Published:Updated:

படிப்பறை

காடுகளே உணவுக்கிடங்காக இருந்தபோது வேட்டையே மனிதனின் ஆதித்தொழிலாக இருந்தது.

பிரீமியம் ஸ்டோரி

காடுகளில் இருந்து மனிதர்களாகிய நாம் நகர்ந்துவந்து பல நூற்றாண்டுகளாகின்றன. ஆனாலும் ‘நினைவில் காடுள்ள மிருக’மாய் சடங்குகளிலும் மொழியிலும் காட்டைப் பதிவுசெய்துகொண்டுதான் இருக்கிறோம். அப்படி வேட்டையாடுதல் பற்றி எழுதப்பட்ட நூறு கவிதைகளின் தொகுப்பு ‘வேட்டுவம் நூறு.’

அணிந்துரையில் தியடோர் பாஸ்கரன் குறிப்பிடுவதைப்போல் ‘பசுமை இலக்கியம்’ என்பது காலத்தின் தேவையாக இருக்கிறது. தலித் இலக்கியம், பெண்ணிய இலக்கியம் என்பதைப்போல் நம்மைச் சுற்றியுள்ள தாவரங்களை, நீர்நிலைகளை, விலங்குகளை, பறவைகளை இலக்கியத்தில் பதிவு செய்யவேண்டியது அவசியம். திணை வாழ்க்கையை வலியுறுத்திய சங்க இலக்கியம் இயற்கையோடு இணைந்த இலக்கியமாக இருந்தது. ஆனால் அதைவிட்டு வெகுதூரம் வந்துவிட்ட நேரத்தில் காடு, விலங்குகள், பறவைகள், மீன்களை இந்த வேட்டைக் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார் மௌனன் யாத்ரிகா.

காடுகளே உணவுக்கிடங்காக இருந்தபோது வேட்டையே மனிதனின் ஆதித்தொழிலாக இருந்தது. இது காட்டையோ விலங்கினத்தையோ மொத்தமாக அழித்துவிடுவதில்லை. ஆனால் வேட்டையை அநாகரிகமாக்கிவிட்ட நாகரிகச் சமூகமோ காட்டை அழிப்பதற்கான எத்தனங்களை மேற்கொள்கிறது. ‘வேலியைப்/பாதைக்கு/நகர்த்தி/ஓடையைச்/சுருக்கிவிட்டான்/சம்சாரி/பாம்பின் நீளம்/இருந்த பாதை/ஓணான் அளவுக்கு ஒடுங்கிவிட்டது’ என்று காட்டின் வீழ்ச்சியைச் சொல்கிறது ஒரு கவிதை.

சிறுவனாக இருந்தபோது வேட்டையில் ஈடுபட முடியாமல் கவண் எறிதல், இரைகளைத் தூக்கிவருதல் போன்ற சின்னச்சின்ன வேலைகளில் ஈடுபட்டவனைத் தந்தை காட்டிலேயே விட்டுவிட்டுப்போக, கருவேலம் எப்படி தகப்பனாக மாறியது என்பதைச் சொல்லும் கவிதை முக்கியமானது.

‘விலங்கின் உடலைத் தீயில் வாட்டும்போது/எலும்பைத் தீண்டிவிடாதே/ அதில்தான் காட்டின் வரலாறு/ அழியாமல் இருக்கும்’ என்கிறது ஒரு கவிதை.

நூறு கவிதைகளும் வேட்டையைப் பற்றிப் பேசினாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி. ஆனால் ‘வேட்டை’ என்றவுடனே ஆண்களின் தொனி வந்துவிடுவது குறிப்பிடத்தக்க விஷயம். வேட்டைக்குக் கிளம்பும் பங்காளிகள் மசாலாவை அம்மியில் அரைத்துவைக்கும்படி பெண்களுக்கு ஆணையிடுகிறார்கள். கவிதைகளின் சமநிலை குலையும் தருணம் இது.

மௌனன் யாத்ரிகாவின் கவி வேட்டைக்குத் திண்டுக்கல் தமிழ்ப்பித்தனின் ஓவியங்கள் ஈட்டியாய், சுளுக்கியாய், கவணாய், வலையாய் மாறியிருக்கின்றன. நம்மை மீட்டெடுத்துக்கொள்ளப் படிக்க வேண்டிய கவிதைகள்.

படிப்பறை

வேட்டுவம் நூறு

மௌனன் யாத்ரிகா

வெளியீடு:

லாடம்,

4. அண்ணா நகர், செந்துறை, அரியலூர்.

பக்கங்கள்: 144

விலை: ரூ.200/-

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு