Published:Updated:

தங்கத் தாமரைகள் - சிறுகதை

தங்கத் தாமரைகள் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கத் தாமரைகள் - சிறுகதை

விக்டருடைய முதல் படம் வந்தவுடனேயே, அவனுக்குக் கிடைத்த புகழைப் பார்த்து மனத்திற்குள் லேசான பொறாமை வந்தது. அந்தப் படத்தைப் பார்த்தபோதும் பெரிய மதிப்பு ஏற்படவில்லை.

நான், முற்றிலும் நரைத்துப்போயிருந்த என் தாடியைத் தடவியபடி டி.வி பார்த்துக்கொண்டிருந்தேன். புதுடெல்லி, நேஷனல் மீடியா சென்டரில் தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட இருந்தன.

சரியாக 4 மணி ஆனவுடன் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சரும், பார்த்தவுடனேயே அறிவுஜீவிகள் என்று அறிந்துகொள்வதற்கு வசதியாக காட்டன் குர்த்தா, வெளுத்த தலைமுடி, தாடியுடன் நடுவர் குழுத் தலைவர்கள் மூன்று பேரும் மேடைக்கு வந்து அமர்ந்தனர்.

அமைச்சர், “Namaskar and Good After Noon to all of you… Today we are here to announce the winners of the ...th National Film Awards. The National Film awards are given in five categories…” என்று ஆரம்பிக்க… நான் பதற்றத்துடன் ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்துக்கொண்டேன்.

என் பக்கத்தில் அமர்ந்திருந்த என் மனைவி வித்யாலட்சுமியைப் பார்த்து, “ஃபீச்சர் பிலிம்ஸ் கடைசியாதான் சொல்வாங்க” என்றேன்

வித்யாலட்சுமி… 1984-ல் நான் இயக்கிய எனது முதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவள். முதல் படம் முடிப்பதற்குள் நானும் அவளும் காதலிக்க ஆரம்பித்து, அவள் இருபதாவது படம் நடிப்பதற்குள் திருமணம் செய்துகொண்டோம். திருமணமானவுடன் நடிப்பை நிறுத்தியவள், இப்போது அம்மா கேரக்டர்களில், “என் வயித்துல பொறந்த பையன் அந்த மாதிரி செய்யமாட்டான்ங்க…” என்ற ஒரே டயலாக்கை எல்லாப் படங்களிலும் அலுக்காமல் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.

வித்யா, “எதுக்கு இப்ப டென்ஷனா இருக்கீங்க? இதுவரைக்கும் உங்க நாலு படங்கள் பெஸ்ட் ஃபிலிம் நேஷனல் அவார்டு வாங்கியிருக்கு. மூணு தடவை பெஸ்ட் டைரக்டர் அவார்டு வாங்கியிருக்கீங்க. வயசும் 65 ஆயிடுச்சு. இன்னும் உங்களுக்கு அந்த எதிர்பார்ப்பு குறையவே இல்ல…” என்றாள்.

“வித்யா… ஒரு அசல் கலைஞனுக்கு ஓய்வே கிடையாது. அவன் தினம் தினம் ஜெயிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பான்” என்றேன்.

எனது பதற்றத்திற்குக் காரணம்: 1980-களில் பாலுமகேந்திரா, மகேந்திரனுடன் என்னையும் சேர்த்து தமிழில் ‘யதார்த்தப்பட மும்மூர்த்திகள்’ என்று குறிப்பிடுவார்கள். பாலுமகேந்திரா, மகேந்திரன் எல்லாம் ஓய்ந்து இறந்த பிறகும், இன்றுவரையிலும் நான் திரைப்படங்கள் இயக்கிக்கொண்டிருக்கிறேன். நான் இயக்கிய 44-வது படமான ‘வானம் வரை’ வெளிவந்தபோது கமர்ஷியலாகப் படுதோல்வி. ஆனால் விமர்சனரீதியில் மிகப்பெரும் வெற்றி. பல உலகப்பட விழாக்களில் ஏராளமான விருதுகள். ஆனால் பெரிய நடிகர்கள் யாரும் நடிக்காததால், படத்தைப் பற்றி நல்ல டாக் வந்து மக்கள் வருவதற்குள் தியேட்டரிலிருந்து தூக்கிவிட்டார்கள். ‘வானம் வரை’ படத்திற்காக சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த படத்துக்கான நேஷனல் அவார்டு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

தங்கத் தாமரைகள் - சிறுகதை

இதைவிட இன்னொரு முக்கியமான காரணம் இருக்கிறது. என்னிடம் பத்தாண்டுகள் உதவி இயக்குநராக இருந்த விக்டரின் ‘மிருக மனிதன்’ படமும் அதே ஆண்டு, பிரபல கதாநாயகனான விக்னேஷ்குமார் நடிப்பில் வெளிவந்து, விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்றதுடன், கமர்ஷியலாகவும் சூப்பர்ஹிட் வெற்றியை ஈட்டியது. தமிழ் இண்டஸ்ட்ரியில் எங்கள் இரண்டு படங்களுக்கும்தான் விருதுகள் கிடைக்கும் என்று பேச்சு.

‘மிருக மனிதன்’, விக்டர் இயக்கத்தில் வெளிவந்த ஆறாவது படம். விக்டர், தமிழின் புதிய தலைமுறை இயக்குநர்களில் மிகவும் முக்கியமான இயக்குநர். வன்முறைகளின் கதையை சற்றே யதார்த்தம் கலந்து எடுத்த விக்டரின் ஆறு படங்களுமே விமர்சனரீதியாகவும், வணிகரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றதால், தற்போதைக்கு தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குநர் விக்டர்தான்.

விக்டருடைய முதல் படம் வந்தவுடனேயே, அவனுக்குக் கிடைத்த புகழைப் பார்த்து மனத்திற்குள் லேசான பொறாமை வந்தது. அந்தப் படத்தைப் பார்த்தபோதும் பெரிய மதிப்பு ஏற்படவில்லை. சுமாரான படம்தான். ஆனால் மோசமான படங்களுக்கு நடுவே, அந்த சுமாரான படம் தங்கமாக ஜொலித்தது. அடுத்தடுத்த படங்களில் பெரிய நடிகர்கள், பெரிய வெற்றிகள், கோடிகளில் சம்பளம் என்று விக்டரின் கிராஃப் ஏறிக்கொண்டேயிருக்க… என்னிடம் சினிமா கற்றுக்கொண்ட விக்டர், தமிழ் சினிமாவில் என்னைவிட உயரமான இடங்களுக்குச் சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனத்திற்குள் விக்டர்மீதான பொறாமை அதிகரித்துக்கொண்டே இருந்தது.

எனவே, பின்னர் வெளிவந்த விக்டரின் படங்களைப் பார்க்கவில்லை. அவன் பல முறை அழைத்தும் தட்டிக்கழித்துவிட்டேன். எனவே, அவன் என்னிடம் பேசுவதையே குறைத்துக்கொண்டான். ஆனால் என் மனைவி வித்யாமீது, ‘அம்மா… அம்மா…’ என்று உயிராக இருப்பான். எவ்வளவு பிஸியாக இருந்தாலும், மாதத்திற்கு ஒரு முறையாவது வந்து வித்யாவைப் பார்த்துவிட்டுச் செல்வான். அவனுடைய பிறந்தநாளுக்கு மட்டும் வந்து என்னைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டுச் செல்வான். அப்போதும் அவனுடைய சினிமாக்கள் குறித்து நான் ஒரு வார்த்தை பேசியதில்லை. சும்மா, `என்ன சாப்ட்ட?’ `உடம்பு நல்லாருக்கா?’ பேச்சுதான்.

தற்போது டி.வி-யில் அமைச்சர், ‘தி மோஸ்ட் பிலிம் ஃப்ரண்ட்லி ஸ்டேட்’ விருது குறித்துக் கூறிக்கொண்டிருந்தார். நான் வித்யாவைப் பார்த்து, “விக்டர் வந்தானா?” என்றேன்.

“ம்… போன சனிக்கிழமை வந்து, அவன்தான் என்னை டி.எம்.டி டெஸ்ட்டுக்கும், எக்கோ டெஸ்ட்டுக்கும் அழைச்சுட்டுப் போனான்”

“ஆமாமாம். சொன்ன…”

“பெஸ்ட் பிலிம், பெஸ்ட் டைரக்‌ஷன் அவார்டு கிடைச்சுதுன்னா கேஷ் பிரைஸ் ஏதும் இருக்கா?”

“ம்… ரெண்டு லட்சத்து அம்பதாயிரம் ரூபாய்…”

“அவ்ளோதானா?”

“ஏய்… பணமா பெருசு… Golden Lotus (தங்கத் தாமரை)அவார்டு தருவாங்க. எவ்ளோ சினிமாக்காரங்களோட கனவு தெரியுமா அது?” என்றவுடன் சில நொடிகள் அமைதியாக இருந்த வித்யா, “உங்களுக்கு இந்தத் தடவை கொஞ்சம் கூடுதல் டென்ஷன்” என்றாள்.

“ஏன்?”

“விக்டரும் உங்ககூட போட்டில இருக்கான்.”

“ஏய்… லூசு மாதிரி பேசாத. விக்டர்லாம்… சோட்டாப் பையன். அவன் என்கிட்ட சேர்ந்தப்ப க்ளீன் ஸ்லேட். கிளாப்ன்னாகூட என்னான்னு தெரியாது. நான்தான் சினிமால அனா ஆவன்னா சொல்லிக்கொடுத்தேன். ஃபீச்சர் பிலிம்ஸ் ஜூரி ஹெட் யாரு தெரியுமா? ரிஷிகேஷ் பானர்ஜி. அவரு விக்டரோட வயலன்ட் படத்த எல்லாம் குப்பைல தூக்கிப் போட்டுடுவாரு…”

“நான் அந்தப் படம் பாத்தேன்ங்க. அது வயலன்ட் படம்ன்னாலும், அதுல ஒரு யதார்த்தமான வாழ்க்கை இருந்துச்சு. நீங்க படம் பாக்காமலே ஒரு ஜட்ஜ்மென்ட்டுக்கு வரக்கூடாது.”

“ஏய்… எனக்கு அடிதடி படம்ல்லாம் பிடிக்காதுன்னு தெரியும்ல்ல?”

“ஏன், ‘நாயகன்’ படத்துலகூட வயலன்ஸ் இருக்கு, இருந்தாலும் உங்களுக்கு அந்தப் படம் பிடிச்சுப்போய் மணி வீட்டுக்குப் போய் மாலை போட்டுப் பாராட்டிட்டு வந்தீங்க? சுப்ரமணியபுரம், புதுப்பேட்டை, பருத்திவீரன், ஆடுகளம் படம் வந்தப்பல்லாம்கூட சசிகுமார், செல்வராகவன், அமீர், வெற்றிமாறன் எல்லாரையும் பாராட்டி மேடைலயே பேசினீங்க. எனக்கு என்னவோ விக்டரோட படத்துல எந்தப் பிரச்னையும் இருக்கிறதா தெரியல. உங்ககிட்டதான் பிரச்னை.”

“என்ன பிரச்ன?” என்றேன் பதற்றத்துடன். ஏனெனில், ஒரு ஆணின் அத்தனை கீழ்மைகளையும் அறிந்தவள் மனைவி.

அப்போது டி.வி-யில் அமைச்சர், “Now the Feature Film awards will be announced By Rishikesh Banerjee…” என்றவுடன் நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.

பல்வேறு விருதுகளை அறிவித்த ரிஷிகேஷ் பத்து நிமிடங்களுக்குப் பிறகு, “பெஸ்ட் டைரக்‌ஷன் அவார்டு கோஸ் டு…” என்று சற்றே நிறுத்த… எனக்குப் படபடப்பாக இருந்தது. சில நொடிகள் இடைவெளிக்குப் பிறகு ரிஷிகேஷ், “ஜே. விக்டர் ஃபார் ஹிஸ் டமில் பிலிம் மிருக மனிதன்…” என்று கூற… எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

சங்கடத்துடன் என்னைப் பார்த்த வித்யா, ஆறுதலாக எனது தோளில் கை வைத்தாள். அவள் கையை விலக்கிவிட்ட நான், நகத்தைக் கடித்தபடி பதற்றத்துடன் டி.வி-யைப் பார்த்தேன். பெஸ்ட் டைரக்‌ஷன் கிடைக்காவிட்டாலும், பெஸ்ட் பிலிமிற்கான அவார்டாவது கிடைக்குமா?

ஆனால் ரிஷிகேஷ், “தி பெஸ்ட் ஃபீச்சர் பிலிம் கோஸ் டு தி டமில் பிலிம் ‘மிருக மனிதன்’ டைரக்டடு பை விக்டர்” என்று கூற… “டேம் இட்…” என்று கத்திக்கொண்டே எதிரிலிருந்த டீப்பாயை எட்டி உதைத்தேன். அது லேசாக நகர்ந்து நின்றது.

வித்யா, “எதுக்குங்க இவ்வளவு டென்ஷன் ஆவுறீங்க… நீங்க பாக்காத விருதா?” என்றாள்.

“எனக்குக் கிடைக்காததைப் பத்தி ஒண்ணுமில்ல. என் படத்தைவிடத் தகுதி குறைவான படத்துக்குக் கொடுத்தததான் தாங்கிக்கமுடியல…” என்று நான் கூறியதற்கு வித்யா பதில் ஒன்றும் சொல்லவில்லை. அப்போது என் மொபைல் அடித்தது. டைரக்டர் சூரியகுமார்.

போனை ஆன் செய்து நான், “சூர்யா… சத்யஜித்ரேயும், மிர்ணாள் சென்னும் அவார்டு வாங்கின தேசத்துல மனுஷங்களத் தேடித் தேடிக் கொல்ற படம் எடுக்கிறவங்களுக்கு அவார்டு தர்றாங்க” என்று பேசியபடி அறைக்குள் சென்றேன்.

அரை மணி நேரம் கழித்து அறைக்குள் வந்த வித்யாவின் முகத்தில் பரபரப்பு.

“ஏங்க, விக்டர் உங்கள்ட்ட ஆசீர்வாதம் வாங்குறதுக்காக வந்திருக்கான்.”

“நான் இருக்கன்னு சொல்லிட்டியா?”

“ஆமாம்…”

“பரவால்ல, இப்ப தூங்கிட்டிருக்கேன்னு சொல்லிடு…”

“விக்டர்கூட ஏகப்பட்ட ரிப்போர்ட்டர்ஸ் வந்திருக்காங்க. இப்ப நீங்க போகலன்னா, ‘சிஷ்யனை அவமானப்படுத்தித் துரத்திவிட்ட இயக்குநர் யார் தெரியுமா?’ன்னு இன்னைக்கி முழுசும் ஆன்லைன்ல அலப்பறை பண்ணுவாங்க…” என்றவுடன் தலையை அழுத்திப் பிடித்துக்கொண்டு யோசித்தேன்.

வேறு வழியின்றி பேன்ட்டும் டிஷர்ட்டும் அணிந்துகொண்டு வெளியே வந்தேன். வரவேற்பறையில் காத்திருந்த விக்டர் எப்போதும் போல் மூன்று நாள் தாடியில் இருந்தான். ஜீன்ஸ், காட்டன் சட்டை. விக்டர் இரண்டு ஆளுயுர ரோஜா மாலைகளை எனக்கும் வித்யாவுக்கும் அணிவித்து எங்கள் காலில் விழுந்து வணங்கினான். நான் இயந்திரத்தனமாக ஆசீர்வதித்தேன்.

ரிப்போர்ட்டர்களைப் பார்த்து விக்டர், “நான் சார்கிட்ட சேர்ந்தப்ப வெறும் களிமண்ணு, களிமண்ணுன்னுகூடச் சொல்லமுடியாது. அதைக்கூட உருட்டி பொம்மை செஞ்சுடலாம். வெறும் மண்ணு. ஸ்கூல் புத்தகத்தைத் தவிர எதுமே படிச்சதில்ல. ஒரு சுஜாதா, பாலகுமாரன்கூட தெரியாது. சார் வீட்டுக்குப் பக்கத்துல இருந்த மளிகைக்கடைல வேலைல இருந்தேன். ஒரு பில்லுல என் அழகான கையெழுத்தப் பாத்துட்டு, சும்மா எழுதுறதுக்காக என்னைச் சேத்துக்கிட்டாரு. இப்ப இங்க வந்து நிக்குறேன். இந்த வாழ்க்கை… விருது… எல்லாம் சார்தான் கொடுத்தது. அதனால இந்த விருத நான் சாருக்கு டெடிகேட் பண்ணுறேன்” என்றான்

பத்திரிகையாளர்கள், “சார், உங்க சிஷ்யன் விக்டருக்கு விருது கிடைச்சதப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

“ரொம்ப சந்தோஷமா இருக்கு. வாழ்த்துகள்” என்று கடனேயெனச் சொல்லிவிட்டு வணக்கம் போட்டுவிட்டுத் திரும்ப முற்பட்டேன்.

“சார், சார்… ஒரே ஒரு கேள்வி…” என்று கத்த, நான் மெதுவாகத் திரும்பினேன்.

“சார், இந்தத் தடவை உங்க படமும் பைனல் ரவுண்ட்ல இருந்துச்சு. உங்களுக்குக் கிடைக்காம விக்டருக்கு விருது கிடைச்சத எப்படிப் பாக்குறீங்க?” என்றவுடன் விக்டர் பதற்றமாகிவிட்டான். நான் என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் புன்னகைத்தேன்.

ஒரு யூட்யூபர், “உங்க சிஷ்யன்கிட்ட நீங்க தோத்ததா எடுத்துக்கலாமா?” என்றதற்கும் பதில் சொல்லாமல் புன்னகைத்தேன். என் வாழ்க்கையின் மிகவும் கசப்பான புன்னகை அது.

“என்ன சார், கொஞ்சம்கூட நாகரிகமே இல்லாம…” என்ற விக்டரின் தோளில் கைவைத்து அடக்கிய நான், “ரொம்பப் பெருமையா இருக்கு. என் மகன்தானே என்னை ஜெயிச்சிருக்கான்… உங்களுக்கு தலைப்பு வைக்க இது போதுமா? நான் வரேன்… காலைலேருந்து உடம்பு சரியில்ல…” என்று கூறிவிட்டு வேகமாகத் திரும்பி நடந்தேன். சட்டென்று நடை தடுமாறி விழப் பார்க்க… ”சார், பாத்து…” என்று தாங்கிப் பிடித்த விக்டர் என்னை உள்ளே அழைத்து வந்தான்.

நான் சோபாவில் அமர்ந்தவுடன் வித்யா என்னை ஓரக்கண்ணால் பார்த்தபடி, “கங்கிராட்ஸ்டா…” என்று விக்டரின் கையைப் பிடித்துக் குலுக்கினாள். என் காலடியில் அமர்ந்த விக்டர் என் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டு, ``நீங்க இல்லன்னா இந்நேரத்துக்கு எங்கயாச்சும் மளிகைக்கடைல கணக்கு எழுதிக்கிட்டு உக்காந்திருப்பேன்… என்னை எங்கயோ கொண்டு போயிட்டீங்க…” என்றவன் சட்டென்று என் கால்களை அணைத்துக்கொண்டு அழுதான்.

நான் இயந்திரத்தனமாக அவனது தலைமுடியைத் தடவி, “யார் யாருக்கு என்னன்ன கிடைக்கணுமோ அது கிடைக்கும்…” என்றேன். பிறகு சட்டென்று எழுந்து, “எனக்கு உடம்பு சரியில்ல. நான் கொஞ்சம் படுக்கிறேன்” என்று கூறிவிட்டு என் படுக்கை அறைக்குள் நுழைந்தேன்.

படுக்கையில் படுத்தபடி யோசித்தேன். “உங்க சிஷ்யன்கிட்ட நீங்க தோத்ததா எடுத்துக்கலாமா?” என்ற அந்த நிருபரின் கேள்வி மண்டைக்குள் குடைந்துகொண்டேயிருந்தது. கட்டிலுக்கு எதிரே தனது முதல் பட பூஜையின்போது விக்டர் எனக்கு மாலை அணிவித்த புகைப்படம் பெரிதாகத் தொங்கிக்கொண்டிருந்தது.

தங்கத் தாமரைகள் - சிறுகதை

எனது மொபைல் போன் அடித்தது. மூத்த பத்திரிகையாளர் அழைக்கிறார். தவிர்க்கமுடியாமல் எடுத்து, “சொல்லுங்க கனகராஜ்” என்றேன்.

“விக்டருக்கு விருது கொடுத்ததப் பத்தி என்ன நினைக்கிறீங்க?” என்றார்.

“ரொம்ப சந்தோஷம்… ரொம்பப் பெருமையா இருக்கு.”

போனை வைக்க… தொடர்ச்சியாக போன்கள். பெரும்பாலும் பத்திரிகையாளர்கள். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல், நான் ஆத்திரத்துடன் எனது மொபைலைத் தூக்கி நானும் விக்டரும் இருந்த புகைப்படத்தின் மீது ஆவேசத்துடன் எறிந்தேன். கண்ணாடி வேகமாக உடைந்து சத்தத்துடன் கீழே விழுந்து சிதறியது.

“என்னங்க… என்னாச்சு?” என்று பதற்றத்துடன் அறைக்குள் வந்தாள் வித்யா. கீழே உடைந்து கிடைக்கும் போட்டோவையும், மொபைலையும் பார்த்த வித்யா, “என்னங்க இது…” என்று அருகில் நெருங்கினாள்.

