Published:Updated:

`எழுத்தாளர் டி.செல்வராஜ் இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதம்!' - ஆதவன் தீட்சண்யா உருக்கம்

டி.செல்வராஜ்
டி.செல்வராஜ்

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் டி.செல்வராஜ் நேற்று (20.12.2019) இரவு மறைந்தார்.

தமிழ் இலக்கியச் சூழலில் தன் எழுத்துகளையே தனது செயல்பாடாகக் கொண்ட எழுத்தாளர்களில் டி.செல்வராஜ் குறிப்பிடத்தக்கவர். 1938-ம் ஆண்டு ஜனவரி 14 அன்று திருநெல்வேலிக்கு அருகில் தென்கலம் பகுதியில் பிறந்தவர். கல்லூரிக் காலத்தில் தி.க.சிவசங்கரன், பேராசிரியர் நா.வானமாமலை, தொ.மு.சி ரகுநாதன் உள்ளிட்டோரின் நட்பு கிடைத்தது.

'சாந்தி’ 'ஜனசக்தி' உள்ளிட்ட இதழ்களில் டி.செல்வராஜின் கதைகள் வெளியாகின. சென்னை சட்டக்கல்லூரியில் படிக்கும் காலகட்டத்திலேயே பகுதி நேரமாக 'ஜனசக்தி'யிலும் 'தாமரை'யிலும் பணிபுரிந்திருக்கிறார். அந்தக் காலத்தில் அவருக்கு தோழர் ஜீவாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

நெல்லை மாவட்ட எளிய விவசாய மக்களின் வாழ்வையும் அவர்கள் நடத்திய 'முதத்திரை மரைக்கால்' போராட்டத்தையும் மையப்படுத்தி தனது முதல் நாவலான 'மலரும் சருகும்' நாவலை எழுதினார். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டத்தையும் மையப்படுத்தி அவர் எழுதிய இரண்டாவது நாவல் 'தேநீர்'. இந்நாவலைத் தழுவி 1984-ல் 'ஊமை ஜனங்கள்' என்ற திரைப்படம் வெளியானது.

'தோல்' நாவல்
'தோல்' நாவல்

திண்டுக்கல் நகரிலுள்ள தோல் பதனிடும் தொழிற்சாலைத் தொழிலாளர்களின் வாதைகள், அதையொட்டி நிகழும் தொழிலாளர் போராட்டங்கள், தங்கள் போராட்டத்தின் இறுதியில் வெற்றி பெற்று உரிமைகளை மீட்டதை வர்க்கப் போராட்டத்தின் வரலாறுபோல விவரித்தது இவரின் 'தோல்' நாவல். அந்நாவலுக்கு 2012-ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

பலதரப்பட்ட தொழிலாளர்களின் வாழ்வையும் போராட்டங்களையும் விவரித்தன இவரின் நாவல்கள். மொத்தம் 6 நாவல்களை எழுதியுள்ளார். நாவல் மட்டுமல்லாது வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

தோழர் ஜீவாவின் வாழ்க்கை வரலாற்று நூல் இவரால் எழுதப்பட்டது. தமிழ்நாடு பொதுவுடைமைச் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு செயலாற்றியவர். 1975-ம் ஆண்டில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர்.

டி.செல்வராஜ் மறைவு குறித்து எழுத்தாளரும் த.மு.எ.க.ச-வின் பொதுச் செயலாளருமான ஆதவன் தீட்சண்யாவிடம் பேசினோம். "தோழர் செல்வராஜ், கந்தர்வன், சிகரம் செந்தில்நாதன் உள்ளிட்டோர் ஆரம்பத்தில் மக்கள் எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பை நடத்தி வந்தார்கள். அதுதான் பின்னாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்ற அமைப்பானது.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா

81 வயதில் இறப்பதற்கு முன் 400 பக்கத்தில் 'அடுக்கம்' என்ற நாவலை எழுதியுள்ளார். அது இன்னும் அச்சுக்கு வரவில்லை. தொழிலாளர் பிரச்னைகள் சார்ந்த வழக்குகள் பலவற்றை எடுத்து நடத்தியுள்ளார். த.மு.எ.க.ச-வின் துணைத் தலைவராகப் பணியாற்றியவர். இறுதிவரை எங்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வந்தார். எழுத்தாளர்களுக்கு அமைப்பு படைப்பு மனநிலைக்கு குறுக்காக இருக்கும் என்பார்கள். அமைப்பு எழுத்தாளனின் பார்வையை விசாலம் செய்யும் எனச் சொன்னவர். இறப்பதற்கு முன்பாக எழுதிய கடிதத்தில் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதில், சாகித்ய அகாடமி மண்டல அலுவலகம் சென்னையில் கொண்டு வரப்பட வேண்டும் என்றார். அவரது பணிகளுக்கு எங்களது வணக்கங்கள்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

அடுத்த கட்டுரைக்கு