Published:Updated:

“இது நிராகரிக்கப்பட்டவர்களுக்கான தளம்!”

அழகியசிங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அழகியசிங்கர்

நான் இப்ப 68 வயசுல இருக்கேன். என் வீட்டிலிருக்கும் புத்தகங்களோட, இத்தனை வருஷங்களா நான் சேகரிச்ச புத்தகங்களைத் தனி வீட்டில பத்திரப்படுத்தியிருக்கேன்

“இது நிராகரிக்கப்பட்டவர்களுக்கான தளம்!”

நான் இப்ப 68 வயசுல இருக்கேன். என் வீட்டிலிருக்கும் புத்தகங்களோட, இத்தனை வருஷங்களா நான் சேகரிச்ச புத்தகங்களைத் தனி வீட்டில பத்திரப்படுத்தியிருக்கேன்

Published:Updated:
அழகியசிங்கர்
பிரீமியம் ஸ்டோரி
அழகியசிங்கர்

‘விருட்சம்’ - நவீனத் தமிழிலக்கியம் உருப்பெற்ற தளமான சிறுபத்திரிகை மரபின் அங்கமாக, 1980-களின் இறுதியில் தொடங்கப்பட்டு, இன்றுவரை தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் சிறுபத்திரிகை. தற்காலத் தமிழிலக்கியத்தின் முகங்களாக இன்று விளங்கும் முக்கிய எழுத்தாளர்கள் பலரின் ஆரம்பக்காலப் படைப்புகள் ‘விருட்ச’த்தில்தான் துளிர்த்தன; 34 ஆண்டுகளாகத் தொடர்ந்து வெளியாகும் ‘விருட்ச’த்தின் 119-வது இதழ் ‘நகுலன் சிறப்பித’ழாக வெளியாகியிருக்கிறது. அழகியசிங்கர் இதன் ஆசிரியர்.

சென்னைப் புத்தகக்காட்சியும் முடிந்திருக்க, வாழ்நாள் முழுவதும் தான் சேகரித்த புத்தகங்களுக்கு மத்தியில் வீட்டில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் அழகியசிங்கரை ஒரு நண்பகல் வேளையில் சந்தித்தேன்.

“இது நிராகரிக்கப்பட்டவர்களுக்கான தளம்!”

“சந்திரமௌலிதான் என்னோட நிஜப்பெயர். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் ஐசக் பாசெவிஸ் சிங்கர் படைப்புகளை என் கல்லூரிக் காலகட்டத்துல தீவிரமா வாசிச்சேன்; அப்போதான் எழுதவும் தொடங்கியிருந்தேன். ‘கணையாழி’ நடத்திய தி.ஜா. நினைவு குறுநாவல் போட்டிக்காக ஒரு படைப்பு எழுதினேன். மௌலிங்கிற நடிகர் அப்போ ரொம்பப் பிரபலம்ங்கிறதனால, எனக்கு வேறொரு பேர் தேவைப்பட்டுச்சு. அந்தச் சமயத்துல நண்பர் ஒருத்தரும் நானும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குப் போயிருந்தோம். அங்கிருந்த அழகியசிங்கர் சன்னிதி எனக்குப் புனைபெயரைக் கொடுத்துச்சு, என் ஆதர்ச எழுத்தாளரோட பெயரும் சேர்ந்திருப்பதால, ‘அழகியசிங்கர்’ங்கிறதை என்னோட பெயரா எடுத்துக்கிட்டேன். அந்தப் பேர்லதான் நான் எழுதின குறுநாவல் ‘கணையாழி’ல பிரசுரமாகியிருந்தது” மெல்லப் பேசத் தொடங்குகிறார்.

“ரொம்பச் சின்ன வயசுலயே வாசிப்பு தொடங்கிருச்சு. திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் வெளியிட்டிருந்த ‘தென்னாட்டுப் பழங்கதைகள்’ங்கிற கதைத் தொகுப்புதான் நான் முதல்ல வாசிச்ச புத்தகம். அந்தப் பிரதியை இப்ப வரை பத்திரப்படுத்தி வச்சிருக்கேன். இப்ப வாசிச்சாலும், முதல் வாசிப்புல ஏற்பட்ட அதே அனுபவத்தை அந்தக் கதைகள் தருது. அம்மா மறைவுக்குப் பிறகு, ஜார்ஜ் டவுனிலிருந்து மாம்பலத்துல இருந்த மாமா வீட்டுக்கு வந்துட்டோம். பாட்டிதான் எங்களை வளர்த்தாங்க. வாசிப்பு என்கூட வளர்ந்துச்சு. தியாகராய நகர் சிவஞானம் தெருவில் இருந்த நூலகத்துக்குப் போக ஆரம்பிச்சேன், அங்கதான் அசோகமித்திரனோட ‘வாழ்விலே ஒருமுறை’ புத்தகத்தைப் படிச்சேன். அதுவரைக்கும் நான் வாசிச்ச எந்தக் கதைகள் மாதிரியும் இல்லாத புதுமாதிரியான அனுபவத்தை அந்தக் கதைகள் கொடுத்துச்சு; எனக்கு அது பிடிச்சிருந்தது. அந்தச் சமயத்துலதான் ஒரு பேங்க் வாசல்ல அசோகமித்திரனை முதன்முறையா பார்த்தேன், அவர்தான்னு அடையாளம் கண்டுக்கிட்டு, ‘நீங்க அசோகமித்திரன்...’ன்னேன். ‘ஆமா, என்ன இப்ப’ன்னு நகர்ந்துட்டார். இப்படித்தான் அசோகமித்திரனும் நானும் அறிமுகமானோம்” என்று சிரிக்கிறார்.

“வாசிப்பு ஒருபக்கமும், எழுத்தாளர்களோட சந்திப்பும் உரையாடலும் இன்னொரு பக்கமும்னு சீரா வளர்ந்துவந்துச்சு. வாசிப்பு மட்டுமல்லாமல், புத்தகங்கள் சேகரிக்கிறது என்னுடைய முதன்மையான ஈடுபாடா இருந்துச்சு. நடைபாதைக் கடைகள் தொடங்கி, எல்லா இடங்களிலும் புத்தகங்களைத் தேடி வாங்கிச் சேகரிக்க ஆரம்பிச்சேன்” என, சிறுகுழந்தையின் ஆர்வத்தோடு புத்தகங்களைப் புரட்டுகிறார்.

வாசிப்பு, எழுத்து, புத்தகச் சேகரிப்பு என்றிருந்த ஈடுபாடு ‘விருட்ச’த்தில் வந்து நின்றது எப்படி?

“தமிழின் முக்கியக் கவிஞர்களில் ஒருவரான ஆத்மாநாம் ‘ழ’ என்ற சிறுபத்திரிகையை நடத்திவந்தார். ஞானக்கூத்தன், எஸ்.வைத்தியநாதன், காளி-தாஸ், ஆனந்த் உள்ளிட்ட கவிஞர்கள் குழுவாகச் சேர்ந்து ‘ழ’வைக் கொண்டுவந்தாங்க. அந்தச் சமயத்திலதான் யாருமே எதிர்பாராத வகையில், ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டார். தமிழ் இலக்கியச் சூழல்ல பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிகழ்வு அது. ஞானக்கூத்தன் ஏற்பாடு பண்ணியிருந்த இரங்கல் கூட்டத்துல பிரமிள் கேவி அழுதார். இப்போ நினைச்சாலும் துயரத்துல ஆழ்த்துற நாள்கள் அவை. ஞானக்கூத்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ழ’வைத் தொடர்ந்து கொண்டுவருவதுன்னு முடிவானது. ஆனா, ஒருசிலரின் அலட்சியத்தால் அது தொடரல. இந்த அனுபவங்கள் எனக்குள்ள ஒரு பொறியை ஏற்படுத்தியிருந்தது. நான் தனியா பத்திரிகை தொடங்க விரும்பினேன். ‘விருட்சம்’ பிறந்தது. 1988 ஜூலையில் வெளியான முதல் இதழை சி.மோகன் தன்னோட மிதிலா அச்சகம் மூலமா அச்சடித்துக் கொடுத்தார்” என முதல் இதழைப் பிரித்துக் காண்பித்தவர், “கிளம்புங்க... உங்களை ஒரு இடத்துக்குக் கூட்டிப் போறேன்’’ என்றார்.

விழுதுகள் அடர்ந்த ஆலமரம் ஒன்றின் அடியில் நாங்கள் நின்றோம். “எனக்கு ரொம்பப் பிடிச்ச மரம் இது, அடிக்கடி இங்க வந்திருவேன்” அவரது பேச்சில் அமைதி கூடியிருந்தது.

“இது நிராகரிக்கப்பட்டவர்களுக்கான தளம்!”

“ஞானக்கூத்தன், ஆனந்த், தேவதச்சன், நகுலன்னு முக்கியப் படைப்பாளிகள் எல்லோரும் ‘விருட்ச’த்துக்கு எழுதினாங்க. நான் ஒரு rejected person. என்னை மாதிரி நிராகரிக்கப்பட்ட படைப்பாளிகளுக்கான தளமாகவும் ‘விருட்சம்’ இருக்கணும்னு விரும்பினேன். என்னோட உள்ளுணர்வை படைப்புகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலா வச்சுக்கிட்டேன். அது இன்றுவரை தவறினது இல்ல. கோணங்கி, ஜெயமோகன், சாரு நிவேதிதா, பா.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணனின் ஆரம்பக்காலப் படைப்புகள் ‘விருட்ச’த்துல வெளியாகியிருக்கு. குட்டி ரேவதி, அஜயன் பாலா, பெருந்தேவி படைப்புகள் எல்லாம் ‘விருட்ச’த்துலதான் முதல்ல வெளியாகின. ஞானக்கூத்தன், அசோகமித்திரன், நகுலன் எல்லாம் அவர்கள் கடைசிக் காலம்வரை ‘விருட்ச’த்துக்கு எழுதினாங்க. கடந்த 35 ஆண்டுக்காலத் தமிழிலக்கியப் போக்கின் சாட்சியங்களில் ஒன்னா ‘விருட்ச’மும் இருந்துவந்திருக்கிறது எனக்குப் பெருமை; ‘விருட்ச’த்துக்கு இப்போ நூலக ஆணை கிடைச்சிருப்பது இன்னும் சந்தோஷம்” என்கிறார்.

“நான் இப்ப 68 வயசுல இருக்கேன். என் வீட்டிலிருக்கும் புத்தகங்களோட, இத்தனை வருஷங்களா நான் சேகரிச்ச புத்தகங்களைத் தனி வீட்டில பத்திரப்படுத்தியிருக்கேன். அதை ஒரு நூலகமா மாற்றணும்னு எனக்கு ரொம்ப ஆசை. அதற்கான வேலைகளில்தான் இப்போ இருக்கேன்!” என்கிறார் தீர்மானமாக.

அடுத்த தலைமுறைக்கும் வேர்விடுகிறது ‘விருட்சம்!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism