மற்ற எபிசோடுகள்
Published:Updated:

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 27

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 27
பிரீமியம் ஸ்டோரி
News
வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 27

“யுத்தத்தில் அவமானத்தினும் பெரிய தண்டனை ஏதுமில்லை.”- மூர்க்கர்கள்

சமுத்திரம் உடம்பில் மஞ்சளைக் கரைத்து ஊற்றிக்கொண்டு, அதன் மேல் வரி வரியாகக் கறுப்பு மையை இழுவிக்கொண்டு புலி வேஷத்தோடு, சங்கிலிக் கருப்பர் கோயில் முன்னால் வந்து நின்றான். ஒரு நொடியில் வஸ்தாவியும் அங்கு கூடியிருந்த ஜனங்களும் திகைத்துப்போய்விட்டார்கள். பிறகு சமுத்திரத்தின் கோலத்தைப் பார்த்துப் பலரும் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். கூட்டத்துக்குள்ளிருந்து “இதென்ன கோமாளிப்புலியா இருக்கு...” என்று சிறுவர்கள் கத்தத் தொடங்கினார்கள். இடுப்பில் கட்டியிருக்கும் வாலைப் பார்த்துப் பெண்களும் சிரித்தார்கள். வஸ்தாவி தன் வாயோரத்திலெழுந்த புன்னகையை அடக்கிக்கொண்டு, துள்ளலுடன் மீண்டும் வரிசை வைக்கத் தொடங்கினார்.

கருப்பர் கோயில் முன்னால் வந்து சேர்ந்த சமுத்திரத்தின் நண்பர்களும், ஏற்கெனவே அங்கு காத்திருந்த உறவினர்களும் குறிப்பாக, அவன் காதலியும், “ஏன் இப்படி மானத்த வாங்குறான்?” என்பதுபோல் எரிச்சலடைந்தார்கள். சமுத்திரம் எதையும் கண்டுகொள்ளாமல் காலடி மண்ணைத் தொட்டு வணங்கி, வரிசை வைக்கத் தொடங்கினான்.

கைகளை வீசி எதிரிலிருக்கும் விலங்கையோ, மனிதனையோ புலி அடிப்பதுபோல் ஒரு நேர்த்தியான வரிசை அது. அவ்வளவுதான், கூட்டத்தின் சலசலப்பு சட்டென்று அடங்கி எல்லோரும் ஆர்வமானார்கள். வஸ்தாவியேகூட முதன்முறை அவன் புலிவேஷம் கட்டி, தரமான வரிசை வைப்பதைப் பார்த்து வியந்தார். கூடவே அவரும் பெரிது பெரிதாக எதிர்வரிசை வைக்கத் தொடங்கினார். வஸ்தாவியின் செய்கைகளுக்குக் கூட்டத்தில் விசில் பறந்தது. சமுத்திரம் அவருக்குப் பதில் வரிசை வைக்கத் தொடங்கியபோது, மேளக்காரர்கள் ஏற்ற இறக்கத்தோடு அவனுக்கேற்ப கொட்டடிக்கத் தொடங்கினார்கள்.

கோபங்கொண்ட வரிப்புலியின் இயல்பை, முக பாவனையை, உடல் அசைவை அப்படியே தத்ரூபமாகக் கொண்டு வந்தான் சமுத்திரம். தன் எதிர் விலங்கை அடித்து வீழ்த்தி, வேட்டையை நிகழ்த்துவதற்கான முஸ்தீபுகளுடன் கை கால்களை அசைத்து, தரையோடு தரையாகப் பதுங்கி, தாவிக் குதித்து, பெரும் பாய்ச்சலோடு உக்கிரமாக வரிசை வைத்தான் சமுத்திரம். அதைப் பார்த்து வஸ்தாவிக்கே உடல் சிலிர்த்தது.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 27

வழக்கமாக அந்த இடத்தில் பத்திருபது நிமிடங்கள் வரைக்கும் புலி வரிசை நடக்கும். இன்று அது கணக்கில்லாமல் போய்க்கொண்டிருந்தது. சமுத்திரத்தைப் பார்த்து முதலில் சிரித்தவர்கள்கூட இப்போது அவன் ஆட்டத்தை மெச்சத் தொடங்கியிருந்தார்கள். தன் பெரியப்பாவை எதிர்த்து ஆடுகிறான் என்றுகூடப் பார்க்காமல் சமுத்திரத்தின் காதலி அவன் ஆட்டத்தை ரசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள். கூட்டத்தில் வேறு சில பெண்களின் கண்களும் அவனை ரசிக்காமலில்லை. எனினும் சிலரின் மனதுக்குள், ஒரு கீழத்தெருக்காரன் வந்து வரிசை வைத்து ஆடுகிறானே என்று வெப்புராளமாக இருந்தது. அதிலும், வஸ்தாவியின் தம்பிக்கும், அவரின் மகன் பூச்சாண்டி முருகனுக்கும் எரிச்சல் தாங்கவில்லை.

“தலையில தூக்கிவெச்சுக்கிட்டு ஆடுனாரில்ல... அதான் இப்ப அனுபவிக்கிறாரு... வரமொற தெரியாம கீழத்தெருக்காரப் புலிகிட்ட மரியாதை இழந்து மல்லுக்கட்டிக்கிட்டுக் கெடக்காரு...” என்று வாய்விட்டே முணுமுணுத்தான் பூச்சாண்டி முருகன்.

இரண்டு புலிகளுக்கும் உடல் வியர்த்து வழிந்தது. வஸ்தாவி, மனதுக்குள் தன் சிஷ்யனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொண்டார். அவனின் நுணுக்கமான அசைவுகளையும், தாட்டியமான வரிசையையும் மனதுக்குள் மெச்சிக்கொண்டேயிருந்தார். தனக்குச் சரிநிகராக வித்தை தெரிந்த புலிதானா இது என்று மோதிப் பார்த்துவிடும் மனநிலை அவருக்குள் ஊற்றெடுத்தது. தலையைச் சிலிர்த்து உறுமலுடன் ஒரு பாய்ச்சல் காட்டினார். அந்தப் பாவனையில் மொத்தக் கூட்டமும் அஞ்சிப் பின்வாங்கி, பிறகு சுதாரித்தது. பதிலுக்கு சமுத்திரமும் பிடரியைச் சிலிர்த்து, கைவிரல் நகங்களைக் காற்றில் கீறியபடி, தரையிலிருந்து ஐந்தடி உயரத்துக்குத் தாவி, அந்தரத்தில் சுருண்டு மையத்தில் குதித்து நின்றான். இரண்டு புலிகளும் சரிக்குச் சமமாக வெறியாட்டம் ஆடின. மேளக்காரர்களுக்கு உற்சாகம் தாங்கவில்லை. கொட்டுச் சத்தம் அதை வெளிப்படுத்தியது. “ஏனப்பா ரெண்டு புலியும் அசராம ஆடுது. பெரியாளுங்க தலையிட்டு ஆட்டத்த முடிச்சு வெய்யுங்கப்பா. சாமிகிட்ட போக வேணாமா...” என்று கூட்டத்துக்குள்ளிருந்து ஒரு கிழவி குரலெடுத்துச் சொன்னாள். அடுத்த நிமிடம் மற்ற உடற்பயிற்சிக் கூடத்து ஆட்கள் கூடிப் பேசி புலியாட்டத்தை நிறுத்த வேண்டியதுதான் என்று முடிவு சொன்னார்கள்.

புலியாட்டத்தின் முடிவில், வேஷம் கட்டியவர் ஒரு துளிகூட அசராமல் ஒரே மூச்சில் ஒரு கருங்கிடாயைப் பல்லால் கடித்துத் தூக்கி எறிய வேண்டும் என்பது விதி. அடுத்த சில நிமிடத்தில் இரண்டு புலிகள் முன்னாலும் இரண்டு பெரிய கருங்கிடாக்கள் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. எது மூப்பு, எது இளையது என்று சொல்லிவிட முடியாத சம அளவு உயரம், எடைகொண்ட ஒரு ஜதை ஆடுகள் அவை.

புலியாட்டத்தின் இறுதிக் கட்டத்தைக் காண மொத்தக் கூட்டமும் பரபரப்பானது. கீழத் தெருக்காரர்கள் மனதுக்குள் தங்கள் சாமிகளைக் கும்பிட்டுக்கொண்டார்கள். சமுத்திரத்துக்கு எல்லாச் சாதியரிலும் நண்பர்களிருந்ததால் அவன் ஜெயிக்க வேண்டுமென்று அவர்களும் விரும்பினார்கள். ஊர்ப் பெரியவர்களுக்கு வஸ்தாவியின் அனுபவத்திலும் பலத்திலும் மிகுந்த நம்பிக்கையிருந்தது. சமுத்திரத்தின் காதலி இரண்டு பேரில் யாருக்காகச் சாமி கும்பிடுவது என்ற குழப்பத்திலிருந்தாள்.

சமுத்திரம், உக்கிரமாகப் பிடரியைச் சிலுப்பிக்கொண்டு வேகமாக வரிசைவைத்து ஆடியபடியே வந்து சட்டென அவ்வளவு பெரிய கடாவைப் பற்களால் கடித்து, அலேக்காகத் தூக்கி தலைக்குப் பின்னால் வீசினான். அது மூன்று நான்கு சுற்று சுற்றி, கூட்டத்தினரின் காலடியில் போய் கத்திக்கொண்டே விழுந்தது. எல்லோரும் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப்போனார்கள். கீழத்தெருச் சனங்களிடமிருந்து கூச்சலும் விசிலும் தெறித்தன. சமுத்திரத்தின் நண்பர்கள் ‘ஹே...’ என்ற கூச்சலுடன் துள்ளிக் குதித்தாடினார்கள்.

அடுத்து வஸ்தாவியின் முறை. அவர் உக்கிரமான பாய்ச்சலில் ஓடிவந்து ஆட்டைக் கடிக்க வசம் பார்த்தபோது, அது நழுவியது. ஆட்டின் எலும்புக்கும் சதைக்கும் பதிலாக, மயிரும் தோலும் அவர் வாய்க்குச் சிக்கியிருந்தது. இருந்தும் ஆட்டைப் பற்களால் ஏந்தி நிமிரும்போது, தன்னையே அறியாமல் தன் இரண்டு கைகளையும் ஆட்டின் கால் மூட்டில் வைத்து, அந்தரத்தில் சுழற்றி வீசினார். அது சமுத்திரத்தின் கிடாய் விழுந்த தூரத்தையும் தாண்டி கூட்டத்தில் தலைதட்டிக் கீழே விழுந்தது. ஆனாலும், கூட்டம் ஒரு நிமிடம் அமைதியானது. வஸ்தாவிக்கு அந்த அமைதியின் அர்த்தம் புரியவில்லை. மெல்ல அவரின் ஆட்டத்தின் வேகம் குறைந்தது.

கூட்டத்தின் உள்ளிருந்து ஒரு குரல், “டேய்... இது கிழட்டுப் புலிடா... முட்டுல கைய ஊனிடுச்சி...” என்றது. வஸ்தாவிக்கு அப்போதுதான் தான் செய்த தவறு உறைத்தது. கூட்டத்துக்குள்ளிருந்து தொடர்ச்சியான கேலிக்குரல்கள் வெளிவரவும், வஸ்தாவி நிலைகுலைந்து போய்விட்டார். மேளக்காரர்கள் மேளம் அடிப்பதை நிறுத்தினார்கள். ஊரே வகுந்தெடுத்ததுபோல வஸ்தாவிக்கு ஆதரவானவர்களும், சமுத்திரத்துக்கு ஆதரவானவர்களுமாக இரண்டாகப் பிரிந்து நின்றார்கள். வஸ்தாவியின் தம்பியும், பூச்சாண்டி முருகனும் வஸ்தாவியின் முன்னால் வந்து நின்றார்கள்.

“அன்னைக்கே சொன்னமே... அவன உள்ள சேக்காதீங்கன்னு. இப்பிடி அவமானப்படுத்திட்டானே உங்கள... கீழ்ச்சாதி பயல்லாம் உங்கள...” தொடர்ந்து அவர்கள் பேசப் பேச வஸ்தாவி சட்டென்று அவர்களைக் கைகாட்டித் தடுத்தார்.

வேட்டை நாய்கள் - பாய்ச்சல் - 27

“அவன் வித்தை கத்துக்கிட்டது எங்கிட்ட...” என்றார் வஸ்தாவி.

“அதுக்குன்னு சபையிலே வெச்சு குருவ அவமானப்படுத்துவானா?”

கூட்டத்திலிருந்து சமுத்திரத்தின் நண்பன் ஒருவன், “மாப்ள அடுத்த வருஷத்துலருந்து இந்த ஊருக்கு ஒத்தப் புலிதாம்... அதுவும் இளம் புலிதாம்... சொல்லு அவருக்கிட்ட, அவர் குளிப்பாட்டி நடுவீட்டுல வெச்சது நாயில்ல.. புலின்னு...” என்று கத்தினான்.

சமுத்திரம் அவனை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, வஸ்தாவியை நெருங்கி வந்து நின்றான். “அய்யன் என்ன மன்னிக்கணும். நான் ஒத்த வால் கட்டிக்கிட்டு உங்க முன்னாடி வந்து நின்னதே... உங்ககிட்ட கத்துக்கிட்ட வித்தையை நான் காட்டணும்னு மட்டும்தான். வேற எந்த எண்ணமும் எனக்கில்ல...”

வஸ்தாவி அருகிலிருந்த பூச்சாண்டி முருகன், “உங்க தெரு ஆளுங்களைவெச்சு கெழட்டுப்புலின்னு சொல்லவெச்சு அசிங்கப்படுத்திட்டு... இப்ப என்ன இங்க வந்து நாடகமா ஆடுற...” என்று சமுத்திரத்தை அடிக்கக் கைநீட்டினான். அதற்குள் சமுத்திரத்தின் நண்பர்கள் ஓங்கிக் குரலெழுப்பிக்கொண்டு அவனைத் திருப்பியடிக்கப் பாய்ந்தார்கள். சட்டென்று மைக்கில் ஊர்ப் பெரியவர், `புலியாட்டம் நிறைவுபெற்றது. கொட்டுக்காரங்க சாமி கோயிலுக்குப் போகணும். சச்சரவில்லாம எல்லாரும் கலைஞ்சு போங்கப்பா...” என்று பேசினார்.

சமுத்திரம் மீண்டும் மன்னிப்புக் கேட்க வாயெடுத்தான். அதற்குள் வஸ்தாவி அங்கிருந்து திரும்பி, தன் வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினார். கூட்டத்துக்குள்ளிருந்து யாரோ ஒருவன் மீண்டும் கத்தினான்.

“அடுத்த வருஷம் எந்தப் புலி உயிரோட மிஞ்சுதோ... அந்தப் புலி வேஷம் கட்டட்டும்!”

(பகை வளரும்...)