மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 13

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 13
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 13

சமுத்திரம், கொடிமரம் இரண்டு பேரின் வண்டிகளும் எதிரெதிர்த் திசையிலிருந்து கிளம்பி பர்லாந்துகளின் வீடுகளில் வந்து நின்றன.

“அவ்வளவு அவமானகரமானது பகையாளியிடம் உயிர்ப்பிச்சை கேட்பது.” - மூர்க்கர்கள்

கடா பாண்டி பீக்காட்டுப் பக்கம் குண்டுவீசிப் பழகுவதைப் பார்த்துவிட்ட பன்றிவிட்டை பொறுக்க வந்த சிறுவன், வேக வேகமாக ஓடிவந்து விஷயத்தைத் தன் அண்ணனிடம் சொன்னான். நொடிப் பொழுதுக்குள் அந்தச் செய்தி கொடிமரத்தின் ஆட்களிடையே தீயாகப் பரவியது.

“அந்தத் தாயோலி மவனப் பிடிச்சுக் கொண்டாந்து தெக்கால இருக்கும் உப்பளத்துல கட்டிவெச்சு தொலிய உரிங்கடா... அன்னைக்கி எம்மேல வெடி வீசுனப்பவே அவன அறுத்துப் போட்டுருக்கணும். விட்டது தப்பாப்போச்சு. அன்னிக்கி எக்கி நின்னு வீசுன குறி தப்பிப் போச்சுன்னு, இப்போ பொம்மை மேல வீசிப் பழகுதானோ... இனியும் அவன விட்டுவைக்கக் கூடாது... ச்சோலிய முடிச்சிப்புடுவோம்.” கொடிமரத்தின் கூட்டாளிகள் சின்ன பர்லாந்திடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு கடா பாண்டியைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவெடுத்தார்கள்.

அதேநேரம் சமுத்திரம் குரூஸ் அண்ணனிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 13

“கொடிமரத்தோட ஆட்களுக்கு விஷயம் தெரியுமான்னு தெரியல. அவன் கொடிமரம் கையில மாட்டுறதுக்குள்ள நாம இங்க கொண்டாந்துரணும். நம்ம பயலுகளவிட்டுத் தேடச் சொல்லுங்க. எப்படியும் அவன் வீட்டுக்குத்தான் வருவான். நம்ம ஆளுக நாலு பேர அவன் வீட்டுக்குள்ள போயி இருக்கச் சொல்லுங்க. அவன் அங்க வந்தா அணைச்சாப்ல தோணிக்குக் கொண்டுவந்துருங்க. எதுக்கும் சிலோன் ஆபீஸ் தெருப் பக்கம், பஸ் ஸ்டாண்டு பக்கம், மையவாடி பக்கம் போய் பாக்கச் சொல்லுங்க. அவன் சிநேகிதய்ங்க எவம் வீட்லயாவது குடிச்சுட்டு கிடக்கானா பாருங்க. லூர்தம்மாள்புரத்துல ஒரு புள்ள பின்னாடி சுத்திக்கிட்டுக் கிடந்தான். அந்த லெக்குல எங்குனயும் நிக்கானான்னு பாருங்க. இல்லன்னா சினிமா போஸ்டர் எங்குனயாவது ஒட்டியிருந்தா பராக்கு பாத்துட்டு நிப்பான். ஏதும் ஏசிடாம, அவன் மிரண்டுறாம பொத்துனாப்ல கூட்டிட்டு வந்துருங்க. நான் பெரியவர் வீடுவரைக்கும் போயிட்டு வாரேன். காலைல கஸ்டம்ஸ் ஆபீஸ் வரைக்கும் போகணும்னு சொன்னாரு...’’

சமுத்திரம், கொடிமரம் இரண்டு பேரின் வண்டிகளும் எதிரெதிர்த் திசையிலிருந்து கிளம்பி பர்லாந்துகளின் வீடுகளில் வந்து நின்றன. பெரிய பர்லாந்து குளித்து முடித்து, மேல்சட்டை மட்டும் அணியாமல் பனாமா சிகரெட் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அவருக்கு காலையிலேயே மூத்த கஸ்டம்ஸ் ஆபீஸர் ஒருவரைப் பார்க்கவேண்டியிருந்தது. சமுத்திரத்தைக் கூட அழைத்துச் செல்லலாமென ஆயத்தமாக இருந்தார். பெரிய பர்லாந்தின் மகள் அமலி சமுத்திரத்துக்கு காபி போட்டு எடுத்துவந்தாள்.

“அம்ம கேட்டா சாப்பிடுதீயளா..?”

“வேண்டாந்த்தா... ச்சோலி கிடக்கு. நீ சாப்பிட்டியா?’’

“ம்...”

ஜானுக்கு சமுத்திரத்தை மிகவும் பிடிக்குமென்பதால், எப்போது வந்தாலும் அமலி சமுத்திரத்திடம் அனுசரணையும் மரியாதையுமாகப் பேசுவாள்.

சிகரெட்டை அணைத்துவிட்டு, மேல் சட்டையைப் போட்டபடி, “கிளம்பலாமா?” என்று பெரிய பர்லாந்து கேட்டதும், சமுத்திரம் அமைதியாக இருந்தான்.

“ஏன்... ஏதும் பிரச்னையா?” என்று கேட்டபடியே சமுத்திரத்தைப் பார்த்தார்.

சமுத்திரம் ‘ஆமாம்...’ என்பதுபோல் தலையாட்டினான்.

“என்னாச்சு?”

“கருவக்காட்டுக்குள்ள உருண்ட எறிஞ்சு பாக்குறது நம்ம பாண்டிப் பயதான்போல. கொடிமரத்துக்கு நாள் குறிக்க இதப் பண்ணுதாம்னு நினைக்கேன். என்னைக்குன்னாலும் கொடிமரம் நம்மளப் போட்ருவான். அதுக்குள்ள முந்திக்கணும்னு நினைச்சிருப்பான்போல. பயலுக்கு முரட்டுத் தைரியம்தான். இவ்வளவு நாளா அந்தப் பக்கத்துல எவனோ செய்யுற வேலைன்னு நினைச்சோம். இப்போ விஷயமே வேறயா இருக்கு. இது கொடிமரத்தோட ஆளுங்க காதுக்குப் போயிருக்குமான்னு தெரியல.”

பெரிய பர்லாந்து எரிச்சல்பட்டார்.

“என்னத்துக்கு இந்த அவசரம்... இவருக்கு மட்டும்தான் உறுத்துதாமா... எங்குனயாவது கடல்ல கட்டி இறக்கிடப் போறானுங்க. ஆளப் பிடிச்சு இங்க கொண்டாந்து விடச் சொல்லு. ரெண்டு மூணு மாசம் நம்ம வீட்ல கிடந்து கஞ்சி குடிக்கட்டும். இப்போந்தான் ரெண்டு பேரக் காவு குடுத்த குற்ற உணர்ச்சில நான் கிடந்து சாகுதேன். அதுக்குள்ள இவம் வேற...”

வேகமாகச் சொல்லிவிட்டாலும் ஒருவித நப்பாசையுடன் பெரிய பர்லாந்து சமுத்திரத்திடம் கேட்டார்.

“ஏண்டே இந்தச் சின்னப் பொடியன் கொடிமரத்த சாச்சுருவானா... அத்தாம் பெரிய ஆளா அவன்..?’’

“சொல்ல முடியாது... எறங்கி வீசுனா வெடிக்கிற குண்டுக்கு கொடிமரம்னு தெரியுமா... அவன் கூட இருக்கவன்னு தெரியுமா... பாண்டிக்கிட்ட எப்பவும் ஒரு முட்டாத் தைரியம் உண்டு. எதுக்குன்னாலும் துடியா நிக்கிற பயதான். ஆனா, இந்த விஷயத்துல நின்னு, நிதானமா வேலை செஞ்சு பார்த்திருக்கதப் பார்த்தா என்னத்தையோ நடத்திக் காட்டணும்னு நினைக்குறான்னு தோணுது. நம்ம ஆளுகள அனுப்பிவிட்டிருக்கேன். வேகமா அவனைக் தோணிக்குக் கொண்டுவரச்சொல்லி.”

“ம்ம்... செரி. கஸ்டம்ஸ் ஆபீஸ் சோலியை நான் பார்த்துக்குறேன். நீ அவன பத்திரமா கூட்டிக்கிட்டு வர்ற வழியப் பாரு.’’ சொல்லிவிட்டு பெரிய பர்லாந்து கிளம்பினார்.

அதேநேரம், சின்ன பர்லாந்திடம் கடா பாண்டியின் விவகாரத்தை கொடிமரம் விவரித்துக்கொண்டிருந்தான்.

“யாரைக் குறிவெக்கான்னு தெரியலயே. ஒருவளை என் தலைக்கு வாட்டம் பார்த்துட்டு கெடக்கானோ... வெரசா ஆளத் தூக்கிட்டு வாங்கலே. அம்புட்டான்னா சொல்லு. அவன நான் பாக்கணும். இதெல்லாம் என்ன மயித்துக்குன்னு அவன்கிட்டே நான் கேக்கணும்.’’

“ம்ம்ம்...”

“அதுக்கப்புறம் அந்தத் தாயலிய தடம் தெரியாம முடிச்சுவுட்டுரு. ஒத்த எலும்பு மிஞ்சக் கூடாது பாத்துக்க... நாளைக்கி தீவாளி இன்னிக்கி நைட்டே என்னன்னு பார்த்துருங்க. இல்லன்னா ஆள எங்குனயாவது கூட்டிட்டுப்போய் பதுக்கிவிட்ருவானுங்க.”

இரண்டு பக்கத்து ஆட்களும் தூத்துக்குடி முழுக்க கடா பாண்டியைத் தேடி அலைந்துகொண்டிருந்தார்கள்.

தீபாவளிக்கு முதல்நாள் பஜார் முழுக்க நகரக்கூட இடமில்லாமல் ஆட்களின் தலையாகத் தெரிந்தது... துணிக்கடைகளும், நல்லது பொல்லது ஆக்க, பொங்க சாமான்கள் வாங்க மளிகைக் கடைகளிலும், எண்ணெய்க் கடைகளிலும், பலகாரக் கடைகளிலும் கூட்டமாயிருந்தது. ஊரிலிருந்த நான்கு சினிமாக் கொட்டகைகளின் வெளியேயும் ஆட்கள் முண்டியடித்துக் கொண்டிருந்தார்கள். சந்தைக் கச்சேரியில் கறிவெட்டுக்காக ஆடுகளும் மாடுகளும் வந்திறங்கிய வண்ணமிருந்தன. முள்ளுக் காட்டுக்குள்ளும், பீக்காட்டுக்குள்ளும் பன்றிகளை அறுப்புக்காக விரட்டிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். சமுத்திரத்தின் ஆட்களும், கொடிமரத்தின் ஆட்களும் இந்தச் சந்தடிகளுக்குள் சல்லடைபோட்டு கடா பாண்டியைத் தேடிக்கொண்டிருந்தார்கள். கடைசியில் கொடிமரத்தின் ஆட்களுக்கு லூர்தம்மாள்புரத்திலிருந்து அந்தத் தகவல் வந்து சேர்ந்தது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 13

“கடா பாண்டி, மேரியக்கா மகளைக் கூட்டிக்கிட்டு ஆத்துப் பாலத்துப் பக்கம் போய்க்க்கிட்டிருக்கான்”

காலையிலிருந்து சின்ன பர்லாந்துகளின், ஆட்களும் சமுத்திரத்தின் கூட்டாளிகளும் அவனைத் தேடித்திரிவது பற்றித் தெரியாமல் அன்று முழுவதும் தன் காதலியோடு சுற்றிக்கொண்டிருந்தான் கடா பாண்டி.

மழைக்காலம் முடிந்திருந்ததால், ஆற்றுப் பாலத்தில் தண்ணீர் நிரம்பிப் போய்க்கொண்டிருந்தது. ஆற்றின் ஒரு கரையில் இரண்டு சைக்கிள்கள் மணல் தரையில் சாய்ந்து கிடந்தன. அவளுக்குப் பதினேழு, பதினெட்டு வயதுதானிருக்கும். மாருக்கு மேல் பாவாடைச் சுருக்கை ஏற்றிக் கட்டிக்கொண்டு அவனோடு சேர்ந்து தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்தாள். கடா பாண்டி, தண்ணீருக்குள் மூழ்கி அவளைத் தன் கைகளில் அலேக்காகத் தூக்கினான். அவள் அவனின் கைப்பிடியிலிருந்து துள்ளி ஒரு மீனைப்போலச் சாடினாள். இவனும் விடாமல், அவளை அங்கங்கு தொட்டுத் தடவி, கூச்சம் வருமிடங்களிலெல்லாம் கிள்ளிவைத்துக் கொண்டிருந்தான். திடீரென அவள் திகைத்துப்போகும்படி தண்ணீருக்குள் வைத்தே அவளை இறுக்கி அணைத்து, உதட்டோடு உதடாக முத்தமிட்டுக்கொண்டே நீருக்குள் மூழ்கடித்தான். அவள் திமிறிக்கொண்டு தப்பிக்கப் பார்த்தாள். இவன் நீருக்குள் மூழ்கி, பூனை முடிகள் அரும்பிய அவளின் கால்களை, பனங்கிழங்கைக் கடிப்பதைப்போல் வெறிகொண்டு கடித்துவைத்தான். வலியோடும், பொய்கோபத்தோடும் அவள் அவனைத் திட்டிக்கொண்டே கரைக்கு ஏறினாள்.

சாயங்காலம் முடிந்து மெல்ல இருளத் தொடங்கியது. இருவரின் உடம்பிலும் காமம் உச்சிக்கொம்பில் ஏறி நின்றது. கரையோரம் காணப்பட்ட மணல்திட்டும், அதில் உயரமாக வளர்ந்திருந்த நாணலும் அவர்களது எண்ணங்களுக்கு இடமளித்தன. இருவரும் மறைவான இடத்துக்குச் சென்று தங்களின் ஈர உடைகளைக் கழற்றிப்போட்டார்கள். நிலா வெளிச்சம் அவர்களின் செய்கைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.

எல்லாம் முடிந்ததும் அந்தப் பெண் ஏதோ நினைவு வந்தவளாக அங்கிருந்து கிளம்ப வேண்டுமென நச்சரித்தாள்.

“நான் முன்னே போறேன்... நீ செத்த நேரஞ்செண்டு பின்னால வா...” என்று சொல்லிவிட்டு இருட்டுக்குள் நடக்கத் தொடங்கினாள்.

“ஏ இருடீ... நானும் கூடவர்றேன். தனியா எப்புடிப் போவ..?” என்றான்.

“என்னைய யாருன்னு நினைச்சே... எனக்கொண்ணும் பயம் கிடையாது. நான் போய்க்கிடுவேன்...’’ என்றபடி அவன் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து துள்ளி ஓடினாள். கடா பாண்டி சிரித்துக்கொண்டே எழுந்து சைக்கிள் கிடந்த இடத்தை எட்டிப் பார்த்தான். புல் தரை சுகமாக இருந்ததால் உடையை எடுத்து உடுத்தாமல் அப்படியே அன்னாந்து படுத்தான்.

அவ்வளவு நேரம் மணல்திட்டின் மறுகரையில் ஒளிந்துகிடந்த கொடிமரத்தின் ஆட்கள், ஒவ்வொருவராகத் தங்கள் ஆயுதங்களோடு மெல்ல சப்தம் காட்டாமல் வெளிப்பட்டார்கள். அவர்களிடையே பன்றி பிடிக்கும் இரும்பு வளையங்கள்கொண்ட மூங்கில்கழியை ஏந்திய ஒருவன், கடா பாண்டி தலைவைத்துப் படுத்திருந்த திசையிலிருந்து மெதுவாக நடந்துவந்தான். அவன் கையிலிருந்த பன்றிச் சுருக்கு இப்போது கடா பாண்டியின் கழுத்துக்கு ஏற்ற அளவுக்கு விரித்துவிடப்பட்டிருந்தது!

(பகை வளரும்...)