Published:Updated:

வேகம் - சிறுகதை

வேகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வேகம் - சிறுகதை

- டாக்டர் எஸ்.அகிலாண்டபாரதி

வேகம் - சிறுகதை

- டாக்டர் எஸ்.அகிலாண்டபாரதி

Published:Updated:
வேகம் - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
வேகம் - சிறுகதை

வேகமாக, வெகுவேகமாக எல்லைக்கோட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தாள் சந்தியா. ``சந்தியா... கமான் கமான்! அப் அப்!’’ என்ற குரல்கள் அரங்கம் எங்கும் ஒலிக்க, எல்லைக்கோடு மிகமிக அருகே தெரிந்தது. அவள் தாண்டி ஓட வேண்டிய சிவப்பு ரிப்பனும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தது. திரும்பிப் பார்த்தாள் சந்தியா. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரும் இல்லை. பிற போட்டியாளர்கள் நன்றாகவே பின்தங்கியிருந்தார்கள்.

இதோ வந்துவிட்டது அந்தச் சிவப்பு ரிப்பன். அதைத் தொடப்போகிறேன், அதன்பின் வெற்றிக்கோப்பை எனக்கே என்று எட்டு வைத்த விநாடி அவளுடைய ஓடுதளம் மட்டும் நீண்டுகொண்டே சென்றது. சந்தியா மட்டும் ஓடிக்கொண்டிருக்க, போட்டி எப்போதோ முடிந்திருந்தது. மற்ற வீராங்கனைகளுக்குள் மூன்று வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டார்கள். உடலிலுள்ள அத்தனை சக்தியையும் திரட்டி ஓடிக்கொண்டே இருந்தாள் சந்தியா. வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுத்தது. நாக்கு தண்ணீருக்காய்த் தவித்தது. மூச்சிரைப்பு அதிகரித்த சூழலில் விதிர்விதிர்த்து தூக்கத்திலிருந்து எழுந்து அமர்ந்தாள் சந்தியா.

முழுதாக ஒரு நிமிடம் ஆனது அவளுடைய சுற்றுப்புறம் உணர்ந்து ஆசுவாசம் அடைவதற்கு. சமையலறையிலிருந்து குக்கரின் சத்தம். `சந்தியா, உன்னுடைய வீடுதான் இது. எப்போதும் வரும் கனவுதான் இது. ரிலாக்ஸ்!' என்று அவளே அவளுக்குக் கூறிக்கொண்டாள்.

மெல்ல இறங்கி முடியைக் கொண்டை போட்டுக்கொண்டவள் படுக்கைக்குக் கீழே துழாவி தன் வலது காலில் முட்டுக்குக் கீழ் பொருத்த வேண்டிய கட்டைக் காலை எடுத்து மாட்டினாள். வழக்கத்தைவிட மெதுவாகவே அன்றைய காலைக் கடன்களை முடித்தாள். `மெதுவாப் போடி, எதுக்கெடுத்தாலும் வேகம் வேகம்! விழுந்து கிழுந்து வச்சிடாத!' என்று அடிக்கடி கடிந்துகொள்ளும் அம்மாவுக்கே இந்தப் பெண் பழையபடி பரபரப்பாய் இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது.

கிளம்பி வெளியில் `சிட் அவுட்’டுக்கு வந்தவளை வழக்கமான காட்சி வரவேற்றது. அப்பாவின் கையில் செய்தித்தாள். மேட்ரிமோனியல் பக்கத்தைத்தான் நிச்சயம் வைத்திருப்பார். சிறுவயதில் செய்தித்தாளை எடுத்தவுடன் தானாக கடைசிப் பக்கத்தைப் பிரித்து, கண்கள் விளையாட்டுச் செய்திகளில் போய் நிலைக்கும் சந்தியாவிற்கு. இப்போது அப்படியில்லை. தனக்கு விளையாட்டுச் செய்தி போல் அவருக்கு மணமாலைப் பகுதி என்று எண்ணியபடி காத்துக்கொண்டிருந்த ஆட்டோவில் ஏறினாள் சந்தியா.

``ஹாய் சந்தியா, குட்மார்னிங்! ஒரு ரெண்டு நிமிஷம் பேசலாமா, ஃப்ரீயா இருக்கியா?’’ என்று கேட்டார் டாக்டர் சுப்பிரமணியன். ஆட்டோவின் இரைச்சல் டிராபிக் சத்தம் எல்லாவற்றையும் தாண்டி ஆதுரத்துடன் போனில் வந்தது அவரது குரல்.

``சொல்லுங்க அங்கிள்!’’

``இன்னிக்கு ஒரு ஹாஃப் அன் அவர் ஃப்ரீ பண்ணிக்க முடியுமா? வெளியூர் பேஷன்ட், உன்னைப் பாத்துட்டுத்தான் போகணும்னு நிக்கிறாங்க’’ நாற்பது வருட அனுபவமுள்ள நகரின் பிரபல மனநல மருத்துவர், ஒரு வளர்ந்து வரும் சைக்காலஜிஸ்டான தன்னிடம் இப்படிக் கேட்பது தர்ம சங்கடத்தைத் தந்தது சந்தியாவிற்கு.

வேகம் - சிறுகதை

``தாராளமா வரச்சொல்லுங்க. ஒரு மணிக்கு ஓகே வா?’’

``டபுள் ஓகே மா. அப்புறம் ட்ரீம் கேர்ளுக்கு இன்னிக்கு என்ன ட்ரீம் வந்துச்சு?’’

``ஏதேதோ வந்துச்சு டாக்டர்! நல்லாத் தூங்கிட்டேன்.’’

``தட்ஸ் குட்!’’ என்று அவர் அழைப்பைத் துண்டிக்க, சந்தியாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி வந்து ஒட்டிக்கொண்டது.

ஒன்பதாம் வகுப்பு மாணவியாக இதே டாக்டரின் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்தது நேற்றுப்போல் இருந்தது. ``இன்னும் படுக்கையை நனைக்கிறா!’’ என்று இவளது பிரச்னையை டாக்டரிடம் அம்மா கூறிக்கொண்டிருந்தாள்.

``யூ நோ சம்திங்? நான் காலேஜ் படிக்கிறப்ப கூட பெட்ல பாத்ரூம் போயிருக்கேன்’’ என்று சொல்லி ஒரு கள்ளச்சிரிப்புச் சிரித்தார் டாக்டர். அதன்பின்தான் சந்தியா அவரை நிமிர்ந்தே பார்த்தாள். அவளது பார்வை மேஜையில் கிடந்த கிரிக்கெட் பேட் வடிவிலான கீ செயினில் இருக்க, ``இது புடிச்சிருக்கா?’’ என்றவர் சாவியைக் கழற்றிவிட்டு அதை சந்தியாவிற்கே கொடுத்துவிட்டார்.

அன்று ஆரம்பித்ததுதான் அவர்களின் பந்தம். ``ஸ்போர்ட்ஸ் பிடிக்கும்போல இருக்கே! என்னல்லாம் விளையாடுவீங்க?’’ என்றவரிடம் தனக்குப் பிடித்தது, பிடிக்காதது, நிஜம் போலவே அடிக்கடி வந்து தன்னை மூழ்கடிக்கும் கனவுகள், அவற்றின் தாக்கத்தில் சிறுநீர் கழிப்பது எல்லாவற்றையும் கூறி முடித்தாள்.

``இன்ட்ரஸ்டிங்! சரியான ட்ரீம் கேர்ள்! உனக்கு நிறைய எனர்ஜி இருக்கு... ஆனா உன் ஆர்வத்துக்குத் தீனி போட இவங்களுக்குத் தெரியல. பேசாம ஸ்போர்ட்ஸ்ல சேர்ந்துடு’’ புன்னகையுடன் கூறியவர், நல்ல பயிற்சியாளரிடமும் சேர்த்துவிட்டார். அப்படித்தான் சந்தியாவின் விளையாட்டுப் பயணம் ஆரம்பித்தது. அடுத்த நான்கு ஆண்டுகளில் வெற்றி மேல் வெற்றியைக் குவித்தாள். `சந்தியா வராளா... அப்ப நான் பெயர் கொடுக்கல' என்று தடகளப் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டவர்கள் அதிகம்.

பழைய நினைவுகள் தந்த புன்னகையுடன் தன் சின்ன ஆபீசுக்குள் நுழைந்தவளை ஜானகி, ``மேடம், பெரிய ஸ்மைலோட வர்றீங்க... இன்னைக்கு அந்த ஆகாஷ் வர்றான். அதனால எனர்ஜியை சேவ் பண்ணிக்குங்க. இப்ப ப்ரீத்திகா வெயிட்டிங்’’ என்றாள்.

``ஆன்ட்டி, உங்களுக்கு இன்னைக்கு நான் ஹாண்ட்ரைட்டிங் நோட் கொண்டு வந்திருக்கேன். நாம இன்னிக்கி ஸ்டாண்டிங் லைன் ஸ்லீபிங் லைன் படிக்கப் போறோம். ஓகேவா?’’ என்று நாற்பது பக்க நோட்டை சந்தியாவிடம் நீட்டிய ப்ரீத்திகா அவளின் விருப்பமான 'ஸ்டார் கிளையன்ட்.' இதே ப்ரீத்திகாதான், ‘யாரிடமும் பேசமாட்டேன் என்கிறாள், கவனம் இல்லை, எழுத்துகளை மாற்றி எழுதுகிறாள்’ என்று கொண்டுவரப்பட்டவள். ``எவ்வளவோ நல்லா ஆயிட்டா மேடம்! இனிமே ப்ரீத்தி வாயை மூடுறதுக்கு ட்ரெயினிங் எடுக்கணும் போல!’’ சிரிப்புடன் சொல்லியபடி செல்கிறாள் ப்ரீத்திகாவின் அம்மா.

தன் சொந்த மனமாற்றத்திற்கென ஆரம்பிக்கும் பயிற்சிகளும் கல்வியும் அவள் வாழ்வின் அங்கமாகவே மாறிவிடுவது சந்தியாவிற்கு வியப்பையே தந்திருக்கிறது. தொல்லை தந்த கனவுகளுக்கும், படுக்கையை நனைத்ததற்கும் தடகளப்பயிற்சி தீர்வாக இருந்தது. அதில் வெற்றி மேல் வெற்றி வந்து சேர்ந்த நேரம், விபத்தில் காலை இழக்க நேரிட, அந்த மன உளைச்சலுக்கு மருந்தாக வாசிப்பைத் தேர்ந்தெடுத்திருந்தாள். அப்போதும் மணி டாக்டர்தான், ``சைக்காலஜில உனக்கு நல்ல இன்ட்ரஸ்ட்மா! கரஸ்பாண்டன்ஸ்ல சைக்காலஜி படி’’ என்று மடைமாற்றம் செய்தவர்.

அடுத்து கிளையன்ட் ஆகாஷ் என்பது கொஞ்சம் அயர்வைத்தான் தந்தது. மனோதத்துவ நிபுணரிடம் தன் மொத்த வாழ்வையும் அப்படியே கொட்டிவிடுபவர்கள் சிலர், வாயைத் திறக்காதவர்கள் சிலர். ஆகாஷ் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் இருந்தான். `என்னால எதையுமே மறக்க முடியல என்பதுதான் என் தலையாய பெரிய பிரச்னை’ என்று மீண்டும் மீண்டும் சொல்வான். ஆனால் அதன் ஆணிவேர் என்ன என்பதற்குச் சிறிய துப்புகூடக் கொடுக்க மாட்டான். நான்காவது முறையாக வருகிறான். ``இன்னும் ரெண்டு சிட்டிங்ல சரி பண்ணிட்டீங்கன்னா நல்லது. எவ்வளவு ஃபீஸ் வேணுமோ வாங்கிக்கோங்க’’ என்று இவளுக்காக ஒரு இலக்கை நிர்ணயித்துவிட்டுப் போயிருந்தான்.

வேகம் - சிறுகதை

`உனக்கு ட்ரீட்மென்ட் கொடுக்க என்னால முடியாது. இதுவரை கொடுத்த பீஸை வாங்கிக்கோ' என்று முகத்தில் அடித்த மாதிரி சொல்லிவிடலாமா என்று தோன்றும் சந்தியாவிற்கு. தன்னிடம் ஆலோசனைக்கு வரும் வேறு யாரிடமும் இவ்வளவு கோபம் வராது.

`கூல் சந்தியா கூல்!' என்று தனக்குத்தானே கூறிக்கொண்டாள். அருகில் ஒலித்த இசையில் சற்றே அமைதிப்பட்டிருந்த மனது, உள்ளே நுழைந்த ஆகாஷைப் பார்த்தவுடன் அதிர்ந்துபோனது.

அவன் இடது முன்கையில் புதிதாக ஒரு கட்டு முளைத்திருந்தது. ``என்னாச்சு, மறுபடியும் கையைக் கிழிச்சுக்கிட்டீங்களா?’’ என்று சந்தியா கேட்க, ``அதான் சொன்னேனே மேடம், என்னால் விஷயங்களை மறக்கவே முடியல... இப்படி கையைக் கிழிச்சாலாவது வலியில் மறக்காதான்னு நினைக்கிறேன். எல்லாத்துலயும் முதல்ல வந்துதான் எனக்குப் பழக்கம். தோத்ததே கிடையாது! நெனச்சதெல்லாம் கிடைச்சிருக்கு. இப்ப என் கல்யாணத்துக்கு வரன் பாக்குறாங்க.பொண்ணே கிடைக்கலை. அந்த ஒரு நாள் அந்த டிராபிக் இன்ஸ்பெக்டர் என் மேல கேஸ் போடாம இருந்திருந்தா இன்னிக்கி நான் வேற லெவல்ல செட்டிலாகியிருப்பேன்’’ என்றபடி தன் வலது கையால் மேஜையில் குத்தினான்.

நல்லவேளையாக மேஜைமேல் இருந்த கண்ணாடி உடையவில்லை. ``உங்களோட கஷ்டங்களை யார்கிட்டயாவது மனம்விட்டுப் பேசுங்க... அப்ஜெக்‌ஷன் இல்லைன்னா என்கிட்டகூடப் பேசலாம்.’’ ஏற்கெனவே பலமுறை கூறியதையே மீண்டும் சொன்னாள் சந்தியா.

சற்று நேரம் தன் இடது கையையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆகாஷ். மணிக்கட்டில் தொடங்கி சிறிதும் பெரிதுமாகப் பல தழும்புகள். ஒரு மாதம், இரண்டு மாதம், ஆறு மாதம் என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு வயதை நிர்ணயிக்கலாம். சந்தியாவிடம் ஆலோசனைக்கு வரத் தொடங்கியதிலிருந்து கையைக் கிழித்துக்கொள்ளவில்லை.

``கத்தி, பிளேடு மாதிரி ஷார்ப்பா எதுவும் பக்கத்துல வசுக்காதீங்கன்னு சொன்னேனே. உங்க அம்மாவை இன்னிக்காவது கூட்டிட்டு வந்திருக்கலாமே’’ என்று சந்தியா கேட்டாள்.

``ஒரு விஷயம் புரிஞ்சுக்கோங்க நீங்க. அப்புறம் பிளேடை ஒளிச்சு வச்சா கிழிச்சுக்க மாட்டேன் அப்படின்னு எல்லாம் நம்பாதீங்க. ஐ அம் அன் அடல்ட்! எனக்கு என்ன பண்ணணும்னு தெரியும். நான் ஒண்ணும் இதை சூசைட் அட்டம்ப்ட்டா பண்ணல. சொன்னேனே, இந்த வலியால்தான் அந்த விஷயத்தை மறக்க முடியும்.’’

``அப்படி என்ன விஷயம்? அது தெரியாம நான் எதுவுமே செய்ய முடியாது’’ என்றாள் சந்தியா. ஆனால் அவன் பேசப்பேச வாணவேடிக்கை போல் பல வகையான எண்ணங்களும் உணர்ச்சிகளும் அவள் மனதில் வெடித்துச் சிதறி அவளை மூழ்கடிக்க, பேச்சு மட்டும் ரீங்காரித்தது.

``ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி பைக் ரேஸர் ஆகாஷ்னா எல்லாத்துக்கும் தெரியும். அவ்வளவு ஃபேமஸ் நானு... வேகம் வேகம்... அதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. எத்தனை பேர் வந்தாலும் நான்தான் வின்னர். வழக்கமா ரேஸ் ட்ராக்கில் விளையாடுற ரேஸ் கேம் போரடிச்சுப் போய் டிராபிக் இருக்கிற மெயின் ரோட்ல போட்டி வச்சோம். செம த்ரில்லிங்கா இருக்கும்... எதுத்தாப்புல, பக்கத்துல வர்ற வண்டிகளை சமாளிச்சு ஜெயிச்சு வருவேன் பாருங்க! மெதுவா இயங்குற மொத்த உலகத்துக்கும் நடுவுல எங்களுக்கே எங்களுக்கான தனி உலகம். அதுல நான் ராஜா! அப்படி இருக்கறப்ப ஓவர் ஸ்பீடு கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டார் டிராபிக் இன்ஸ்பெக்டர். மூணு மாசம் ஜெயில்ல இருந்தேன். வீட்லயும் ரேஸ் பைக்குக்குப் பணம் தரலை. வெறித்தனமா வேலை பார்த்து காசு சேர்த்து இன்னொரு பைக் வாங்கத் தயாரானேன். தற்கொலை அது இதுன்னு டிராமா போட்டு அம்மா தடுத்துட்டாங்க.

அந்த வாழ்க்கையை ரொம்ப மிஸ் பண்றேன். வெற்றி, கைத்தட்டல் அதெல்லாம் எனக்கு இன்னும் வேணும். அதெல்லாம் இல்லைங்குற உணர்வு வரும்போது கையைக் கிழிச்சுக்குறேன். போன தடவைதான் எசகுபிசகா ஆகி ஹாஸ்பிடலுக்குப் போகிற மாதிரி ஆயிடுச்சு. அந்த லூசு டாக்டர் என்னை லூசுன்னு முடிவு பண்ணி இங்கே அனுப்பிட்டார். திரும்ப ரேஸ் பைக், போட்டிகள் இதுபோதும் எனக்கு. அம்மாவோட ஆவேசத் தேடலால் ஒருத்தன் பொண்ணு தரேன்னு சொன்னான். ஆனா என் கையில இருக்குற தழும்பைப் பார்த்துட்டு அந்தப் பொண்ணு வேண்டாம்னு சொல்லிட்டா! வாட் எ ஷேம்?’’ என்று ஆவேசமாகக் கூறியவன் மீண்டும் மேஜையைக் குத்தப் பார்த்தான்.

வழக்கமாக இப்படிப்பட்ட செய்கையில் பதறிவிடுவாள் சந்தியா. இந்த முறை கடும்யோசனையில் ஆழ்ந்திருந்தவள், ``ரிலாக்ஸ் பண்ணிக்கோங்க. டேப்லட்ஸ் போடுங்க. அடுத்த அப்பாயின்மென்ட் எப்பன்னு செக்ரட்டரி சொல்லுவாங்க, வரணும்னா வாங்க’’ என்று கண்டிப்பான குரலில் கூறினாள்.

‘ யாரிடமும் சொல்லாத கதையை இவளிடம் கூறியிருக்கிறேன், எழுந்து போகச் சொல்கிறாளே’ என்று நினைத்த ஆகாஷ், அவளின் அழுத்தமான குரல் தந்த செய்தியால் எதுவும் பேசத் தோன்றாமல் எழுந்து சென்றான்.

அன்றைய மதியமும் சரி, அதன் பின் வந்த அடுத்த சில நாள்களிலும் சந்தியா தன் இயல்பிலேயே இல்லை. சம்பந்தா சம்பந்தமின்றி என்னென்னவோ செய்தாள். அலைபேசியைத் திறந்தாள், வாட்ஸ் அப்பில் வந்த செய்திகளை அரைகுறையாக வாசித்தாள், முகநூலுக்குப் போனாள், அது மூன்று வருடத்திற்கு முந்தைய நிகழ்வொன்றை `மெமரீஸி'ல் காட்டியது. `ஜெய்ப்பூர் காலுடன் ஜெயித்துக் காட்டிய பெண்மணி' என்று இவள் பேட்டி ஒரு பெண்கள் பத்திரிகையில் வந்திருந்தது. மொபைலை அணைத்தாள்.

வேகம் - சிறுகதை

அன்றைய இரவில் செயற்கைக் கையுடன் சாதிக்கும் பெண்மணி, ஒற்றைக் கண்ணுடன் கலக்கும் பெண் என்றெல்லாம் தன் புகைப்படத்துடன் செய்தி வருவதாக விதம்விதமாகக் கனவுகள் வந்து பதறி விழித்தாள்.

ஆகாஷ் வரமாட்டான் என்று சந்தியா நினைத்திருக்க, ``மேடம், ஆகாஷ் நாளைக்கு அப்பாயின்மென்ட் கிடைக்குமான்னு கேட்கிறார்’’ என்று ஜானகி கூறியபோது மெலிதாக அதிர்ந்தாள்.

``என்ன மேடம், இவ்வளவு கஷ்டப்பட்டு என் கதையைச் சொன்னேன்... அட்வைஸ், ஆறுதல் எதுவும் பண்ணாம அனுப்பிட்டீங்க?’’ என்று கிண்டல் கலந்த தொனியில் கேட்டான் மறுநாள் வந்த ஆகாஷ்.

``சரி, சொல்லுங்க’’ என்றாள் சந்தியா.

``சொன்னேனே மேடம். பைக் ரேஸ் என்னோட பேஷன். அதை நான் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு இவங்க யாரு? என்னை யாரும் குறை சொல்றது எனக்குப் பிடிக்காது. சின்ன வயசுல வாத்தியார் அடிச்சது வலிக்கலை. அதுக்கு ஒரு பையன் சிரிச்சது இன்னும் வலிக்குது. ஒரு சின்ன விஷயம்கூட எனக்கு மறக்க மாட்டேங்குது’’ என்றான் ஆகாஷ்.

``அது எப்படிங்க எல்லா விஷயமும் மறக்காது? போன செவ்வாய்க் கிழமை காலையில் என்ன சாப்பிட்டீங்க?’’

``நான் நல்ல மார்க் வாங்கினது, வேலைக்கு ஆர்டர் கிடைச்சது எல்லாம் சின்னக் காட்சியா கொஞ்ச நேரம் மட்டும்தான் தோணுது. தொடர்ந்து நினைவுக்கு வர்றதில்லை. போலீஸ்ல பிடிபட்டது, கோர்ட்ல நின்னது, பைக் ஓட்ட முடியாமப் போனதெல்லாம்தான் என்னைக் கஷ்டப்படுத்திக்கிட்டே இருக்கு.’’

``எல்லாம் நன்மைக்கேன்னு நினைச்சுக்கோங்க. உங்க வேகத்தால, அலட்சியத்தால வேற யாராவது பாதிக்கப்பட்டிருக்கலாம் இல்லையா? அதை விட்டு வெளியே வாங்க’’ என்றாள் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி.

``அதை எப்படி மேடம் நீங்க சொல்லுவீங்க? காணாமல்போனது என்னோட கனவுதானே! என்னோட ஆசைதானே! அதைத் தூக்கிப் போடுன்னு நீங்க எப்படி சொல்லலாம்?’’ நாற்காலியைத் தள்ளி விட்டுவிட்டு ஆவேசமாக எழுந்தான் ஆகாஷ்.

``உட்காருங்க மிஸ்டர். உக்காருங்கன்னு சொல்றேன்ல!’’ அந்தக் குரலில் இருந்த ஆளுமையில், கண்டிப்பில் தன்னையும் அறியாமல் அமர்ந்தான்.

``நான் சொல்லக் கூடாதா? நான்தான் சொல்லுவேன், எனக்குத்தான் ரைட்ஸ் இருக்கு!’’ என்றாள் சந்தியா.

என்ன என்பதுபோல் ஆகாஷ் அவளை நிமிர்ந்து பார்க்க, மெல்ல எழுந்தவள் தன் கைத்தடியை ஊன்றி மேஜையைச் சுற்றிக்கொண்டு ஆகாஷ் இருக்கும் பகுதிக்கு வந்தாள்.

``எதுவுமே மறக்க முடியலன்னு சொல்றீங்களே! ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி செப்டம்பர் பத்தாம் தேதி, ஆர்.ஆர் நகர்ல உங்க பைக் மின்னல் வேகத்தில் ஒரு ஆட்டோவைக் கடந்த போது அது நிலைகுலைஞ்சு சடனா இடது பக்கம் சாஞ்சது நினைவிருக்கா? அந்த ஆட்டோ, ஓரமா சைக்கிள்ல போய்க்கிட்டு இருந்த அப்பாவி ஸ்கூல் பொண்ணு மேல இடிச்சது நினைவிருக்கா? ஸ்டேட் ரெக்கார்டு பிரேக் பண்ணிட்டு அடுத்ததா நேஷனல் கேம் செலக்‌ஷனுக்காக தன்னோட ஸ்போர்ட்ஸ் ஷூவையும் டிரஸ்ஸையும் எடுத்துக்கிட்டு நிறைய கனவுகளோட போய்க்கிட்டு இருந்த ஒரு பொண்ணோட கால் அந்த ஆக்சிடென்ட்ல முழுக்க சிதைஞ்சு போய் வெட்டி எடுக்க வேண்டியதாப்போச்சு. அது நினைவிருக்கா? இருக்காது! கடனுக்கு வாங்கின ஆட்டோ மோசமா அடிவாங்கினதைப் பார்த்து அழுதாரே அந்த ஆட்டோக்காரர், அதுவும் நினைவிருக்காது. ஏன்னா அதெல்லாம் உங்களுக்குத் தெரியவே தெரியாது.

உங்களோட செய்கைகளால் எவ்வளவோ பேர் நினைவுகளைத் தொலைக்க முடியாம வாழ்க்கையே வெறுத்து நடமாடிக்கிட்டிருப்பாங்க. ஆனா உங்களோட அல்பமான, தவறான ஆசை நிறைவேறாதது மட்டும்தான் உங்களுக்கு நினைவிருக்கும்னா, இது மனோதத்துவப் பிரச்னை இல்ல சார்... கொழுப்பு! முழுக்க முழுக்கக் கொழுப்பு! அன்னைக்கு ஆக்ஸிடென்ட்ல காலை இழந்தது நான்தான்!’’ என்றபடி தன் புடவையை லேசாக உயர்த்தித் தன் ஜெய்ப்பூர் காலைக் காட்டினாள்.

வேகம் - சிறுகதை

``கண்ணைத் திறந்து உங்களால பாதிக்கப்பட்டவங்களைப் பாருங்க, மனசைத் திறந்து யோசிங்க சார்! அதுக்கப்புறம் கவுன்சலிங் வாங்க, தீர்வு சொல்றேன்! நல்லவேளை, எனக்கு கிளையன்ட்டா வந்துட்டீங்க... அந்தக் காலகட்டத்துல எப்பவாவது என் கண்ணுல பட்டிருந்தீங்க... நான் ஒண்ணும் இதுமாதிரி பிளேடை எடுத்து என் கையைக் கிழிச்சுக்கிட்டு இருக்க மாட்டேன், உங்க மேல ஏறி மிதிச்சுக் கழுத்தை அறுத்திருப்பேன். அதுக்கு எனக்கு ஒத்தைக்கால் போதும்!’’ என்று கண்களில் ரௌத்திரம் வழியக் கூறியவள், தன் கைத்தடி உதவியுடன் வெளியேறினாள்.

``ஜானகி அக்கா, இவர்கிட்ட வாங்கின பீஸ் எல்லாத்தையும் ரிட்டன் பண்ணிடுங்க. இன்னும் ரெண்டு நாளுக்கு நோ அப்பாயின்மென்ட்!’’

``மனசு சரியில்லையா மேடம்?’’ என்ற ஜானகியிடம், ``ரொம்ப நாளைக்கப்புறம் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்க்கா!’’ என்றபடி, ஆட்டோவைத் தேடாமல் விறுவிறுவென்று வீட்டை நோக்கி நடந்தாள் சந்தியா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism