Published:Updated:

தமிழ்... தமிழ் அறிய ஆவல்!

குடும்பத்துடன் பாரதி வசந்தன்
பிரீமியம் ஸ்டோரி
News
குடும்பத்துடன் பாரதி வசந்தன்

ஒருநாள் ஒரு நெருங்கிய நண்பருக்குக் கடிதம் எழுதிக்கிட்டிருந்தேன். என் கையெழுத்து அழகா இருக்கும். கடிதத்தில் ஆங்காங்கே படங்களும் வரைஞ்சு அனுப்புவேன்.

80, 90ஸ் மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து கடிதங்களைப் பிரிக்கவே முடியாது. காதல், வேலை, நட்பென எல்லாவற்றுக்கும் ஊடகம் கடிதங்கள்தான். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும் கடிதங்கள் ஏற்படுத்துகிற நெகிழ்ச்சியும் நேசத்தையும் நினைவுகளையும் தரமுடியாது.

அந்தப் பரவச உணர்வை 2கே கிட்ஸ்களுக்கும் கடத்திக்கொண்டிருக்கிறார், எழுத்தாளர் பாரதி வசந்தன். புதுச்சேரி நெல்லித்தோப்பில் வசிக்கும் பாரதி வசந்தன், 15க்கும் மேற்பட்ட சிறுகதை, கட்டுரை நூல்களை எழுதியவர். முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தலித் பண்பாட்டுப் பேரவை எனப் பல்வேறு அமைப்புகளில் இணைந்து செயல்பட்டவர்.

பாரதியும், அவரின் சீடரான கனகலிங்கமும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் தலைவரான தம்பலாவைச் சந்தித்து உரையாடியதைக் களமாக வைத்து இவர் எழுதிய ‘தம்பலா’ சிறுகதை ஆங்கிலம், பிரெஞ்சு எனப் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. பாரதி வசந்தன், ‘வெளிச்சம்’ என்ற பெயரில் ‘இன்லேண்ட் லெட்டரி’ல் ஒரு மாத இதழை நடத்துகிறார். பாரதி வசந்தனின் அப்பா பழனியும் அம்மா புட்லாயியும் விவசாயத் தொழிலாளிகள். எழுதப்படிக்கத் தெரியாத இரண்டுபேரும் நாட்டுப்புறக் கதைப்பாடல்களைப் பாடுவார்கள்.

தமிழ்... தமிழ் அறிய ஆவல்!

“துயரமும் வறுமையும், அப்பா அம்மா பாடின பாடல்களும்தான் இலக்கியத்துக்குள்ள என்னை இழுத்துக்கிட்டு வந்துச்சு. 80களில் வெளிச்சம் மக்கள் கலை இலக்கிய அமைப்புங்கிற ஒரு அமைப்பைத் தொடங்கினேன். ஈழ விடுதலை போன்ற பல பிரச்னைகளுக்கு இந்த அமைப்பு போராட்டக் களத்தில் நின்னுச்சு. அமைப்பில் உள்ளவர்களை ஒருங்கிணைக்க ஓர் இதழ் தொடங்கணும்ங்கிற எண்ணம் ஏற்பட்டது. இதழ் தயாரிக்கிற செலவு, அஞ்சல் செலவு... இதெல்லாம் தயக்கத்தை உருவாக்குச்சு.

ஒருநாள் ஒரு நெருங்கிய நண்பருக்குக் கடிதம் எழுதிக்கிட்டிருந்தேன். என் கையெழுத்து அழகா இருக்கும். கடிதத்தில் ஆங்காங்கே படங்களும் வரைஞ்சு அனுப்புவேன். அப்படி எழுதிக்கொண்டிருந்தபோது, அதைப் பார்த்த அம்மா, ‘இந்த லெட்டர் ஒரு பத்திரிகை மாதிரியே இருக்குடா...’ன்னு சொன்னாங்க. அதைக் கேட்டவுடனே பொறி தட்டுச்சு. ஆனா எத்தனை பேருக்குக் கையால எழுதி அனுப்ப முடியும்..? அதனால இன்லேண்ட் லெட்டர்ல அச்சடிக்க எவ்வளவு செலவாகும்னு விசாரிச்சேன். கட்டுப்படியாகுற செலவுதான். முதல் இதழ், 300 இன்லேண்ட் லெட்டர்கள். அந்தக் காலகட்டத்துல ஒரு பஞ்சாலையில வேலை செஞ்சுக்கிட்டிருந்தேன். உடன் வேலைசெஞ்ச தொழிலாளர்கள், இலக்கிய வாதிகள், பத்திரிகையாளர்களுக்கெல்லாம் அனுப்புவேன். ஒரு கட்டத்துல அரசு அச்சகத்துல வேலை கிடைச்சுச்சு. அங்கே நிறைய வேலைகள் இருந்ததால் பத்து இதழ்களோட நிறுத்திட்டேன். படைப்பாளிகளைச் சந்திக்கிறபோதெல்லாம் ‘ஏன் வெளிச்சத்தை நிறுத்திட்டீங்க’ன்னு கேட்பாங்க.

தமிழ்... தமிழ் அறிய ஆவல்!

இதுபத்தி என் மனைவி ஜோஸ்பின்கிட்ட பேசுனப்போ, ‘நீங்க இதழைக் கொண்டு வாங்க, வேலைகளை நாங்க பாத்துக்கிறோம்’ன்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த நம்பிக்கையிலதான் திரும்பவும் வெளிச்சத்தைக் கொண்டு வந்தோம். இப்போ முன்னைவிட பெரிய வரவேற்புக் கிடைக்குது.

பேராசிரியர் அரச. முருகபாண்டியன், தமிழ்மகன், அமுதபாரதி, அய்யப்ப மாதவன், பொன்.குமார், ஆங்கரை பைரவி, மு.முருகேஷ்னு கவிதை, ஹைகூ இலக்கியத்துல முன்னோடிகளா இருக்கிற பலரும் படைப்புகளை அனுப்புறாங்க. இப்போ ஒவ்வொரு மாதமும் 1000 இதழ்கள் அச்சிடுறோம். அதே இன்லேண்ட் லெட்டர்தான். இதழுக்கு விலை, வாசகர்களின் பேரன்பு மட்டும்தான். பணம் வாங்குறதில்லை. ஒவ்வொரு மாசமும் அஞ்சாயிரம் செலவாகுது.குடும்பம் அதுக்கான செலவைத் தாங்கிக்குது.

தமிழ்... தமிழ் அறிய ஆவல்!

இதழை அச்சடிச்சுக் கொண்டுவந்து வைக்கிறது மட்டும்தான் நான். லெட்டரை மடிக்கிறது, மூணு பக்கமும் ஒட்டுறது, முகவரி எழுதுறது... ஜோஸ்பினும் மூத்தமகள் தமிழ் மகளும்தான் மொத்த வேலையையும் பார்த்துக்கிறாங்க” என்கிறார் பாரதிவசந்தன்.

இழப்புகளைக் கடந்து இதுபோன்ற விடாப்பிடியான வைராக்கியமும் நம்பிக்கையும்தான் மொழிக்கு உரம்! தமிழ் வணக்கம் பாரதிவசந்தன்!