Published:Updated:

``என்னை 22 வருடங்களாக துரத்தும் சின்னசாமியின் அஞ்சலட்டை!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

உதயச்சந்திரன்
உதயச்சந்திரன்

உதயச்சந்திரன்: 'சின்னசாமி' என்று மட்டும் கையெழுத்திட்டு, முகவரி இல்லாமல் வந்த அந்தச் சின்னஞ்சிறு அஞ்சலட்டைதான் இன்னும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு சின்னஞ்சிறு அஞ்சலட்டை 22 வருடங்களாகத் தொடர்ந்து விடாமல் என்னைத் துரத்திவரும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. ஆம். பரமக்குடியில் முதன்முதலில் பணியாற்றியபோது நகரின் முக்கியப் பகுதிகளில் காணப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றி, பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்தோம்.

கலவரங்கள் நடந்து முடிந்து சில மாதங்களே ஆன நிலையில், இது தேவையற்றது என சக அலுவலர்கள் கேட்காமலேயே கருத்து தெரிவித்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை, பின்னாளில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளின்போது நிர்வாகத்தின் கரங்களை வலுப்படுத்தும் என்பது எனது வாதம்.

அறுவடைக் காலம், உள்ளூர்த் திருவிழா அனைத்தும் முடிந்து நகர் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது இந்தத் துல்லியத் தாக்குதல் நடத்திடத் திட்டம் தீட்டப்பட்டது. பதினான்கு மாதங்கள் அங்கே பணியாற்றிய அனுபவத்தில் நகரின் ஒரு பகுதியைத் தொட்டால் மறுபகுதியில் எப்படி எதிரொலிக்கும் எனும் சமூகவியல் நீரோட்டத்தின் தடம் பழகிப்போனதால் பணி சற்று சுலபமானது.

ஊரின் நான்கு வெவ்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கிய அதே நேரத்தில், நகரின் முக்கியப் பிரமுகர்கள் பலர் பரமக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். தங்களுடைய வணிக வளாகங்கள், நகரில் அப்போது இடிக்கப்பட்டுவருவது தெரியாமலேயே சிலர், பரமக்குடி நகரத்தை அழகுபடுத்த அற்புதமான ஆலோசனைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தனர்.

நொடியில் வன்முறை பரவிடக் கூடிய பகுதியில் உயர்ந்த வணிக வளாகங்களும், மாளிகைகளும் மட்டுமல்ல, சில அரசு அலுவலகங்களும் தங்களது எல்லைகளை இழந்தன. கூடவே சாதிக்கலவரங்களைத் தூண்டும் பெயர்ப்பலகைகளும் தாமாகவே முன்வந்து விடைபெற்றன. சில வாரங்கள் நீடித்த இந்தப் பணியைப் பலர் பாராட்டவும், சிலர் விமர்சிக்கவும் செய்தார்கள்.

``என்னை 22 வருடங்களாக துரத்தும் சின்னசாமியின் அஞ்சலட்டை!" - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

அடுத்த இரு மாதங்களில் காஞ்சிபுரத்திற்கு இடமாறுதல் கிடைக்க, ஏதோ மாபெரும் சாதனைகள் புரிந்துவிட்ட மகிழ்ச்சியுடன் புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது, முதுகுளத்தூரிலிருந்து ஒரு அஞ்சலட்டை வந்து சேர்ந்தது.

'சின்னசாமி' என்று மட்டும் கையெழுத்திட்டு, முகவரி இல்லாமல் வந்த அந்தச் சின்னஞ்சிறு அஞ்சலட்டைதான் இன்னும் என்னைத் துரத்திக்கொண்டிருக்கிறது.

ஆம், "முதுகுளத்தூரிலிருந்து மனைவியின் நகைளை விற்றுக் கிடைத்த பணத்தில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே ஒரு கடையின் முன்பகுதியை மூன்று வருடக் குத்தகைக்கு எடுத்துச் சிறிய இரவு உணவகம் ஒன்றை நடத்தி வந்தேன். சமீபத்தில் நீங்கள் எடுத்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது இடிக்கப்பட்டுவிட்டது. எனவே கொண்டு வந்த அனைத்தையும் இழந்து ஊர் திரும்புகிறேன். ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றுவதில் நீங்கள் நேர்மையாகப் பணிபுரிந்தீர்கள். நன்றி" என்று எழுதப்பட்டிருந்தது.

எதிர்காலமே கேள்விக்குறியான போதும் அந்த நிலைக்குக் காரணமானவரின் நேர்மையைப் பாராட்ட முன்வரும் அந்த எளிய மனிதர் எங்கே?

தகுதியுள்ள நபர்களுக்கு முறையான மாற்று ஏற்பாடுகள் செய்திடாமல் அவர்களுடைய வாழ்வாதாரத்தைச் சிதைத்திட்ட செயலை மிகப்பெரிய சாதனை என நினைத்து உலாவரும் நான் எங்கே..?

முகவரியில்லாத அந்தச் சின்னசாமியின் பெருந்தன்மைக்கு முன்னால் மிகச் சிறிய உயிரினம்போல் நான் உணர்ந்த நாள் அது.

ஒரு சின்னஞ்சிறு அஞ்சலட்டை... நான்கு எளிமையான வரிகள். ஆனால் அவற்றின் தாக்கம் காலம் கடந்தும் வலிக்கிறது. ஒரு சொல் தீரா வலியை ஏற்படுத்தும் என்பது உண்மைதான். அதேசமயம் என்றோ முன்வைத்த தனது கோரிக்கை இன்று நிறைவேறிய மகிழ்ச்சியில் கள்ளம்கபடமில்லாத, நன்றி கலந்த புன்னகையை உதிர்த்தபடியே செல்லும் ஏதோவொரு கிராமத்துப் பெரியவரின் முகம், அதுவரை இருந்த களைப்பை நீக்கி அடுத்த ஒரு மாதத்திற்கு உற்சாகமாய் ஓடவைக்கும்.

- உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதும் 'மாபெரும் சபைதனில்' தொடரின் நிறைவு அத்தியாயத்தின் சிறு பகுதி இது. இந்த அத்தியாயத்தில், தனக்கு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய மேலும் சில மனிதர்களையும் நினைவுகூர்ந்துள்ளார். அவர்கள் குறித்து முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/392ghhd > மாபெரும் சபைதனில் - 40

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு