Published:Updated:

வலி - சிறுகதை

வலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வலி - சிறுகதை

வித்யா சுப்ரமணியம்

வலி - சிறுகதை

வித்யா சுப்ரமணியம்

Published:Updated:
வலி - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வலி - சிறுகதை

வயிற்றை சுருட்டி சுருட்டி வலித்தது. நளினி குப்புறப்படுத்து வலியைப் பொறுத்துக்கொள்ள முயன்றாள். விடிகாலை நான்கு மணியிலிருந்து வலிக்கிறது. இரவு முழுக்க ஆபீஸ் வேலையை வீட்டிலிருந்து செய்துவிட்டு மூன்று மணிவாக்கில்தான் படுத்தான் விஷ்வா. அவனை எழுப்பவும் மனம் வரவில்லை. நிறைய வேலைகள் இருக்கின்றன. குழந்தை களுக்கு ஆன்லைன் வகுப்புகள் உள்ளன. காலைச் சிற்றுண்டி, மதிய உணவு எல்லாம் செய்து வைத்துவிட்டு அவளும் ஆபீஸ் வேலையில் அமர வேண்டும். பதினொரு மணிக்கு ஒரு முக்கியமான மீட்டிங் உள்ளது. கொஞ்சம் வெந்தயமும் மோரும் குடித்தால் குறையக்கூடும்.

வலி - சிறுகதை

நளினி மெள்ள எழுந்தாள். காலைக்கடன் முடிக்கும்போது உதிரப்போக்கு இருக்கவும் பயந்துவிட்டாள். அடுப்பில் பால் குக்கர் வைத்து காப்பி டிக்காக்‌ஷனுக்கு வெந்நீர் வைப்பதற்குள் கூடிக்கொண்டே வந்த வலியைப் பொறுக்க முடியாமல் கண்களில் நீர் வழிந்தது. பல்லைக் கடித்தவாறு வேலை களைப் பார்த்தாள். இட்லி மாவு இருந்ததால் இட்லித் தட்டுகளில் அதை ஊற்றி அடுப்பில் வைத்துவிட்டு சட்னியை அரைப்பதற்குள் உயிர் போவதுபோல வலித்தது. இதற்குமேல் முடியாது எனத்தோன்ற, இன்று ஒரு நாள் மட்டும் சாப்பாடு வெளியில் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தபடி வந்து விஷ்வாவை எழுப்பினாள். முகச்சுளிப்போடு புரண்டு படுத்தவன், அவள் விஷயத்தைச் சொன்னதும் பதறியடித்து எழுந்தான்.

``டாக்டர்கிட்ட போலாம். ரெடியா இரு. இதோ வந்துடறேன்'' என்றபடி குளியலறைக்குள் சென்றான்.

குழந்தைகளை எப்படி தனியாக விட்டுச் செல்வதென்று யோசித்தாள் நளினி. ஏழு வயசுக்கும், நாலு வயசுக்கும் என்ன தெரியும்... தனித்திருக்க பயப்படுமே. இந்த கோவிட் சூழலில் அக்கம்பக்கம் யாரிடமும் விட்டுச் செல்ல இயலாத சூழல். வயிற்றை சுழற்றிய வலியோடு தவித்தாள்.

``என்ன யோசனை கிளம்பலையா?”

``குழந்தைகள்...''

``அவங்களைக் கூட்டிக்கிட்டே போயிடு வோம். வேறென்ன செய்ய...''

``வேணாம் விஷ்வா... ரொம்ப ரிஸ்க். இந்த கோவிட் நேரத்தில என்னையே உடனடியா கவனிப்பாங்களா, அலைக்கழிப்பாங்களான்னு தெரியாது. அதுங்க ரெண்டும் ஒண்ணும் சாப்பிடக்கூட இல்லை. உன் வறட்டு வீராப்பை விட்டுட்டு உங்கம்மாகிட்ட பேசி அவங்கள வரச் சொல்லேன், இல்லாட்டா குழந்தைகளை யாவது அங்க விடவான்னு கேளு.''

