லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

உயிர்த்துளி - சிறுகதை

உயிர்த்துளி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
உயிர்த்துளி - சிறுகதை

- விஜயலக்ஷ்மி

“அண்ணே... இந்த பஸ் கஞ்சங்குடி போகுமாண்ணே...’’ இடுப்பில் பையனுடன், நகர்ந்துகொண்டிருந்த பஸ் ஸைப் பிடித்தபடி கேட்டவளை கண்டக்டர் ஏற, இறங்கப் பார்த்தார். மலிவான சேலை, கலைந்த தலைமுடி, காதில் அழுக்கேறிய தங்கக் கம்மல், கழுத்தில் மஞ்சள் என்று நிறம் பிரித்து உணர முடியாத ஒரு கயிறு.

காதில் வாங்கிய கண்டக்டர், ‘விஷ்ஷ்ஷ் ஷ்ஷ்ஷ்’ என்று இழுத்து விசில் அடிக்க வண்டி சட்டென்று நின்றது.

‘`வாம்மா... வாம்மா... பார்த்து ஏறு. அதோ அந்த சீட்டுல போய் உக்கார்ந்துக்கோ’’ என்று சொல்லி மீண்டும் விசில் கொடுத்தார்.

ஜன்னலோர சீட்டில் மகனை உட்கார வைத்து அருகே உட்கார்ந்தாள். பஸ் கிளம் பியது. உஷ்ணக் காற்று முகத்தில் அறைந்தது. செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்த மாதிரி மனசு வலித்தது.

‘இந்த நொண்டியைத் தூக்கி எங்கேயாவது போட்டுட்டு நீ மட்டும் வந்தால் வா... இல்லைன்னா, ஒரேயடியா உனக்கும் தலை முழுகிடுறேன்...’ கணவனின் கோபக்குரல் செவிகளில் அறைந்துகொண்டே இருந்தது.

விஜயலக்ஷ்மி
விஜயலக்ஷ்மி

சின்ன சைக்கிள் ரிப்பேர் கடை வைத்திருந் தான் அவள் கணவன். வரும் வருமானத்தில் அவன் சாராய செலவு போக மீதி கொடுப் பதை வைத்து ஆக்கிப் போடுவாள். இன் றைக்கு மதியம் கடையை மூடிவிட்டு அவன் சாப்பாட்டுக்கு வர மூன்று மணியாகிவிட்டது. சாதம் வடித்து பருப்பு போட்டு கீரை மசித்து வைத்திருந்தாள்.

‘சே... இதை மனுஷன் சாப்பிடுவானா’ என்று திட்டிக்கொண்டே சாப்பிட ஆரம்பித் தான். தரையைத் தேய்த்து தேய்த்து தவழ்ந்து கொண்டே ‘ப்பா...’ என்றவாறே அவன் அருகில் போன பையன், அவன் மடியில் ஏறப் போனான். அவ்வளவுதான்... எச்சில் கையால் மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான். அவன் வீசி எறிந்த தட்டிலிருந்து சோறு வீடெங்கும் சிதறியது. பதறியவாறே ஓடி வந்தவளின் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியவன், பையனையும் தூக்கி அவளருகே எறிந்து கதவைச் சாத்தினான்.

எத்தனை நாள்தான் பயத்திலும், பரிதவிப் பிலும் உழன்று கொண்டு வாழ்க்கையை கடத்துவது..? எதிர்காலம் அவள் கண் முன்னே இடி இடியென்று இடுப்பில் கை வைத்து சிரிக்கும் ஒரு பெரிய அரக்கனைப் போல மிரட்டியது. கோபமும் இயலாமையும் மனதைத் தாக்க, செய்வதறியாது அம்மா வீட்டுக்குப் போக பஸ் ஏறிவிட்டாள்.

அங்கும் வரவேற்பு சரியாக இருக்காது. திருமணத்துக்கு முன் ஒரு ஸ்கூலில் தையல் டீச்சராக வேலை பார்த்தபோது வீட்டில் அவள் வைத்ததுதான் சட்டம். இப்போது வயதான பெற்றோர் மகனின் தயவில் இருப்பவர்கள் என்ன செய்ய முடியும்..? போன தடவையே அண்ணி சொல்லி விட்டாள்... ‘இப்படி அது வேணும், இது வேணும்னு உன் புருஷன் விரட்டி விட்டா இங்கே வந்து நிக்காதே... உன் பாட்டை நீதான் பார்த்துக்கணும்...’

தன் நினைவுகளிலேயே மூழ்கியவள் பஸ் குலுங்கி நிற்கவும் விழித்துப் பார்த்தாள். ஒரு டீக்கடையின் முன்னால் பஸ் நின்றிருந்தது. “அம்மா...” மகன் அவள் தோளைச் சுரண்ட, அவனைத் தூக்கிக்கொண்டு இறங்கினாள்.

உயிர்த்துளி - சிறுகதை

அந்நேரத்துக்கு டீக்கடையில் வேறு எதுவும் இல்லாததால், ஆறிப் போயிருந்த வடையை வாங்கிக் கொடுத்தாள். நல்ல பசி போல... இரண்டு வடைகளைப் பிய்த்து பிய்த்து வாயில் போட்டுக் கொண்டான். ஒரு டீயை வாங்கி ஆற்றிக் கொடுத்தாள். பஸ் ஹாரன் அடிக்க, பஸ்ஸில் ஏறினார்கள்.

மழை லேசாக சாரல் அடிக்க ஜன்னலை மூடினாள். சிறிது நேரத்தில் மழை வலுக்க ஆரம்பித்தது. நிலா மேகத்துக்குள் ஒளிந்து ஏழு மணிக்கே இருள் அடர்த்தியாகப் பரவியது.

திடீரென்று பையன், “ம்மா...’’ என்று அரற்றியபடியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தான். அவன் வயிற்றைத் தடவிக் கொடுத்தவாறே, “சீக்கிரம் ஊர் வந்துடும்... வெந்நீர் வச்சு குடிச்சா சரியாயிடும்’’ என்று சமாதானப்படுத்தினாள். பஸ்ஸில் எல்லோரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். நேரம் ஆக ஆக வலி தாங்காமல் அலற ஆரம்பித்தான். மழை வலுத்துக் கொட்ட அவன் அழுகையும் உச்சத்தை தொட்டது. செய்வதறியாது திகைத்தாள். பஸ் ஏதோ ஒரு கிராமத்தைக் கடந்துகொண்டிருந்தது.

‘`அண்ணே...’’ என்றவாறே டிரைவரிடம் சென்ற கண்டக்டர், ஏதோ சொன்னார்.

டிரைவரும் தலையசைத்தவாறே பஸ்ஸை வலது பக்கம் ஒடித்து ஒரு மண் ரோட்டை ஓட்டி நிறுத்தினார். “இந்தாம்மா... இந்த சந்துக்குள்ள போனா ஒரு ஆஸ்பத்திரி இருக்கு. பையனை காமிச் சுட்டு வா...” என்றார்.

“கையில காசு இருக் காம்மா...’’ சக பயணி கேட்க ஆமென்று தலை யசைத்தவள், பயத்துடன் இறங்கினாள்.

கடும் இருட்டு, விடாமல் பெய்துகொண்டிருந்தது மழை. மகனும் விடாமல் உரக்க அழுதுகொண்டிருக் கிறான். மழை நீர் தலையில் அடிக்க, சேலை முந்தா னையை எடுத்து தன் தலை யையும், மகன் தலையையும் சேர்த்து சுற்றினாள். அடித்த காற்றில் சேலை நனைந்து ஒருபுறமாகப் பறந்தது.

அடுத்த நிமிடம், “இந்தாம்மா... இந்தக் குடையை எடுத்துட்டுப்போ...’’ ஆஸ்பத்திரி வந்ததும் பையனோடு உள்ளே ஓடினாள்.

டாக்டர் சாவகாசமாக வந்து பரிசோதித்துவிட்டு “ஒண்ணுமில்லை... ஏதோ ஒப்புக்காததை சாப்பிட்டிருக் கான்...’’ என்று இன்ஜெக்‌ஷன் போட்டு மாத்திரையும் கொடுத்தார். அவனை இடுப்பில் தூக்கியவாறே வெளியே வந்தாள்.

மழை விட்டபாடில்லை. சாலையே இருட்டடித்து கிடந்தது. இனி எப்படி பஸ் பிடித்து ஊருக்குப் போவது..? காலையில் குடித்த ஒரு டம்ளர் நீராகாரத்துக்குப் பிறகு சொட்டுத் தண்ணீர்கூட வாயில்படவில்லை. தலை சுற்றி சோர்வாக இருந்தது. சற்று தூரத்தில் தெரிந்த சாராயக் கடையின் முன்பிருந்த கூட்டம் அவளை உற்றுப் பார்க்க, உடம்பெல்லாம் நடுங்கியது.

கண்கள் மங்க பார்த்தபோது, தூரத்தில் குடையோடு ஓர் உருவம் வருவது தெரிந்தது. அருகே வந்ததும் தெரிந்தது... சக பயணி ஒருவர். பட படப்புடன் அவரைப் பின் தொடர்ந்தாள். தெரு முக்கில் அவள் வந்த பஸ் அவளுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஓடினாள்.

கண்டக்டர் குரல் கொடுத்தார்... “டிரைவர்... வண்டியை எடு.’’

பஸ்ஸில் இருந்த பயணி ஒருவர், ‘‘அட இவ்வளவு நேரம் அழுது படுத்தினவன், இப்ப சிரிக்கிறான் பாரு’’ என்றார்.

“லேட்டானதுக்கு கம்பெனியில கத்துவானே...’’ என்று டிரைவருக்கு கவலை தொற்றிக்கொள்ள...

“அட போப்பா... நம்ம புள்ள இது போல அழுது அரற்றினா, அப்படியே விட்டுடுவோமா? கம்பெனியில கேட்டா, எனக்கு நெஞ்சுவலி வந்துடுச்சுனு சொல்லிடுறேன்’’ என்று சிரித்தார், கண்டக்டர்.

‘இதுக்கு முன்ன இவங்கள்ல ஒருத்தரக்கூட நாம பார்த்ததில்ல. ஆனா, முகம் தெரியாத இந்த மனுஷங்களுக்குத்தான் எத்தனை பெரிய மனசு?!’ என்று யோசித்த தருணம் எழுந்த பெரு நம்பிக்கை, உயிர்த்துளியாய் அவளுள் பரவியது. அவளையும் அறியாமல் கண்களில் கசிந்தன நீர்த்துளிகள்.

வாழ்க்கை எவ்வளவோ சந்தர்ப் பங்களை வைத்துக்கொண்டுதான் காத்திருக்கிறது. திரும்ப பழைய ஸ்கூலுக்கே சென்று தையல் டீச்சர் வேலை கேட்கலாம். கைகள் கம்மலைத் தடவின. ஒரு தையல் மெஷினை வாங்கிப் போட்டால் மேல் வருமானத்துக்கும் வழி கிடைக்கும். நம்பிக்கையுடன் மகனை அணைத்துக்கொண்டாள்.

மழை நின்றிருந்தது. அடிவானத் தில் வெளிச்சக்கீற்று தோன்றி நில வின் வருகையை சொன்னது.