Published:Updated:

`நான் எவ்வாறு நினைவுகூரப் பட விரும்புகிறேன் என்றால்' ஜெயமோகன்! பிறந்த நாள் சிறப்புப் பதிவு

Jeyamohan
Jeyamohan

இவரது முதல் நாவலான 'ரப்பர்' தொடங்கி தற்போது மகாபாரதத்தை சாரமாகக் கொண்டு எழுதிவரும் 'வெண்முரசு' வரை பல புதினங்கள் கொண்டாடப்படுபவை.

`இந்திய தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர் ஜெயமோகன்' என்று அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஜெயமோகன்

ஜெயமோகன், நவீன தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளுமை. நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், சிறார் இலக்கியம் எனப் பன்முகங்களில் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக்குப் பங்களித்து வருபவர். நுட்பமான தனது விவரணைகளாலும், ஆழமான கதைகளாலும் தனக்கென தனி வாசகர் பரப்பைக் கொண்டிருக்கிறார். தீராத பயணங்களின் வழியே இவர் கண்டடைந்த பல மனிதர்களை, வாழ்வின் தர்க்கங்களை, மதம், சித்தாத்தங்கள், தத்துவங்கள் எனப் பலவற்றையும் தன் எழுத்துகளில் கொண்டு வந்தவர். தொடர்ச்சியாகத் தனது இணைய பக்கத்தில் வாசகர்களோடும், தன் மீதான விமர்சனம் குறித்தும் பதிலளித்து வருபவர்.

கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo
கள் மணக்கும் மலர் - ஜெயமோகன் #Jemo

இவரது முதல் நாவாலான 'ரப்பர்' தொடங்கி தற்போது மகாபாரதத்தை சாரமாகக் கொண்டு எழுதிவரும் 'வெண்முரசு' வரை இவரின் பல புதினங்கள் கொண்டாடப்படுகின்றன.

'ரப்பர்', 'காடு', 'விஷ்ணுபுரம்' போன்ற இவரது நாவல்கள் பரந்த வாசகர் பரப்பைக் கொண்டு சேர்த்தன.

குறிப்பிடத்தக்க நூல்கள்:

1. ரப்பர்

2. விஷ்ணுபுரம்

3. காடு

4. பின் தொடரும் நிழலின் குரல்

5. வெள்ளை யானை

6. கொற்றவை

7. ஏழாம் உலகம்

8. வெண்முரசு

விஷ்ணுபுரம்
ஜெயமோகனின் நூல்களில் ஆல்டைம் கிளாசிக்காக எழுத்தாளர்கள், வாசகர்கள் பலரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதினம்.

`விஷ்ணுபுரம்' என்ற கற்பனை நகரம் நாவலின் கதைக்களம். அங்குள்ள மாபெரும் கோயிலின் கருவறைக்குள் கிடந்த கோலத்தில் விஷ்ணு சிலையென வைத்தீர்கள் வழிபட்டு வருகிறார்கள். அது தங்களின் பெருமூப்பன் சிலையென செம்பர்கள் என்னும் பழங்குடியினம் நம்புகிறது. அச்சிலை யுகத்துக்கு ஒருமுறை புரண்டுபடுக்கும் என்பது ஐதிகம். அந்த ஐதிகத்தைக் குறியீடாக் கொண்டு இந்நாவல் புனையப்பட்டிருக்கும். கதை நேர்கோடாகச் சொல்லப்படாமல் முன்னும் பின்னுமான கதை சொல்லல் முறையில் மிக நேர்த்தியாகச் சொல்லப்பட்டிருக்கும். 200-க்கும் மேற்பட்ட கதைமாந்தர்கள், பல உட்கதைகள் என பிரமாண்டமாகப் புனையப்பட்ட நாவல். தமிழில் வெளிவந்த ஆகச் சிறந்த புனைவுகளில் விஷ்ணுபுரமும் ஒன்று. தமிழில் வெளியான புனைவுகளில் அதிகமான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் ஒருங்கே பெற்ற நாவலும் இதுவாகத்தான் இருக்கும்.

Vishnupuram #jemo
Vishnupuram #jemo
ரப்பர்
1988-ல் வெளியான ஜெயமோகனின் முதல் நாவல். 1990-ல் அகிலன் விருதுக்காக சுருக்கி அனுப்பப்பட்ட இந்நாவலுக்கு விருதும் கிடைத்தது.

தனது முதல் நாவலிலேயே தனது கவித்துமான மொழிநடையைக் கையாண்டிருப்பார். காட்சிகளின் விவரணையும் கதை மாந்தர்களின் அகவுணர்வுகளையும் புனைவுகளின் வழியே சாத்தியப்படுத்தியிருப்பார். 'ரப்பர்' நாவலின் மையம் பிரான்சிஸ் கதாபாத்திரம்தான். பிரான்சிஸின் பாத்திரப் படைப்பு ஜெயமோகன் எழுதிய பாத்திரங்களிலேயே குறிப்பிடத்தக்க ஒன்றாகச் சொல்லலாம்.

Rubber #jemo
Rubber #jemo
Vikatan
காடு

செவ்விலக்கியம் என்ற பதம் குறித்து ஜெயமோகன் அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. அவரது புனைவுலகில் அவரது நோக்கும் செவ்விலக்கியம் பற்றியதாகவே இருக்கும். ஜெயமோகனின் 5 வது நாவல் 'காடு.' காமம் குறித்து தமிழ் படைப்பாளிகள் எழுதத் தயங்கும் பல விஷயங்களை, கையாளத் தயங்குவதைத் தனது சொல்லாட்சியால் சாத்தியப்படுத்தியிருப்பார் ஜெயமோகன். காமம் பற்றி மனிதனின் மனதுக்குள் பல கற்பனைகளும் சித்திரங்களும் விரிந்தாலும் அதை மறைபொருளாகக் கையாள்வதில் கவனம் கொள்கிறோம்.

மனதை அசரச் செய்யும் நுட்பமான சொற்றொடர்கள், பக்கத்துக்கு பக்கம் விரவிக் கிடக்கும் சொற்கள், மொழி வாசகனுக்குள் ஏற்படுத்தும் உணர்வு அலாதியானது. காடு நாவலில் கரிதரன் பாத்திரம் நீலியை நினைத்து,

'உன் நினைவென ஓயாது பெய்துகொண்டிருக்கிறது மழை.'

காடு நாவலைப் படித்து முடித்ததும் 'காடு' நாவல் பற்றி நினைவு அகல பல நாள்களாகும்.

kaadu #jemo
kaadu #jemo
அறம்
சிறுகதைத் தொகுப்பு

'அறம்' என்ற மையப்புள்ளியைச் சுற்றி சுழலும் சிறு கதைகளால் ஆனது இந்நூல். நிஜத்தில் வாழந்த மனிதர்களின் வாழ்வைக் கொண்டு எழுதப்பட்ட இந்நூல் மிகச்சிறந்த கதைகளைக் கொண்டது. சோற்றுக் கணக்கு 'கெத்தேல் சாகிப்', யானை டாக்டர் 'கிருஷ்ணமூர்த்தி', அறம் சிறுகதையில் வரும் எழுத்தாளர் என ஒவ்வொரு கதையும் ஆழ்ந்த உள்ளுணர்வை ஏற்படுத்த வல்லவை.

Aram #jemo
Aram #jemo
வாசிப்பு, ஹிட்ச்காக் படம், குற்றாலம் பற்றிய புதிய நாவல்... படைப்பாளிகளின் `க்வாரன்டைன்' பிளான்!

திரைத்துறை அனுபவம் :

விகடன் தடம் நேர்காணலில் "எழுத்தாளர் என்ற வகையில் சினிமா உங்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது" என்ற கேள்விக்கு ஜெயமோகன் பின்வருமாறு பதிலளித்தார்,

"ஓர் எழுத்தாளரின் முக்கியமான காலம் என்பது, எழுதுவதற்கான துடிப்பும் முதிர்ச்சியுமான 40-லிருந்து 60 வயது வரைதான். பெரும்பாலும் தமிழ் எழுத்தாளர்கள் இந்தக் காலகட்டத்தில் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அப்படியே உழைத்தாலும் போதுமான வருமானம் இருக்காது. ஆனால், சினிமா என்னைப் பெரிய அளவில் இந்த நிலையிலிருந்து விடுதலை செய்தது" என்றார்.

இந்திய அரசு வழங்கிய பத்மஸ்ரீ விருதை வேண்டாம் என மறுத்தவர். அது குறித்து, "அது, அப்போது எமோஷனலாக எடுத்த முடிவுதான். அரசு போன்ற அமைப்புகளைச் சார்ந்து இருக்கக் கூடாது என்கிற எனது எண்ணம்தான் அதற்கான காரணம். விருது என்பது ஒரு பளுவாகிவிடும்" என்று பதிவு செய்துள்ளார்.

தமிழ் , மலையாளம் இரு மொழிகளிலும் திரைப்படங்களில், வசனம், திரைக்கதை என வேலை செய்திருக்கிறார். தமிழில், நான் கடவுள், அங்காடித் தெரு, நீர்ப்பறவை, கடல், ஆறு மெழுகுவர்த்திகள், சர்கார், '2.0' தற்போது இந்தியன்-2 படத்திலும் பங்களித்துள்ளார்.

இவரது வாசகர்களால் நடத்தப்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஒவ்வோர் ஆண்டும் ஜெயமோகன் தலைமையில் எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறார்கள்.

தனது கருத்துகளுக்காகத் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டும் வருகிறார். 60 வயதை நெருங்கும் ஜெயமோகன் இன்றும் தினமும் வெண்முரசின் பாகங்கள் எழுதுகிறார், வாசகர்களுடன் உரையாடுகிறார். தமிழ் இலக்கிய உலகில் தவிர்க்க முடியாதவராக இருக்கிறார். ஜெயமோகன் எப்படி நினைவுகூரப்பட வேண்டுமென நினைக்கிறார் என ஜெயமோகனே கூறிய வார்த்தைகள் இவை,

"ஒருவர் எப்படி வரலாற்றில் நினைவுகூரப்படுவார் என்று முன்பே சொல்ல முடியாது. ஆனாலும், 'இந்திய தமிழ் மரபை நவீன காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறுவரையறை செய்தவர்' என்று அறியப்பட வேண்டும் என விரும்புகிறேன்."

அடுத்த கட்டுரைக்கு