“என்னன்னு தெரியல. திடீர்னு உடைஞ்சிடுச்சு…” என்ற என் குரலில் தடுமாற்றம்.

“சுவத்துல இருக்கிற போட்டோ கண்ணாடி எப்படிங்க திடீர்னு உடையும்… உங்க மொபைல் எப்படிங்க அங்க போச்சு?”

“அது… அது… வரிசையா போன் வந்துகிட்டேயிருந்துச்சு. ஒரு கோபத்துல தூக்கி எறிஞ்சேன். அது கரெக்ட்டா போட்டோ மேல விழுந்துடுச்சு” என்றேன், வித்யாவின் கண்களைச் சந்திக்காமல். என் முகத்தை நிமிர்த்தி சில விநாடிகள் என் கண்களை உற்றுப் பார்த்த வித்யா, சட்டென்று என்னை இழுத்து தன் மார்போடு சேர்த்து இறுக்கிக்கொள்ள… எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. வித்யா என் தலைமுடியை மெல்லக் கோதியபடி, “கூல் டைரக்டர் சார்… கூல்…” என்று கூற… எனக்கு அழுகை வருவதுபோலிருந்தது.

“நான் வேணும்ன்னு பண்ணல வித்யா…” என்ற எனது குரல் எனது இழிவான செயலை நினைத்துத் தழுதழுத்தது.

“சரி… சரி…” என்றபடி தொடர்ந்து எனது தலைமுடியைக் கோதிய வித்யா, “நல்லவேளை. விக்டர் இப்பதான் போனான். அவன் இதைப் பார்த்திருந்தான்னா ரொம்ப வேதனைப்பட்டிருப்பான்” என்றவள், என்னை நிமிர்த்தி, “கலைஞர்களுக்குள்ள பொறாமை இருக்குறது இயல்புதாங்க. ஆனா, இவ்வளவு வெளிப்படையா இருக்கவேண்டாம்” என்று கூற… எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.

தொடர்ந்து வித்யா, “உங்கள்ட்ட தொழில் கத்துக்கிட்டவன், உங்களவிட மேல போறப்ப பொறாமையாதான் இருக்கும். ஒத்துக்குறேன். ஆனா சினிமா வெறும் தொழில் மட்டும் இல்லங்க. அது ஒரு அற்புதமான கலை. அந்தக் கலைய விக்டர்க்குள்ள செதுக்கின சிற்பி நீங்கதான். சிற்பி தான் செதுக்கிய சிலைய பாத்து பொறாமைப்படக் கூடாதுங்க…” என்றபோது எனக்கு உள்ளுக்குள் வலித்தது.

சில விநாடிகள் மௌனத்திற்குப் பிறகு நான், “ஒத்துக்கிறேன் வித்யா. பொறாமைதான். அதுக்குன்னு என்னைவிட தகுதி குறைவான படத்துக்கு விருது தந்தத எப்படி ஏத்துக்கமுடியும்?”

“நீங்க ‘மிருக மனிதன்’ படத்தைப் பார்க்கவே இல்ல…”

“சரி, நீ ரெண்டு பேர் படத்தையும் பார்த்தீல்ல? நீ சொல்லு… எது ரொம்ப நல்லாருந்துச்சு?”

“என்னங்க இது… சின்னப்பிள்ள மாதிரி. எந்திரிச்சு வாங்க. எதாச்சும் கோயிலுக்குப் போய்ட்டு வரலாம்” என்று எழுந்தாள்.

“ஏய்…” என்று அவள் கையைப் பிடித்த நான், “நீ நழுவாத. இங்க பாரு… என் கண்ணப் பார்த்து உண்மையச் சொல்லணும். யார் படம் நல்லாருந்துச்சு?”

சில விநாடிகள் தீவிரமாக யோசித்த வித்யா, “உங்க படமும் நல்லாதான் இருந்துச்சு. ஆனா விக்டரோட படத்துக்கு உங்க படத்தவிட அஞ்சு மார்க் கூடக் கொடுப்பேன்…” என்றவுடன் மனம் தளர்ந்துவிட்டது.

தொடர்ந்து வித்யா, “சரி… என்னை விடுங்க. ரிஷிகேஷ் பானர்ஜி நீங்க ரொம்பவும் மதிக்கிற டைரக்டர்தானே… அவரு எதுக்கு விக்டர சூஸ் பண்ணணும்? நீங்க முதல்ல விக்டரோட படத்தைப் பாருங்க. பார்க்காமலே உங்க படத்தைவிடத் தகுதி குறைவான படத்துக்குக் கொடுத்ததா சொல்லக்கூடாது.”

சட்டென்று ஒரு முடிவுக்கு வந்த நான், “சரி… பாக்குறேன். விக்டர்கிட்ட சொல்லி அரேஞ் பண்ணு” என்றேன் வேகமாக.

எனக்காக ‘ஃபோர் ஃப்ரேம்ஸ்’ ப்ரீவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘மிருக மனிதன்’ சிறப்புக் காட்சியில் நான், வித்யா, விக்டர், விக்டரின் மனைவி ஆகிய நான்கு பேர் மட்டும் அமர்ந்திருந்தோம். எனது இடது பக்கம் வித்யாவும் வலது பக்கம் விக்டரும் உட்கார்ந்திருந்தார்கள்.

படத்தில் எடுத்தவுடனேயே மதுரையைக் காண்பிக்க… எனக்கு சலிப்பாக இருந்தது. நான் விக்டரின் பக்கம் திரும்பி, “பாண்டியர் காலத்துலகூட மதுரைல போர் மூலமா இவ்வளவு ரத்தம் சிந்தியிருக்காது. வெளிநாட்டுக்காரன் ஒருத்தன் மதுரை பேஸ்டு தமிழ் சினிமாக்களப் பாத்தான்னா, மதுரைல எல்லாரும் விடிஞ்சு எந்திரிச்சவுடனே காபி குடிச்சுட்டு, ஒருத்தன ஒருத்தன் குத்திக்கிட்டு சாவாங்கன்னு நினைப்பான்…” என்றதற்கு விக்டர் சத்தமாகச் சிரித்தான்.

வித்யா என் காதில் மெதுவாக, “முன்முடிவு எதுவுமில்லாம, ப்ளெய்னா ‘நீங்க பெரிய டைரக்டர்… விக்டர் உங்க சிஷ்யன்’ங்கிறதெல்லாம் மறந்துட்டு ஒரு ரசிகனா படத்தைப் பாருங்க” என்றாள். நான் மௌனமாக திரையைப் பார்த்தேன்.

திரையில் பயங்கரமாக மழை பெய்ய… ஒரு காந்தி சிலை க்ளோஸ்அப்பில் நனைந்துகொண்டிருந்தது. காந்தி சிலைக்கு எதிர்வீட்டிலிருக்கும் ஏழு வயதுச் சிறுமி காந்தி சிலை மழையில் நனைவதையும், தெருவில் அனைவரும் குடையுடன் செல்வதையும் பார்க்கிறாள். சமையலறையில் சிறுமியின் அம்மா வேலையாக இருக்க… சிறுமி ஒரு குடையை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறாள். சாலையை க்ராஸ் செய்கிறாள். காந்தி சிலைக்கு மாலை போடுவதற்காக அமைத்திருந்த இரும்பு ஏணி வழியாக தடுமாற்றத்துடன் ஏறி, காந்தி சிலைக்கு மேலே குடையைப் பிடித்து காந்தி நனையாமல் பார்த்துக்கொள்ள… நான் படத்துக்குள் ஆழ்ந்தேன்.

மதுரையில் 80-90-களில் வாழ்ந்த ஒரு தாதா குழுவினரின் கதையை விக்டர் படமாக்கியிருந்தான். வெறும் வெட்டுக்குத்துப் படமாக இல்லாமல், ரௌடிகளின் காதல், குடும்பத்தினர், நண்பர்கள் என்று அவர்களின் வாழ்வை மிக யதார்த்தமாகக் காட்டியிருந்தான். அத்துடன் 80 மற்றும் 90களின் மதுரை வாழ்வியலை அற்புதமான டீட்டெய்லிங்கோடு சித்திரித்திருந்தான். படத்தைப் பார்க்கப் பார்க்க… விக்டர்மீதான மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது. முதல் படத்திலிருந்து அவன் மிக உயரத்திற்கு வந்திருந்தான்.

படத்தின் இடைவேளை நெருங்கும்போது விக்டர், “சார், இன்டர்வெல் வரப்போவுது. ஒரு பிரேக் எடுத்துக்கலாமா?” என்றான்.

தங்கத் தாமரைகள் - சிறுகதை

“வேண்டாம்… கன்ட்டினியூ பண்ணலாம்.”

படத்தின் ப்ரீக்ளைமாக்ஸ் காட்சியில் நான் அசந்துபோய்விட்டேன். அப்படி ஒரு காட்சியைப் பார்த்து எவ்வளவு நாள்களாகிறது. இவ்வளவு வன்முறையான ப்ரீக்ளைமாக்ஸ் காட்சியை, அழகியலோடு இவ்வளவு யதார்த்தமாக எடுக்கமுடியுமா? முடிவில் ஹீரோ… சிறையில் தனிமையில் இறக்கும் காட்சியை விக்டர் எடுத்திருந்த விதத்தைப் பார்த்து பிரமிப்புடன் விக்டரின் கையை இறுகப் பற்றி அழுத்தினேன். நெடுநாள்கள் கழித்து, ஒரு சினிமாவைப் பார்த்து என்னை அறியாமல் என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

படம் முடிந்து திரையில் `எ பிலிம் பை விக்டர்’ என்று முடிய… எழுந்திரிக்க மனமில்லாமல் திரையைப் பார்த்துக்கொண்டு மௌனமாக அமர்ந்திருந்தேன்.

விக்டர், “சார்…” என்று என் தோளில் கை வைக்க… மெதுவாக எழுந்தேன். விக்டர் தவிப்புடன் என் முகத்தையே பார்த்துக்கொண்டு நின்றான். அவனைக் கட்டிப்பிடித்துப் பாராட்டவேண்டும் என்று மனம் துடித்தது. ஆனால் “நேத்து வந்த பய…” என்று என் ஈகோ தடுத்தது. ஆனால் ‘மிருக மனிதன்’ படத்தின் அத்தனை அற்புதமான காட்சிகளும் வேகமாக மனத்தில் ஓட… எனக்குள் எரிந்துகொண்டிருந்த பொறாமைத் தீ அணைய ஆரம்பித்தது. விக்டரை சில விநாடிகள் உற்றுப் பார்த்த நான் சட்டென்று அவனை இழுத்து எனது தோளோடு அணைத்துக்கொண்டு, “மகா கலைஞன்டா நீ…” என்றேன்.

“சார்…” என்ற விக்டரின் குரல் தழுதழுத்தது.

விக்டரை நிமிர்த்திய நான், “உன்கிட்ட உண்மையச் சொல்றதுக்கு என்னடா? சட்டுனு ரெண்டே வருஷத்துல நீ பெரிய ஆளானதப் பாத்து எனக்குள்ள ஒரு பொறாமை. நீ வளர வளர… பொறாமையும் வளர்ந்துகிட்டே போச்சு. நான் தொழில் கத்துக்கொடுத்த பையன், என்னைவிட பெரிய ஆளானத என் மனசு ஏத்துக்கவே இல்ல. உனக்கு அவார்டு கிடைச்சப்ப பொறாமை உச்சத்துக்குப் போயிடுச்சு…” என்ற நான் சிறிது இடைவெளிவிட்டு, “ஆனா… உன்னோட அற்புதமான கலை அந்தப் பொறாமைய ஜெயிச்சுடுச்சுடா” என்றவுடன் வித்யா கண்கலங்க என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

தொடர்ந்து நான், “விக்டர், ஒரு நல்ல கலை… மகா அற்புதமான கதை என்ன பண்ணும் தெரியுமா? ஒரு மனுஷன் மனசுக்குள்ள இருக்கிற அத்தனை அழுக்கையும் கழுவி வெளியேத்தும். உன் படம் என் மனசோட அழுக்கை வெளியேத்திடுச்சு. தன்னைவிடச் சிறந்த கலைஞன இன்னொரு கலைஞன் ஏத்துக்கலன்னா, அவனோட கலை அவன விட்டுப் போயிடும்டா. இதுவரைக்கும் வந்த தமிழ் சினிமால இதான்டா பெஸ்ட். ஒரு பிரஸ்மீட் அரேஞ்ச் பண்ணு. உன்னைப் பத்தி நிறைய பாராட்டிப் பேசணும்…” என்றேன்.

கன்னங்களில் கண்ணீர் வடிய விக்டர் என் கால்களில் விழப் பார்க்க, அவனைத் தடுத்து இறுக்க அணைத்துக்கொண்டேன்.