
“வன்முறையை ஆழமாகப் பயின்றவன், பகைவனின் கெஞ்சும் கண்களுக்கு ஒருபோதும் இரங்குவதில்லை!” - மூர்க்கர்கள்
மாலை முடிந்து, பொழுது இருளத் தொடங்கியது. நட்டாற்றில் கால் பனை உயரத்துக்குத் தண்ணீர் ஓடியது. மணல்திட்டின் மறுகரையில் ஒளிந்துகிடந்த கொடிமரத்தின் ஆட்கள், ஒவ்வொருவராகத் தங்கள் ஆயுதங்களோடு ஆற்றுக்குள் இறங்கினார்கள். பன்றி பிடிக்கும் மூங்கில்கழியை ஏந்தியவன், அதை கடாபாண்டியின் கழுத்துக்கு ஏற்றாற்போல் விரித்துவிட்டிருந்தான். மற்றவர்கள் தண்ணீரில் மறைந்துவந்து மணல் திட்டைச் சுற்றினார்கள். கையிலிருந்த ஆயுதங்களை மறைத்தபடி தக்க சமயம் பார்த்து, காத்துக்கொண்டிருந்தார்கள். கொடிமரம் சைகை செய்ததும், பன்றிக்காரன் கடாபாண்டியை மெல்ல நெருங்கினான். சுருக்கு, கடாபாண்டியின் கழுத்துக்கு அருகில் வந்தபோது, பாண்டி சட்டென எழுந்துகொண்டான்.
இருளுக்குள் தண்ணீர் பளபளப்பான சாம்பல் நிறத்தில் தெரிந்தது. ஆற்றில் முகம் கழுவிக்கொள்ளலாம் என்று அவனுக்குத் தோன்றியது. நிர்வாணமாக எழுந்து மணலில் நடந்தான். கைகளில் தண்ணீரைக் கோரக் குனிந்தவன், ஆற்றுக்குள் இரண்டு மனிதத் தலைகள் தெரிவதைப் பார்த்து, திடுக்கிட்டு விலகினான். சட்டெனச் சுதாரித்துக்கொண்டு திட்டின் நாலாப் பக்கமும் சுற்றிப்பார்த்தான். நீருக்குள் ஆறேழு தலைகள் தெரிந்தன. ஒரு நொடி அவனுக்கு எதுவும் ஓடவில்லை. மூளைக்குள் எல்லாம் அணைந்து இருளானதுபோலிருந்தது. அவன் மனது நடுக்கத்தோடு திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டது… ‘எப்படியாவது தப்ப வேண்டும்.’ சட்டென உடைகளைக் கழற்றிப்போட்ட இடத்தைப் பார்த்தான்.

சைக்கிளின் மீது அவன் உடுத்தியிருந்த சாரமும் சட்டையும் கிடந்தன. பத்தடி தூரத்தில் புதருக்குக் கீழே ஈரம் படாமல் நாலைந்து நாட்டு வெடிகுண்டுகளை உருட்டி வைத்திருந்த மஞ்சப்பை இருந்தது. வேகமாக ஓடி, உருண்டை இருக்கும் பையை எடுத்துவிட்டால் திசைக்கொன்றாக உருண்டையை வீசித் தப்பிவிடலாமென்று நினைத்தான். உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து அவனுக்கு. மூச்சிரைத்தது.
சமுத்திரத்தின் ஆட்கள் லூர்தம்மாள் புரத்தையே வட்டமடித்துக்கொண்டிருந்தார்கள். பாண்டி நேசிக்கும் பெண் இந்தத் திக்கில் வந்தால் மடக்கி கேட்டுவிடலாம் என்பது அவர்கள் கணிப்பு. குறுக்கே கம்பி போட்ட தன் அப்பாவின் பெரிய சைக்கிளை ஓட்டியபடி ஈர உடையோடு அந்தப் பிள்ளை லூர்தம்மாள்புரத்துக்குள் நுழைந்ததுதான் தாமதம். அங்கேயே காத்திருந்த சமுத்திரத்தின் ஆட்கள் அவள் சைக்கிளைப் பிடித்து நிறுத்தினார்கள். “பாண்டிய எங்க..?” அவர்கள் கேட்ட முரட்டுத் தோரணையில் அந்தப் பிள்ளை கடகடவென்று, “ஆத்துப் பாலத்துக்குள்ள நிக்கான்’’ என்று சொல்லிவிட்டு மிரட்சியுடன் அவர்களைப் பார்த்தாள். அடுத்த நொடி எல்லோரும் ஆற்றுப் பாலத்தை நோக்கிச் சிட்டாய்ப் பறந்தார்கள். ஏதோ விபரீதம் நடக்கப் போகிறதென்று அவளுக்குத் தோன்றியது. சைக்கிளை அருகிலிருக்கும் சுவரில் சாத்திவிட்டு கொஞ்சம் தள்ளியிருக்கும் வெற்றிலைப் பாக்கு கடையில் இரண்டு மெழுகுதிரிகள் வாங்கி, சிலுவைக் குறியிட்டுக்கொண்டே லூர்தம்மாள் புரத்திலிருக்கும் லூர்து மாதா கெபியை நோக்கி ஓடினாள்.
ஆற்றுப் பாலத்தின் கீழ் மணல் திட்டில்வைத்து கொடிமரத்தின் ஆட்கள் கடாபாண்டியைச் சுற்றுப்போட்டிருந்தார்கள். எல்லோர் கைகளிலும் பதமான வல்லநாட்டு அரிவாள்கள் முளைத்திருந்தன. கொடிமரத்தின் கையில் அவனின் பிரத்யேக மீன் வெட்டும் அரிவாள் மின்னியது. என்ன செய்வதெனத் தெரியாமல் துணியில்லாத வெற்றுடம்போடு கடாபாண்டி மூச்சிரைக்க நின்றுகொண்டிருந்தான். கொடிமரம் துணிகளின் அருகில் கிடந்த மஞ்சள்பையை கவனமாக எடுத்துத் திறந்து பார்த்தான். அதில் நாலைந்து உருண்டைகள் இருந்தன. “தாயோலி யார முடிக்கலே இத கக்கத்துல வெச்சுக்கிட்டே சுத்துத...’’ கடாபாண்டி பேசாமல் நின்றான். நா வறண்டது. தொண்டையில் எச்சிலை விழுங்கினான்.
“சொல்லுலே...” கொடிமரம் இரண்டு எட்டு முன்னால் வந்தபடி மிரட்டினான். பாண்டி இரண்டு எட்டு பின்னால் எடுத்துவைத்து, திரும்பி ஆற்றுத் தண்ணீரைப் பார்த்தான். ஆறு சுழித்து ஓடிக்கொண்டிருந்தது. கொடிமரத்தின் ஆட்கள் நாலா பக்கமும் நெருங்கி வந்தார்கள்.
ஒரு துள்ளலில் ஆற்றுக்குள் விழுந்து மூழ்கிவிட்டால் தப்பிவிடலாம். யோசித்த அடுத்த நொடியே நீருக்குள் பாய ஆயத்தமானான். தரையிலிருந்து எழும்பி நீரை அவன் உடல் தொடப்போகும் புள்ளியில் பன்றிக்காரன் அவன் கழுத்தில் கம்பிச் சுருக்கைப்போட்டு வெடுக்கென இழுத்தான். நாக்கு பிதுங்கி வெளித்தள்ள நிர்வாணமான நிலையில், ஒரு பன்றியைப்போல் அவன் சுருக்கில் மாட்டிக்கொண்டு கீழே விழுந்தான். சங்கை நெருக்கிய கம்பிச்சுருக்கை இரண்டு கைகளாலும் அவிழ்க்கத் தட்டழிந்தான். பன்றிக்காரனின் கையிலிருந்து கழியோடு வெடுக்கென இழுத்துக்கொண்டு ஆற்றுக்குள் குதித்தான். `அப்பாடா தப்பித்தோம்’ என்று நினைத்த நேரத்தில், கரையோரத்தில் நின்றிருந்தவன் சுருக்கு மாட்டியிருந்த கழியைக் காலால் பலமாக மிதித்துக்கொண்டான். நீருக்குள் நீந்தி நகர முடியாமல் சங்கு இறுகுவதைக் கண்டு திரும்பிப் பார்த்த கடா பாண்டிக்கு மூச்சுமுட்டியது. அவன் காலடியிலிருந்த கழியை `வெக்கு வெக்கு’வென தன் கழுத்தால் இழுத்துப் பார்த்தான். வரவில்லை. அதற்குள் கொடிமரத்தின் ஆள் ஒருவன், கழியைத் தன் கையில் எடுத்து அவனைக் கரைக்கு இழுத்தான்.
கடா பாண்டி துடிக்கத் துடிக்கக் கரையில் வந்து விழுந்தான். அவன் கண்கள் இப்போது அவர்களிடம் கெஞ்சும் நிலைக்கு வந்திருந்தன. மஞ்சள்பையிலிருந்த மொத்த உருண்டைகளையும் ஓங்கி அவன் தலையிலடித்துக் கொன்று போட்டு விடாலாமென்று நினைத்தான் கொடிமரம். கடாபாண்டி பன்றியைப்போல நாக்கை வெளியில் துருத்திக்கொண்டு கண்கள் பிதுங்கக் கட்டைக்குரலில் ஏதோ கத்தினான். அது சாகப்போகும் பன்றியின் குரல்போலிருந்தது. துணியில்லாத உடம்பில் வியர்த்து, பொட்டுப் பொட்டாக நீர் வடிந்தது. நெஞ்சு வேகவேகமாய்த் துடிப்பது தெரிந்தது. காப்பாற்ற யாராவது வர மாட்டார்களா என அவன் கண்கள் அலைபாய்ந்தன. யாருமே தென்படவில்லை. பிதுங்கிய கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து வழிந்தது. கொடிமரம் அவனை மணல்திட்டின் மையத்துக்கு இழுத்துவரச் சொன்னான்.
நிர்வாணமாக அவனை இழுத்துக்கொண்டு ஆற்றுக்குள் இறங்கி, கரையேறி, மணல்வெளியிலிருக்கும் இருண்ட நாணலுக்குள் போனார்கள். ஓராள் உயரத்துக்கும் மேல் நாணல் வளர்ந்து செழித்திருந்தது.
சமுத்திரத்தின் ஆட்கள் பத்து பேருக்கும் மேல் ஆற்றுப் பாலத்துக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். காப்பாற்ற யாராவது வருவார்களாவெனத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியிருந்த கடா பாண்டி, அவர்களைக் கண்டுவிட்டான்.
ஆற்றுப் பாலத்தின் மேலேறி சமுத்திரம் கீழே மணல்திட்டில் உருவம் ஏதாவது தெரிகிறதா எனப் பார்த்தான். சிலர் தண்ணீருக்குள் டார்ச் அடித்துப் பார்த்தார்கள். “லே... பாண்டி...” என்று ஒருவன் குரல் கொடுத்தான். கொடிமரத்தின் ஆட்கள், சப்தம் வந்த திசைக்குப் பார்த்தார்கள். ஆற்றுப் பாலத்தில் நிறைய ஆட்கள் நிற்பது தெரிந்தது. அவர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் நாணலுக்குள் பாண்டியை இழுத்துக்கொண்டு மறைந்தார்கள். பாண்டி தன் கையை நாணலுக்கு மேல் உயர்த்திப் பார்த்தான். தன் உடலை எக்கிக் குதித்துப் பார்த்தான். வளர்ந்த நாணல்கள் மோசம் செய்தன. பின்னாலிருந்து ஒருவன் ஓங்கி அவன் குறுக்கில் மிதித்தான். “தாயோலி... கரைச்சல் கொடுத்து காட்டி கொடுக்கப் பாக்கியோ...’’அவனால் எழ முடியவில்லை. தரதரவென மண்ணில் போட்டு இழுத்துக்கொண்டு போனார்கள். அவன் கண்களும் நாக்கும் இன்னும் இன்னும் பிதுங்கிக்கொண்டு வெளியே வந்தன. அவன் தன் பலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துகொண்டிருந்தான்.
ஏற்கெனவே அங்கு கிடக்கும் நான்கு பன்றி களுக்கு அடுத்தபடியாக, நெஞ்சில் கடப்பாரையால் அடிக்கும் இடத்தில் பாண்டியையும் நிர்வாணமாகக் கொண்டுவந்து மல்லாக்கக் கிடத்தினார்கள். சத்தம் வராதபடி வாயில் கரம்பை மண் கட்டியைத் திணித்து வைத்திருந்தார்கள். கொடிமரத்தின் கையில் ஒரு இரும்பு கடப்பாரை இருந்தது. கடாபாண்டியின் கண்கள் கெஞ்சின... நெஞ்சில் ஓங்கி ஒரே அடி... பாண்டியின் வாயிலிருந்து ரெத்தத்தோடு கரம்பை மண் சிதறியது. துடிதுடித்து அவன் உயிரடங்கியது. கொடிமரம், தனியே கடாபாண்டியின் உடலை ஒரு புதருக்குள் இழுத்துக்கொண்டு போனான். ஆத்திரம் தீர ஏதோ செய்யப்போகிறான் என நினைத்த மற்றவர்கள், கொல்லப்பட்டுக் கிடக்கும் பன்றிகளைத் தீயில் வாட்டி, தோலை உரசி எடுத்துவிட்டு, நீர் ஊற்றிக் கழுவி மஞ்சள் தடவிக் கூறுபோடத் தொடங்கினார்கள்.

ஆற்றுமேட்டில் வரிசையாகப் பன்றிக்கறி வாங்கத் தூக்குச்சட்டியோடு ஆட்கள் வரத் தொடங்கினார்கள். பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்திலும், காடா விளக்கு வெளிச்சத்திலும் ஓலைப்பாயில் கூறுகட்டி, கறி குவிந்துகிடந்தது. கறிக்கழிவுகளைத் தூக்கி வீசுவார்களாவென தெரு நாய்கள் நிறைய அந்தப் பக்கம் சுற்றிக்கொண்டிருந்தன.
விடிந்தும் விடியாத அந்த அதிகாலையில், மெல்லக் கூட்டம் வரத் தொடங்கி, விடிகையில் அந்த இடமே ஜனக்கூட்டமாக மாறிப்போனது. தூக்குச்சட்டி எடுத்து வராதவர்களுக்குக் கறி யாவாரிகள் வாழையிலையிலும், பனையோலையிலும் மடித்துக்கொடுத்தார்கள். சமுத்திரத்துக்குப் பன்றிக்கறி பிடிக்குமென்பதால் ரோசம்மாவும் கையில் பித்தளைத் தூக்குச்சட்டியைத் தூக்கிக்கொண்டு கறி வாங்க அங்கு வந்து சேர்ந்திருந்தாள். கடாபாண்டியை விரும்பிய பெண்ணும் அலுமினியப் பாத்திரத்தோடு அங்கு வந்தாள். பாண்டி எங்கேயாவது தட்டுப்படுகிறானா எனப் பார்த்துக்கொண்டேயிருந்தாள். புதருக்குள்ளிருந்து வந்த கொடிமரம், வெட்டி எடுத்துவந்த பாண்டியின் உடற்சதைகளையும் பன்றிக்கறியோடு கலந்து ரோசம்மாவின் தூக்குச்சட்டியிலும் கடாபாண்டியின் காதலி கொண்டுவந்த அலுமினியப் பாத்திரத்திலும் அள்ளிப்போட்டான். யாரும் கவனிக்கவில்லை காலைச் சூரியனைத் தவிர. கொடிமரம் விகாரமாய்ச் சிரித்துக்கொண்டான்!
(பகை வளரும்)