Published:Updated:

`சிறந்த பேச்சாளர் ஆவதற்கு, உறுதியான லட்சியம் வேண்டும்!’ - நாஞ்சில் சம்பத்

நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்
நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்

ஒருவர் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமென்றால், அவரது உள்ளத்தில் ஒளி இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், அவரது உள்ளத்தில் உறுதியான லட்சியம் இருக்க வேண்டும் என்று ஜூனியர் விகடனின் ‘தமிழ் மண்ணே வணக்கம்’ நிகழ்ச்சியில் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கூறினார்.

தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பேச்சுக்கலையை வளர்க்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு ‘தமிழ் மண்ணே வணக்கம்! உரக்கப் பேசுவோம்... உண்மையே பேசுவோம்’ என்ற தலைப்பிலான நிகழ்ச்சியை ‘ஜூனியர் விகடன்’ தொடங்கியிருக்கிறது. இதன் முதல் நிகழ்ச்சி காணொலி வாயிலாக கடந்த சனிக்கிழமை (பிப்.6) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பேச்சாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம்கொண்ட இளைஞர்களும் இளம்பெண்களும் மாணவ - மாணவியரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்
நிகழ்ச்சியில் நாஞ்சில் சம்பத்

அந்த நிகழ்ச்சியில், திராவிட இயக்கப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத் பங்கேற்று தன் சொந்த அனுபவத்திலிருந்து பேச்சாற்றலை வளர்த்துக்கொள்வதற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கினார். அப்போது, “ஒருவர் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமென்றால், அவரது உள்ளத்தில் ஒளி இருக்க வேண்டும் என்பதைக் காட்டிலும், அவரது உள்ளத்தில் உறுதியான லட்சியம் இருக்க வேண்டும். அப்போதுதான் பேச்சில் வெற்றிபெற முடியும். பேச்சாளன் என்பவன் சமூகத்தின் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவனுக்கு சுயமரியாதையும், சுதந்திர உணர்ச்சியும், சபிக்கப்பட்ட சமூகத்தின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்கிற கவலையும் கரிசனமும் இருக்க வேண்டும்.

இலக்கிய மேடையாக இருந்தாலும், அரசியல் மேடையாக இருந்தாலும், கல்லூரி மேடையாக இருந்தாலும், தன்னம்பிக்கை மேடையாக இருந்திலும், ஒரு பேச்சாளர் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தால்தான், அவரது பேச்சை எல்லோரும் கேட்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ராவணனைப் பற்றி ஒரு தம்பி பேசினார்.

தமிழ் மண்ணே வணக்கம்
தமிழ் மண்ணே வணக்கம்

ராவணனைப் பற்றி பேசும்போது, நாம் ராவணனாகவே உருமாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் பேச்சு சிறக்கும். பேச்சாளராக வேண்டும் என்று விரும்புபவர்கள் நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். அன்றாட அரசியல் நிகழ்வுகளை உற்று கவனிக்க வேண்டும். சிறந்த பேச்சாளர்களின் பேச்சுகளைக் கேட்க வேண்டும்” என்றார் நாஞ்சில் சம்பத்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களில் சிலர் பேசினார்கள். அவர்களின் பேச்சுகளில் இருந்த குறைநிறைகளை நாஞ்சில் சம்பத் சுட்டிக்காட்டினார். அவர்கள் தங்களின் பேச்சை மேலும் மெருகேற்றுவதற்கான ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். பள்ளி மாணவி தமிழிசை ஸ்டாலின் என்ற மாணவி ‘பசியில் பாரதம்’ என்ற தலைப்பில் பேசினார்.

“என் தேசத்தில் இருக்கும் பசியைப் பற்றிப் பேசப்போகிறேன். எனவே, என் குரலில் நடுக்கங்கள் இருக்கலாம். வலிகள் இருக்கலாம். இந்தச் சிறுமியின் குரல் உங்கள் இதயத்தை கனமாக்கலாம். எங்கெல்லாம் குப்பைகளுக்குப் பருக்கைகள் போகிறதோ, எங்கெல்லாம் புகைப்படங்களுக்கும் கட்அவுட்களுக்கும் பால் போகிறதோ, எங்கெல்லாம் பாதங்களில் பழங்கள் விழுந்துகிடக்கிறதோ, அங்கெல்லாம் ஒலிக்கட்டும் இந்தச் சிறுமியின் குரல்.

தமிழிசை ஸ்டாலின்
தமிழிசை ஸ்டாலின்

பணக்காரர்களுக்கு ஒருநாளும் பசியே வராது. ஆகையால் எங்கள் பசி உங்களுக்கு புரியாது. வாய்விட்டு அழும் பிள்ளைகளுக்கு உணவு வழங்க வக்கற்ற சமுதாயத்தில், சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்துகொண்டிருக்கிறீர்கள். என் பசிக்கு பதில் சொல்லாத உங்கள் கோடிகள் குப்பைக்குச் சமானம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று அந்த மாணவி பேசினார். அவரது பேச்சைப் பாராட்டிய நாஞ்சில் சம்பத், பேச்சாற்றலை மேலும் வளர்த்துக்கொள்வதற்கான அறிவுரைகளை வழங்கினார்.

அடுத்த கட்டுரைக்கு