``வறட்டு வீராப்பு  எனக்கில்ல. அவங்களுக்கு தான். நமக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தும் இன்னும் அவங்க கல்மனசு இளகலை. அப்படியென்ன தப்பு பண்ணிட்டோம்... ஆ... ஆ... ஆ.... வலி தாங்கல விஷ்வா...''

விஷ்வா தவித்தான். தூங்கும் குழந்தைகளை எழுப்பி, கிளப்பும்வரை இவள் வலி தாங்குவாளா... உதிரம் வேறு போகிறது என்கிறாள்.

அவனுக்கு பயமாக இருந்தது. வேறு வழியின்றி செல்லை எடுத்து அம்மாவின் நம்பரை அழுத்தினான்.

``யாரு..?”

``அம்மா நான் விஷ்வா...”

தொடர்பு துண்டிக்கப்பட்டது.

மீண்டும் முயற்சி செய்தான். அம்மா எடுக்க வில்லை.

கோபத்தோடு மொபைலை வைத்துவிட்டு குழந்தைகளை எழுப்பினான். உறக்கம் கலையாமல் அவர்களை இரு தோள்களிலும் தூக்கிக்கொண்டு வந்தான். ``கதவைத் திற நளினி'' என்றான்.

சற்றுநேரத்தில் அருகிலிருந்த மருத்துவ மனை நோக்கிச் சென்றது கார். எமர்ஜென்சியில் அவன் குடும்பத்துக்கு மிகவும் தெரிந்த டாக்டர் இருந்தார்.

``நான் பாத்துக்கறேன் விஷ்வா. ரிலாக்ஸ்டா இருங்க'' என்றபடி உள்ளே போனார். அவளுக்கு பல பரிசோதனைகள் நடந்தன.

மாஸ்க் அணிவித்திருந்த குழந்தைகள் பசி தாளாமல் நச்சரிக்கத் தொடங்கின.

``விஷ்வா...'' டாக்டர் அழைத்தார்.

விஷ்வா குழந்தைகளை இழுத்துக்கொண்டு ஓடினான்.

``கிட்னி ஸ்டோன் விஷ்வா. வெவ்வேறு சைஸில மூணு இருக்கு. அதிலே ஒண்ணு பெரிசு. மருந்து மாத்திரைகளில் கரையுமாங் கறது சந்தேகமே. ஸ்பெஷலிஸ்ட்டை வரச் சொல்லியிருக்கோம். தவிர, புரொசிஜர்படி கொரோனா டெஸ்ட் எடுத்திருக்கோம் ஒருநாள் இங்கே அப்சர்வேஷன்ல வெச்சிருக் கோம். வலி அதிகமா இருந்ததால பெயின்கில்லர் டோஸ் ஊசிமூலம் கொடுத் திருக்கோம். தூங்கறாங்க. நீங்க வேணா வீட்டுக்குப் போயிடுங்க. குழந்தைகள் தேவையின்றி எக்ஸ்போஸ் ஆக வேண்டாம். வாட்ஸ்அப்பில நான் அப்டேட் பண்றேன்.''

வலி - சிறுகதை

``தாங்க்யூ டாக்டர்.''

விஷ்வா குழந்தைகளை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

அவன் வீடுதான் என்றாலும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டாற்போலிருந்தது. சமையலறையில் எது எங்கே இருக்கிறதென்று தெரியவில்லை. நளினி இட்லி குக்கரில் ஊற்றி வைத்திருந்த இட்லிகளை எடுத்து குழந்தை களுக்கு கொடுத்தான். பெரியவன் அனீஷ், தொட்டுக்கொள்ள தயிர் கேட்டான். சின்னவள் அனன்யா, நெய் தொட்டு ஊட்டி விடு என்றாள். ஃபிரிட்ஜைத் திறந்து தயிர் எதிலிருக்கிறது என்று தேடினான். எதையோ இழுக்க, எதுவோ கீழே விழுந்து மூடி திறந்து கொள்ள, நேற்றைய சாம்பாரின் மிச்சம் தரை முழுக்க தெறித்துக் கொட்டியது. எல்லா பாத்திரங்களையும் திறந்து பார்த்ததில் ஒன்றில் தயிர் இருந்தது. அதை எடுத்து பையனுக்கு தட்டில் போட்டுக் கொடுத்துவிட்டு அடுத்தாற் போல் மேடையிலிருந்த நெய் பாட்டிலை எடுத்து பெண்ணின் தட்டில் சிறிது நெய் ஊற்றி அவளுக்கு ஊட்டி விடுவதற்குள் மணி ஒன்பதை நெருங்கியது. ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும் நேரம்.

