Published:Updated:

விசாரணை வளையம் - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- ஹேமி கிருஷ்

விசாரணை வளையம் - சிறுகதை

- ஹேமி கிருஷ்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

கலை வீட்டைப் பூட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தாள். நடையில் வேகம் அதிகரித்திருந்தது. இன்று தாமதமாகிவிட்டது. வழக்கமாய் எட்டு மணிக்கு அந்த வீட்டில் இருப்பாள். இன்று வீட்டிலிருந்து கிளம்பவே எட்டரை ஆகிவிட்டது.

சோழிங்கநல்லூரில் வானை முட்டும் ஒரு பெரிய அடுக்ககத்தில் முதல் மாடியில் உள்ள அந்த வீட்டுக் குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவளுக்கு. நல்ல சம்பளம், அவ்வப்போது துணிமணிகள், உபயோகித்த நல்ல பொருள்கள் என எல்லாம் தருவார்கள். காலையில் எட்டு மணிக்குப் போனால் ஐந்து மணி வரை இருக்க வேண்டும். இதைவிட நல்ல இடமும் வேலையும் சம்பளமும் கிடைக்காது. அடுக்ககத்தில் இருந்தாலும் உள்ளேயே மாடியறைகள் கொண்ட பெரிய வீடு. பளிங்கு மற்றும் உயர் ரக அலங்காரப் பொருள்களைக் கண்டால் கண்கள் மிளிரும். வீடு முழுவதும் குளிரூட்டப்பட்டிருக்கிறது.

தீபுவை எட்டு மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்து பார்த்துக் கொள்கிறாள். தீபுவின் அன்றாடம் கலை வந்துதான் ஆரம்பிக்கவேண்டும். பல் துலக்க வைத்து, குளிக்க வைத்து அவன் பின்னே சென்று விளையாடி, உணவு கொடுத்து, இடையில் வீட்டு வேலைகளையும் கவனித்து அவனைத் தூங்க வைத்தால், மாலைதான் எழுவான். அவனைத் தூங்க வைத்த பின் வீடு முற்றுப்பெற்ற போர்க்களம் போலிருக்கும். சிறு சத்தமில்லாமல் கலையும், பவித்ராவும் இருப்பார்கள். விழுந்த பொருள்களை எடுத்து வைத்து, கலைந்தவற்றைச் சரி செய்து, வீட்டை சத்தமில்லாமல் சுத்தம் செய்வாள். பாத்திரங்களை இயந்திரத்தில் போட்டால் அதுவே தேய்த்துவிடுகிறது. துணிகளையும் இயந்திரம்தான் துவைக்கிறது. இவையெல்லாம் முடிக்கும் நேரமும் தீபு எழும் நேரமும் சரியாக இருக்கும். அவனுக்கு அவித்த உருளைக்கிழங்கையோ ஆப்பிளையோ தருவாள். சொந்த வீடு போல் வீடு முழுக்க உலவும் உரிமை உண்டு. ஐந்து மணிக்கு நடையைக் கட்டுவாள்.

விசாரணை வளையம் - சிறுகதை

அந்த வீட்டு உரிமையாளரான பவித்ராவுக்கு வீட்டிலிருந்தே பார்க்கும் அலுவல் வேலை. எப்போதும் கணினி, அலைபேசியிலேயே இருப்பாள். அவள் வேலை செய்யும்பொழுது தீபு சற்றும் அருகில் வரக்கூடாது. அப்படி வந்தாலே ``கலைம்மா’’ எனக் குரல் தருவாள்.

கலை, தீபுவைப் பார்த்துக்கொள்வதால் சுத்தமாய்க் குளித்து நல்ல உடுப்பை அணிந்துதான் வேலைக்கு வர வேண்டும் என பவித்ரா நினைப்பாள். அதை மறைமுகமாய் கலைக்கு உணர்த்தியிருக்கிறாள்.

தீபு மெதுவாய் நடக்கவும் ஓரிரு வார்த்தைகள் பேசவும் ஆரம்பித்திருக்கிறான். எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுவிடுவான். `ப்பூஒப்ப்பூஒயொ’ என எச்சிலைப் பூத்தூவலைப்போல் தூவுகிறான். கலையின் முடியைப் பிடித்து இழுப்பான். சில சமயம் பால்கனியிலிருந்து சர்ரென மூத்திரம் போவான். சமையலறை போய் பொறுப்பாக பாத்திரங் களை, கரண்டி களை எடுத்து வந்து பால்கனி வழியாக வெளியே போடுவான். பால்கனியிலிருந்து எட்டிப் பார்த்தால் கீழே பால்கனியை ஒட்டியபடி நீளமான, அகலமான தரைத் தளத்தின் மேற்கூரை இருக்கும். அதனால் எளிதாய் இறங்கி, போட்ட சாமான்களை எடுத்து வந்துவிடுவாள். நல்லவேளை, வீடு முதல் தளத்தில் இருக்கிறது. இருபதாவது மாடியிலில்லை.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை தன் ஏழு வயது மகள் அனுவை சமாதானப்படுத்துவது. ஒருமுறை அனுவை அந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றாள். தீபு கலையிடமே ஒட்டிக் கொண்டிருந்தான். அனுவைக் கலையருகே அண்டவிடவில்லை. தொட்டால் தட்டி விட்டான். அனுவுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அவனைக் கிள்ளிவிட வேண்டும் என நினைத்தாள். அன்றிலிருந்துதான் அனுவுக்குக் கலை அந்த வீட்டில் வேலைக்குச் செல்வது பிடிக்கவில்லை. அனுவுக்குக் கோபம் வந்தால், ``உனக்கு அந்த தீபுப்புள்ளதான முக்கியம். நான்லாம் புடிக்காது. போ, அவனுக்கே அம்மாவா இரு’’ எனக் கோபித்துக்கொள்வாள். கலை எந்தப் பக்கமும் நிற்க முடியாமல் தவிப்பாள். அனுவை சமாதானப்படுத்துவதே அவளுக்குப் பெரும் வேலையாகிப்போனது.

கலை விறுவிறுவென நடந்து அந்த வீட்டை அடைந்தாள். இன்று தாமதமாகிவிட்டது. என்றைக்குமில்லாமல் இன்று அந்த வீடு ஆள் அரவமாய் இருந்தது. பலரும் இருந்தார்கள். கலையைக் கண்டதும் பவித்ராவின் முகம் மாறியது. பவித்ராவின் கையிலிருந்த தீபு அவளைப் பார்த்துச் சிரித்து அவளிடம் தாவ முற்பட்டான். எல்லாருடைய கண்களும் கலையையே பார்த்தன. கலைக்கு ஒன்றும் விளங்கவில்லை. மெதுவாய் என்ன என்பது போல் பவித்ராவைப் பார்த்தாள்.

பவித்ரா கலையின் அருகில் வந்தாள். ``கலைம்மா, என் செயின் பாத்தீங்களா?’’

கலைக்குத் தூக்கிவாரிப் போட்டது... ``எந்த செயின் மா?’’

``நான் கழுத்துல போட்ருந்தேன்ல அது...’’

அவள் கணவன் தேவன் இடைமறித்தான். ‘‘இரு, வர்றவங்க விசாரிக்கட்டும். அதான் தொலைச்சுட்டல்ல, அப்புறம் என்ன?’’ எனக் கடுகடுத்தான். வேறு யாரோ தேவனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

‘‘இல்ல அங்கிள். இப்ப யாரைன்னு கேக்க முடியும்? கேட்டாலும் ஆமான்னு தரப் போறாங்களா?’’

‘‘கொஞ்சம் அமைதியா இருங்க... பேசிக்கலாம்.’’ அருகில் இருந்தவர் சொன்னார்.

விறுவிறுத்துப்போனது கலைக்கு. அதுவும் இந்தப் பழகாத மேட்டிமைக் கூட்டம் அவளை அந்நியப் படுத்தியது. என்ன ஏதென்று தெரியாமலேயே நொடியில் உள்ளங்கை வியர்த்தது. குப்பென உடல் சூடு பரவியது.

‘‘நான் எதும் எடுக்கலைங்க பவித்ராம்மா.’’ நடுக்கமாய் சொன்னாள்.

கலை வரும்போது வயிற்றுப் பசியோடு இருந்தாள். விடியற்காலையில் டீயில் பன்னை முக்கி முழுங்கியதோடு சரி. இடுப்பொடிய வீட்டு வேலை செய்து மைல்கணக்காய் நடந்தால் எந்த மூலைக்கு வரும். எப்பவும் இங்கேயே மீதமிருக்கும் காலை உணவைத் தருவார்கள். இப்போது வெற்று வயிற்றில் பயமும் சேர்ந்துகொண்டதால் கைகள் தடதடவென நடுங்கின.

சில நிமிடங்களில் அந்த வீட்டுக்குள் உயரமாக வாட்டசாட்டமாக இளம் வயதில் ஒருவரும் ஒரு மத்திய வயதிருக்கும் பெண்ணும் வந்தனர். காக்கி உடுப்பு அணியவில்லையெனினும் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் காவல்துறை எனத் தெரிந்தது.

பவித்ராவின் கணவன் தேவன் வணக்கமென கைகளைக் கூப்பினான். அவர்களுக்குள் அறிமுகம் நடந்தன. அவருக்கும் உடன் வந்த பெண்ணுக்கும் தேநீரும் பிஸ்கட்டும் வழங்கப்பட்டன.

‘‘சந்திரசேகர் ஐயா உங்களுக்கு என்ன வேணும் சார்?’’ வந்த இன்ஸ்பெக்டர் கேட்டார்.

‘‘என் மனைவியோட தாய்மாமா.’’ தேவன் பதில் சொன்னான்.

‘‘மதுரைல மூணு வருஷம் முன்னாடி அவர் டி.எஸ்.பியா இருந்தப்போ மீட் பண்ணியிருக்கேன். ரொம்ப நல்ல மனுஷன். அவ்வளவு தன்மையா பேசுவார். இன்னைக்குக் காலைல அவர் போன் பண்ணிச் சொன்னதும் முதல் வேலையா கிளம்பி வந்துட்டேன். ரிட்டயர் ஆனப்புறமும்கூட ஐயா பத்தி டிபார்ட்மென்ட்ல இப்பவும் பேச்சு வரும் சார்.’’ டீ தந்த உற்சாக மிகுதியில் இன்னும் வார்த்தைகள் வெளிவந்தன.

பரஸ்பரம் விசாரித்த பின் என்ன நடந்ததென வினவினார். பவித்ரா, ‘‘நேத்து மத்தியானம் குளிக்கப் போறதுக்கு முன்னாடி செயினைக் கழட்டி பெட்ரூம்ல பெட்டுக்குப் பக்கத்துல இருக்கற டேபிள்ல வச்சேன் சார். குளிச்சிட்டு வந்து பசியில நேரா சாப்பிடப் போயிட்டேன். அப்றம் ஞாபகம் வந்து செயினை எடுக்கப் போனா, அதைக் காணோம்’’ என்றாள்.

‘‘வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?’’

‘‘நான், குழந்தை, என் ப்ரெண்டு கீர்த்தி, அப்றம் கலை, எங்க வீட்ல வேலை பாக்கறவங்க’’ என பவித்ரா கலையை நோக்கிக் கை காண்பித்தாள்.

இன்ஸ்பெக்டர் கலையைப் பார்த்துவிட்டு மீண்டும் பவித்ராவிடம் விசாரித்தார். ‘‘நல்லா ஞாபகம் இருக்கா? டேபிள்லதான் வச்சீங்களா?’’

‘‘ஆமாங்க சார். டேபிள்லதான் வச்சுட்டுப் போனேன்.’’

‘‘`எவ்ளோ பவுன் இருக்கும்?’’

‘‘எட்டுப் பவுன் சார். அதோட வைரக் கல் பதிச்ச டாலர் இருக்கு’’ என தேவன் அவசரமாய்ச் சொன்னான். பவித்ரா குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தாள்.

‘‘ஓ’’ என இன்ஸ்பெக்டர் புருவம் உயர்த்தினார்.

‘‘இன்னும் விளக்கமா சொல்லுங்கம்மா. எப்போ குளிக்கப் போனீங்க, யாரெல்லாம் இருந்தாங்க, எப்ப காணாமப் போச்சுன்னு சொன்னா ஏதாவது யூகிக்கலாம்.’’

‘‘சார், தினமும் குளிக்கறப்போ எல்லாம் செயினைக் கழட்ட மாட்டேன். எண்ணெய் தேச்சுக் குளிக்கறப்போ மட்டும் செயினைக் கழட்டி பீரோ லாக்கர்ல வச்சுடுவேன். நேத்து கழட்ட மறந்து எண்ணெய் வச்சுக்கிட்டேன். குளிக்கப் போறப்பதான் ஞாபகம் வந்துச்சு. சரி, செயின் பிசுபிசுப்பா இருக்குமே, இங்கேயே வச்சுட்டு அப்புறம் வாஷ் பண்ணிப் போட்டுக்கலாம்னு டேபிள்ல வச்சுட்டுப் போனேன் சார். குளிச்சுட்டு வெளில வந்ததும் கலைம்மா வந்து எங்கிட்ட அவங்க மகளுக்கு உடம்பு சரியில்லைன்னு ஸ்கூல்ல இருந்து வந்துட்டதாகவும், அவங்க பக்கத்து வீட்டுக்காரம்மா போன் பண்ணினதாகவும் சொன்னாங்க. சரி நிஜமாவே உடம்பு சரியில்லை போல பாவம்னு உடனே போகச் சொல்லிட்டேன்.

அப்றம் நான் என் பையனை வச்சுக்கிட்டே சாப்பிட்டு முடிக்கறப்போதான் செயின் ஞாபகம் வந்துச்சு. வந்து டேபிள்ல பார்த்தா காணோம். பகீர்னு இருந்துச்சு, உடனே எல்லா இடத்துலயும் தேடிப்பார்த்தேன். இவன்ட்டகூட கேட்டேன். பால்கனி வழியா கீழிருக்கிற ரூப்ல இவன் சாமான்லாம் தூக்கிப் போடுவான். அதனால அங்கேயும் இறங்கி நானும் என் ப்ரெண்டும் பார்த்தோம். அங்கேயும் இல்ல. வீடு முழுக்க மூலைமுடுக்குகூட விடாமத் தேடிப் பார்த்தோம். கிடைக்கல சார்.’’

இன்ஸ்பெக்டர் படுக்கையறையில் பார்த்தார். எல்லாமே தாறுமாறாய்க் கலைந்திருந்தன. வந்திருந்த பெண் காவலர் வீடு முழுக்கச் சென்று தேடிக்கொண்டிருந்தார். பால்கனிக்குச் சென்று எட்டிப் பார்த்தார்.

இன்ஸ்பெக்டர் பவித்ராவைப் பார்த்து, ‘‘உங்க ப்ரெண்டுன்னு சொன்னீங்களே, அவங்க யாரு? தப்பா நினைக்காதீங்க, விசாரிக்கறப்போ எல்லார் மேலேயும் சந்தேகம் வந்தாத்தான் தீர்வு கிடைக்கும்.’’

விசாரணை வளையம் - சிறுகதை

‘‘நீங்க தாராளமாவே விசாரிக்கலாம் சார். ஆனா அவ என் பெட்ரூமுக்கு வரவேயில்லை சார். குளிச்சிட்டு வந்ததும், ரெண்டு பேரும் டைனிங் ரூம்லதான் இருந்தோம்’’ எனச் சொல்லி, அதற்குப் பிறகு ஆங்கிலத்தில் உரையாடினாள். ‘‘அதுமில்லாமல் அவ ரொம்ப வசதியானவ சார்.அவங்கப்பா நகைக்கடை வச்சிருக்காங்க. அவ எடுக்க வாய்ப்பில்லை. எனக்கென்னமோ இவங்க மேலதான் சந்தேகம் இருக்கு. அந்த ரூம்ல இவங்களும் என் பையன் மட்டும்தான் இருந்தாங்க. ஒருவேளை குழந்தை எடுத்திருந்தா இங்கதான போட்ருக்கணும். வீடு முழுசும் அலசியாச்சு. எங்கேயும் இல்ல.

என்னைக்குமில்லாம அவங்க சீக்கிரம் வேற போனாங்க. வீட்டு என்ட்ரன்ஸ்ல சிசிடிவி கேமரா வச்சிருக்கோம். அந்த ரெக்கார்டை எடுத்துப் பார்க்கிறப்போ, இவங்க ஷாலைப் போத்திக்கிட்டு நடந்து போனாங்க. எப்பவும் நார்மலா போறவங்க ஏன் நேத்து ஷாலைப் போர்த்திட்டுப் போகணும்?’’ என்று சொன்னாள்.

‘‘இதுக்கு முன்னாடி எதாவது பொருள் காணாமப்போயிருக்கா, இல்ல காசு?’’

தேவன் இடைமறித்தான். ‘‘இதுக்கு முன்னாடி இல்லைங்க சார். ஆனா மனுஷனுக்கு எப்போ ஆசை வரும்னு தெரியாதில்ல. எங்களுக்கு அவங்க மேலதான் சந்தேகம்’’ என்றான்.

‘‘சரி... இருங்க. பொறுமையா விசாரிச்சுதான் முடிவு பண்ணணும். அந்தம்மா எடுக்கலைன்னு வச்சுக்கோங்க, அது தேவையில்லாத பிரச்னை தந்துடும். இப்பல்லாம் கைல இருக்கற போன்தான் மீடியாவே’’ என மெதுவாக கலைக்குக் கேட்காமல் சொன்னார்.

‘‘உங்க ப்ரெண்டை இப்ப வரச் சொல்ல முடியுமா? எங்களுக்கு அவங்க அட்ரஸும் வேணும்’’ எனக் கேட்டு விட்டு, கூடத்தில் ஓரமாய் நின்றிருந்த கலையிடம் வந்து பேச்சு கொடுக்க வந்தார். அவள் ஏற்கெனவே அழ ஆரம்பித்திருந்தாள்.

‘‘வீடு எங்கம்மா இருக்கு?’’

‘‘இங்கேருந்து ஒரு மைல் தூரக் கணக்கா லிட்டில் ப்ளவர் மாண்டசரி ஸ்கூல் இருக்குல்ல, அது பக்கத்துல முனியப்பன் கோவில் சந்துல இருக்கு சார்’’ குரல் பிசிறியது.

‘‘சொந்த ஊரு இதானா?’’

‘‘இல்ல சார்... கிருஸ்ணகிரி பக்கம். பொழப்புக்காக இங்க வந்தோம்.’’

‘‘எவ்ளோ வருசமா இங்க வேலை பாக்கறீங்க?’’

‘‘ஒண்ணரை வருசம் இருக்கும் சார்... நான் எடுக்கலைங்க சார்.’’ அவளுக்குப் பேச்சே வரவில்லை. கண்களில் நீர் தளும்பி நின்றது.

‘‘வீட்டுக்காரர் என்ன பண்றார்?’’

‘‘அவர் இல்லைங்க சார். எங்கோ போயிட்டாரு. நானும் எம் புள்ளையும் மட்டுந்தான் இருக்கோம்.’’

‘‘எத்தனை மணிக்கு வேலைக்கு வருவீங்க?’’

‘‘காலைல எட்டு மணிலேருந்து அஞ்சு மணி வரைக்கும் இருப்பேன் சார்?’’

‘‘நேத்து எத்தனை மணிக்குப் போனீங்க?’’

‘‘2 மணிக்கு.’’

‘‘ஏன் நேத்து ரெண்டு மணிக்கே போயிட்டீங்க?’’

கலை மௌனமாக மலங்க அவரைப் பார்த்தாள்.

‘‘குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னு போனீங்களா?’’

ஆமா சொல்வதா, இல்லை சொல்வதா என யோசித்து ஆமா சொன்னாள்.

‘‘இங்க பாருங்கம்மா, நீங்க சரியா சொல்லுங்க.ஏன்னா மத்தியானமே அவசரமா போயிருக்கீங்க. சிசிடிவி-ல பாத்தா துப்பட்டாவைப் போத்திக்கிட்டுப் போயிருக்கீங்க. இதெல்லாம் பாத்துதான் அவங்க உங்களைச் சொல்றாங்க. அவங்களையும் நீங்க தப்பு சொல்ல முடியாது. உண்மைய சொல்லுங்க. நீங்க எடுத்திருந்தாலும் பரவாயில்ல, எங்கிட்ட சொல்லுங்க. கஷ்டத்துல இப்படிப் பண்ணீட்டீங்கன்னு சொல்லி, நான் உங்க மேல கேஸ் வராத மாதிரி பாத்துக்கறேன். இதோட விட்டுடச் சொல்றேன்.’’ அவர் பரிவாகச் சொன்னார்.

‘‘இல்ல சார். நான் எடுக்கல.’’ அவள் வார்த்தைகள் தடங்கலாகி வெளிவந்தன.

‘‘சரி, யார் உங்களுக்கு கால் பண்ணி புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னது?’’

‘‘பக்கத்து ஊட்டுலேருந்து.’’

‘‘எங்கே, உங்க மொபைல் கொடுங்க’’ என்று கை நீட்டி அவளிடம் கேட்டார். கையிலிருந்த அலைபேசியைக் கொடுத்தாள். கைகள் பதற்றத்திலேயே இருந்தன.

அவர் அலைபேசியின் அழைப்புகளைப் பார்த்துவிட்டு, ‘‘நேத்து மத்தியானம் ஒரு கால்கூட வரலையேம்மா. பின்ன எப்படி பக்கத்து வீட்டுக்காரங்க உங்ககிட்ட சொன்னாங்க?’’ கொஞ்சம் கடுகடுப்பாய்க் கேட்டார். கலை முழித்தாள்.

‘‘நீங்க இப்பவும் உண்மைய சொல்லலைன்னா என்னால எதும் பண்ண முடியாது. அப்றம் கேஸ் போட்டா, விசாரணைக்கு ஸ்டேஷன் கூப்பிடுவாங்க. நாள பின்ன யாருமே உங்கள வேலைக்கு வச்சுக்க மாட்டாங்க. இப்பவும் உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன். உண்மையச் சொல்லுங்க’’ என்றார்.

கலை எச்சிலை முழுங்கி, சொல்ல ஆரம்பித்தாள். ‘‘சார், நேத்து மத்தியானம் அவங்க குளிக்கப் போனதுக்கு அப்றம் நான் எப்பவும் போல குழந்தையைப் பாத்துக்கிட்டு இருந்தேன்...’’ அதற்குள் ஏதோ ஒன்று அவள் குரலை இறுக்கிப் பிடித்தது. எல்லாரும் சட்டென மறைந்தால் ஓவெனக் கத்தி அழலாம் போன்ற துக்கம் தொண்டையை அடைத்து வெளிவரத் தள்ளியது. எச்சிலை முழுங்கித் தணித்தாள். மீண்டும் சொல்ல ஆரம்பித்தாள்.

‘‘ஒரு அஞ்சு நிமிசமாயிருக்கும். எனக்குத் தீட்டு வந்த மாதிரி இருந்துச்சு. பாத்தா ட்ரெஸ்ல பின்னாடி எல்லாம் ரத்தக் கறை ஆயிடுச்சு... வெள்ளக் கலர் டிரஸ்ங்கறதால அப்படியே தெரிஞ்சுது. எப்படி இவங்ககிட்ட சொல்றதுன்னு தெரில. இதச் சொன்னா அவங்க தப்பா நினைச்சுடுவாங்களோன்னு நெனச்சேன். மாத்துத் துணியுமில்ல. பேடும் இல்ல. வீடு தூரங்கறதால போயிட்டு எல்லாம் செஞ்சுட்டு வர்றதுக்குள்ள சாயங்கால டைம் ஆயிடும். சரி வேலைலாம் முடிச்சாச்சு, ஊட்டுக்கே போயிடலாம்னு நினைச்சுதான் வேற என்ன காரணம் சொல்றதுன்னு தெரியாம புள்ளைக்கு உடம்பு சரியில்லைன்னு பொய் சொன்னேன். இதுவரைக்கும் இப்படி ஆனதில்ல. மொதோ தடவை இப்படி ஆனதால பதட்டத்துல பொய் சொல்லிட்டேன்.’’ முடிக்கும்போது கண்களில் நீர் வந்தது.

விசாரணை வளையம் - சிறுகதை

குரல் தழுதழுக்க, ‘‘நான் எடுக்கல சார்... கறை தெரியக்கூடாதுன்னுதான் துப்பட்டாவைப் போத்திக்கிட்டுப் போனேன். செயினை மறைக்க இல்லைங்க சார்.’’ சரசரவெனக் கண்ணீர் பெருகி அதுபாட்டுக்கு வழிந்துகொண்டிருந்தது. கைகளால் கண்ணீர் வழிய விடாமல் துடைத்துக் கொண்டிருந்தாள்.

தேவனுக்கு அவசரம். தாங்கள் யூகித்தது பொய்யாய்ப் போய்விடக் கூடாது என்ற பதற்றம். இன்ஸ்பெக்டரைப் பார்த்து, ‘‘சார், எனக்கென்னமோ இவங்க பொய் சொல்றாங்கன்னு தெரியுது. கொஞ்சம் டீட்டெய்லா விசாரிங்க’’ என்றான்.

இன்ஸ்பெக்டர் அவனைத் தனியாக அழைத்துப் போய் “கொஞ்சம் பொறுமையா இருங்க சார். ஒண்ணும் அவ்வளவு கஷ்டம்லாம் இருக்காது. இருந்தவங்க மொத்தமே ரெண்டு வெளியாளுதான். அதனால கொஞ்சம் கெடுபிடி பண்ணினா கண்டுபிடிச்சிடலாம். நீங்க வந்து ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளெயின்ட் கொடுத்துடுங்க.’’

‘‘சார், அந்தம்மாவைக் கைது பண்ணி விசாரிக்க முடியாதா?’’

இன்ஸ்பெக்டர் அவனைச் சில நொடிகள் உற்றுப் பார்த்துவிட்டு, ‘‘அங்க இருந்த வெளியாளு மொத்தம் ரெண்டு பேரு. எத வச்சு ஒருத்தரை மட்டும் கைது பண்ணச் சொல்றீங்க?’’

‘‘கீர்த்தி பண்ணியிருக்க மாட்டாங்க சார். அவங்க எங்க பேமிலி ப்ரெண்டுங்கறதுக்காகச் சொல்லலை. அவங்க வீட்ல இல்லாத நகையா? வாய்ப்பில்லை சார்.’’

‘‘சார், திருடறதுக்கு ரெண்டு காரணம் இருக்கு. ஒண்ணு பணத் தேவை. இன்னொண்ணு திருடற வியாதி. அப்படிப் பார்த்தா ரெண்டு பேரையும்தான் விசாரிக்கணும்.’’

தேவனின் முகம் மாறியது. இன்ஸ்பெக்டர் அவனை சமாதானப்படுத்த எண்ணி, சிரித்தபடி, ‘‘சார், கவலைப்படாதீங்க. எவ்ளோ கேஸ் தினமும் பாக்கிறோம். நாங்க டீல் பண்ணிக்கறோம். நீங்க கவலைய விடுங்க. சீக்கிரம் உங்க செயின் கிடைக்க வழி பண்றேன்’’ என்றார்.

அதற்குள் மதியம் ஆகிவிட்டிருந்தது. அந்தத் தோழியும் வந்துவிட்டாள். அவளிடமும் விசாரித்தார்கள். கலைதான் திருடிவிட்டாள் என அங்கிருந்தவர்கள் முடிவே கட்டிவிட்டார்கள். ஜாடைமாடையாக பேசினார்கள்.

“நீ இரக்கப்பட்டு எல்லாம் செஞ்ச. ஆனா நல்லதுக்குக் காலமில்ல. உங்கிட்டயே வேலையை காமிச்சிருக்குது. யாரையுமே இந்தக் காலத்துல நம்பக் கூடாது. அந்தந்த இடத்துல வைக்கணும். நானே ஒருநாள் பாத்துட்டு வீட்ல சொன்னேன், இவங்க வேலைக்காரம்மாவுக்கு ரொம்ப இடம் தர்றாங்கன்னு.” இந்த வார்த்தைகளெல்லாம் பவித்ராவை நோக்கிச் சொல்லப்பட்டன.

கலை அங்கு நடப்பதைக் கவனிக்க விருப்பமில்லாமல் பால்கனியில் போய் நின்று கொண்டாள். இதே பால்கனியில் அனுதினமும் காற்று வாங்கி, அங்கிருக்கும் வீடுகளையும், தூரமாய் சாலையில் போகும் வாகனங்களையும் பராக்குப் பார்த்து, தன் சொந்த வீடுபோல் அகமகிழ்ந்திருக்கிறாள். இன்று நெருப்பில் நிற்பது போல் வேதனை தந்தது.

தன்னுடைய வீதியில் யாராவது தனக்குத் தெரிந்த பெரிய மனிதர்கள் இருக்கிறார்களா என யோசித்தாள். யாரிடமும் பேசியதே இல்லை. பக்கத்து வீட்டு அம்பிகா மூலம் கேட்டுப் பார்க்கலாம். இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் தன்னை எப்படி மதிப்பார்கள், தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிக்கும் வரை நரகம்தானே என நினைக்கும்போதே மனம் ஆறாமல் வெம்பியது.

ஒரு காகம் பால்கனியில் தடுப்புச்சுவரில் வந்தமர்ந்து கலையையே உற்றுப் பார்த்தது. தினசரி மதியத்தில் தீபுவுக்கு பால்கனியில் வேடிக்கை காண்பித்தபடியே உணவு தரும் போது இந்தக் காகம் வரும். காகத்துக்கும் சிறிது உணவிடுவாள். அதைப் பார்த்த களிப்பில் தீபுவும் உண்பான். இந்தக் காகம் தினமும் அலாரம் அடிப்பது போல் இதே நேரத்துக்கு வந்துவிடும். ஓரிரு நிமிடங்கள் தாமதமாகி உணவு வராவிட்டால்கூட காகம் கரைய ஆரம்பிக்கும். இன்றும் வந்துவிட்டது.

தீபு என்ன செய்கிறான் என பார்த்தாள். தீபுவின் வாயில் உணவைத் திணிக்க பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவன் உண்ணாமல் திமிறிக்கொண்டிருந்தான். இங்கே காகம் கரைய ஆரம்பித்தது.

இன்ஸ்பெக்டர் பெண் காவலருடன் வந்தார். ‘‘நீங்க வீட்டுக்குக் கிளம்புங்கம்மா, இவங்க உங்க வீட்டைப் பாக்கறதுக்குக் கூட வருவாங்க’’ என்றார். சரியெனத் தலையாட்டி அந்தப் பெண் காவலருடன் ஆட்டோவில் சென்றாள்.

மிகச் சிறிய ஒற்றையறை வீட்டுக்குள் அந்தப் பெண்மணியை அழைத்துச் சென்றாள். எல்லாவற்றையும் சோதனையிட்டுப் பார்த்தார் அந்தக் காவலர். பின் அவளிடம், ‘‘எங்கேயும் போகக் கூடாது. போனாலும் எங்ககிட்ட தப்பிக்க முடியாது. உனக்குத் தெரியாம நாங்க கண்காணிச்சிட்டு இருப்போம். விசாரணைன்னு கூப்பிட்டா வரணும்’’ எனக் கறாராய்ப் பேசினார்.

சரி எனத் தலையாட்டினாள். கலைக்கு பசி அடங்கிப்போயிருந்தது. அப்படியே சுவர் ஓரமாய் அமர்ந்துகொண்டாள். அங்கிருந்தவர்கள் அவளைப் பார்த்த பார்வை இன்னும் அவளுக்குள் கூர் ஊசியாய்க் குத்திக் கொண்டிருந்தது. சிறு வயதிலிருந்தே எதற்கும் ஆசைப்பட்டதில்லை. கீழே கிடந்த பொருளைக்கூட எடுத்ததில்லையே. தனக்கு ஏன் இப்படி வீண் அபவாதம்.

மாலை அனு வீட்டுக்குள் நுழைந்ததும் கலையைப் பார்த்து ஆச்சரியமாய், வாயெல்லாம் சிரிப்பாய் ‘‘ஐ... இன்னைக்கும் இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட, லீவு கொடுத்துட்டாங்களா?” என மடியில் வந்து அமர்ந்துகொண்டாள். அனு ஏதேதோ பள்ளிக்கதைகளைச் சொன்னாள். அவள் சொல்வதை ஆர்வமாய்க் கேட்பதுபோல் செயற்கையாய்ச் சிரித்துக்கொண்டேயிருந்தாள்.

அடுத்த நாளிலிருந்து வீட்டிலேயே பொழுதைக் கழித்தாள். ஒன்று சொன்னால் ஒன்பதைச் சொல்லும் உலகம் என யாரிடமும் இதைப் பற்றி மூச்சு விடவில்லை. தானுண்டு வேலையுண்டு என இருக்கும் தன்னைப் பற்றி யாரிடம் விசாரிப்பார்கள். செயினை ஏதாவது அடகுக் கடையில் வைத்திருப்பேன் என, போய்க் கேட்பார்களோ? எந்த அடகுக் கடை இங்கு இருக்கிறது? நாம் எடுத்திருந்தால் நிரூபிக்கட்டும் பார்க்கலாம். ஒருவேளை எடுத்தவர்கள் பழியை நம் மேல் திருப்ப, வேண்டுமென்றே நம் வீட்டில் கொண்டு வந்து போட்டுவிட்டால் என்ன செய்வது? சே... அப்படியெல்லாம் நடக்காது... முருகன் நம்மைக் கைவிடமாட்டார் என, சுற்றிச் சுற்றி சுயசமாதானம் செய்வதே கலைக்குப் பெரும்பாடாக இருந்தது..

அந்தச் செயினை யாரும் எடுக்கவில்லை. வீட்டிலும் இல்லையென்றால் எங்கே மாயமாய்ப் போயிருக்கும்? ஒருவேளை வேறெங்கோ தொலைத்துவிட்டு பவித்ரா நாடகமாடுகிறாளோ?

முன்பு பவித்ரா நல்ல நல்ல வீட்டுப் பொருள்களைக் கலைக்குத் தருவதைப் பார்த்த பக்கத்து வீட்டு அம்பிகா “இவங்களுக்கெல்லாம் காரியம் ஆற வரைக்குந்தான் பரிவு பாசம்லாம், இவங்களுக்குன்னு ஒண்ணு வந்துட்டா கழுவிலும் ஏத்தத் தயாரா இருப்பாங்க. கவனமா இரு” எனச் சொன்னது உறைத்தது. “ஐயய்யோ, எப்படியாவது அந்தச் செயின் கிடைச்சாப் போதும், பழனில வந்து மொட்டை போட்டுக்கறேன் சாமி” என முருகனை தினமும் வேண்டிக்கொண்டாள்.

ஒரு வாரம் ஆயிற்று. அந்தச் சங்கிலி பற்றி எந்தத் தகவலும் இல்லை. உலகமே நிசப்தமாய் தன்னை கவனிப்பது போலிருந்தது. யாராவது அவளை சாதாரணமாகப் பார்த்தாலே தன்னைக் கண்காணிக்க வந்த போலீஸோ என நினைத்தாள். பெரும் பழி, மனப் போராட்டம் இதையெல்லாம் தாண்டி இப்படியே இருந்தால் சரிப்படாது என வேலை தேட முற்பட்டாள். சற்று அருகிலேயே ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை கிடைத்தது. காலை முதல் இரவு எட்டு மணி வரை வேலை. அனு தனியாக வீட்டில் இருப்பதைக் கண்டு மனம் ஒப்பாமல் தான் வரும் வரையில் அம்பிகா வீட்டில் இருக்கச் சொன்னாள்.

விசாரணை வளையம் - சிறுகதை

ஒரு நாள் அந்தப் பெண்காவலர் வீட்டுக்கு வந்தார். கலை கலவரமாய் அவரைப் பார்த்தாள்.

‘‘இந்தாம்மா, உனக்கு நல்ல சேதி... செயின் கிடைச்சுடுச்சாம்’’ என்று சிரித்தபடி சொன்னார்.

‘‘யாரு எடுத்தாங்க?’’

‘‘அட யாருமில்ல... அவங்க வீட்டுல கீழ வச்சிருக்கற ஏசி திடீர்னு வேலை பண்ணலையாம். ரிப்பேர் பண்ண ஆளக் கூட்டிட்டு வந்திருக்காங்க. ஏசிய கழட்டிப் பாத்தா, உள்ள அவங்க செயின், ஸ்பூன், இன்னும் ஏதேதோ குட்டிக் குட்டி ப்ளாஸ்டிக் சாமான்லாம் கிடந்துச்சாம். பயபுள்ள ஏசி பெட்டில இருக்கற கேப்புல போட்ருக்கான் போல. அவங்க இப்பதான் கால் பண்ணி கம்ப்ளையின்ட் வாபஸ் பண்ணிக்கறதா சொன்னாங்க. இன்ஸ்பெக்டர் உடனே உங்கிட்ட சொல்லச் சொன்னார். என்ன நேரமோ நீ தப்பிச்ச. இல்லைன்னா உன்ன வச்சு செஞ்சிருப்பாங்க’’ எனச் சிரித்தார்.

கலைக்கு அப்போதுதான் குரல் உடைந்தது. அடைபட்டுக்கொண்டிருந்த அழுகை ஓவெனப் புறப்பட்டு பிரபஞ்சத்துடன் கலந்தது.