மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 19 - கற்றது தமிழ்: தமிழ் எம்.ஏ

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

இப்போதுகூட எனக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேச வராது. உச்சரிப்பில் தமிழ் நெடி இருக்கும். அதனால் என்ன?

2007-ம் ஆண்டு இறுதியில் சிம்லாவில் நான். சென்னையிலிருந்து பேசிய ஓர் ஊடக நண்பர் ‘கற்றது தமிழ்’ படம் பற்றிக் கருத்து கேட்டார். “இன்னும் படம் பார்க்கவில்லை” என்றேன். ‘‘தமிழ் எம்.ஏ படித்து வாழ்க்கையில் தோற்றவர் பற்றிய கதை, அதனால்தான் கேட்கிறேன்’’ என்றார். இயக்குநரின் கருத்துச் சுதந்திரம்; இதில் கருத்து சொல்ல ஒன்றுமில்லை என்று மறுத்தேன். ஆயினும் மீள்நினைவுகளில் மிதந்தது மனசு.

ஒரு நாள் இரவு நானும் பள்ளித் தோழன் ஒருவனும் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருந்தோம். சுதந்திர தின விழா பற்றிய ஆங்கிலக் கட்டுரையை ஒவ்வொரு வரியாக மனப்பாடம் செய்தான். `இன்டிபென்டன்ஸ் டே இஸ்’ என்று சத்தமாகவும் அடுத்து ஏதோ ஒரு வார்த்தையை முழுங்குவதும் பிறகு ‘ஆன் ஆகஸ்ட் பிப்டீன்’ என்று தொடர்வதுமாக இருந்தான். விசாரித்தபோது, ‘celebrated’ என்ற வார்த்தையை உச்சரிக்கத் தெரியவில்லை, அதனால் அதை ‘தலைப்பிரட்டை’ என்று மனசுக்குள் சொல்லி ஞாபகத்தில் வைத்துக் கொள்கிறேன் என்று சொன்னான். அது `கெளபிரேட்டட்’ இல்லை `செலிபிரேட்டட்’ என்பது எனக்கும் ரொம்ப நாள் கழித்துதான் தெரியும். அதுதான் களநிலவரம். எங்கள் ஏரியா அப்படி!

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

“கையில் கிடச்சால் அடிச்சே கொன்றுவேன்” என்று எனது கடைசித் தம்பி யாரையோ திட்டிக்கொண்டிருந்தான்.  “யாரை” என்று கேட்டேன் “இங்கிலீஷைக் கண்டு பிடித்தவனை” என்று பதில் சொன்னான். ஆங்கிலத்திற்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஏழாம் பொருத்தம்.

பள்ளி இறுதி வகுப்பு வரை தமிழ்வழியில் படித்தவன் நான். 1974-75-ல் அமெரிக்கன் கல்லூரியில் பி.யு.சி என்ற புகுமுகவகுப்பில் சேர்ந்தேன். பயிற்று மொழி ஆங்கிலம். கண்ணைக் கட்டி லண்டனில் விட்ட மாதிரி. அதே ஆர்க்கிமிடிஸ் தத்துவம். ஆனால் புரியவில்லை. தமிழில், ஒரு திரவத்தில் தங்கு தடையின்றி மூழ்கிய அதே திடப்பொருள், ஆங்கிலத்தில் தொண்டையை அடைத்தது. எனது தன்னம்பிக்கை வற்றி வதங்கியது. சுயம் சுருங்கியது.

அடுத்து விண்ணப்பம் போட்டது பி.எஸ்ஸி படிக்கத்தான். இடமும் கிடைத்தது, ஆனால் பணம் கட்டப்போகும் வழியில் எனது கால்கள் வேறொரு கல்லூரிக்கு நடந்தன. யாரிடமும் அறிவுரை கேட்காமல் என் மனசு சொன்ன படிப்பில் சேர்ந்தேன். பி.ஏ தமிழ் இலக்கியம். தமிழ் இலக்கியம் படித்தால் ஒரு வேலையும் கிடைக்காது என்று அடித்துச் சொன்னார்கள். பி.ஏ, எம்.ஏ இரண்டிலும் முதலிடம். தங்கப்பதக்கம். முதுகலைத் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே நான் வேலையில் சேர்ந்துவிட்டேன்.

இந்திய ஆட்சிப்பணித் தேர்வு என்பது காமராஜர் காட்டிய திசையில் நான் ஒரே ஒருமுறை எறிந்து பார்த்த கல். என் கையில் இருந்த கயிற்றை வைத்து இழுத்துப் பார்த்த மலை. என்னைவிட நன்றாகப் படிக்கும் நண்பர்கள் ரயில்வே, வங்கிப்பணிகள், குரூப் 4 என்று விண்ணப்பித்து வெற்றிபெறுவதை வேடிக்கை பார்த்தேன். நான் ஒருபோதும் விண்ணப்பிக்கவில்லை.

குடிமைப்பணித் தேர்வுகளில் பொதுஅறிவு, கட்டுரை ஆகிய இரண்டு கட்டாயத் தாள்களை ஆங்கிலம் மட்டுமன்றி, அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையிலுள்ள இந்திய மொழிகளிலும் எழுதலாம் என்ற வாய்ப்பு முதன்முதலில் 1969-ல் அளிக்கப்பட்டது. மீதித் தேர்வுகளை ஆங்கிலத்தில்தான் எழுதவேண்டும். கோத்தாரி கமிஷன் பரிந்துரையின்படி 1978-ல் விருப்பத்தாள்களையும் இந்திய மொழிகளில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. நேர்முகத் தேர்விலும் தேவைப்பட்டால் இந்திய மொழிகளில் ஒன்றில் பதிலளிக்கும் வாய்ப்பும் தரப்பட்டது.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

தமிழ் இலக்கியம் படித்து, தமிழிலேயே குடிமைப்பணித் தேர்வெழுதி, 1984-ல் முதல் முயற்சியில் வெற்றிபெறும் பெருமிதத்தைத் தமிழன்னை எனக்காக முன்பதிவு செய்துவைத்திருந்தாள். அந்த ஒற்றைப் பெருமிதத்தை உணர்ந்து உள்வாங்கி இன்றும் நெகிழ்கிறேன் நிறைவில்.

ஆங்கிலத்தில் வரும் செய்திகளைத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும் எனது பணி அனுபவம் தேர்வில் உதவியது. கலைச்சொற்கள்தான் பிரச்னை. ஒரே சொல்லிற்குப் பல்வேறு நிகர்ச்சொற்கள். சிலர் மொழித்தூய்மை கருதி எளிமையாக விளங்கவேண்டிய சொற்களைக் கரடு முரடாக்கிவிடுவார்கள். எனவே கலைச் சொற்களுக்காக நானே தனியாக ஒரு குறிப்பேட்டைத் தயாரித்தேன். அந்த இளஞ்சிவப்பு அட்டை போட்ட நோட்டு இன்னும் என் கண்ணில் இருக்கிறது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் வெளியிட்டிருந்த பல்வேறு துறைகள் சார்ந்த தமிழ் நூல்கள் பேருதவி.

ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. அலுவலகத்திலும் சொல்லவில்லை. “அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடக்கூடாது” என்ற எச்சரிக்கை உணர்வும்; தேர்வு எழுதுவதே ஒரு பேசுபொருள் ஆவதில் விருப்பமின்மையும். நத்தத்திலிருந்து தினமும் 35 கி.மீ மதுரைக்கு. பேருந்தில் படித்துக்கொண்டே பயணம் செய்வேன். தினமணி அலுவலகத்திற்கு வெளியே உள்ள வெற்றிலைபாக்குக் கடைதான் ‘லாக்கர்.’ புத்தகத்தை `டெபாசிட்’ செய்துவிட்டு உள்ளே செல்வேன். கொஞ்சம் இடைவெளி கிடைத்தால் அட்லஸை நோண்டுவேன்.

நாடகம்
நாடகம்

மெயின் தேர்வுகள் சென்னையில். நீண்ட விடுமுறை எடுக்கமுடியாத பணிச்சூழல். அதனால் மதுரையிலிருந்து சென்னைக்குப் போவதும் வருவதுமாகத் தேர்வுகளை எழுதிமுடித்தேன். நத்தத்திலிருந்து காலையில் மதுரைக்கு வந்து எட்டு மணி நேரம் ‘முதல் ஷிப்டில்’ வேலை பார்த்துவிட்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸைப் பிடித்துச் சென்னைக்கு வந்து, எழும்பூரில் கென்னட் லேனில் ஒரு விடுதியில் குளித்து உடைமாற்றி, தேர்வு மையத்திற்கு விரைந்து காலையில் ஒரு தேர்வு, பிற்பகல் ஒரு தேர்வு எழுதிவிட்டு மீண்டும் பாண்டியன் எக்ஸ்பிரஸில் மதுரை சென்று எட்டு மணி நேரம் வேலை பார்த்துவிட்டு மீண்டும் அன்றிரவே சென்னைக்குச் சென்று மறுநாள் தேர்வு எழுதிய அந்த நாள்களை இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது. அப்போது தோன்றவில்லை.

மெயின் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று நேர்காணலுக்குத் தயாரானேன். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெ. ராமச்சந்திரன், பல்கலைக்கழக ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து நேர்முகத் தேர்விற்குச் செல்லும் சிலரைக் கலந்துரையாட அழைத்தார். நானும் சென்றேன். அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற வி.கார்த்திகேயனைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘நான் தமிழ் இலக்கிய மாணவன், தமிழில் தேர்வு எழுதியிருக்கிறேன்’ என்று சொன்னேன். ``ஒரு பத்திரிகையாளனாய் இருப்பது உங்களது `பிளஸ் பாயின்ட்’, விஷயம் முக்கியம். வகாபுலரி (Vocabulary) அல்ல” என்று அவர் சொன்னது நம்பிக்கையூட்டியது.

நேர்முகத் தேர்வு பற்றி ஓர் ஆவணப்படம் இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். மறுநாள் ‘அவுட் போஸ்ட்’ அருகே உள்ள நூலகத்தில் 16 எம்.எம் திரையிடும் கருவியை ஏற்பாடு செய்து சுவரில் திரையிட்டுப் பார்த்தேன். டில்லியில் யு.பி.எஸ்.சி கட்டடம், பதிவு செய்யும் அறை, காத்திருக்கும் இடம், நேர்காணல் என்று காட்சிகள் நகர்ந்தன.

நானும் எனது அண்ணன் வரதனும் நேர்காணலுக்காக டில்லி சென்றோம். அதுவரை சென்னைக்கு வடக்கே திருப்பதிக்குக்கூடப் போனதில்லை. பத்திரிகைச் சுதந்திரம் பற்றி முதல் கேள்வி. இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டுமா கூடாதா என்ற பெரிய விவாதம் அப்போது நடந்துகொண்டிருந்தது. அதுபற்றிய கேள்விக்கு எனது இதயத்திலிருந்து பதில் சொன்னேன். வால்மீகி ராமாயணத்திலிருந்து கம்ப ராமாயணம் எந்த வகையில் தனித்துவமானது என்று ஓர் உறுப்பினர் கேட்டார். பதிலைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக அடுக்க, அந்த விடையை அவர் வெளிப்படையாகவே பாராட்டினார். நேர்காணல் கேள்வி-பதிலாக அமையாமல் உரையாடலாக நகர்வதை கவனித்தேன். பதற்றம் முற்றிலும் மறைந்தது.

நான் எவ்வளவு முரண்டுபிடித்தாலும் விட்டுவிடாமல் என் கைகளை இறுகப்பற்றி எப்படியெல்லாம் இழுத்து அரவணைத்திருக்கிறது காலம். `முரண்டுபிடித்தாலும்’ என்று ஏன் சொல்கிறேன்? குடிமைப் பணித் தேர்வை ஒரு முறை மட்டுமே எழுதுவேன் என்று எனக்கு நானே விதித்த முன் நிபந்தனை முரண்டுதானே. மறுநாள் விடிந்தால் மதுரை மருத்துவக்கல்லூரியில் குடிமைப்பணி முதல்கட்டத் தேர்வை வைத்துக்கொண்டு, முதல் நாள் இரவு மதுரை சௌராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் `சிம்மகேது’ என்ற நாடகத்தை இயக்கி நடித்ததை வேறென்ன சொல்வது? பிறிதொரு நாள் நான் எழுதிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.

“விடிந்ததும் பேசலாம் நாளையோடு… இந்த நிமிடம் பாடத் தோன்றினால் பாடு.”

மசூரி ஐ.ஏ.எஸ் அகாடெமி. பலரும் நுனிநாக்கு ஆங்கிலம் பேசியது கொஞ்சம் பீதியை அளித்தது. அப்படி என்ன பெரிய கம்ப சூத்திரம்! ‘மால் ரோடு’ புத்தகக் கடையில் ஓர் ஆங்கில இலக்கண நூல், ஒரு தெசாரஸ் (Thesaurus) வாங்கினேன். நானும் எனது தமிழ் நண்பர்களும் அகாடெமியில் ‘ரன் அவே ஹஸ்பெண்ட்’ என்ற ஆங்கில நாடகம் போட்டு அதை நான் இயக்கி நடித்ததில் தயக்கம் தணிந்தது.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

1985-ம் ஆண்டு. மகாநதிக் கரையருகே கட்டாக் சர்க்யூட் ஹவுஸ் அறை எண் 19. ஒரு கவிதை வந்தது. ஆங்கிலக் கவிதை! மகாநதி பற்றியது. பயிற்சி அதிகாரிகள் நடத்தும் இதழில் எனது ஆங்கிலக் கவிதைகள் மூன்று.

இரண்டு ஆண்டுப் பயிற்சியின்போது பல தேர்வுகள். எல்லாம் ஆங்கிலத்தில்தான். இந்த மதிப்பெண்களையும் சேர்த்து இறுதி ரேங்க் பட்டியல் வெளியாகும். அகில இந்திய அளவில் 33 இடங்கள் முன்னேறியிருந்தேன். 99 வது இடத்திலிருந்து 66வது இடத்திற்கு.

இதோ ‘Journey of a Civilization: Indus to Vaigai’ - எனது 524 பக்க ஆங்கில நூல். இரண்டாம் பதிப்பு இப்போது அச்சில். தமிழில் மொழிபெயர்ப்பு வேலைகள் ஒருபுறம்.

இப்போதுகூட எனக்கு நுனிநாக்கு ஆங்கிலம் பேச வராது. உச்சரிப்பில் தமிழ் நெடி இருக்கும். அதனால் என்ன?

நான் பிறந்த ஊர் நத்தம்; நாட்டிங்காம் இல்லை.

பயணிப்பேன்...

****

உலகத் தாய்மொழிகள் தினம்

மொழிதான் எண்ணங்களின் ஊற்றுக்கண். தாய்ப்பால் போன்றது தாய்மொழி. ஒவ்வொரு தாய் மொழியும் உயர்வானதே. அவரவர் தாய்போலவே. உலகில் எந்தத் தாய் உயர்வு, எந்தத் தாய் தாழ்வு!

இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1948-ல் ஒட்டுமொத்தப் பாகிஸ்தானுக்குமான ஆட்சி மொழியானது உருதுமொழி. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காளமொழி பேசுவோரே அறுதிப்பெரும்பான்மை. இதனால் இந்த மொழித்திணிப்பிற்கு எதிர்ப்பு வலுத்தது. டாக்காவில் 1952-ம் ஆண்டு பிப்ரவரி 21-ம் தேதி மாணவர்கள் நடத்திய பேரணியில் காவல்துறை துப்பாக்கிச்சூடு. பலர் உயிரிழந்தனர். 1971-ல் வங்கதேசம் இந்தியாவின் உதவியுடன் தனிநாடாக மலர்வதற்கு இந்த மொழிப்போராட்டம் முதல் விதை.

உலகின் மொழி, பண்பாடு சார்ந்த பன்முகத் தன்மையைக் கொண்டாடும் வகையில் இந்த நாளை (பிப்ரவரி 21) 1999-ம் ஆண்டு யுனெஸ்கோ அங்கீகரித்தது. 2002-ல் இந்தத் தீர்மானத்தை ஐ.நா பொதுச் சபை ஏற்றது. 2008-ம் ஆண்டு உலகத் தாய்மொழிகள் ஆண்டாகக் கொண்டாடப்பட்டது.

பிப்ரவரி 21, ஒற்றை அடையாளத் திணிப்பின் மீது விழுந்த நெற்றி அடியை நினைவுபடுத்தும் நாள்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது