Election bannerElection banner
Published:Updated:

நாளை பொங்கல் ஸ்பெஷல் புத்தகக் கண்காட்சி... ஆனால், சென்னைப் புத்தகக் கண்காட்சி நடக்குமா?

சென்னைப் புத்தகக் கண்காட்சி (பழைய படம்)
சென்னைப் புத்தகக் கண்காட்சி (பழைய படம்) ( File Photo )

''2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போதுகூட அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஜனவரியில் நடத்த இயலாமல் ஜூன் மாதம் நடத்தினோம்.''

ஒவ்வோர் ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தொடங்கியதும் புத்தகப் பிரியர்களின் திருவிழா தொடங்கிவிடும். பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து 700-க்கும் மேற்பட்ட புத்தகக்கடைகள், பல லட்சம் தலைப்பிலான நூல்கள், லட்சக்கணக்கான வாசகர்களின் வருகை என்று பபாசி நடத்தும் சென்னை புத்தகக் கண்காட்சி களைகட்டும். இதற்காகவே ஆண்டுமுழுவதும் காத்திருந்து புத்தகங்கள் வாங்குபவர்களும் உண்டு. ஆனால், இந்த ஆண்டு இதுவரை அந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

கொரோனா அச்சம் காரணமாக புத்தகக் கண்காட்சிக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அரசின் வழிகாட்டுதலுக்காகக் காத்திருக்கிறது பபாசி. இதுகுறித்து பபாசியின் தலைவர் சண்முகத்திடம் பேசினோம்.

பபாசியின் தலைவர் சண்முகம்
பபாசியின் தலைவர் சண்முகம்

"ஆண்டுதோறும் நடைபெறும் சென்னைப் புத்தகக் கண்காட்சி என்பது பெரிய அளவில் வாசகர்களையும் பதிப்பாளர்களையும் இணைக்கும் திருவிழா. பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெறும் இந்தக் கண்காட்சியை இந்த ஆண்டு நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. 2015-ம் ஆண்டு வெள்ளம் ஏற்பட்ட போதுகூட அந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியை ஜனவரியில் நடத்த இயலாமல் ஜூன் மாதம் நடத்தினோம்.

இந்த ஆண்டு பொதுமுடக்கம் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. பெருமளவில் மக்கள் கூடும் இதுபோன்ற கண்காட்சிகளுக்குச் சிறப்பு அனுமதி தேவை. எனவே அதற்கான மனுவை அரசிடம் அளித்து அது தற்போது பேரிடர் மேலாண்மைக் குழுவின் பரிசீலனையில் இருக்கிறது. அனுமதி கிடைக்கும் பட்சத்தில் வரும் பிப்ரவரி மாத இறுதி அல்லது மார்ச் மாத முதல் வாரத்தில் இந்தக் கண்காட்சியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம்" என்றார்.

நாளை முதல் சென்னை வர்த்தக மையத்தில் புத்தகக் கண்காட்சி

பபாசியின் அதிகாரப் பூர்வ புத்தகக்கண்காட்சி நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும் புத்தக விற்பனையாளர்கள் ஒருங்கிணைந்து ஆங்காங்கே சிறிய அளவில் புத்தகக் கண்காட்சியை நடத்திவருகிறார்கள். அதேபோன்று ஒரு கண்காட்சியை சென்னை வாசகர் வட்டம் நாளை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடத்துகிறது. இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தைச் சேர்ந்த நாகராஜனிடம் பேசினோம்.

நாகராஜன்
நாகராஜன்

"பொங்கலை ஒட்டி நடைபெறும் சென்னை புத்தகக் கண்காட்சி தள்ளிப்போவதால் வாசகர்கள் ஏமாற்றமடையாமல் இருக்க நாளைமுதல் சிறிய புத்தகக் கண்காட்சி ஒன்றைச் சென்னை வாசகர் வட்டம் ஒருங்கிணைக்கிறது. இதில் 55 புத்தக விற்பனையாளர்கள் கலந்துகொள்கிறார்கள். 8.1.21 அன்று முதல் 18.1.21 தேதிவரை இந்தக் கண்காட்சி நடைபெறும். தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி நடைபெறும் இந்தக் கண்காட்சியில் கொரோனா பாதுகாப்புவிதிகள் முறையாகக் கடைப்பிடிக்கப்படும். வெப்பநிலை சோதித்தே பார்வையாளர்களை உள்ளே அனுமதிக்க இருக்கிறார்கள். முகக்கவசம் இன்றி நிச்சயம் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டர்கள். கொரோனா தொற்றின் காரணமாக முடங்கிய தொழில்களில் பதிப்புத் துறையும் ஒன்று. எனவே வாய்ப்புள்ள வாசகர்கள், புத்தகப் பிரியர்கள் தவறாமல் கலந்துகொண்டு புத்தக விற்பனையாளர்களையும் பதிப்பாளர்களையும் ஆதரிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு