Published:Updated:

உலகமெங்கும் விரியும் தமிழ்!

நூல்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
நூல்கள்

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளி, கல்லூரிப் பாடங்கள் சார்ந்து நிபுணர்கள், ஆளுமைகள் எழுதிய 875 நூல்களை வெளியிட்டுள்ளது.

பிறமொழிகளில் இருந்து தமிழுக்கு ஏராளமான இலக்கியங்கள் மொழிபெயர்க்கப்படுகின்றன. ஆனால், தமிழில் கொண்டாடப்படும் ஆகச்சிறந்த படைப்புகள்கூட பிறமொழிகளில் பெயர்க்கப்படுவது அரிதாகத்தான் நடக்கிறது. அக்குறையைப் போக்கும் வகையில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் தமிழ்ச்சூழலில் நடந்துள்ளன.

தமிழக அரசின் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆளுமைகள் சிலரின் நூல்களை புகழ்பெற்ற சர்வதேசப் பதிப்பகங்களோடு இணைந்து ஆங்கிலத்தில் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம், தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலம் தாண்டி சிங்களம், அல்பேனியன், ஸ்லோவேனியன், ஜெர்மன், பிரெஞ்சு என சர்வதேச வாசிப்பாளர்களின் கைகளுக்குக் கொண்டு சேர்க்கிறது.

உலகமெங்கும் விரியும் தமிழ்!

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் பள்ளி, கல்லூரிப் பாடங்கள் சார்ந்து நிபுணர்கள், ஆளுமைகள் எழுதிய 875 நூல்களை வெளியிட்டுள்ளது. பரபரப்பாக இயங்கிய இக்கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு, 1980களுக்குப் பிறகு பல்வேறு காரணங்களால் முடங்கிப்போனது. 2017-ல் த.உதயச் சந்திரன் பள்ளிக் கல்வித்துறைச் செயலா ளராக இருந்தபோது இந்த வெளியீட்டுப் பிரிவு மாற்றி அமைக்கப்பட்டு, பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. முதற்கட்டமாக, முன்பு பதிப்பித்த 875 நூல்களும் இலவசமாகப் படிக்கும் வகையில் தமிழ் இணையக் கல்விக்கழக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 636 நூல்கள் மறுபதிப்பு செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டன. தொடர்ச்சியாக ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம் போன்ற தேசிய நிறுவனங்களின் போட்டித் தேர்வுகளுக்கான நூல்களை பிரபல ஆங்கிலப் பதிப்பகங்களோடு இணைந்து பதிப்பித்துவந்த பாடநூல் நிறுவனம், தற்போது தமிழ் ஆளுமைகளின் புகழ்பெற்ற படைப்புகளை ஆங்கிலத்துக்குக் கொண்டு செல்லும் பணியில் இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியின்போது, கி.ரா. தொகுத்த `50 கரிசல் கதைகள்’, நீலபத்மநாபனின் `தலைமுறைகள்’, தி.ஜானகிராமனின் `செம்பருத்தி’, ராஜம் கிருஷ்ணனின் `சுழலில் மிதக்கும் தீபங்கள்’, சி.சு.செல்லப்பாவின் `வாடிவாசல்’ ஆகிய படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன.

உலகமெங்கும் விரியும் தமிழ்!
உலகமெங்கும் விரியும் தமிழ்!

இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஒட்டி, எஸ்.ராமகிருஷ்ணனின் `கதாவிலாசம்’, ஹெப்சிபா ஜேசுதாஸனின் `புத்தம் வீடு’, உ.வே.சாவின் கட்டுரைகள், தோப்பில் முகமது மீரானின் சிறுகதைகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் சிறுகதைகள் ஆகிய படைப்புகள் ஆங்கிலத்துக்குச் செல்கின்றன. தவிர, பெங்குவின் பதிப்பகத்தோடு இணைந்து `திருக்குறள்’, `சிலப்பதிகாரம்’ ஆகிய இலக்கியங்களையும் அழகிய பதிப்பாக ஆங்கிலத்திற்குக் கொண்டு சென்றுள்ளது பாடநூல் கழகம்

‘‘தமிழில் பொறியியல், மருத்துவம் போன்ற துறைசார்ந்த தொழில்நுட்ப நூல்கள் இல்லை என்ற குறையைக் களையும் நோக்கில் நிறைய பதிப்புகளைப் பாடநூல் கழகத்தின் வெளியீட்டுப் பிரிவு கொண்டு வந்திருக்கிறது. `திசைதோறும் திராவிடம்' என்ற திட்டத்தின்கீழ் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மலையாளத்தில் கொண்டுவரும் பணிகள் நடந்துவருகின்றன. `திருக்குறள் - கலைஞர் உரை’ தெலுங்கில் வரவிருக்கிறது. `தமிழ்நாட்டில் காந்தி’, `அண்ணா சிறுகதைகள்’ இரண்டையும் ஆங்கிலத்தில் கொண்டுவருகிறோம். சுந்தர ராமசாமியின் `ஒரு புளியமரத்தின் கதை’ தெலுங்கிலும், தி.ஜா குறித்து வந்த ஜானகிராமம் நூல் கன்னடத்திலும் வரவிருக்கிறது’’ என்கிறார், இக்கழகத்தின் துணை இயக்குநர் முனைவர் சங்கர சரவணன்.

காலச்சுவடு பதிப்பகம் 15 ஆண்டுகளுக்கு முன்பே சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை' நாவலை ஆங்கிலத்துக்கும், ஜெர்மனிக்கும் கொண்டு சென்றிருக்கிறது. அம்பையின் சிறுகதைகள் பிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பதிப்பகம் ஒன்று ஆங்கிலத்திலும் இந்த நாவலைக் கொண்டுவந்துள்ளது. சுந்தர ராமசாமியின் `ஒரு புளிய மரத்தின் கதை’யை அமேசான் கிராஸிங் என்ற சர்வதேச பதிப்பகம் ஆங்கிலத்தில் கொண்டுவரவுள்ளது. ஸ்லோவேனியன் என்ற ஐரோப்பிய மொழியிலும் ஒரு பதிப்பகம் இந்த நாவலைக் கொண்டுவருகிறது.

‘‘2007-ல் ஃபெல்லோஷிப் பெற்று ஜெர்மன் பிராங்க்பர்ட் புத்தக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். அதில்தான் உரிமைப் பரிமாற்றம் பற்றிய தெளிவு எனக்குக் கிடைத்தது. அதன்மூலம் கிடைத்த தொடர்புகள் பிறமொழிகளுக்குத் தமிழ்ப் படைப்புகளைக் கொண்டுசெல்ல உதவியாக இருந்தன. நிறைய நாடுகள், தங்கள் மொழி இலக்கியங்களைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்லவும் பிறமொழி இலக்கியங்களைத் தங்கள் மொழிக்குக் கொண்டுவரவும் நிதியுதவி அளிக்கும் திட்டங்களை வைத்திருக்கின்றன. நாங்கள் அந்த நிதியுதவிகளையும் பெற்றிருக்கிறோம்.

சல்மாவின் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை'யை ஸ்பெயினில் பேசக்கூடிய கலீஷியா என்ற பிராந்திய மொழிக்குக் கொண்டு சென்றிருக்கிறோம். அவரின் இரண்டாம் நாவலான ‘மனாமியங்கள்' பதிப்புரிமையை இங்கிலாந்தில் ஒரு புகழ்பெற்ற பதிப்பகத்துக்குத் தந்திருக்கிறோம். பெருமாள் முருகனின் நூல்களும் பல மொழிகளுக்குச் சென்றிருக்கின்றன. குரோ அட்லாண்டிக் என்ற அமெரிக்க பதிப்பகம் `மாதொருபாகன்’, `பூனாட்சி’, `பூக்குழி’ மூன்று நாவல்களின் உரிமையையும் வாங்கியிருக்கிறார்கள். இங்கிலாந்தில் புஷ்கின் பிரஸ் இந்த நூல்களைக் கொண்டு வருகிறது. தவிர, செக், சைனீஷ், கொரியன், துருக்கி, ஸ்லோவேனியன், இத்தாலியன், சிங்கள மொழிகளுக்கும் பெருமாள் முருகனின் படைப்புகள் செல்கின்றன. ஸர்மிளா ஸெய்யித்தின் ‘உம்மத்' அல்பேனியன் மொழிக்குச் சென்றிருக்கிறது.

கண்ணன், சங்கர சரவணன்
கண்ணன், சங்கர சரவணன்

தமிழில் ஏராளமான உலகத்தரமுள்ள இலக்கியங்கள் வருகின்றன. அவற்றைப் பிறமொழிகளுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் நிறைய உதவிகள் தேவை. கடந்த 15 ஆண்டுகளில் 30 படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளோம். இன்னும் அதிகம் செய்திருக்கவேண்டும். அரசு உதவி செய்தால் இந்தப்பணியை விரைவுபடுத்தலாம்’’ என்கிறார் காலச்சுவடு பதிப்பகத்தின் உரிமையாளர் கண்ணன்.

தமிழ் இலக்கியங்களுக்குப் பிறமொழிகளில் பெரும் வரவேற்பு இருக்கிறது. தமிழ்ப்படைப்புகளை உலகின் பலமொழிகளில் கொண்டு செல்லும் முயற்சிகளும் அதற்கான வாய்ப்புகளும் அதிகப்படுத்தப்பட வேண்டும்.