இதற்காகவே இருவருக்கும் இரண்டு டேபிள் கணிப்பொறிகள் மாதாந்தர கடனில் வாங்கி யிருந்தது. குழந்தைகளின் வாயும் முகமும் துடைத்து சீருடை மாட்டிவிட்டு தலையை மேலாக சீவி, கணிப்பொறி முன்பு அமர வைத்தான். வழக்கமாக அனன்யாவோடு நளினிதான் அமர்வாள்.

அவனது போன் விடாமல் ஒலித்தது. எல்லாம் ஆபீஸ் அழைப்புகள். குழந்தையை கணிப்பொறி முன் அமர வைத்து விட்டு தன் லாப்டாப்பைத் திறந்தான். குழந்தை பின்னாலேயே ஓடிவந்து அவன் மடியில் அமர, அவளை கெஞ்சி கொஞ்சி வகுப்பை கவனிக்கச்சொல்லி அனுப்பினான்.

ஆபீஸ் மீட்டிங் ஆரம்பித்த நேரம் இரண்டு குழந்தைகளுக்குள்ளும் சண்டை. இரண்டும் கத்தி கூச்சலிட, விஷ்வா திகைத்தான். இயலாமை கோபத்தைக் கிளப்பியது. எழுந்து சென்று குழந்தைகளை அடக்கினான். பெரியவன் முதுகில் பட்டென ஓர் அடிவைக்க, அவன் மிரண்டு இன்னும் பெரிதாகக் குரலெடுத்து அழ ஆரம்பித்தான். விஷ்வா அவசரமாக கணிப்பொறி சப்தத்தை மியூட்டில் வைத்தான். அழும் பிள்ளையை எப்படி சமாளிப்பதெனத் தெரியவில்லை. தலைச்சுற்றி யது அவனுக்கு. டீச்சருக்கு வாட்ஸ்அப்பில் ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு இருவருக்கும் கணிப்பொறியில் ஒரு கார்ட்டூனை ஓடவிட்டு அமைதிப்படுத்தி உட்கார வைத்துவிட்டு லேப்டாப் பக்கம் வந்தான்.

எவ்வளவு முயன்றும் மீட்டிங்கில் கவனம் செல்லவில்லை. தன் மேலதிகாரிக்கு போன் செய்து நளினிக்கு உடல்நலமில்லாது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதைச் சொல்லி இரண்டுநாள் விடுப்பு வாங்கினான். நளினியின் மேலதிகாரிக்கும் தகவல் அனுப்பினான்.

நளினி குழந்தைகளின் தொல்லையின்றி இருக்க அவர்களுக்கு கார்ட்டூன்கள் போட்டுக் கொடுத்துப் பார்த்ததில்லை. குழந்தைகள் அவளுக்கெதிரிலும் சண்டை போட்டிருக் கின்றன. அவள் எப்படி சமாளித்தாள்... அவன் எதையும் கவனித்ததில்லை. வீட்டில் நளினி என்னவெல்லாம் செய்கிறாள்... எப்படி எல்லா பொறுப்புகளையும் சமாளிக்கிறாள் என்று எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் வரையில் எந்தப் பிரச்னைகளையும் கொண்டு வந்ததேயில்லை அவள். இத்தனைக்கும் அவளும் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பொறுப்பான வேலையில் இருக்கிறாள்.

இந்த பொது மூடலுக்குப் பிறகு, அவளும் வீட்டிலிருந்தபடிதான் வேலை செய்கிறாள். வீட்டு உதவிக்கு வரும் பெண்மணியையும் பாதுகாப்பு கருதி வர வேண்டாம் என்று சொல்லியிருந்த நிலையில், வீட்டைச் சுத்தம் செய்வது, குழந்தைகளைக் குளிப்பாட்டுவது, உணவு கொடுப்பது, மற்ற விஷயங்களை கவனிப்பது, சமைப்பது, கணவனின் தேவைகளையும் கவனிப்பது என்று எப்படி காலையிலிருந்து இரவு படுக்கும்வரை அவளால் அஷ்டாவதானம் செய்ய முடிகிறது.

ஒரு விநாடிகூட அவள் எதற்கும் சலித்துக் கொண்டு பார்த்ததில்லையே. மிஞ்சிப்போனால் இரண்டு மணிநேரம் ஆகியிருக்குமா? அவனால் இந்தச் சூழலை சமாளிக்க முடியவில்லை. வீட்டிலிருந்தபடியே வெறும் அலுவலக வேலை மட்டும் பார்த்துக்கொண்டிருந்ததற்கே அடிக்கடி தலைவலி, உடல்வலி என்று படுத்துக் கொண்டு `கொஞ்சம் தைலம் தேய்த்துவிடு நளினி' என்பான்.

`உன் இஷ்டத்துக்கு ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கப் போறல்ல? இன்னிக்கு சொல்றேன் எழுதி வெச்சுக்க. இந்தக் காதல் கீதல் எல்லாம் மோகம் முப்பதுநாள் கதையாத் தான் போவும். படிச்ச பொண்ணுன்ற. ஒருநாள் இல்ல ஒருநாள் உன் தலையில ஏறி உக்காருவா பாரு. அன்னிக்குத் தெரியும் இந்த அம்மாவோட அருமை. சமையக் கட்டுன்னா என்னன்னு தெரியுமா அவளுக்கு? கேட்டா ஏன் ஆம்பளைங்க சமைக்கக் கூடாதான்னு பெண்ணுரிமை பேசுவாங்க. நான் இவ்ளோ சொல்லியும் உன்மேல நீயே மண்ணை வாரிப் போட்டுக்குவேன்னு அடம்பிடிச்சா என்னால ஒண்ணும் சொல்ல முடியாது. எப்டியோ போ. இனி என் முகத்துல முழிக்காதே. எதுக்கும் என்னைக் கூப்பிடாதே. உங்கப்பா இருந்திருந்தா உன் இஷ்டத்துக்கு ஆடுவதற்கு விடுவார்ங்கற? அம்மான்னா உனக்கு கிள்ளுக்கீரை ஆயிட்டேன் இல்ல...'

அம்மா இப்படியெல்லாம் ஆரூடம் சொன்னாலும், நளினி என்னவோ அதற்கு நேர்மாறாகவே இருந்தாள். இந்த ஒன்பது வருடங்களில் அவனுக்கு சின்ன கஷ்டம்கூடத் தராமல் எல்லா வற்றையும் அவளே பார்த்துக் கொண்டாள். `நான் மட்டும்தான் எல்லாவற்றையும் செய்யணுமா, நீ எதுவும் செய்யக் கூடாதா' என்று ஒருமுறைகூட அவனிடம் கேட்ட தில்லை.

வலி - சிறுகதை

நளினியைப் பற்றி அம்மாவுக்குப் புரிய வைக்க எத்தனையோ முறை முயன்றும், அம்மா பிடிகொடுத்துப் பேசவேயில்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று அடமாக இருந்தாள்.

பத்து நிமிட நடைதூரத்தில்தான் இருக்கிறாள். அவனைப் பற்றிய தகவல்கள் எல்லாம் அவள் காதுக்கு போகாமலிருக்காது. ஆனாலும், கர்ப்பவதியாக நளினி கஷ்டப்பட்ட போதும் எட்டிப்பார்க்கவில்லை. இவர்களையும் வீட்டுக்கு வர அனுமதிக்கவில்லை. வளைகாப்பு, சீமந்தம் எல்லாமே நண்பர்களின் உதவியோடுதான். ஏற்கெனவே தந்தையற்ற நளினியின் அம்மாவும் அவள் படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த முதல்நாளே மாரடைப்பில் காலமானது துரதிர்ஷ்டம். அன்றி லிருந்து நளினி தனியாகத்தான் இருந்தாள். எங்கெங்கோ இருந்த உறவுகள்கூட தொடர்பில் இல்லை. அதன் பின்னர்தான் ஒரு நண்பரின் வீட்டு விசேஷத்தில் அவர்கள் சந்தித்ததும் காதல் கொண்டதும், திருமணம் செய்ய முடிவெடுத்ததும். ஆனால், அம்மா சம்மதிக்கவில்லை. அதற்கு அவள் சொன்ன முதல் காரணம், `யாருமற்றவள்'. இரண்டாவது காரணம், `படித்தவள் யாரையும் மதிக்க மாட்டாள்'. அவன் தன் காதலில் உறுதியாக இருந்தான். நளினி பலமுறை சொன்னாள்.

``நான் பேசுகிறேன் உன் அம்மா வோடு. என்னை நேரில் பார்த்து சில நாள்கள் பழகினால் தன் அபிப் ராயங்களை மாற்றிக்கொள்வார். எனக்கு நன்றாக சமைக்கத் தெரியு மென்று சொல்கிறேன். என்னை அவருக்குப் பிடித்துப் போகும். அவர் மனம் மாறும்வரை நாம் சற்று பொறுமையாக இருப்போம்”.

ஆனால், விஷ்வா சம்மதிக்க வில்லை. அம்மாவைப்பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவள் சொற்படிதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்கிற குணம். அண்ணன்கள் இருவருக்கும்கூட அவள் விருப்பப்படிதான் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். அவள் சொற்படி கேட்டு நடந்தால் அன்பை அருவியாகப் பொழிவாள். அன்பு எவ்வளவு இருக்குமோ அதற்குக் குறையாமல் சர்வாதிகாரப் போக்கும் கொண்டவள். நாக்கில் பச்சை மிளகாயை வைத்திருப்பது போல்தான் சுருக் சுருக்கென்று பேசுவாள். அப்படிப்பட்டவள் நளினியை அவதூறாகப் பேசி காயப்படுத்திவிடுவாளோ என்று அஞ்சினான். திருமணமாகிவிட்டால் தானாக கோபம் தணிந்துவிடும். நீர் அடித்து நீர் விலகாது என நினைத்தான். ஆனால், அம்மா நீராக இல்லை. பாறையாக இருந்தாள். வறட்டு வைராக்கியம் அவளுக்குள் மண்டிக்கிடந்தது. தாய்ப்பாசம் என்பதெல்லாம் கேள்விக்குரிய தாயிற்று. அவளை மீறி உடன் பிறந்தவர்களும் அவனோடு தொடர்புகொள்ளத் தயங்கினர். யாரும் அவனை எந்த விசேஷத்துக்கும் அழைப்பதில்லை. அந்த அளவுக்கு எமோஷனல் பிளாக் மெயில் செய்து வைத்திருக்கிறாள் அம்மா.

நளினியும் பாவம் ஒவ்வொரு பண்டிகை, நாள்கிழமையன்றும் உங்கம்மாவோட பேசுங்களேன். அவங்களைக் `கூட்டிட்டு வாங்க' என்பாள். அவன் முயற்சிகள் வீணாயின.

விஷ்வா பெருமூச்சுவிட்டவாறு எழுந்தான். குழந்தைகளுக்குப் பசிக்கும். ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்யலாமா என்று தேடினான். குழந்தைகள் சாப்பிடும் வகையில் மூவருக்கும் தயிர்சாதம் வரவழைத்தான். அவர்களுக்கும் கொடுத்து தானும் சாப்பிட்டான்.

நளினி எப்படியிருக்கிறாள் என்று கேட்டு டாக்டருக்கு மெசேஜ் அனுப்பினான். அவர் பிஸியாக இருந்தார் போலும். மெசேஜைப் பார்க்கவில்லை.

குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆளிருந்தால், மருத்துவ மனைக்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம். என்ன செய்ய?

அவன் மருத்துவமனைக்கே போன் செய்து நளினியைப்பற்றி விசாரித்தான். `டாக்டருக்கு கனெக்ட் பண்றேன் சார்' என்றாள் வரவேற்பறை பெண்.

சில நிமிடங்களில் டாக்டர் லைனில் வந்தார். ``நானே உங்களுக்கு பண்ணணும்னு நினைச்சேன் விஷ்வா. ஸ்பெஷலிஸ்ட் வந்து பார்த்தார். சர்ஜரியில்லாம மெடிசன்லயே முயற்சி செய்து பார்க்கலாம்னு சொல்லி யிருக்கார். மெடிசன்ஸ் பிரிஸ்கிரைப் பண்ணியிருக்கார். ஊசி போட்டதால வலியில்லை. காலை உணவு சாப்பிட்டங்க. முதல் டோஸ் மெடிசன்ஸ் கொடுத்திருக்கோம். நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடறோம். மூணு வாரம் கழிச்சு மீண்டும் டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம். ஒருவேளை மெடிசன்ஸ்ல அந்த பெரிய ஸ்டோன் உடையலைன்னா அப்புறமா சர்ஜரி பத்தி யோசிக்கலாம்னு சொல்லியிருக்கார். அநேகமா சர்ஜரிக்கு அவசியம் ஏற்படாதுன்னு நம்பிக்கை கொடுத்திருக்கார். கவலைப்படாதீங்க.”

``தேங்க்ஸ் டாக்டர். நாளைக்கு எத்தனை மணிக்கு டிஸ்சார்ஜ் செய்வீங்க?”

``மதியம் இரண்டு மணிக்கு மேல வாங்க...”

விஷ்வா போனை வைத்தான். தலைவலிப்பது போலிருந்தது. குழந்தைகள் தூங்கிப் போயிருந்தனர். இப்போதைக்கு எழுந்திருக்க மாட்டார்கள் எனத்தோன்றியது. போர்வையால் போர்த்திவிட்டு தன் அறைக்கு வந்து படுத்தான்.

அவன் செய்தது தவறாகவே இருந்தாலும்கூட  ஒன்பது வருடங்களாகியும் அம்மா ஏன் அவனை மன்னிக்க மறுக்கிறாள் என்று புரியவில்லை. குழந்தைகளைக்கூட பார்க்க மாட்டேன் என எதற்கு இவ்வளவு வைராக்கியம் என்று யோசித்தபடியே தூங்கிப்போனான்.

நளினியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்து வந்தாயிற்று. `தினம் வாழைத்தண்டு, சாப்பிடுங்க, நிறைய தண்ணீர் குடியுங்க' என்று அறிவுறுத்தியிருந்தார் டாக்டர்.

வலி ஏதுமின்றி உற்சாகமாக இருந்தாள் நளினி. வந்ததுமே வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள். விஷ்வா அவளை இழுத்து வந்து கட்டிலில் அமர வைத்தான்.

``எனக்கே தெரியாம நான் நிறைய தவறுகள் செய்திருக்கேன். ஸாரி நளினி. உன்னுடைய வேலைச்சுமையைக் கொஞ்சம்கூட நான் குறைக்கலை. வீட்டு வேலைகளை நானும் பகிர்ந்துட்டிருக்கணும். எல்லாத்தையும் உன் தலையில கட்டிட்டு நான் பாட்டுக்கு ஏதோ லாட்ஜில இருக்கறதுபோல இந்த வீட்டில இருந்திருக்கேன். நீயாவது, `விஷ்வா இதைச் செய், அதைச் செய்'னு எங்கிட்ட சொல்லியிருக்கலாம் இல்லையா?”

நளினி புன்னகைத்தாள். ``பீரியட்ஸ் சமயங்கள்ல உங்கிட்ட ஏதாவது வேலை சொல்லலாம் போலதான் தோணும் விஷ்வா. ஆனா, உங்கம்மா சொன்னதா நீ எங்கிட்ட சொன்னது என் நினைவுக்கு வரும். ரொம்ப இயல்பா நான் உங்கிட்ட ஏதாவது வேலை சொன்னாக்கூட, உனக்கு உங்கம்மா சொன்னது சரிதான்னு தோண ஆரம்பிச்சுட்டா? அல்ப விஷயத்துக்காக உன்னை கஷ்டப் படுத்தவோ, நமக்குள்ள சின்ன மனவருத்தம் ஏற்படுறதையோ நான் விரும்பலை. அதேநேரம் நம்ம வீட்டு வேலைகளைச் செய்றதில எனக்கு எப்பவுமே அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டதில்லை. நீயே விருப்பப்பட்டு வீட்டு வேலைகளைப் பகிர்ந்துக்கறது வேற, நான் சொல்லிச் செய்யுறது வேறல்லவா?”

``இனிமேல் பார். நீ வேற ஒரு விஷ்வாவைப் பார்க்கப்போற”

``அப்பறம் விஷ்வா... நேத்து டாக்டர் ஒரு விஷயம் சொன்னார். உன்கிட்ட சொல்ல யோசனையா இருந்துச்சாம். அதனால எங்கிட்ட சொன்னார். உங்கம்மாவுக்கு எப்படியோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்காம். அண்ணன்கள் ரெண்டு பேரும் வெளியூரில இருக்காங்க. டாக்டர் இவங்களை வீட்டிலயே தனிமைப்படுத்திக்கச் சொல்லியிருக்காங்க போலிருக்கு. நம்ம டாக்டர்தான் போன்ல பேசி மருந்தெல்லாம் அனுப்பியிருக்கார். ஹெல்ப்புக்கு யாருமில்லாம இருக்காங்களேன்னு கவலையா இருக்கு. யாரும் பக்கத்திலிருந்து உதவவும் முடியாது.”

``ஓ... அதான் நான் பேசினதும் போனை கட் பண்ணிட்டாங்களா? ஒருவார்த்தை எங்கிட்ட சொல்லக் கூடாதா? இப்பக்கூட எங்கிட்ட எந்த உதவியும் கேட்கக்கூடாதுன்னு வைராக்கியமா இருந்தா என்ன செய்ய?”

``நீ ஒண்ணும் செய்ய வேண்டாம். உனக்கு அவங்க குணம் தெரியாதா? கஷ்டத்திலும் தன்னோட தன் மானத்தை விட்டுடாம வைராக் கியமா இருக்காங்க பாரு. இப்பதான் அவங்க மேல என் மரியாதை கூடுது. நான் மூணு வேளையும் சத்துள்ள உணவா சமைச்சுத்தரேன். அதோட, கஷாயம், ஜூஸ் எல்லாமும். அதை யெல்லாம் டாக்டர் அனுப்பினதா, ஆன்லைன் மூலம் மூணு வேளையும் அவங்களுக்கு அனுப்பணும். நான் டாக்டர்கிட்ட இதுபத்தி பேசிட் டேன். அவரும் நல்ல ஐடியான்னு சொன்னார். அவங்ககிட்ட தான் அனுப்புறதா சொல்லிடறேன்னார். நாமதான் அனுப்பினோம்னு அவங்களுக்குக் கடைசிவரை தெரியக் கூடாதுன்னு டாக்டர்கிட்ட சொல்லியிருக்கேன்.

அவங்களுக்கு நம்பமேல ஆயிரம் கோபம் இருக்கலாம் விஷ்வா. ஆனா, நமக்கு அவங்க மேல எந்தக் கோபமும் வருத்தமும் கிடையாது. ஒருவிதத்தில என்னோட வலிகூட நல்லதுக்குதான்னு தோணுது. இல்லாட்டி நமக்கு எதுவும் தெரிஞ்சிருக்காது. இந்த இக்கட்டான நேரத்துல அவங்களை அம்போன்னு விட்டுடக் கூடாது. அவங்க நல்ல படியா குணமாகி எப்பவும்போல வைராக்கியமாகவே இருக்கட்டும். நானும் எப்பவும்போல அவங்க கோபத்தையே ஆசீர்வாதமா நினைச்சுக்கறேன். என்னிக்காவது ஒருநாள் அவங்க மனசும் மாறும்னு நம்புவோம்...”

சில விநாடிகள் அவளை உற்றுப் பார்த்த விஷ்வா, அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டபோது, அவன் கண்களிலிருந்து இரு சொட்டு நீர் அவள் கன்னத்தில் விழுந்தது.