Published:Updated:

ஊசிப்புட்டான் |``தலையில்லாத முண்டத்தின் கால்கள், இருமுறை இழுத்து இழுத்து வெட்டின"| அத்தியாயம் - 34

ஊசிப்புட்டான்

பத்துக்குப் பத்துகூட அளவில்லாத அந்த அறைக்குள் ஒரு பெரிய கூட்டமே குழுமி நின்றிருந்தது. அவன் கையிலிருந்த கத்தி சட்டெனப் பறிக்கப்பட்டு, அமர்ந்திருந்தவன் கழுத்தை ஒருவன் அறுக்க ஆரம்பித்தான்.

ஊசிப்புட்டான் |``தலையில்லாத முண்டத்தின் கால்கள், இருமுறை இழுத்து இழுத்து வெட்டின"| அத்தியாயம் - 34

பத்துக்குப் பத்துகூட அளவில்லாத அந்த அறைக்குள் ஒரு பெரிய கூட்டமே குழுமி நின்றிருந்தது. அவன் கையிலிருந்த கத்தி சட்டெனப் பறிக்கப்பட்டு, அமர்ந்திருந்தவன் கழுத்தை ஒருவன் அறுக்க ஆரம்பித்தான்.

Published:Updated:
ஊசிப்புட்டான்

அந்த உயரமான மதில் சுவருக்குக் கீழே ரவியும் இன்னும் ஆறு பேரும் நின்றுகொண்டிருந்தார்கள். “ஏன் ரெவி கயித்தைப் பிடிச்சு எறங்கி ஏறிடுவேல்ல” என்று அந்தக் கூட்டத்தில் உயரமாயிருந்தவன் ரவியிடம் கேட்டான். ரவிக்கு கயிற்றைப் பிடித்து இறங்குவது சிரமமாக இருக்குமெனத் தோன்றவில்லை. ஆனால் கயிற்றைப் பிடித்து ஏறிவிட முடியுமா என்பதே அவனுக்குச் சந்தேகமாக இருந்தது. அதனால் அந்த உயரமானவனுக்கு பதிலெதுவும் பேசாமல் நின்றான். “என்ன ரெவி முடியாதா?” என அவன் மீண்டும் கேட்க, ரவி தயக்கத்தோடு, “கயித்தைப் பிடிச்சு எறங்குகதுல எனக்குப் பிரச்னையில்லை. ஆனா ஏற முடியுமான்னு தான் தெரியலை” என்றான். உயரமானவன் முகத்தில் அதிருப்தி படர்ந்ததை அந்த இருளிலும் ரவியால் உணர முடிந்தது.

“ப்ச்... இதெல்லாம் மொதல்லயே ஒனக்கு சொல்லத் தெரியாதா... நாங்க வேற ஆளைப் பார்த்திருப்பம்ல. இப்படிக் கடேசி நேரத்துல வந்து சொல்லுக” அவன் முணுமுணுப்பாகச் சொன்னது ரவியின் காதுகளில் தெளிவாக விழுந்தது.

“இல்லண்ணே... நான் ஏறிக்கிடுதேன்” என்றான் ரவி.

“ம*** ஏறுன” என்று கோபமாகச் சொன்னவன், அடுத்ததாக, “கூட்டத்துல ஒருத்தன் மாட்டிகிட்டாலும் மொத்த ஆக்களுக்க வீட்லயும் எளவுதான் தெரியும்ல” என்றான்.

ரவிக்கு அவமானமாக இருந்தது. ஒரு நொடி தன் மனதினுள் தோன்றிய உண்மையை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாதோ என்றும் நினைத்தான். ஆனால் அடுத்த கணமே பொய் சொல்லி, தான் உள்ளே மாட்டிக்கொண்டுவிட்டால் அவன் ஒருவனால் மொத்தக் கூட்டத்துக்குமே அழிவுகாலம் வந்துவிடும் என்று தோன்ற, உண்மையைச் சொன்னது தவறில்லை என்கிற முடிவுக்கு வந்தான்.

“ஊருக்குள்ள எளனி களவுக்கு போறப்ப தென்னை மரத்துல ஏறிருக்கேன்ணே. கயித்தைப் பிடிச்சு ஏறிக்குவேன்ணே” என்று நம்பிக்கையோடு ரவி சொன்னாலும், எந்தக் கணத்திலும் உள்ளே மாட்டிக்கொண்டால் இவர்கள் எவரையுமே காட்டிக் கொடுக்கக் கூடாது என்றும் மனதினுள் சங்கல்பம் எடுத்துக்கொண்டான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

மதில் சுவரில் ஏறுவதற்காகக் கொண்டுவந்திருந்த ஏணி, சுவர் ஓரமாகக் கிடப்புமட்டில் படுக்கப் போட்டிருந்தார்கள். ரவியின் உடனிருந்த நால்வரில் ஒருவன் கையில் சினிமா போஸ்டர் சுருள். மற்றொருவன் கையில் போஸ்டரை ஒட்டத் தேவைப்படும் மைதா மாவுக் கூழை ஒரு வாளியில் வைத்திருந்தான். ஒருவன் சாலையில் யாரேனும் வந்தால் அறிவிக்கவேண்டி, சாலையோரமாகப் பதுங்கி அமர்ந்திருந்தான்.

“நிச்சயமா உன்னால கயித்தைப் பிடிச்சி ஏறிட முடியுமா?” அந்த உயரமானவன் மீண்டும் ரவியிடம் சந்தேகமாகக் கேட்க, “கண்டிப்பா ஏறிடுவேன்ணே. எனக்கு நம்பிக்கையிருக்கு” என்று ரவி அழுத்தம் திருத்தமாகச் சொல்லவும், அவனுடைய முகத்தில் ஒருவிதமான திருப்தி படர்ந்தது.

போஸ்டரைக் கையில் வைத்திருந்தவன் வாளியை வைத்திருந்தவனிடம், “ஏம்ல மணி என்னவாவுது?” எனக் கேட்டான்.

கையில் வாளியை வைத்திருந்தவன் அண்ணாந்து வானத்தைப் பார்த்துவிட்டு, “எப்படியும் மூணு மணி ஆகிருக்கும்” என்றான்.

“மூணு மணிக்கு மேலதான் உள்ளேருந்து சிக்னலு தர்றதா சொல்லிருக்கானுவ. ரெடியா இருந்துக்கோங்க” என்று அந்த உயரமானவன் பரபரப்படைந்தான்.

அவனுடைய பரபரப்பு அத்தனை நேரமும் படபடப்போடு நின்றுகொண்டிருந்தவர்களையும் தொற்றிக்கொண்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சாலையில் ஆள் யாரேனும் வருகிறார்களா என்று நோட்டம் பார்க்க நின்றவனை நோக்கி உஸ் உஸ் என்று சப்தம் எழுப்பினான் உயரமானவன். சத்தம் கேட்டு அவன் திரும்பிப் பார்க்க, “லேய்... உம்பளந்தான் சிக்னல் கெடச்சி நாங்க உள்ள போனதும் ஏணிய மறுபடியும் படுக்கப் போட்டுட்டு போஸ்டர் ஓட்டுறவன் கணக்கா இங்க வந்து நின்னுக்க சரியா... அப்புறமா நாங்க சிக்னலைக் கொடுத்ததும் ஏணியை மறுபடியும் சுவத்துல சாச்சுவெச்டுடு” என்றான்.

அந்த உம்பளந்தான் சரியெனத் தலையாட்டியதை இருட்டில் ரவியால் கவனிக்க முடிந்தது. ஆனால் அந்த உயரமானவனுக்கு அந்தச் செய்கை போதாததாக இருந்தது. “லேய் வாய்ல என்ன ஒங்கொப்பனுக்க கொழுக்கட்டயவாலவெச்சிருக்க? வாயைத் தொறந்து சொல்லுல” என்றான் கடுப்பாக.

“எங்கப்பனுக்க கொழுக்கட்டைய நா வாய்லவெச்சுக்கனும்னா நான் அந்தப் பரலோகத்துக்குதான் போவணும். நீங்க உள்ளே போயி காரியத்தை முடிச்சுட்டு கரெக்டா சிக்னலக் கொடுங்க” என்றான் உம்பளந்தான்.

ரவி இதுவரையிலும் கேட்டிராத சீழ்க்கை ஒலி எங்கிருந்தோ ஒலிப்பதுபபோலக் கேட்டது. அது என்ன மாதிரியான ஒலி என்பதை அவன் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தபோதே அவனோடு வந்திருந்தவர்கள் பரபரப்படைந்தார்கள்.

படுக்கப் போட்டிருந்த ஏணியை அந்த உயரமானவன் சுவரோடு சேர்த்துவைக்க, ஒருவன் தன் கையிலிருந்த மைதா மாவுக் கரைசலின் உள்ளிருந்து பிளாஸ்டிக் கவரால் பொதியப்பட்டிருந்த ஒரு பொருளை எடுத்து இடுப்பில் சொருகிக்கொண்டான். அவர்களோடு இருந்த மற்றொருவன் சுருட்டிவைக்கப்பட்டிருந்த சினிமா போஸ்ட்டரின் உள்ளிருந்து ஒன்றரையடி நீளமிருந்த வங்கை எடுத்து முதுகில் மாட்டிக்கொண்டான்.

சுவரோரமாகச் சாய்த்துவைக்கப்பட்டிருந்த ஏணிப்படியில் முதலடியை எடுத்துவைத்த உயரமானவன், ஒரு நொடி நின்றான். பின் அவன் ஒரு சீழ்க்கை ஒலி எழுப்ப, அடுத்த இரண்டாவது நொடியில் அந்தப் பெரிய மதில் சுவரின் மறுபக்கமிருந்து பதில் சமிக்ஞையாகச் சற்று முன் ரவி கேட்ட அதே சீழ்க்கை ஒலி வெளிப்பட்டது. இப்போது திருப்தியாக உயரமானவன் சரசரவென ஏணிப்படியில் ஏறி மதில் உச்சியில் நின்று கைகாட்ட, மூவரும் ஏணிப்படிகளில் ஏறினர்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

ரவி ஏறி இறங்கிய அந்தச் சுவர் வெளியே நின்று பார்த்தபோது அத்தனை பெரியதாகத் தெரியவில்லை. ஆனால் அதே சுவர் அவன் ஏறி இறங்கிய பிறகு மிகப் பிரமாண்டமாக, கோட்டைச் சுவரைப் போன்று வானை முட்டி நிற்பதைப் போன்று தெரிந்தது. இந்தச் சுவறையா கயிறு பற்றி ஏறப்போகிறோம் என்கிற நினைப்பே அவனுக்குள் அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் உண்டாக்க, திரும்பிப் பார்த்தான். அங்கே இவனுக்கும் முன்னேயே இருபது பேர் குழுமி நின்றார்கள்.

‘இவெங்கெல்லாம் எப்படி உள்ள வந்தாங்க’ என்கிற திகைப்பும் அதைத் தொடர்ந்து, ‘நம்மை மாதிரியே மதிலெட்டிச் சாடிதான் உள்ள வந்திருப்பாங்க’ என்று தன்னைத்தானே சமாதனப்படுத்திக் கொள்ளவும் செய்த மறு நொடி ரவி மட்டுமே அங்கே நின்றுகொண்டிருந்தான். அவனோடு அங்கே நின்றவர்கள் ஒருவரையும் காணவில்லை.

அவனுக்கு வலதுபுறமிருந்த மரத்தின் மறைவிலிருந்து அவனை யாரோ ஊசியென அழைப்பதைப்போலக் கேட்கவும், திடுக்கிடலோடு இடது புறமாய் ஓடி மெத்தென்ற ஒன்றின் மேல் மோதி நின்றான்.

“லேய் எவனொட கூட்டுல நீ” அவன் மோதிய மெத்தென்ற சுவரிலிருந்து கரகரப்பாகக் குரல் வெளிப்பட்டது. பயத்தோடு திரும்பியவன் முன்னே, ஓங்குதாங்காக வளர்ந்த ஓர் உருவம் கண்களில் கொலை வெறியோடு நின்றுகொண்டிருந்தது.

ரவியின் தொண்டை உலர்ந்து, நாக்கு மேலண்ணத்தில் ஓட்டிக்கொள்ள, வார்த்தைகளைப் பேச முடியாமல் ஸ்தம்பித்துப்போய் நின்றான்.

“எந்த ஊர்க்காரம்ல நீ” மீண்டும் அந்த உருவம் கேட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இம்முறை, “தெத் தெத் தெங்கம்ப்புதூர்” என்று திக்கித் திக்கி பதிலளித்தான்.

“இந்த மாதிரி பொடிப்பயலுவல எல்லாம் எதுக்குத்தான் உள்ள கூட்டிட்டு வாரானுவளோ” என்று அந்த உருவம் தனக்குத் தானே பேசிக்கொண்டது, ரவியின் காதுகளிலும் விழுந்தது. ‘நானொண்ணும் பொடிப்பய இல்ல, நானும் ஊருக்குள்ள அடிதடிவெச்சு சுத்திட்டு இருக்க ஒரு ரௌடிதான்’ என அவன் சொல்ல நினைத்தாலும் ஏனோ அந்த உருவத்தின் முன் அவனுக்குப் பேச்சு வரவில்லை.

எங்கோ ஒரிடத்தில் இரும்புக்கதவு திறக்கப்படுவதற்குச் சான்றாக எண்ணெய் ஊற்றிப் பராமரிக்கப்படாத கீழின் கீச்சொலி கேட்டது. அதைத் தொடர்ந்து திபுதிபுவென்று சிமென்ட் தரையில் வெற்றுக் கால்களோடு பலர் ஓடும் ஓசையும் கேட்டது.

அங்கே என்ன நடக்கிறது என்பதை அவன் அறிந்து சூதாரித்துக்கொள்வதற்கு முன்பே, அவன் முன் சட்டையின்றி ஒரு மனிதன் அமர்ந்திருப்பதைப் பார்த்தான்.

கால் நீட்டி அமர்ந்திருந்தவன் காலுக்கு இருவர் என அழுத்தமாய் பிடித்திருக்க, அவனுடைய கைகளைக் கை ஒன்றுக்கு இருவரெனப் பிடித்திருந்தார்கள். வியர்வையில் நனைந்திருந்த அவனது மார்பு தசையில் ஆங்காங்கே வெளிச்சப் புள்ளிகள் தெரிந்தன.

“லேய் ஊசி உன் இடுப்புல இருக்க அந்த வங்க எடுலே.” கூட்டத்திலிருந்து குரல் கேட்டது.

ரவி தன்னுடைய இடுப்பில் மறைத்துவைத்திருந்த ஒன்றரை அடி நீள வங்குக் கத்தியை வெளியே எடுத்து, தன்னிடம் கேட்டது யாரெனப் பார்க்கவேண்டி, தலையை நிமிர்த்தினான்.

ஊசிப்புட்டான்
ஊசிப்புட்டான்

பத்துக்குப் பத்துகூட அளவில்லாத அந்த அறைக்குள் ஒரு பெரிய கூட்டமே குழுமி நின்றிருந்தது. அவன் கையிலிருந்த கத்தி சட்டெனப் பறிக்கப்பட்டு, அமர்ந்திருந்தவன் கழுத்தை ஒருவன் அறுக்க ஆரம்பித்தான். அங்கே அவன் கழுத்து அறுபட அறுபட ரவி தன்னுடையக் கழுத்து அறுபடுவதாகவே உணர்ந்தான்.

தலையை உடம்பிலிருந்து அறுத்தெடுத்ததும், அவனுடைய கையும் காலும் விடுவிக்கப்பட்டன. தலையில்லாத முண்டத்தின் கால்கள் இருமுறை இழுத்து இழுத்து வெட்டின. பிறகு அந்த உடலின் அதிர்வு அடங்கியது.

பத்தல்விளை சாக்கடையில், வெட்டியெடுக்கப்பட்ட தலையைத் தூக்கி எறிந்துவிட்டு ரவியுடன் நின்றவர்கள் ஆளுக்கொரு பக்கமாகச் சிதறிப் போக, ரவி மட்டும் துண்டிக்கப்பட்ட தலையை நின்று பார்த்தான்.

துண்டிக்கப்பட்ட தலை அவனைப் பார்த்து மெதுவாகத் தன் கண்களைத் திறந்தது. பின், “ரெவி உனக்குன்னு ஒரு பெயரை நீ சம்பாதிக்கணும்னு நான்தான் உனக்குச் சொன்னேன். அதுக்காக என் கழுத்தையே நீ அறுத்துட்டேல்ல. நல்லாயிரு” என்று சொன்னபடியே அந்தத் தலை சாக்கடையின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட, திடுக்கிட்டுக் கண் விழித்தான் ரவி.

அவன் உடல் முழுக்க வியர்வையால் நனைந்திருந்தது. மலங்க மலங்க விழி திறந்து அமர்ந்திருந்தவனை, மென்மையான கையொன்று பற்றியது.

“என்னாச்சு ரெவி” என்று கேட்ட தாமரைச் செல்வி அவனருகில் வெற்று மார்போடு அமர்ந்திருந்தாள்.

“ஒ ஒண்ணுமில்ல... ஒரு கெட்ட கனா” என்று உளறினான் ரவி.

“நேரங்கெட்ட நேரத்துல நீ ஊர் சுத்துறேல்ல, ஏதும் காத்து கருப்பு உன்னைத் தொட்டிருக்கும். ஆமா நேத்து ராத்திரி தாமரக்கொளம் சொல்லமாடங் கோயிலுகிட்ட போனதான” என்று அவள் கேட்க, ஆமாமென்பதாகத் தலையை ஆட்டினான் ரவி.

“அது தான். சொல்ல மாடன் வேட்டைக்குப் போறப்ப நீ எதுக்க போயிருப்ப. இரு இரு. திருநீறு எடுத்துட்டு வரேன்” என்று அவள் படுக்கையிலிருந்து எழுந்து ஆடைகொண்டு உடலைப் போர்த்திக்கொள்ளாமல், நிர்வாணத்தோடு நிதானமாக நடந்து சென்று திருநீறோடு திரும்பி வந்தாள்.

ரவியின் நெற்றியில் திருநீற்றைப் பூசிவிட்டு, அவனைத் தன் மார்போடு அவள் சேர்த்தணைத்துக்கொள்ள, அவளது மார்பின் இதமான சூட்டில் அவன் கொஞ்சம் கொஞ்சமாக நிதானத்துக்கு வர ஆரம்பித்தான்.

“கடேசில ஒண்ணுமில்லாமத்தான் உன்னிய வெளிய அனுப்புவா பார்த்துக்க” என்கிற குட்டியா மணியின் எச்சரிக்கை வார்த்தைகள் ரவியின் காதுகளில் ஒலிக்க, ‘இனி இவ இல்லேன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை’ என்று ரவி நினைத்துக்கொண்டான்.

தன் மார்பில் முகம் புதைத்துப் படுத்திருந்த ரவியின் காதுகளில், “என்ன ரெவி பயம் போயிடிச்சா?” எனத் தாமரைச்செல்வி கிசுகிசுப்பாகக் கேட்க, அவளது மார்புச் சதை கொடுத்த இதத்திலிருந்து வெளியேற விருப்பமற்ற ரவியோ, “கொஞ்சமா” என்று பதிலளித்தான்.

அவனை மீண்டும் தன் மார்போடு இறுக்கமாக அணைத்துக்கொண்டாள் தாமரைச் செல்வி.

தாமரைச் செல்வியைப் பற்றிய எச்சரிக்கையை ரவிக்குக் கொடுத்த குட்டியா மணி, அவனிடம் சொல்லாமல் விட்ட குறிப்பொன்று இருந்தது. அது தாமரைச்செல்வி யாருடைய ஆசைநாயகி என்பதும், சில வருடங்களுக்கு முன்பு இதைப் போன்று இவளிடம் சிக்கிக்கொண்ட இருவரை அவன் வழுக்கம்பாறையில் வைத்து வெட்டிக் கொன்றான் என்பதும்.

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism