Published:Updated:

வாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்!

கலாப்ரியா

க்வாரன்டைன் காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என எழுத்தாளர்கள் சிலரிடம் பேசினோம்.

வாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்!

க்வாரன்டைன் காலத்தை எப்படி கழிக்கிறார்கள் என எழுத்தாளர்கள் சிலரிடம் பேசினோம்.

Published:Updated:
கலாப்ரியா
கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி அனைவருமே வீட்டிற்குள் முடங்கியிருக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த ஓய்வு நேரத்தில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்ன செய்கிறார்கள் என விசாரித்தோம். தாங்கள் படித்த நூல்களையும் வாசகர்களுக்கான பரிந்துரையாகத் தெரிவித்துள்ளனர்.

வேல ராமமூர்த்தி:

தமிழின் மண்சார்ந்த கதைசொல்லியான வேல ராமமூர்த்தி தற்போது பிசியான நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

``அரசாங்கம் ஊரடங்கை அறிவிக்கும் முன்னமே சொந்த ஊருக்கு வந்துட்டேன். பரபரவென இருந்துட்டு இப்போ என்ன செய்யலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன். அப்பதான் ஒரு யோசனை தோணுச்சு.

இதுவரைக்கும் சிறுகதை, நாவல் மட்டுமே எழுதிக்கிட்டு இருந்தேன். வீட்டிலேயே அடைஞ்சு கிடக்குற இந்தக் காலத்தில `வெள்ளாவி'னு ஒரு திரைக்கதையும் எழுதத் தொடங்கியிருக்கேன். அதைக் கூடிய சீக்கிரமே திரைப்படமாக்கவும் திட்டமிட்டிருக்கேன். நாவலும் சரி, திரைக்கதையும் சரி மண் சார்ந்த கதைதான்" என்றார்.

நீண்ட நாள் கெடப்புல போட்ட நாவலை எழுதி முடிச்சுருலாம்னு உக்காந்து எழுதிக்கிட்டு இருக்கேன். நாவலோட பேரு `கடக்கொம்பு' .
வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி
வேல ராமமூர்த்தி

நான் எழுதவந்த ஆரம்பகாலத்தில் அதிகம் வாசித்தேன். பின், திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தவுடன் வாசிப்பதற்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை‌. இந்த க்வாரன்டைனில் அதிகம் வாசிக்கிறேன். வைக்கம் முகமது பஷீரின் நாவல்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். ரஷ்ய இலக்கியங்களும் இடையில் வாசிக்கிறேன். பஷீர், ஜெயகாந்தன், தகழி சிவசங்கரப் பிள்ளை, ரஷ்ய எழுத்தாளர்களான தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஆந்தோன் செகாவ், ஈழத்து எழுத்தாளர்களான அகரமுதல்வன், அ.முத்துலிங்கம் இவர்களின் படைப்புகள் வெகுவாக என்னைக் கவர்ந்தன.

வைக்கம் முகமது பஷீர்
வைக்கம் முகமது பஷீர்

இந்த ஊரடங்கில் வீட்டில் முடங்கிக் கிடப்பவர்கள் வாசிக்க என் பரிந்துரை:

  • 1. சித்ர பாரதி- ரா. அ பத்மநாபன்

  • 2. சதத் ஹசன்‌ மண்ட்டோ படைப்புகள்

  • 3. உலகப் புகழ் பெற்ற மூக்கு - வைக்கம் முகமது பஷீர்

  • 4. காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் படைப்புகள்

  • 5. கங்கை எங்கே போகிறாள்- ஜெயகாந்தன்

  • 6. வால்காவிலிருந்து கங்கை வரை- ராகுல் சங்கிருத்யாயன் (தமிழில்: முத்து மீனாட்சி)

இப்படி பல நூல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த விடுமுறைக் காலம், படிப்பதற்கான தக்க சமயம். பொழுது போக்கிற்காக நாவலைப் படிக்காமல், ஒரு விஷயத்தை, ஒரு நிலப்பரப்பில் உள்ள மக்களை, அந்த நிலப்பரப்பின் சூழலைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும் படிக்கவேண்டும் என்பதே என் வேண்டுகோள். எந்த நாவலும் நமக்கு டீ, காபி, சாப்பாடு எதுவும் வாங்கித்தராது. மாறாக, நல்ல மனிதனை, பண்பட்ட மனிதர்களை உருவாக்கும். ஒரு நாவல் இதைத் தவிர வேறென்ன செய்ய வேண்டும்" என்றார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வண்ணநிலவன்

கடல்புரத்தில், கம்பாநதி போன்ற உன்னதமான நாவல்களும், எஸ்தர், பாம்பும் பிடாரனும் போன்ற சிறுகதைத் தொகுப்புகளையும் எழுதியவர் வண்ணநிலவன். தனது தனித்துவமான மொழிநடையால் தனக்கென ஒரு வாசகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

``வீட்டிலேயே அடைந்துகிடக்கும் இந்தக் காலத்தில் நிறைய வாசிக்கலாம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள `வைக்கம் முகமது பஷீரி'ன் நாவல்களை தற்போது வாசித்துமுடித்தேன். அருமையாக இருந்தது. அடுத்து தி. ஜானகிராமனின் சிறுகதைகளை வாசித்துவருகிறேன். ஒரே நேரத்தில் 3 அல்லது 4 புத்தகங்களை வாசிக்கிறேன். `50 greatest short stories' எனும் நூல் ரூபா பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. இந்தப் புத்தகத்தில் சில கதைகள் வாசித்துள்ளேன். கொஞ்ச நாள்களுக்கு முன் சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் வாசித்து முடித்தேன்.

வண்ணநிலவன்
வண்ணநிலவன்
ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் படங்கள் யூ-டியூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றையும் தற்போது பார்த்து வருகிறேன்.
வண்ணநிலவன்

மாதவியின் கதாபாத்திரம் மிகவும் பிடித்துப்போய்விட்டது. க்வாரன்டைன் முடித்தவுடன் மாதவியை மட்டும் மைய கதாபாத்திரமாக வைத்து ஒரு நாவல் எழுத எண்ணம் தோன்றியது. அந்த நாவலை எழுத மாதவி குறித்து மு. வரதராசனார் எழுதிய நூலைத் தேடிக்கொண்டிருக்கிறேன். மேலும், பழைய இந்திப் படங்களையும், பழைய துப்பறியும் படங்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் படங்கள் யூ-டியூபில் காணக்கிடைக்கின்றன. அவற்றையும் இந்தக் காலத்தில் பார்த்து வருகிறேன். இப்படியே வாசிப்பும், திரைப்படமுமாக நாள்கள் கழிகின்றன" என்றார்.

கலாப்ரியா

தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் கலாப்ரியா. கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கியத்தின் பல்வேறு வடிவங்களில் இயங்கி வருபவர்.

``அனைவருமே இந்த க்வாரன்டைன் காலத்தில் வாசிப்பதைக் கொஞ்சம் அதிகப்படுத்தலாம்‌. அபுபக்கர் ஆடம் இப்ராஹிம் எழுதி தமிழில் லதா அருணாசலம் மொழிபெயர்த்த `தீக்கொன்றை மலரும் பருவம்' எனும் புத்தகத்தை வாசித்து முடித்தேன். அதைத்தொடர்ந்து `ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம்' நூலை வாசித்தேன்‌. ஜெருசலேம் புத்தகம், தி. ஜானகிராமனின் செம்பருத்தி நாவலை மறுமுறை வாசித்தேன். வாசிப்பதோடு மட்டுமல்லாமல் கொஞ்சம் கவிதைகளும் எழுதிவருகிறேன். அவற்றில் சிலவற்றை முகநூலில் பதிவிடவும் செய்கிறேன்.

கலாப்ரியா
கலாப்ரியா
சுற்றுலா காலத்தில் `குற்றாலம்' பயணிகளுக்காக எவ்வாறு மாறுகிறது. பின், சாதாரண தினங்களில் `குற்றாலம்' எப்படி இருக்கிறது என்பதையும், அதனூடாகக் காதலையும் இணைத்து எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
கலாப்ரியா

கவிதைகளைத் தொடர்ந்து என்னுடைய மூன்றாவது நாவலையும் எழுதத் திட்டமிட்டுள்ளேன். குற்றாலத்தை மையமாக மனதில் வைத்துக்கொண்டு எழுத முயன்று வருகிறேன். சுற்றுலா காலத்தில் `குற்றாலம்' பயணிகளுக்காக எவ்வாறு மாறுகிறது. பின், சாதாரண தினங்களில் `குற்றாலம்' எப்படி இருக்கிறது என்பதையும் அதனூடாக காதலையும் இணைத்து எழுதத் திட்டமிட்டுள்ளேன். இன்னும் சில புத்தகங்களையும் கவிதைத் தொகுப்புகளையும் வாசிக்கத் திட்டமிட்டுள்ளேன். இப்படியாக நாள்கள் ஓடுகின்றன" என்றார்.

ச.தமிழ்ச்செல்வன்

கரிசல் நில எழுத்தாளர்களில் முக்கியமானவர் ச. தமிழ்ச்செல்வன். `வெயிலோடு போய்', `வாளின் தனிமை' போன்ற சிறுகதைத் தொகுப்புகள், `அரசியல் எனக்குப் பிடிக்கும்' போன்ற இவரது கட்டுரைத் தொகுப்புகளும் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. எளிய மக்களின் வாழ்வை, அவர்களுக்கான அரசியலை, ஆண்- பெண் சமத்துவத்தை தன் எழுத்துகளில் தொடர்ச்சியாகப் பதிவுசெய்து வருபவர்.

க்வாரன்டைன் காலத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என ச.தமிழ்ச்செல்வனிடம் பேசினோம்.

``எழுதுவதற்கு தக்கநேரம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இந்த க்வாரன்டைன் இரண்டு புத்தகங்கள் எழுத வாய்ப்பு கொடுத்துள்ளது.

ச. தமிழ்ச்செல்வன்
ச. தமிழ்ச்செல்வன்
`தமிழ்ச் சிறுகதையின் அரசியல்', `ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு' என்ற இரண்டு புத்தகங்களை எழுத தொடங்கியுள்ளேன்.
ச. தமிழ்ச்செல்வன்

இந்தப் புத்தகங்கள் எழுதுவதற்காக நிறைய‌ புத்தகங்களைத் தற்போது வாசித்து வருகிறேன். வ.வே.சு ஐயர் எழுதிய `மங்கையர்க்கரசியின் காதல்' `பாரதியின் சிறுகதைகள்', `புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்த தொகுப்பு',  `கு.ப.ராஜகோபாலன் சிறுகதைகள்', `நா. பிச்சமூர்த்தியின்‌ கதைகள்', கட்டுரைகள், ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய `எழுக நீ புலவன்' மற்றும் பல சிறுகதை தொகுப்புகள் வாசித்து வருகிறேன். ஒரு நாள் தமிழ்ச் சிறுகதையின் அரசியல் புத்தகம் எழுதத் தேவையான புத்தகங்களைப் படித்தால், மறுநாள் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு புத்தகம் எழுதத் தேவையான புத்தகங்களைப் படிக்கிறேன். 50 வருடமாக தமிழ் இலக்கியங்களைப் படித்து வருகிறேன். ஒவ்வொரு புத்தகமும் புதுப்புது அனுபவங்களைத் தருகிறது. இப்படியாகவே இந்த நாள்கள் கழிகின்றன" என்றார்.