மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 23

வேட்டை நாய்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள்

“ஆயுதங்கள் கொலைக் கருவிகளா... பாதுகாப்பு கருவிகளா?’’ - மூர்க்கர்கள்

துறைமுக ஏரியாவில் திரும்பிய பக்கமெல்லாம் கும்பல் கும்பலாக ஆட்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். துறைமுகத் தேர்தலுக்கு இன்னும் சில நாள்கள்தானிருந்தன. காசி அண்ணாச்சி, மெர்கன்டைல் பேங்க்கிலிருந்து கட்டுக்கட்டாக நூறு ரூபாய் தாள்களை எடுத்து வந்து, தன் ஆட்கள் மூலம் லோடுமேன்களுக்குப் பணப்பட்டுவாடா செய்தார். ‘இன்னும் என்ன வேண்டுமோ தயங்காமல் கேளுங்கள்’ என்றும் சொல்லியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்த துறைமுக லோடுமேன்கள் பலரும் அவசர அவசரமாகத் தங்கள் வீடுகளில் விசேஷங்களை நடத்திக்கொண்டிருந்தார்கள்.

கல்யாணம், காதுகுத்து, சடங்கு, பால் காய்ச்சுதல் என எல்லா விசேஷங்களுக்கும் காசி அண்ணாச்சிக்கு அழைப்பு வந்தது. வயசுக்கு வராத சிறு பிள்ளைகளுக்கும்கூட பட்டுச்சேலை சுற்றி, ஊரைக்கூட்டி காசி அண்ணாச்சி காசில் விசேஷம் வைத்தார்கள். வாடகை வீட்டுக்குக்கூட முப்பது ரூபாய்க்கு கிளிஞ்சல் சுண்ணாம்பு வாங்கி அடித்து, பால்காய்ச்சுதல் நடத்தினார்கள். காசி அண்ணாச்சிக்கு இந்தப் பித்தலாட்டமெல்லாம் தெரியாமலில்லை. பல்லைக் கடித்துக்கொண்டு சிரித்தபடியே பணத்தை வாரி இறைத்தார். எண்ணக்கூட செய்யாமல் கத்தை கத்தையாகப் பணத்தை எடுத்தெடுத்து மொய் செய்தார். காலையில் நிகழ்ச்சிகள், மதியம் தேர்தல் வேலைகள் எனச் சுற்றிச் சுழன்றார்.

அன்றைக்குப் பொழுது சாய்ந்த நேரத்தில் வஸ்தாவியைப் பார்க்க உப்பளக் கிட்டங்கிக்கு வந்தார் காசி அண்ணாச்சி. அவருக்கு, தான் கையோடு எடுத்துவந்திருந்த வெளிநாட்டு மதுக்குப்பியை ஊற்றிக்கொடுத்தபோது வஸ்தாவி மறுத்துவிட்டார். ‘நமக்கு எப்பமும் சுதேசிதான்’ என்றபடியே கடாமார்க் சாராயத்தை எடுத்து மேசை மேல் வைத்தார் வஸ்தாவி.

உப்பளக் கிட்டங்கியின் வராந்தாவில், வஸ்தாவியின் ஆட்கள் சிலர் சீட்டு ஆடிக்கொண்டிருந்தார்கள். மற்றவர்கள், தேர்தலில் காசி அண்ணாச்சி அணியில் போட்டியிடும் செல்வராஜுக்குக் காவலுக்குச் சென்றிருந்தார்கள்.

வஸ்தாவியின் அருகில் எப்போதும் ரேடியோ ஒலித்துக்கொண்டேயிருந்தது. அவரைச் சுற்றிலும் ஏழு கன்னிநாய்கள் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தன. குடிக்க ஆரம்பித்ததும் காசி அண்ணாச்சி, வஸ்தாவியிடம் பர்லாந்து சகோதரர்களைப் பற்றிய கெட்ட செய்திகளை ஒவ்வொன்றாகச் சொல்லிக்கொண்டேயிருந்தார். தன் தொழில் அவர்களால் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டது... தன்னை எப்படியெல்லாம் பர்லாந்துகள் வஞ்சித்தார்கள் என்று விவரித்தார்.

“இவனுங்க ரெண்டு பேரையும் தாண்டித்தான் நான் ஹார்பர் எலெக்‌ஷன்ல ஜெயிக்கணும். என் ஆளு செல்வராஜை எப்பவும் உங்க ஆளுங்களைவெச்சு கண்காணிச்சுட்டே இருங்க.”

“நீங்க எதுக்கும் கவலைப்பட வேண்டாம்... என்னை நம்பிட்டீங்கல்ல...”

“உங்கள நம்பாமயா... நான் சொன்னது அதுக்கில்ல. போன தடவை என் சாதிக்காரனைத்தான் எலெக்‌ஷன்ல நிப்பாட்டுனேன். ஆனா, கரெக்டா எலெக்‌ஷனுக்கு ரெண்டு நாளுக்கு முன்னாடி அந்தச் சின்ன பர்லாந்தோட சேர்ந்துக்கிட்டு என்னையே ஏமாத்திட்டான். அதுக்கு முந்தி, நான் நிப்பாட்டுன ஆளை எலெக்‌ஷனுக்கு நாலு நாளைக்கு முன்னால வெட்டியே கொன்னுட்டானுங்க. இப்பவரைக்கும் அதுக்கு கேஸ் நடந்துக்கிட்டு இருக்கு. எனக்காக நிக்க ஒருத்தனும் வரக் கூடாதுன்னுதான் அதைப் பண்ணினானுங்க. அதுக்காகத்தான் இந்த தடவ என் சொக்காரனையே நிப்பாட்டியிருக்கேன். அவனோட உயிரும் இப்போ உங்க கையிலதான் இருக்கு.”

வஸ்தாபி அரை பாட்டில் சாராயத்தை ஒரே மடக்கில் குடித்துவிட்டு உம்மென்று அமர்ந்திருந்தார்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 23

தேர்தலுக்கு ஒரு வாரம் இருக்கும்போது, கிழக்கு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து இரண்டு பெரிய போலீஸ் ஆபீஸர்கள் சின்ன பர்லாந்து வீட்டுக்கும், பெரிய பர்லாந்து வீட்டுக்கும் சென்று அவர்களின் கைத்துப்பாக்கிகளையும், அதற்கான லைசென்ஸ், தோட்டாக்கள் ஆகியவற்றைப் பரிசோதித்து வாங்கிக்கொண்டு, ரெக்கார்ட் நோட்டில் கையொப்பமும் வாங்கிக்கொண்டார்கள். இது ஒரு வழக்கம்தான். தேர்தல் மட்டுமல்ல, ஊரில் ஏதாவது பதற்றமான சூழல் வரும்போதும், சுதந்திர தினம், குடியரசு தின நாள்களிலும் அவர்கள் தங்களிடமிருக்கும் துப்பாக்கிகளைப் போலீஸில் ஒப்படைக்க வேண்டியிருந்தது. பதற்றம் தணிந்ததும், அவர்களே திரும்ப வந்து ஒப்படைத்துவிடுவார்கள். இதே நடைமுறை காசி அண்ணாச்சியிடமும் கடைப்பிடிக்கப்பட்டது. போலீஸ்காரர்களுக்கு, இவர்களிடம் லைசென்ஸ் இல்லாமல் எத்தனை துப்பாக்கிகள் புழங்குகின்றன என்பதும் நன்றாகவே தெரிந்திருந்தது.

ஒருமுறை பெரிய பர்லாந்தின் மனைவி அருகிலிருக்கும் தேவாலயத்துக்குப் போயிருந்தபோது, போலீஸார் அவரின் வீட்டில் நெடுநேரம் காத்திருந்தார்கள். திரும்பி வந்தவரிடம், பெரிய பர்லாந்து அவரிடமிருக்கும் துப்பாக்கியை போலீஸாரிடம் ஒப்படைக்கச் சொன்னார். சிறுமியாக இருந்த அமலி அப்போதுதான் கவனித்தாள். எந்த அதிர்வுமில்லாமல் தன் கைப்பையைத் திறந்து, அதன் உள்ளேயிருந்த துப்பாக்கி ஒன்றை அவளின் அம்மா போலீஸிடம் கொடுத்தார். அமலிக்கு திக்கென்றிருந்தது. அவ்வளவு சாதுவான அம்மாவிடம் எப்போதும் ஒரு துப்பாக்கி இருக்குமென்பது அவளுக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தன் அம்மாவிடமே கேட்டாள்.

“எந்த நேரம் நம்ம உயிருக்கு ஆபத்து வரும்னு யாருக்குத் தெரியும்... அப்போ நீ சின்னப் பிள்ளையா இருந்த... அப்பவே என்னைக் கொல்லுறதுக்கு ரெண்டு தடவை முயற்சி பண்ணினாங்க. அதுக்கப்புறம்தான் இதைக் கையில வெச்சுக்கிட்டு சுத்துறேன். சொந்தக்காரங்க வீட்டு விசேஷமானாலும், ஏன் சர்ச்சுக்கே போனாலும் இந்தப் பாவத்தையும் சேர்த்துத்தான் சுமந்துட்டு அலையுறேன்” என்றார்.

அமலிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“யாரும்மா... சித்தப்பாவா?”

“ஏண்டி... உங்க அப்பாவுக்கு என்ன உங்க சித்தப்பா மட்டும்தான் ஆகாதவனா... எத்தன பேரு இருக்காங்க... உங்க சித்தப்பா இந்த மாதிரி காரியமெல்லாம் பண்ண மாட்டான். அவனோட பகை இன்னைக்கு நேத்து வந்ததுடி... உனக்குத் தெரியாது அமலி... உன் தாத்தன் காலத்துப் பகையெல்லாம்கூட இன்னும் பாக்கியிருக்கு. மேலோட்டமா பாத்தா அதெல்லாம் அணைஞ்சு சாம்பலான மாதிரிதான் தெரியும். கிளறிப் பாத்தாத்தான் தெரியும், இன்னும் எவ்வளவு கங்கு அணையாம கிடக்குன்னு. இன்னும் உங்க அப்பாவச் சுத்தியும், இந்தக் குடும்பத்தச் சுத்தியும் எவ்வளவு பகை அப்படி அணையாம எரிஞ்சுக்கிட்டு இருக்கு தெரியுமா... இப்போ உங்க அப்பாவும் சித்தப்பாவும் இப்படி மல்லுக்கட்டிக்கிட்டுக் கிடக்குறதெல்லாம் இந்த வீட்டோட சாபம்தான். சும்மாவா சொன்னாங்க... `அஞ்சு வயசுல அண்ணன், தம்பி... பத்து வயசுல பங்காளி’னு... இப்போ உங்க அப்பாவும், சித்தப்பாவும் இருக்குற மாதிரிதான் உங்க சின்னத் தாத்தாவும், பெரிய தாத்தாவும் இருந்தாங்க. ரெண்டு தடவை என்னைக் கொல்ல வந்தாங்கனு சொன்னேன்ல... அதெல்லாம் உங்க சின்னத் தாத்தா ஆளுங்கதான். அப்போ என்னைக் காப்பாத்துனதே ஒங்க சித்தப்பாதான். அன்னைக்கி, `மதினி... மதினி’ன்னு எம்மேல பாசமா இருந்தான். இன்னிக்கி அவனும் பகையாளி.”

“என்னம்மா சொல்ற... நம்ம சின்ன தாத்தாவா?”

“அவரேதான். அவர் என்னைக் கொல்ல வந்ததுக்கு அடுத்த வாரமே, உங்க அப்பாவும் சித்தப்பாவும் அவரைக் கழுத்துல கயத்தைப் போட்டு இறுக்கிக் கொன்னாங்க. இதெல்லாம் உங்க சின்னப் பாட்டிக்குத் தெரிஞ்சுதான் நடந்தது. அவங்கதான் அன்னைக்கு வேணும்னே முன்வாசல் கதவுக்குத் தாழ்ப்பாள் போடாம விட்டதே...” திடீரெனப் பேச்சை மாற்றியவளாக, “நீ சின்னப் புள்ள... ஒனக்கு இதெல்லாம் தெரியாது. தெரியவும் வேண்டாம். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லுவேன் அமலி... நம்மைச் சுத்தி இருக்குற எந்தச் சொந்தக்காரங்களையும் நம்பாத.”

அம்மா சொல்லச் சொல்ல அமலிக்கு வியர்த்துக்கொண்டிருந்தது. தான் சிறு வயதில் எத்தனை தடவை மழலை மொழியில் சின்னத் தாத்தாவிடம் விளையாடியிருக்கிறோம். அவர் இறப்புச் சடங்கு நடந்த நாளின் நினைவுகள்கூட அவளுக்கு லேசாக நினைவிலிருந்தது. அப்பாவும் சித்தப்பாவும் முன்னால் நின்றுதான் எல்லாச் சடங்குகளையும் செய்தார்கள். அன்று அமலிக்கு உள்ளூர பயம் ஊர்ந்து, உடம்பெங்கும் பரவியது. கண்கள் தானாக கண்ணீரைச் சுரந்தன. தன் வீட்டிலிருந்த பனிமயமாதா சொரூபத்தைப் பற்றிக்கொண்டே உறங்கினாள்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 23

காசி அண்ணாச்சி வஸ்தாவியை அழைத்துக்கொண்டு காலையிலேயே தன் புக்கிங் ஆபிஸுக்கும் துறைமுகத்துக்கும் வந்திருந்தார். தன் ஆதரவாளர்களை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தார். கப்பலுக்கு சரக்கு ஏற்றும் பாதையில் அப்போது நடந்து வந்துகொண்டிருந்த சின்ன பர்லாந்தையும், கொடிமரத்தையும் காசி அண்ணாச்சி வஸ்தாவிக்கு அடையாளம் காட்டினார். சின்ன பர்லாந்தும், காசி அண்ணாச்சியும் விஷப் புன்னகையோடு நேருக்கு நேர் பார்த்துக்கொண்டார்கள். அதேநேரத்தில், கொடிமரமும் வஸ்தாவியை முறைப்புடன் கடந்தான்.

கொடிமரத்துக்கு காசி அண்ணாச்சி யாரையோ வெளியூரிலிருந்து இறக்கியிருப்பது தெரியும். இப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறான். அவர்கள் முன்னகர்ந்து போன சிறிது நேரத்திலேயே அண்ணாச்சியும், வஸ்தாவியும் அங்கிருந்து கிளம்பத் தயாரானார்கள். சரக்கு குடோன்களைத் தாண்டி நடந்து போய்க்கொண்டிருக்கும்போது வஸ்தாவி யாரையோ பார்த்து தீடீரென நின்றார். நெற்றியைச் சுருக்கியபோது, அவரின் கண்களில் கோபமும் ஆக்ரோஷமும் குடிகொண்டன.

“ஹோய்... ஹேய்... இந்தா...” - வஸ்தாவி யாரையோ பார்த்துக் கத்தினார்.

காசி அண்ணாச்சி திகைத்துப்போய் நின்றார். அங்கே தூரமாக சமுத்திரம் நின்றுகொண்டிருந்தான்.

“ஏங்க, அவன ஏன் கூப்பிடுறீங்க... அவன் யாருன்னு தெரியுமா?”

“ஏன் தெரியாது... சமுத்திரம்தான... அந்த துரோகிய நல்லாவே தெரியும்.”

காசி அண்ணாச்சி முகத்தில் ஒரு கேள்விக்குறியோடு வஸ்தாவியைப் பார்த்தார்.

வஸ்தாவி, மீண்டும் சமுத்திரத்தைப் பார்த்து சப்தம் கூட்டி அழைத்தார்.

“லேய், நாயே..!”

(பகை வளரும்...)