்கு பந்த வீசுவான், கட்டேல போறவன், நாசமுத்து போறவன்” என்று விஜயா அவள் வாய்க்கு வந்தபடி சாபமிட ஆரம்பிக்க, ரவி உள்ளுக்குள் திருப்தியடைந்தான்.

**

அன்றைய தினம் சகாயத்தின் கதைச் சொல்லும் திறனால், வகுப்பு மாணவர்கள் மத்தியில் ரவி மிகப்பெரிய ரௌடியாக ஒரே நாளில் மாறியிருந்தான்.

அவனை ஒரு பொருட்டாக மதிக்காத சக மாணவர்கள், ரவியின் ரத்தம் கன்றிய கண் பார்வைக்கு, சற்று மிரண்டு ஒதுங்கினார்கள். அவனை நெருங்கிப் பேசவே தயக்கம் காட்டினார்கள். அதே நேரம் அவனோடு சகஜமாகப் பேசிக் கொண்டிருந்தவர்களோ இன்னும் அதிக நெருக்கத்தை அவனோடு காட்ட ஆரம்பித்தார்கள். இது ஒருபுறமென்றால், மற்றொரு புறம், வகுப்பே மிரட்சியோடு பார்க்கும் வில்சன் சார் அவனை அழைத்து அக்கறையோடு விசாரித்தது, பின் வகுப்பின் லீடரான டேனியை அழைத்து க்ளாஸ் ஃபண்டிலிருந்து பணத்தை எடுத்து ரவியை மருத்துவமணைக்கு அழைத்துச் செல்லக் கூறியது, அதற்கும் மேலாகச் சதாசிவம் வந்து, “நீ யாரு என்னன்னு தெரியாம கிருஷ்ணகுமாரு உன்ன அடிச்சிட்டான் மக்ளே. இனி அவென் உன் வழிக்கு வரமாட்டான். அவன நான் பாத்துகிடுதேன்” என்று சொன்னதோடு அல்லாமல், அடிப்பட்ட கண்ணை மறைத்துக் கொள்ள கறுப்பு நிற கூலிங் கிளாஸ் ஒன்றைக் கொடுத்துச் சென்றது என ரவியைச் சுற்றி நடந்தவைகள் எல்லாம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தாலும், அவன் உள்ளூர இதையெல்லாம் அனுபவிக்க ஆரம்பித்தான்.

**

மாலை ஒசரவிளை பஸ் ஸ்டாப்பில் இறங்கி தெங்கம்புதூர் செல்லும் சாலையில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தவனை, “மருமவனே” என்ற குரல் தடுத்து நிறுத்தியது. அந்தக் குரல் பால்ராஜின் குரலைப் போன்றிருக்க, ‘பால்ராஜ் மாமா வந்துட்டாவளா’ என நினைத்தபடியே ரவி சந்தேகத்தோடு திரும்பிப் பார்த்தான். அங்கே பால்ராஜ் சிரித்தபடியே அமர்ந்திருந்தார்.

“என்ன மருமவனே கூடிங்க்ளாஸு எல்லாம் போட்டு ஒரே ஸ்டைலா இருக்க” எனக் கேட்டவரின் குரலில் எந்தவொரு மாற்றமும் தெரியவில்லை. ஆனால் அவருடைய உடல் மட்டும் முன்பிருந்ததைப் போலல்லாமல் சற்று மெலிந்து கறுத்துப் போயிருந்தது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“அது கண்ணுவலி மாமா” என்றபடி நெருங்கியவனை வைத்த கண் எடுக்காமல் பார்த்த பால்ராஜ், “கண்ணுவலியா…? எங்க கண்ணாடிய கழத்து” அவர் சந்தேகத்தோடு கேட்க, ரவி தயக்கத்தோடு கண்ணாடியைக் கழற்றினான்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“கண்ணுல என்ன பட்டுச்சு மருமவனே” அவர் அக்கறையோடு கேட்க, ரவி வழக்கமாய் அனைவரிடமும் சொன்ன, கிரிக்கெட் விளையாடும்போது பந்து பட்டு விட்ட கதையைச் சொல்ல, பால்ராஜ் அதிருப்தியோடு தலையை இடவலமாக அசைத்தார்.

“உண்மையைச் சொல்லு மருமவனே. நெசமாவே பந்து தான் பட்டுச்சா” என்று பால்ராஜ் அழுத்தமானக் குரலில் கேட்கவும், ரவியிடம் ஒரு பின்னடைவு தோன்றியது.

“அடி வச்சியா…?”

“இல்ல மாம்மா… நான் சும்மா தான் நின்னுட்டு இருந்தேன்” ரவி தயக்கத்தோடு பேச ஆரம்பிக்க, “சும்மா நின்னுட்டு இருந்தவன யாரு வந்து அடிப்பா. அதுவு இப்டி கண்ண சுத்தி ரத்தங்கன்னி போறளவுக்கு” அவனது வார்த்தைகளில் நம்பிக்கைற்றவராகப் பால்ராஜ் கூறவும், “இல்ல மாமா நெஜமா தான் சொல்றேன். பஸ் ஸ்டாண்ட்ல பஸ்ஸேர நின்னவன கூட்டிட்டு போய் அடிச்சிட்டான் மாமா.”

“அவென என்ன பண்ணின நீ” என்று பால்ராஜ் சாதாரணமாகக் கேட்க, ரவி பெருமிதத்தோடு, “கைல வச்சிருந்த கல்லை வச்சு அவன் முகத்துல அடிச்சிட்டேன். அலறி அடிச்சி கீழ விழுந்துட்டான்” எனப் பதிலளிக்கவும், பால்ராஜின் முகம் மாறியது.

“தப்பு மருமவனே. நாங்கெல்லாம் உள்ள மாட்டிகிட்டு எப்டி வெளிய வரதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்கோம். இந்த அடிதடியை எல்லாம் நீயும் கைல எடுத்துடாத மருமவனே”

நிஜக் கரிசனத்தோடு பால்ராஜிடமிருந்து வார்த்தைகள் வெளியே வந்தது.

தன்னுடைய வீரத்தை மெச்சித் தன்னைப் பாராட்டுவாரென நினைத்த ரவிக்கு அவருடைய இந்தப் பதில் பெரும் ஏமாற்றத்தையும் வெறுப்பையும் தோற்றுவித்தது. ‘இவரு ஆடுறத எல்லாம் ஆடிட்டு அட்வைஸ் மட்டும் நமக்குச் சொல்லிட வந்திடுவாரு’ ரவி மனதினுள் நினைத்துக் கொண்டாலும் எதுவுமே பேசாமல் அவர் முன்னே நின்றான்.

அவர்கள் இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் நிலவ, ஒன்றிரண்டு காக்கைகளின் கரையும் சப்தம் மட்டும் அவ்வப்பொழுது கேட்டது.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

“சரி மருமவனே நீ வீட்டுக்குக் கிளம்பு. உனக்கெ அம்மை வீட்டுல தனியா இருப்பா. துணைக்கு நீ தான் இருந்தாகனும் போ” என்று பால்ராஜ் பூடகமாகச் சொல்ல, “சரி மாமா நான் கெளம்புறேன்” என்று எவ்வித சுரத்தும் இல்லாமல் ரவி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

“லே மருமவனெ” நடந்துச் சென்றுக் கொண்டிருந்த ரவியை மீண்டும் அழைத்தார் பால்ராஜ்.

ரவி நின்று திரும்பிப் பார்த்தான்.

“ஓனக்க சேர்க்கை ஒன்னும் செரியில்லன்னு கேள்விபட்டேன். கொஞ்சம் சூதானமா நடந்துக்கோ மருமவனே”

ரவிக்கு ஆத்திரம் தலைக்கு ஏறியது என்றாலும் எதுவுமே பதில் பேசாமல் தலையை மட்டும் சரியென்பதாய் ஆட்டிக் கொண்டான். பின்னர் ஒப்புக்காக, “மாமா எப்ப வந்திய” எனக் கேட்டான்.

“வந்து ரெண்டு நாளாவுது மருமவனே. சரி நீ கெளம்பு” என்று அவர் சொல்ல, அங்கிருந்து தன்னுடைய வீட்டிற்கு செல்லும் பாதையில் அவன் நடந்தான்.

இது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகாக, பள்ளியில் படித்துக் கொண்டிருந்த மாணவன் ஒருவனின் மரணத்தை ஒட்டிப் பள்ளி அரை நாள் விடுமுறை அளித்திருக்க, பள்ளியிலேயே நேரத்தைச் செலவிடவும் முடியாமல், அதற்காக எங்கே போவதென்றும் தெரியாமல், ரவி நேராக வீட்டுக்கே சென்று விடுவதென முடிவு செய்து, வீட்டிற்கு கிளம்பினான்.

ஏனோ வீட்டிற்கு செல்லும் வழியெங்கும் அவன் மனம், இப்பொழுதே வீட்டிற்கு போய் என்ன செய்யப் போகிறோம் என்கிற கேள்வியைக் கேட்டுக் கொண்டேயிருந்தாலும், அவன் மனத்தின் ஏதோவொரு மூலையில் வீட்டிற்கு செல்வது தான் சரியென்று சொல்லிக் கொண்டேயிருக்க, பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி, ஒருவித தடுமாற்றத்துடன் வீட்டை நோக்கி நடந்து,

அவன் வீட்டை நெருங்கும் வேளையில், அவனுடைய வீட்டிலிருந்து சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, பால்ராஜ் வெளியேறிச் செல்வதைப் பார்த்தான்.

அவன் மனம் என்றோ அவன் கண்ட கனவை நினைவுக்குக் கொண்டு வந்தது.

(தொடரும்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism