Published:Updated:

தன்னூத்து ராசா - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- எம்.எம்.தீன்

தன்னூத்து ராசா - சிறுகதை

- எம்.எம்.தீன்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

அதிகாலை கைப்பேசியிலிருந்து வரும் குருவிகளின் கீச்சுக்குரல் அழைப்பு அவனைச் சலனப்படுத்தியது. கைப்பேசியை விரித்துப் பார்த்தான். புது எண்ணிலிருந்து அழைப்பு.

இரவு முழுக்க வனக்காவலரும், அலவந்தான்குளம் இருளப்பனுமாக கண்விழித்து ஊரிக்கிணத்துப் பத்து, தாதனூத்து வட்டப்பாறை, குத்துமேடு, கருவேலங்காடுகள் என கண்சிவக்க வேட்டையாடிகளை விரட்டுவதற்காக ரோந்து போய்விட்டு அதிகாலை நாலு மணிக்குத்தான் படுக்க வந்து இப்போதுதான் கண்ணசந்தது போலிருந்தது. அதற்குள் கைப்பேசி கெச்சட்டம் போட்டு அழைக்கிறது. அழைப்பினை ஏற்காமல் கைப்பேசியைப் படுக்கையின் ஓரம் வைத்தான். மீண்டும் அழைத்தது. இப்போது வந்திருக்கும் உதவி வன அலுவலர் மிகவும் ஈரமான மனுஷர். வனக்காப்பு குறித்து அவருக்கு அதீத ஈடுபாடு. அதுவும் புள்ளிமான்கள் சரணாலயத்திற்கு அதிகாரியாக வந்த பிறகு வேட்டை முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு மான்கள் எண்ணிக்கையும் இரண்டு வருடத்தில் ஒன்றரை மடங்காகி விட்டது. மூன்று கூட்டமாக இருந்தது நான்காகி இருந்ததில் அவருக்கு மிகவும் சந்தோசம். மான்கள் நன்னீர் குடிக்கும் தொட்டிகளை இரு மடங்காக்கினார். புற்களின் விதைகளைத் தூவினார். ஆங்காங்கே கரம்பை அடித்துக் கொடிப்புல் நட்டு வைக்கச் செய்தார்.

நல்ல மழை பெய்யவும் கொடிப்புல் ஓடி ஓடிப் படர்ந்தது. புல்லும் வனப்புடன் நட்சத்திரங்களைப் போல கண்சிணுக்கி மினுமினுத்துது. ஒரு கொடியை உருவினால் அது வளைந்து வளைந்து ஓடிக்கொண்டே இருக்கும். ஓடி வளர்ந்த கொடியைப் பிடுங்கப் பிடுங்க, கைகளில் வட்டக்கொடியாக நீண்டுகொண்டே போய்ப் பந்துபோலச் சுருண்டு ஒரு புல்வாரியலுக்குத் தேறும். அவ்வளவு நீளக் கொடிப் புற்கள்.

வன அதிகாரி மான்களைப் போலவே வேலைக்காரர்களையும் மிக மென்மையாக நடத்தினார். வேட்டைத்தடுப்புக் காவலர்களிடம்கூட பூங்காவை மேம்படுத்த ஆலோசனை கேட்பார். திடீரென அவர் அழைப்பு வருமெனக் கைப்பேசியைக் கக்கத்திலேயே வைத்திருக்கிறான்.

அதே எண்ணிலிருந்து மீண்டும் அலைபேசி அழைப்பு வந்தது. எரிச்சலோடு எடுத்துப் பேசிய போது பகீர் என்று இருந்தது. கங்கைகொண்டான் தர்கா காவலாளி படபடப்புடன் பேசினார். பிறந்து பத்து நாள்களான மான் குட்டிகளை நாய்கள் விரட்டி ஒன்றைக் கொன்றுவிட்டதாகவும், மற்றொன்று தப்பித்து தர்கா ஆக்குப்பறைக்குள் பதுங்கி இருப்பதாகவும் சொன்னார். செத்த மான்குட்டியின் கழுத்தில் நாயின் பற்கள் பதிந்த காயம் இருப்பதாகவும், அது கால் வெட்டி இறந்து போகையில் பார்த்தபோது பரிதாபமாக இருந்ததாகவும் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னார். ‘ராத்திரி மூணு மணியிலிருந்து நாய்களிடம் இருந்து பாதுகாப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது’ என்ற புலம்பல் வேறு.

அவனுக்கு ஒன்றும் ஓடவில்லை. மான்குட்டி இறந்தாலோ, குட்டி தப்பித்து வந்தாலோ அதை உடனடியாக மேலிடத்திற்குத் தெரிவிக்க வேண்டும். வனக்காவலருக்குச் சொல்லிவிட்டு மொபட்டை உதைத்தான். அதன் குறைவேகத்தை உணர்ந்தான். குளிர்ந்த பனிக்காற்று இன்னும் பலமாக வீசியது. வண்டி லம்பிக்கொண்டு ஓடியது.

எந்தக் கூட்ட மானாக இருக்கும்..? தாதனூத்து கண்ணூத்து மான் அங்கு போயிருக்க வாய்ப்பில்லை. அது வடக்காட்டு மானாகத்தான் இருக்கும். மான் என்றால் அவனுக்கு பெத்த பிள்ளை மாதிரி. இருகைகளிலும் பெத்த புள்ளையைத் தூக்குவதுபோல் ஏந்திக்கொண்டு திரிவான். அந்தப் பக்கம் நாய் வந்தால் தாழையூத்து வரைக்கும் துரத்திவிட்டுத்தான் மத்த சோலி.

தாத்தா சொன்னதாகப் பல கதைகள் சொல்வான். காட்டுக்குள்ளே மேய்ந்துவிட்டு, செத்த இளைப்பாற மான்கள் நிழல்ல நிக்குங்களாம். காட்டு மரத்தின் ஊடாக வரும் புள்ளி போன்ற சூரியக்கதிர்கள் மான் மேல் விழுமாம். அப்ப அதன் மேலே விழும் வெயில் புள்ளிகள் காற்றில் ஆடுவதைப் பார்த்தபடியே பெண்மான் நாணியபடி நிக்கிறபோது ஆண்மான் அது நாணத்தைப் பார்த்துவிட்டுக் கூடிச்சாம். தாத்தாவின் பொக்கை வாய்க்குள்ளே பால்ய வயசு சேட்டைகள் ஒளிந்திருக்கும். ‘அப்படித்தாம்வே மானுக்குப் புள்ளி வந்திச்சி’ என்று நைச்சியமாய்ச் சொல்வாராம். அதை முழுமையாக நம்பிய பாவம் அவன் முகத்தில் இருக்கும். அதை ரேஞசரிடம் சொல்லக்கூடக் கூச்சப்பட்டதில்லை.

அவனுக்கு மானு மிளா, மயிலுன்னா போதும், உண்ணாமெ தின்னாமெ பேசிக்கிட்டு இருப்பான்.

கூந்தகுளம் பால்பாண்டியையும், ஊய்க்காட்டானையும் ஒரு தராசுல வைக்கலாம்னு வனக்காவலர் சொல்றது சரிதான். அவன் நினைப்பு மான்குட்டிமீது வர, வேகமுடுக்கியை மேலும் பலமாகத் திருக்கினான். அவன் முறுக்கலை உணராததுபோல சாவகாசமாய்ப் பயணித்தது.

சிப்காட் திருப்பத்தில் இடது பக்கமாகத் திரும்பி தர்க்கா மாட்டுவண்டித் தடத்தில் இறங்குகையில், இருக்கிற பெரிய ஆலமரம் அசையாது நின்றிருந்தது. குளிர்காலத்துக் காற்றைக் காணவில்லை. இலைகளால் மடித்துவிடப்பட்ட கிண்ணக் கிளைகளில் கொத்துக் கொத்தாக செம்பழங்கள் பழுத்திருந்தன. எங்கிருந்தோ இந்த வருடம் செம்மார்புக் குக்குறுவான்கள் கிறீச்சிட்டுப் பறப்பதையும், தன் இணையின் அருகில் அமர்ந்து அதன் இறகுகளைக் கோதி விடுவதையும் பார்த்தபடி இருந்தான். இருப்புகொள்ளாத அதன் பறத்தல் அவனை வசீகரித்தது. இந்த வருடம்தான் புதிதாக மொத்தமாக வந்திருக்கிறது. இவற்றின் வருகை குறித்து ரேஞ்சரிடம் தெரியப்படுத்த எண்ணியிருந்தான்.

ஆலமரத்தின் அருகே வளைந்து திரும்புகையில் மனதில் மான்குட்டி குறித்த கவலை மிகுந்திருந்தது.

தன்னூத்து ராசா - சிறுகதை

தர்கா சுற்றுச்சுவரைத் தாண்டி உள்நுழைகையில் காவலர் கையில் சிறுகம்புடன் அவனை நோக்கி ஓடி வந்தார். செத்துப்போன குட்டி எங்கே என்ற அவனது பரபரப்பை உணர்ந்தவர், ‘‘மவுத்தான மான்குட்டிய பத்திரமா வச்சிருக்கோம். முதல்ல ஆக்குபுறைக்குள்ள கெடக்கிறத பாக்க வாருங்கோ’’ என்றார். அவன் பரபரப்பை அறியாது பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லை. செத்துப்போன குட்டி குறித்து உடனடியாக மேலிடத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்று பெரியவருக்குத் தெரியுமா என்று சமாதானம் சொல்லிக் கொண்டான்.

அவசர அவசரமாக ஆக்குப்பறையை நோக்கி ஓடியவன், மான் ஒரு தென் கிழக்கு மூலையில் பயத்துடன் ஒண்டிப் படுத்திருப்பதைப் பார்த்தான். அந்த மான் குறித்த கவலை நீங்க, ‘‘செத்த குட்டி எங்கே இருக்கு’’ என்று பரபரத்தான்.

பெரியவர் மெதுவாகத் தாடியை நீவியபடி ‘‘வாங்கய்யா’’ என்று அழைத்துப் போனார். தர்கா கொடித்திண்டு மேலே வேட்டியைப் போட்டு மூடி வைத்திருந்தார்கள். பத்தி மணம் சுற்றிலும் பரவி இருந்தது. அவனுக்குக் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. பெரியவரை அன்போடு ஏறிட்டான் உய்க்காட்டான். செத்துப்போன உடலுக்கு அது மரியாதை செய்ததுபோல இருந்தது.

சிறிது நேரம் அமைதியாக நின்றுவிட்டு மெதுவாகத் திறந்து பார்த்தான். பகீரென்று மண்டைக்குள் ஒளியடித்ததுபோல இருந்தது. கண்களைப் பொத்திக்கொண்டு அப்படியே நின்றான். கண்களில் கசிந்த நீரைத் துடைத்தபடியே மீண்டும் கூர்மையாகப் பார்த்தான். அதே மான்தான்.

தன்னூத்து மான்கூட்டத் தலைவனுக்கு அப்படி ஒரு அழகு, கம்பீரம். அவனது மதமதப்பான வளர்ச்சி அவனைத் தலைவனாக்கியது. எதிர்த்து நின்ற அத்தனை ஆஜானுபாகு ஆண்மான்களிடமும் தன் வீரத்தைக் காட்டி ஜெயித்தவன் அவன். ஏற்கெனவே இருந்த தலைமான் அவ்வளவு எளிதில் ராசாவின் தலைமையை ஏற்றுக்கொள்ளவில்லை. இரண்டு நாளாக முட்டிக் கொண்டே நின்றன இரண்டும். அவனும் வனப்பாதுகாவலரும் சேர்ந்து பிரித்து விட வேண்டியதாயிற்று. அப்போதும் தன் கம்பீரத்தைக் கைவிடவில்லை. வனப் பாதுகாவலரின் கைக்கு அடங்காது திமிறியது.

நீண்டு உயர்ந்து கிளை பிரிந்திருந்த கொம்பை அருகில் பார்த்த போது இன்னும் அழகாகத் தோன்றியது. பிரித்து விடப்பட்ட தன்னூத்துத் தலைமான், தன் கூட்டத்தைத் தனியாகப் பிரித்துக் கொண்டு போனது. அவர்கள் மான்களைப் பார்வையிடச் செல்கையில் தன்னூத்துக் கூட்டத்தின் தலைவன் என்ற பெருமையிலோ, அல்லது, தன் கூட்டத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவோ தலையைத் தூக்கிக் கொம்பை உயர்த்தி நிமிர்ந்து பார்க்கும். பத்து வாலிபப் பெண் மான்களின் காதலன் என்ற கவர்ச்சி அதன் கண்களில் தெரியும். ஒரு தலைவனின் கம்பீர தருணத்தைப் பார்த்தபடி அவர்கள் சிரித்துக்கொண்டே நகர்வார்கள். வனப் பாதுகாவலர் அதற்கு ‘தன்னூத்து ராசா’ என்று பெயர் வைத்திருந்தார்.

போன மாதம் இரவு வேட்டைக்காரர்கள் வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு இரவில் ரோந்தை முடுக்கியிருந்தார்கள். தூரத்தில் எங்கோ தலைவிளக்கு ஒளி கோடாகத் தெரிய, வேகமாகப் போனார்கள். அவர்கள் வருவதை அறிந்து விளக்கை அணைத்தவர்கள் இரவு முழுவதும் அங்கே ஒளிந்தபடி இருப்பது தெரிந்தது. அன்றிரவு தூக்கத்தைத் தொலைத்துவிட்டு காலையில் தன்னூத்துப் பக்கம் போனபோது முள் மரங்களுக்கிடையில் கொம்பில் ஒரு குண்டு பாய்ந்திருக்க, இன்னொரு குண்டு வலது கண்ணைக் கிழித்து வெளியேறியதால் இடப்பக்கமாகச் சரிந்து செத்துக் கிடந்தது. அதன் வீரம் குறையாத பார்வையைத் துளைத்திருந்தார்கள் வேட்டைக்காரப் பாவிகள். அதே பார்வை, அதே கம்பீரம்.

வனப் பாதுகாவலர் தன் மகனின் புல்லட்டை எடுத்துக் கொண்டு அறக்கப்பறக்க ஓடி வந்தார். தர்கா கொடி மரத்திண்டில் துண்டைப் போட்டு மூடியிருந்ததைப் பார்த்தவர், ‘‘என்ன ஊய்க்காட்டான், பிரேதத்தைப் போட்டு மூடி வச்சாப்ல இருக்கு’’ என்று கேலி செய்தவர், துணியைத் தூக்கிப் பார்த்துவிட்டு இருண்டு போய் நின்றார்.

‘‘ஏய், இது தன்னூத்து ராசாவோட குட்டியால்ல தெரியுது’’ என்றவரைப் பார்த்து உய்க்காட்டான் பதிலுக்குச் சொன்னான். ‘‘அச்சு அசலா தன்னூத்து ராசாதான்’’ என்றான். ‘‘உய்க்காட்டான், பொட்டக் குட்டியால்லா தெரியுது’’ என்றவர், ‘‘இன்னொரு குட்டி எங்கே இருக்கு’’ என்றார். உயிருள்ளதைப் பார்க்கப் போனார்கள். ஆக்குப்பறைக்குள்ளே நடுவில் எழுந்து நின்றபடி இருந்தது. இரவு முழுக்க சாப்பிடாததால் வயிறு ஒட்டியிருக்க, பால் வாங்கி வரச்சொல்லி ஊய்க்காட்டன் பிடித்து வாயைப் பிளக்க, வனப் பாதுகாவலர் ஊட்டி விட்டார். பாலைக்குடித்துவிட்டுக் கம்பீரமாக நின்று பார்த்தது. ‘‘ஊய்க்காட்டான், இது தன்னூத்து ராசாவா வரும். பாத்து வளக்கணும்லே’’ என்றவர், புல்லட்டின் டேங்க் கவரில் இருக்கும் இறப்புப் பதிவேட்டை எடுத்து வரச் சொன்னார். இறப்புப் பதிவேட்டில் அவர் இறந்துபோன மான்குட்டியைத் திருப்பிப் பார்த்துவிட்டு, ‘பிறந்து பத்தே நாளான மான் பூங்காவின் மான் குட்டி, நாய் கழுத்தில் கடித்ததால் இறந்திருப்பாகத் தெரிய வருகிறது’ என்று எழுதிக் கையெழுத்திட்டார். அதன் கீழே ஊய்க்காட்டானும் பெரியவரும் கையெழுத்திட்டார்கள்.

கால்நடை மருத்துவரை ரேஞ்சர் அழைத்துக்கொண்டு வந்தார். கழுத்தில் இருக்கும் காயத்தைக் கொண்டு பல்லின் நீள அகலத்தைக் குறித்துக்கொண்டு, நாய்க்கடிதான் என உறுதிசெய்தார். உயிருள்ள குட்டியைப் பார்த்து ‘அதன் உடல்நிலை சீராக உள்ளது’ எனத் தெரிவித்து, இறப்புப் பதிவேட்டில் பதிந்தார். ரேஞ்சரும் அதில் கையொப்பமிட்டார்.

ஆண்மான் என்றவர், மான் குட்டியாக இருப்பதால் பத்து பதினைந்து நாள் பாதுகாத்து எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது எனப் பார்த்துச் சேர்ப்பிக்கச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். ‘‘ஊய்க்காட்டான், உம் பொறுப்புதான்’’ என்றவரிடம் குனிந்து, ‘‘எம்புள்ள மாதிரி பாத்துக்கிடுதேன் சார்’’ என்றான்.

மான்குட்டி பாலைக் குடித்துவிட்டுத் துள்ளிக்கொண்டிருந்தது. தாயிடம் எப்படிச் சேர்க்கலாம் என்று எண்ணிய வனப்பாதுகாவலர் தர்காவில் இருக்கும் நபர்களை அழைத்தார். `‘தாய்மான் வரக்கூடும், வந்தால் ஊய்க்காட்டானை உடனே அழைத்துக் காட்டுங்கள்’’ என்று சொன்னார். ‘‘புள்ளயெப் பாக்கமெ தாயால எப்டி இருக்க முடியும். என்ன இக்கட்டு இருந்தாலும் ஒரு சோட்டுக்கு வராமலா போவும்’’ கேட்டுக்கொண்டிருந்த முக்காடு போட்ட பெண் ‘உச்’ கொட்டினாள்.

ஊய்க்காட்டானுக்கு ஒரு மானைக் கைக்குள் வைத்து வளர்ப்பது என்பது இனம்புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதன் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டினான். சிலசமயம் அதோடு தும்பு சேர்த்து மேயவிடலாம் என நினைத்தான். வனப்பாதுகாவலர் பட்டென்று, ‘‘காட்டுப் பிராணியை வீட்டுப் பிராணி ஆக்கிவிடாதே’’ என்றவர், கழுத்துக் கயிற்றையும் அறுத்து எறிந்தார்.

ஊய்க்காட்டானுக்குத் தன் கைப்பட வளர்த்து காட்டுக்குள் விடப்போகிறோம் என்று பெருமிதம் எழுந்தது.் அதுவும் தன்னூத்துக் கூட்டத்தோட ராஜாவா அது மாறுவதைப் பார்க்க ஆசை இருந்தது. பத்து நாளுக்கு மேலாக தன்வீட்டுப் பசுமாட்டில் கறந்த பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் புகட்டினான். ஓடி ஓடித் திரிந்தது. அது முதுகை வளைத்து துள்ளிப் பாய்ந்து திரிந்து அந்த இடத்தையே கொண்டாட்டமாக்கியது. புல்லைக் காட்டினால் அவர்களிடம் ஓடிச்சென்று தின்ன ஆரம்பித்தது. வனப் பாதுகாவலர் ஒருநாள் தற்செயலாக வந்தவர் யாரோ புல் கொடுப்பதைப் பார்த்தவுடன் அவர்களைச் சத்தம் போட்டு, ‘‘இனிமேல் புல்லைக் கொடுப்பதாக இருந்தால் தரையில் போடுங்கள். அது தின்னட்டும். இப்படி நீங்கள் கொடுத்தால் அதற்குத் தரையில் இருக்கும் புல்லைக் கடித்து மேயத் தெரியாமல் போய்விடும்’’ என்றார். ‘‘அப்படியா? புல் மேயத் தெரியாமெ போறதுக்கு இது என்ன புலிக்கா பொறந்துருக்கு, கார்டுக்கு என்ன ஆயிப்போச்சோ தெரியல’’ என்று தங்களுக்குள் சிரித்துக்கொண்டார்கள்.

வனப்பாதுகாவலர் நல்லமாடன் ஊய்க்காட்டனை வரவழைத்தார். ‘‘இந்தா பாரு உய்க்காட்டான், மானு நம்ம கைக்குள்ள வந்து பத்து பன்னிரண்டு நாளாச்சு. இனிமேலும் அதைக் கைவளப்பா வளத்தா. அது உருப்படாமெ போய்டும். நாளை கழிச்சி நானும் வாரேன். அதுக்குள்ள நீ என்ன செய்றேன்னா, இது எந்தக் கூட்டம் எந்தத் தாயின்னு கண்டுபிடிச்சி வை. அது வளர்ற வளத்தியெ பாத்தா, அது தன்னூத்துக் கூட்டமாத்தான் தெரியுது.’’

அவன் மனம் வலித்தது. ஆயினும் அதுதான் சரி என்றும் பட்டது. ‘‘புலி வெரட்டினாலும் தப்பி ஓடுற மானாக நம்ம பூங்கா மான் இருக்கணும். நாய்க்கு பயப்படுற கைவளர்ப்புப் பிராணியா தேய்ஞ்சுபோய்ரக் கூடாது’’ என ரேஞ்சர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. அழகான செல்லப்பிராணியா வளர்க்கணும்னு ஆசையும் இருந்தது.

திங்கள் காலையிலேயே வனப்பாதுகாவலர் தர்க்காவிற்கு நேரடியாக வந்துவிட்டார். அவனும் அவருக்காகக் காத்து நின்றான். நன்றாக இரையெடுத்துவிட்டு ஆலமர மூட்டில் அசை போட்டபடி படுத்திருந்தது. சுற்றி வாழ்ந்த மக்க மனுஷர் அனைவருக்கும், ‘மானைக் காட்டில் கொண்டு போய் விடப்போகிறோம்’ என்கிற சோகம் பற்றிக்கொள்ள, எல்லோரும் குசுகுசுத்தபடி தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்குள் ‘நாமொதான் நல்லா வளர்க்கலாமே, எதுக்குக் காட்டில் கொண்டு விடணும்’ என்ற எண்ணம் மேலோங்கியது.

ஊய்க்காட்டான் பிள்ளையைத் தூக்குவது போல முன்கைகளால் மானைத் தூக்கிக் கொண்டான். மான் ‘எதற்காகத் தூக்குகிறார்கள்’ என்று தெரியாமல் தலையை அங்குமிங்குமாகத் திருப்பி சத்தம் போட்டது.

‘‘என்னப் பெத்த ராசா, என்னமா பாக்குது’’ என்றாள் தர்காவில் இருந்த பெண். முந்தானையை எடுத்துக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். எல்லார் முகமும் சுண்டிப்போய் இருந்தது.

வனக்காவலர் ஊய்க்காட்டனிடம் கேட்டார். ‘`இது எந்தக் கூட்டத்தைச் சேர்ந்தது’’ என்று. அவன், ‘`இது தன்னூத்து மான் கூட்டத்தோடு சேர்ந்தது’’ என்றும், ‘`நேத்து பார்த்தேன். அதில் தான் ஒரு ஈத்து மான் பால் காம்புகள் வீங்கிக் கிடக்க வலி பொறுக்கமாட்டாமல் நொண்டிக்கொண்டு போனது’’ என்றும் சொன்னான். ‘‘இதைக் கொண்டு விட்டா இன்னும் ஒரு மாதத்துக்குப் பால் கொடுக்கும். மூணு குட்டி பால் இதுக்குக் கிடைக்கும். ராசா கொடுத்து வச்சதுதான்.’’

அவர்கள் மான் பூங்காவிற்குள் இருக்கும் கிளுவை, உடைமுள், வாதமடக்கி மரங்களின் வழியாகப் போனார்கள். அந்த இடத்தை முழுவதுமாக சோகம் அப்பிக்கொண்டது.

காட்டுக்குள் போன இருவரும் திரும்பி வருவார்கள் என்று காத்துக் கிடந்தார்கள். போனவர்கள் வரவே இல்லை என்பது அவர்களது சோகத்தை அதிகப்படுத்தியது. இரவு முழுக்க அதே பேச்சாகக் கிடந்தது.

மறுநாள் காலை 8 மணியளவில் வந்த ஊய்க்காட்டானை எல்லோரும் மொய்த்துக்கொண்டு ‘`தன்னூத்து ராசாவை எங்கே விட்டீர்கள்’’ என்று கேட்டார்கள்.

சோகமான மனநிலையோடு தன்னூத்தில் விட்டதையும், அது சீக்கிரத்தில் அந்தக் கூட்டத்தின் தலைவனாகிவிடும் என்றும் உறுதி சொன்னான். அவன் அன்று முழுவதும் பொக்கை மனதோடு அலைந்தான்.

தன்னூத்து ராசா - சிறுகதை

அடுத்த இரண்டு நாள் இரவில் காட்டுப் பாரா இருந்தது. அப்போதும் ராசா எங்காவது கண்ணில் அகப்படுகிறதா என்று பார்த்தான். எங்கும் தென்படவே இல்லை. வனப் பாதுகாவலர் ‘‘மழைக்காலம் வரப்போகிறது. கோப்புல் நடவேண்டும், கரம்பை வெட்டிப் போட வேண்டும்’’ என்று சொல்லியிருந்தார். அந்த வேலையும் வேகமாகப் போய்க்கொண்டிருந்தது.

திடீரென ஆலம் பழங்களைச் சாப்பிட வந்த செந்தலைக் குக்குறுவான்களைப் பார்க்கத் தோன்றியது. தர்காவை நோக்கி வண்டியைத் திருப்பினான். ஆலமரத்தில் பழங்களும் இல்லை. எந்தக் குருவிகளின் சத்தமும் இல்லை. புதிதாக வந்த செந்தலைக் குக்குறுவான்களைப் பார்த்திருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.

தர்காவிற்குள் குபீரென மக்கள் சத்தம் கேட்க, ஓடினான். இளைத்து மெலிந்து பிட்டி எலும்புகள் தென்ன, விலா எலும்புகள் தெரிய மான் நின்றுகொண்டிருந்தது. கொஞ்சம் சோற்றுப் பருக்கைகளும் தண்ணியும் அதன் வாய்க்கு அருகில் காட்டிக் கொண்டிருந்தார்கள். இரண்டு மடக்குக் குடித்துவிட்டுத் தலையை ஆட்டியபடி நின்றது.

‘‘ஊய்க்காட்டான் மாமா, ராசா நாலு நாளா சரியா சாப்பிடாமல் பட்டினி கிடந்துட்டு வந்திருக்கு. எங்க கொண்டு போய் விட்டு வந்தீங்கோ. என்னமோ நல்ல நேரத்துக்கு அதா வழியப் பார்த்துப் பார்த்து வந்திருக்கு. இனிமேலுக்கு கொண்டு வுடாதீங்க. நாங்க பாத்துக் கிடுதோம். ரெண்டு வாரம் கழிச்சி வாங்க. அப்படியே சிங்கக்குட்டி மாரி மாத்திப் போடுதோம்’’ என்றாள் ஆயிரப்பேரியா.

வனப் பாதுகாவலர் அவன் அழைத்ததன் பேரில் வந்து பார்த்துவிட்டு, ‘‘கொஞ்சம் உடல் தேறட்டும், பிறகு என்ன செய்யலாமென்று பார்த்துக் கொள்வோம்’’ என்றார். கோப்புல் நடுதலில் ஒரு வாரம் எப்படிக் கடந்து போனது என்று ஊய்க்காட்டனுக்குத் தெரியவில்லை.

வியாழக்கிழமை வீட்டுக்குத் திரும்பும்போது தர்காவில் பாட்டுப் பாடிக் கொண்டி ருந்தது. ஓடிப்போய்ப் பார்த்தான். ஆயிரப்பேரியா சொன்னபடியே மான் தேறியிருந்தது.

பிட்டி எலும்புகள் மூடியிருந்தன. எல்லாச் சாப்பாடும் சாப்பிடப் பழகிக்கொண்டதாக மகிழ்ச்சியாகத் தெரிவித்தாள். மான் கொம்பில் ஒரு கிளை பிரிந்து முளை விட்டிருந்தது. அவனுக்கு மானைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. ‘‘கொஞ்சம் புல்லும் அறுத்துப் போடுங்கள்’’ என்றான் உய்க்காட்டன்.

‘‘அதும் போடுதோம். பின்ன எப்படி மான் இப்படி வரும்?’’ எதிர்க் கேள்வி போட்டவள், ‘‘இது என்னன்னா அறுவம்புல்லா கேக்கு’’ என்றாள். அவன் சிரித்துக்கொண்டான்.

எல்லோரோடும் நெருக்கமாகப் பழக ஆரம்பித்தது மான். ‘‘அத ஏன் கேக்கியோ. சினிமாவுல மான் கதாநாயகியெ தொட்டுப் புடிச்சி விளையாடுற மாரில்லா இருக்கு. எல்லா இந்த தர்கா சாமி பண்ற அதிசயமாக்கும்’’ என்று நெட்டி முறித்தாள்.

அடுத்த வாரம் வந்து பார்க்கும்போது முளைவிட்ட கொம்பு வளர்ந்து ஊசியாகி இருந்தது. உடம்பும் தடிச்சிருந்தது. மக்கள் எல்லோரும் மான் தங்களோடு சகஜமாகப் பழகுவதாகவும், மாவுமில் வரைக்கும் போயி டீக்கடை, பெட்டிக்கடைக்காரன்களோடவும் நல்லாப் பழகிட்டு. அவனுக அதுக்கு வடையும் பிஸ்கட்டும் கொடுக்க அதையும் தின்னு போடுவதாகவும் சொன்னார் தர்கா காவலர்.

ஊய்க்காட்டனுக்கு ஒன்றவாடம் மானைப் பார்க்காமல் இருக்க முடியாது. அவன் கோப்புல் மற்றும் அறுகம்புல் கொண்டு வருவதை எதிர்பார்த்துக் காத்திருக்கும். அவனைத் தூரத்தில் பார்த்தவுடனே எழுந்து ஓடி வரும். அவனும் ஓடுவான். நடுவில் சந்தித்துக்கொள்கிற காதலர்கள் போல இருக்கும். அவ்வளவு பிரியம் அவனுக்குள். வீட்டுக்குப் போனவுடனே மானைப் பார்த்துவிட்டு வந்ததை விலாவாரியாக விவரிப்பான்.

மானுக்கும் அந்த ஊரே பழகிவிட்டது. நாய்கள் வீட்டு விலங்கைப் போல பார்க்கத் தொடங்கியிருந்தன. வெளிநாய்கள் குரைப்பது கேட்டாலோ, பாய்ந்து வந்தாலோ பாதுகாப்பான இடத்திற்குத் துள்ளிக் குதித்து ஓடி வந்துவிடத் தெரிந்துவிட்டது. எல்லா உணவையும் சாப்பிடப் பழகிக்கொண்டது. புல்லைச் சாப்பிடுவதுபோல தெருவில் கிடக்கும் புல் மற்றும் உணவுகளையும் தானாகத் தின்னத் தொடங்கியிருந்தது. யாருக்கும் தொந்தரவற்ற ஜீவனாக வளர்ந்தது.

மானை ஒரு நாளாவது மகளிடம் காட்டவேண்டுமென்று எண்ணியிருந்தான். ‘பெண் வளர்த்தி பீர்க்கங்கா வளர்த்தி’ என்பது போல மானும் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை மச்சினன் மகளுக்கு சடங்கு வைத்திருந்தான். இரண்டு நாள் இருக்கணும் என்று மனைவியும், மகளும் சொன்னதால் இரண்டு நாள் விடுமுறை எடுத்துக்கொண்டு குப்பனாபுரம் போயிருந்தான். ஞாயிற்றுக்கிழமை சடங்கு முடிந்து திங்கள்கிழமை திருச்செந்தூர் போக முடிவு செய்திருந்தார்கள்.

மணி பத்தாகிக்கொண்டிருந்தது. மச்சினனின் உடப்பிறந்தாளை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவனை வனப் பாதுகாவலர் நல்லமாடன் அழைத்தார். அவன் அலைபேசியை உயிர்ப்பித்துக் கேட்ட போது, ‘‘ஊய்க்காட்டான், மாவட்ட வன அதிகாரி, ரேஞ்சர் எல்லோரும் வந்திருக்கார்கள். கொஞ்சம் வந்துவிட்டுப் போக முடியுமா’’ என்றார். வீட்டில் தான் பேருந்தில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு மொபட்டில் கிளம்பினான்.

தர்காவை வந்தடைந்த போது, மாவட்ட வன அதிகாரி ஜீப்பின் அருகில் நின்றிருந்தார். பிராணிகள் மருத்துவரும் நல்லமாடனும் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார்கள். ‘மான் பூங்காவை விட்டுத் தப்பி வந்த ஆறு மாதமுள்ள நன்றாக வளர்ச்சியடைந்த மான். பிளாஸ்டிக் பைகள் வயிற்றில் நிறைந்து உணவு செரிமானமாகாமல் செத்துப்போயிருக்கிறது. வயிற்றில் ஒரு கிலோ பிளாஸ்டிக் பைகள் மீந்த உணவுகளோடு இருந்தது உடற்கூறாய்வில் கண்டறியப்பட்டுள்ளது’ என்று எழுதிக் கையெழுத்திட்டார்.

மாவட்ட வன அதிகாரி, ரேஞ்சர், தூரத்தில் பொதுமக்கள் என எல்லோரும் அமைதியாக நின்றுகொண்டிருந்தனர்.

தோளில் கிடந்த டவலை எடுத்து வாயைப் பொத்தியபடி மேடையில் கிடத்தப்பட்டிருந்த உடற்கூறு செய்யப்பட்டுக் குருதி வழியக் கிடந்த மானைப் பார்த்தான்.

திறந்திருந்த மானின் கண்கள் எல்லோரையும் மிரளப் பார்ப்பதுபோல இருந்தது.

அதிகாரிகள் இருப்பதையும் மறந்தவனாக சத்தமாய்க் கத்தினான்.

‘‘ஏ, தன்னூத்து ராசா...’’