Published:Updated:

“பெண் எழுதிவிடுவதாலேயே பெண் மொழி ஆகாது!”

அம்பை
பிரீமியம் ஸ்டோரி
News
அம்பை

படம்: யோகி

பதினாறு வயதில் ஒரு சிறார் நாவல் மூலம் எழுத்துலகத்துக்கு அறிமுகமான அம்பை, தமிழிலக்கியத்தின் பெண்ணெழுத்து முகமாக அழுத்தமான பல அபூர்வ படைப்புகளைத் தந்தவர். அறச்சீற்றம் கொண்டவர்களாகவும் வெளிப்படையாகப் பேசுபவர்களாகவும், துணிந்து முடிவெடுப்பவர்களாகவும் அம்பை உருவாக்கிய பெண் பாத்திரங்கள் காலத்தில் நிலைத்திருப்பவை. கோவையில் பிறந்து பெங்களூரிலும் சென்னையிலும் டெல்லியிலும் படித்து இப்போது மும்பையில் வசிக்கும் அம்பைக்கு, ‘சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக 2021-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாழ்த்துகளைப் பகிர்ந்துவிட்டு அம்பையுடன் உரையாடினேன்.

“விருது மகிழ்ச்சியளிக்கிறதா?”

“மகிழ்ச்சிதான். ஆனால், எனக்கு முன்னாலிருக்கும் சுந்தரராமசாமி, வெங்கட்சாமி நாதன், ஞானக்கூத்தன் போன்றோருக்கு சாகித்ய அகாடமி கிடைக்கவில்லை. எனக்குக் கிடைத்திருக்கிறது. விருது வாங்கும்போது கூச்ச உணர்வுடன்தான் வாங்குவேன்!”

“பெண் எழுதிவிடுவதாலேயே பெண் மொழி ஆகாது!”

“சராசரியான கற்பிதங்களை உடைத்து குடும்பக் கதைகள் எழுதியவர் நீங்கள். இப்போது வரும் பெண்ணெழுத்துகளை வாசிக்கிறீர்களா?”

“உங்கள் கேள்வியில் சற்று மிகை இருக்கிறது. எனக்கு முன்பாகவே நிறைய பேர் கற்பிதங்களை உடைத்து எழுதியிருக்கிறார்கள். குமுதினி, சாவித்திரியம்மாள், சரஸ்வதியம்மாள், கௌரியம்மாளெல்லாம் செய்யாததை நான் செய்யவில்லை. வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்னைகளை லஷ்மி எழுதியிருக்கிறார். ராஜம் கிருஷ்ணனும் ஏராளமாக எழுதியிருக்கிறார். என் வழியில் நான் முயற்சி செய்திருக்கிறேன் என்பதே சரி. இன்னொரு விஷயத்தையும் பதிவு செய்ய விரும்புகிறேன். பெண்ணாகப் பிறந்ததாலேயே வருகிற பெண்பார்வை என்பது ஒன்று. அதை நான் ஏற்றுக்கொள்வதில்லை. பெண் இப்படித்தான் வாழவேண்டும் என்ற நெருக்குதல் தரும் பட்டறிவால் ஒரு மொழி பிறக்கிறது. அதைத்தான் நான் பெண்மொழி என்கிறேன். பெண் உடலோடு எழுதுவதாலேயே பெண்மொழி பிறக்காது. தி.ஜானகிராமன் மாதிரி எத்தனையோ ஆண் எழுத்தாளர்கள் பெண்ணெழுத்தை எழுதியிருக்கிறார்கள்.”

“தமிழ் இலக்கியச் சூழலில் பெண்வெறுப்பு நிலை இப்போது மாறியிருப்பதாக நினைக்கிறீர்களா?”

“இலக்கியச்சூழலில் மட்டுமல்ல, பொதுச்சூழலிலேயே பெண் வெறுப்பு இருக்கத்தானே செய்கிறது. பெண் என்றாலே ஒரு பொதுக்கருத்து இருக்கிறது. கொஞ்சம் தைரியமாக இருக்கிற பெண்ணின் நடத்தையைப் பற்றி அபிப்ராயம் சொல்லிவிடுவார்கள். எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும் எங்களுக்கு வயதாகிவிட்டால் கிழவிதான். ஆனால் ஆண் எழுத்தாளர் வயதானால் பெரிய குருவாக மாறிவிடுவார். அவர்கள் எப்போதும் கிழவர்களாகவே ஆகமாட்டார்கள். ஆனால் முதல் நரை தோன்றிவிட்டாலே பெண் கிழவியாகிவிடுவாள்.”

``தொழில்நுட்பமயமாதல் புனைவிலக்கியத்திலும் வாசிப்பிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?’’

“என்ன வந்தாலும் புத்தகத்தைத் தொட்டுப் படிப்பது எப்போதுமே மகிழ்ச்சி தரும் அனுபவம். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் என்னால் இணைய வாசிப்பில் ஒன்றமுடியவில்லை. சிலபேர் முழுமையாக கதையை கம்ப்யூட்டரிலேயே எழுதுகிறார்கள். என்னால் அப்படி எழுத முடியவில்லை. இன்னும் கையால் எழுதி, அதன்பிறகே கம்ப்யூட்டரில் ஏற்றுகிறேன். கையால் எழுதும்போது பொறுமையும் வார்த்தைகளை அள்ளிக்கொட்டாத கட்டுப்பாடும் வருகிறதென்று நான் நினைக்கிறேன். கம்ப்யூட்டரில் எழுதும்போது கதை நீளமாகப் போய்விடுகிறது என்று தோன்றுகிறது.”

“68 ஆண்டுக்கால சாகித்ய அகாடமி வரலாற்றில், விருதுபெறும் நான்காவது பெண் படைப்பாளி நீங்கள்... இதுகுறித்து உங்களுக்குப் புகார் உண்டா?”

“முதலில், பெண் எழுத்தாளர் என்ற அடையாளத்தை நான் விரும்பவில்லை. பெண் எழுத்தாளர் என்பதற்காக எனக்கு சாகித்ய அகாடமி விருது தரப்படவில்லை என்று நம்புகிறேன். அப்படித் தந்தால் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். அதேநேரம், நீங்கள் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. தமிழில்தான் பெண் படைப்பாளிகளுக்கு இந்த நிலை. தெலுங்கிலோ, கன்னடத்திலோ, குஜராத்தியிலோ இல்லை. அங்கெல்லாம் நிறைய பெண் எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாடமி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுத் தேர்வுக்குழுதான் கண்களை மூடிக்கொண்டிருக்கிறது.”

“பெண் எழுதிவிடுவதாலேயே பெண் மொழி ஆகாது!”

“இப்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?”

“சிறுகதைகள் எழுதிக்கொண்டி ருக்கிறேன். தவிர SPARROW அமைப்பின் பணிகள் தீவிரமாக நடக்கின்றன. வரலாற்றின் நகர்வுகளில் பங்களிப்பு செய்த பல பெண்களின் கதைகள் இங்கே பேசப்படவேயில்லை. அப்படியான பெண்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் ஆவணப்படுத்துகிறோம். சமகால சாதனையாளர்கள், தனி மனுஷிகளின் கதைகளையும் பதிவு செய்கிறோம்.

77 வயதாகிறது. குறையென்று சொல்ல எதுவுமில்லை. இப்போதுதான் கேட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்திருக்கிறேன். வேறென்ன சொல்வது...”