Published:Updated:

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

நேர்காணல்

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

நேர்காணல்

Published:Updated:
மனுஷ்ய புத்திரன்
பிரீமியம் ஸ்டோரி
மனுஷ்ய புத்திரன்

விவசாயிகள் போராட்டம் முதல் ஊரடங்கு அவலம் வரை அத்தனை சமூகப் பிரச்னைகளுக்காகவும் அதிர்கின்றன, மனுஷ்ய புத்திரனின் கவிதைகள். வாழ்க்கையின் எல்லா தருணங்களையும் கவிதைகளாக்கும் மனுஷ்ய புத்திரன் பதிப்பாளர், இதழாளர், கவிஞர், பேச்சாளர், அரசியல்வாதி, நடிகர், பாடலாசிரியர் எனப் பல்வேறு முகங்கள்கொண்டவர். 37 ஆண்டுகளாக சலிப்பில்லாமல் இயங்கும் மனுஷ்ய புத்திரனை ஒரு காலையில் `ஆனந்த விகடன்' முதன்மைப் புகைப்படக் கலைஞர் கே.ராஜசேகரன், தலைமை வீடியோகிராபர் தி.ஹரிகரனுடன் சந்தித்து உரையாடினேன்.

“கேட்கும், பார்க்கும் எல்லாவற்றையும் கவிதையாக எழுதுகிறீர்கள். கவிதைக்கென்று வித்தியாசமான அம்சங்கள், அனுபவங்கள் இல்லையா?”

“இங்கு விசேஷமான, தனித்துவமான உணர்வுகளை எழுதுவதுதான் கவிதை என்று நினைக்கக்கூடிய மனப்பான்மை இருக்கிறது. நான் மாறுபடுகிறேன். தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எனக்கு முக்கியமே இல்லை. மாறாக, உங்களுக்கும் எனக்கும் சில பொதுவான அம்சங்கள் இருக்கின்றன; பொதுவான சங்கடங்கள் இருக்கின்றன; பொதுவான மன இயல்புகள் இருக்கின்றன. நம் நவீன வாழ்க்கைமுறையில் சமூகம் என்பது அரசியல் பிரச்னையோ, கலாசாரப் பிரச்னையோ கிடையாது. நம் மனநிலையைத் தொலைத் தொடர்பு சாதனங்கள் மாற்றிவிட்டன. மெசேஜ் அனுப்பிவிட்டு ப்ளூ டிக் வருகிறதா என்று பார்ப்பது பெரும் மன நெருக்கடியாக மாறியிருக்கிறது. இது பற்றி நான் எழுதிய ஒரு கவிதை வைரலானது.

சமகாலத்தில், தொழில்நுட்பமும், உலகமயமாதலும், நுகர்வுக் கலாசாரமும், உடைந்துபோன மனித உறவுகளும் உருவாக்கக்கூடிய நிறைய பிரச்னைகளை நான் தொடர்ந்து கண்டடைந்து எழுதிக்கொண்டேயிருக்கிறேன். அது எல்லோருக்குமான அனுபவமாக இருப்பதால், சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் பெறுகிறது. கவிதையில் எல்லாவற்றையும் எழுத முடியும் என்ற விஷயத்தை நான் பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன். எதை வேண்டுமானாலும் எழுத முடியும். தமிழ்க் கவிதைக்கு அதுதான் என் பங்களிப்பு. மைதாஸ் அரசன் தொட்டதெல்லாம் தங்கமாவதைப் போல, நம் வாழ்க்கையிலிருக்கும் எல்லாவற்றிலும் கவிதைக்கான கூறு ஒளிந்திருக்கிறது. கவிதைக்கென்று விசேஷமான அனுபவம் எதுவுமில்லை. அது பெரிய ஞானத்திலிருந்து உதிப்பதெல்லாம் கிடையாது. எல்லாவற்றிலும் கவிதைக்கான அம்சத்தை என்னால் பார்க்க முடியும். கவிதைகளை அப்படி அணுகுகிறபோது அதன் பரப்பு விரிவாகும் என்று எனக்குத் தோன்றுகிறது.”

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

“கவிஞர்களுக்கென்று இருக்கும் வரையறைகளையெல்லாம் உடைக்கிறீர்கள். இது உங்களுக்கு அடையாளச் சிக்கலை ஏற்படுத்திவிடாதா?”

“இலக்கியவாதி என்பவன் ஒரு தூய பிம்பம் என்ற எண்ணம் தமிழ்ச் சிறுபத்திரிகைச் சூழலில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்திருப்பதைக்கூட கௌரவக் குறைச்சலாகக் கருதக்கூடிய எழுத்தாளர்கள் இங்கே இருக்கிறார்கள். ஆனால், அவர்களே ஒரு ஃபேக் ஐடியில் வந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருப்பார்கள். இது மாதிரியான பாசாங்குகளில் எனக்கு நம்பிக்கையில்லை. நான் கவிதை எழுதுவேன். பிசினஸில் ஈடுபடுவேன். இதழியல் வேலை செய்வேன். கூட்டங்களுக்குப் போய்ப் பேசுவேன். அரசியலில் ஈடுபடுவேன். சினிமாவில் நடிப்பேன்... எனக்கு எல்லைகளே கிடையாது. அடையாளங்களை அழிப்பவன்தான் கவிஞன். என் அடையாளத்தை நான் அழிக்க அழிக்க வாழ்க்கை புதிதாக மாறும். நான் அடையாளத்தைத் தூக்கிச் சுமக்க ஆரம்பித்தால், உங்களையும் ‘அடையாளத்தைத் தூக்கிச் சும’ என்று கட்டாயப்படுத்த ஆரம்பித்துவிடுவேன். எப்படி இவ்வளவு கவிதைகள் எழுதுகிறீர்கள் என்று எல்லோரும் கேட்கிறார்கள். கிட்டத்தட்ட 6,000 கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறேன். ஆயிரக்கணக்கான கவிதைகள் காதலைப் பற்றி எழுதுகிறேன். அவை எல்லாமே ஓர் உணர்வு கிடையாது. காதலிலுள்ள பல அடுக்குகளை எழுதியிருப்பேன். இதுதான் என் களம் என்று நான் எதையும் வரையறுத்துக்கொள்ளவில்லை. நாளை ஒரு மளிகைக்கடை வைத்து உட்கார்ந்துகொள் என்றால், அங்கேயும் அமர்ந்துகொள்வேன். அது நான் எழுதுவதற்கான பொருள். நதியில் சிக்கிய பனையோலை மாதிரி நான். நதியின் ஓட்டத்தில் ஓடிக்கொண்டேயிருப்பேன்.”

“எல்லா மன உணர்வுகளையும் கவிதைகளாக்குவது, எழுத்தைச் சடங்காக்கி விடாதா?”

“எல்லாவற்றின் மேலும் ஒரு வெளிச்சம் விழுந்துகொண்டேயிருக்கிறது. இந்த அறையில் ஒரு விளக்கு இருக்கிறது. இங்கிருக்கும் எல்லாவற்றின்மீதும் அந்த விளக்கின் வெளிச்சம் விழுந்துகொண்டே இருக்கிறது. விளக்கை அணைத்துவிட்டால், இருட்டு. இங்கேயிருக்கும் எந்தப் பொருளும் தெரியாது. இங்கேயிருக்கும் பொருள்களை உங்கள் கண்களில்படவைக்க ஒரு வெளிச்சம் தேவையாக இருக்கிறது. என் கவிதையை நான் ஒரு விளக்காகத்தான் எடுத்துச் செல்கிறேன். நான் எழுதுவது ஒரு கவிதை. அது அனுபவமாக மாறுகிறதா இல்லையா என்பது மட்டும்தான் இங்கே கேள்வி. ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் கவிதை சார்ந்த அம்சத்தைக் கண்டடைவதை நான் ஒரு மனப்பயிற்சியாகவே வைத்திருக்கிறேன். நீங்கள் ஒரு பெரிய மலையைப் பார்க்கிறீர்கள். என் கண்ணுக்கு அந்த மலை தெரியாது. அதன் அடிவாரத்தில் ஒருவன் ஆட்டுமந்தையை ஓட்டிச்செல்கிறான்... அது மட்டும்தான் என் கண்ணுக்குத் தெரியும். இந்த உலகத்தில் கவித்துவத்தின் சாரம் இல்லாதது எதுவுமே கிடையாது. அது கடலிலும் இருக்கிறது. ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது. அவற்றைப் பார்ப்பதற்கான கண்கள்தான் வேண்டும்.”

“தீவிரமாக எழுதுகிறீர்கள், அரசியல் கூட்டங்களில் இருக்கிறீர்கள், தொலைக்காட்சி விவாதங்களில் அனல் பறக்கப் பேசுகிறீர்கள்... நேரத்தையும் மனநிலையையும் எப்படிக் கையாள்கிறீர்கள்?”

“இது மிகவும் களைப்படையச் செய்யும் விஷயம்தான். ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நிலை மாறுவது எளிதல்ல. நான் பயணிக்கும் களங்கள் எல்லாமே வேறு வேறானவை. ஆனால், நான் ஒரு விஷயத்தைத் தொடர்ந்து பின்பற்றுகிறேன். எந்த வேலை செய்கிறேனோ அதில் முழு அர்ப்பணிப்போடு இருப்பேன். ஓர் அரசியல் கூட்டத்துக்குச் செல்லும்போது என் தனிப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் வேறோர் அறையில் போட்டு பூட்டி வைத்துவிடுவேன். கூத்துக்கலைஞனுக்கு வாழ்க்கையில் நிறைய பிரச்னைகள் இருக்கும். உடலில் பல கோளாறுகள் இருக்கும். ஆனால், மேடையில் ராஜா வேடம் போட்டால் அப்படியே ராஜாவாகப் பரிணமிப்பான். அந்த உருமாற்றம் என்பது கலைக்கு அவன் செய்யும் நியாயம்... கூத்துக்கலைஞனைப் போலத்தான் நானும். பிரச்னை என்னவென்றால், எல்லாவற்றிலும் தீவிரமான உணர்வுகளோடு இருக்கும்போது, அது மனதை பாதிப்பதைவிட பல மடங்கு உடலையும் பாதிக்கிறது. இதனால் உங்கள் ஆயுளே குறைந்துவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், எனக்கு வேறு சாய்ஸ் கிடையாது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

“மீம்களின் நாயகனாகவும் இருக்கிறீர்கள். சோஷியல் மீடியாவில் வக்கிரமான தாக்குதல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?”

“சோஷியல் மீ\டியாவில் நான் தீவிரமாக எழுதக் காரணம், எனக்கு வேறு மீடியா இல்லை என்பதுதான். பாலகுமாரன் போன்றோரெல்லாம் செயல்பட்ட காலத்தில் அவர்கள் எழுதுவதற்கு நிறைய பத்திரிகைகள் இருந்தன. இப்போது அந்த வாய்ப்புகள் சுருங்கிவிட்டன. நான் ரொம்பவே சுறுசுறுப்பான எழுத்தாளன். நான் எழுதிக் குவிப்பவற்றை எங்கே வெளியிடுவேன்... சோஷியல் மீடியாவில் எழுகின்ற எதிர்ப்பு என்பது இன்றல்ல... நான் உள்ளே வந்த பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே இருக்கிறது. காரணம், நான் வலுவான சமூக, அரசியல் கருத்துள்ள ஆள். சாதியவாதம், மதவாதம் என எல்லாவற்றிலும் எனக்கு அபிப்ராயங்கள் உண்டு. வலுவாக ஒரு கருத்தை சமூக ஊடகங்களில் எழுதுகிறபோது, அதற்கு எதிரானவர்கள் பேசத்தான் செய்வார்கள். ஆனால், பெரும்பாலான கருத்துகள் அறிவார்ந்தவையாக இருப்பதில்லை. எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. செய்தித்தாளில் அது செய்தியாக வந்துவிட்டது. அப்போது ‘இவன் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியே வர மாட்டான்...’, `இறந்துவிட்டான்’ என்றெல்லாம் மீம் போட்டார்கள். நான் அறுவை சிகிச்சை அரங்குக்குள் நுழைவதற்கு முன்பு அதையெல்லாம் படித்துச் சிரித்துக்கொண்டுதான் போனேன். என்றைக்குமே இப்படியான விஷயங்கள் என்னைப் புண்படுத்தியது கிடையாது. நான் நேசிக்கும், என்னை மதிக்கும் ஒருவர் என்மீது கசப்படைகிறார் என்றால், அது என்னைப் புண்படுத்தும். நான் மதிக்காத எவனோ ஒருவன் என்னைப் பற்றி என்ன சொன்னாலும் அது எனக்கு ஒரு விஷயமே இல்லை.”

“படைப்பாளிகளுக்கு நேரடி அரசியல் முகம் இருப்பது சங்கடமில்லையா?”

“இங்கே யாருக்கு அரசியல் முகமில்லை... ஏதோ பத்தாண்டுகளாக மட்டும் நேரடி அரசியலில் நான் செயல்படுவதாகச் சிலர் நினைக்கிறார்கள். நான் என்றைக்குமே முழுமையான சிறுபத்திரிகை ஆளாக இருந்தது கிடையாது. என் இளமைக்காலத்தில் நான் தீவிர இடதுசாரியாக இருந்திருக்கிறேன். என் ஆரம்பகால படைப்புகள் `புதிய கலாசார'த்திலும் `மனஓசை'யிலுமே வந்திருக்கின்றன. என் பல கவிதைகளை தோழர்கள் பேருந்துகளில் ஏறி வாசித்திருக்கிறார்கள். அதற்காக அடிவாங்கியிருக்கிறார்கள். அதெல்லாம் இப்போதிருக்கும் தலைமுறைக்குத் தெரியாது. பெருமாள் முருகன், பாவண்ணன் போன்றோருக்குத் தெரியும். ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகு என் அரசியல் நிலைப்பாடுகளில் பெரும் மனப்போராட்டம் வந்துவிட்டது. தத்துவ ஈடுபாடு, இலக்கியம் என்று என் தேடல் மாறியது. 2006-க்குப் பிறகு `காலச்சுவடு' பத்திரிகையில் வேலை செய்த காலத்தில் குஜராத் கலவரம் நடந்தது. காலச்சுவடு சார்பில் மிகப்பெரிய பிரசாரம் ஒன்றை அந்தக் கலவரத்துக்கு எதிராக சென்னையில் நடத்தினோம். நிதி திரட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அனுப்பினோம். மோடியின் எழுச்சிக்குப் பிறகு, இந்துத்துவ அரசியலுக்கு எதிராக திராவிட இயக்கத்தைத் தாங்கிப்பிடிக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு ஏற்பட்டது. எழுத்தாளனாக, பேச்சாளனாக திராவிட இயக்கத்துக்கு என் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காகத் தான் அடையாளத்தோடு இயங்குகிறேன். இதில் எனக்கு எந்தச் சங்கடமுமில்லை.”

“சோஷியல் மீடியாவில் எழுதப்படும் இலக்கியங்கள் அபத்தமானவையாகவே இருக்கின்றன என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறதே?”

உண்மைதான். முன்பெல்லாம் ஒரு படைப்பைப் பிரசுரிக்க அல்லது தவிர்க்க பத்திரிகைகளில் ஓர் அளவுகோல் இருந்தது. இன்று சோஷியல் மீடியாவில் எல்லோரும் எழுதுகிறார்கள். அவர்களைச் சார்ந்தவர்களே லைக் போட்டு ‘சிறப்பான பதிவு’ என்று கமென்ட் போடுகிறார்கள். எழுத்தாளர்கள் அதோடு திருப்தியடைந்துவிடுகி்றார்கள். உண்மையில், ஒரு கவிஞன் தன் கவிதைக்கு எத்தனை லைக் வந்திருக்கிறது என்று கண்கள் பூக்க பார்த்துக்கொண்டிருப்பதைவிட அவலம் எதுவுமே கிடையாது. பத்திரிகைகளில் படைப்புகள் வரும்போது, தேர்ந்த வாசகர்கள் அதை வாசிப்பார்கள். சோஷியல் மீடியாவுக்கு வரும் பலர் வழிப்போக்கர்கள். கவிதைக்கோ, கதைக்கோ சம்பந்தமே இல்லாவர்கள்கூட வந்து கமென்ட்டைப் போட்டுப் போவார்கள். இலக்கியத்துக்காக, இலக்கி்ய வாசகர்களுக்காக சிறந்த பத்திரிகைகள் தொடர்ந்து வர வேண்டும். வந்தால்தான் இப்படியான குழப்பமான சூழலிலிருந்து விடுபட முடியும்.”

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

“விருதுகள் எப்போதும் தமிழ்ச்சூழலில் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன. பல உயரிய விருதுகளில் தமிழ்ப் படைப்பாளிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் குமுறல்கள் இருக்கின்றனவே?”

“தரமான படைப்புகளை நீங்கள் எப்படி தெரிந்துகொள்வீர்கள்? பரிசுகளோ, அங்கீகாரங்களோ கிடைக்கவில்லை என்றால்தான் அது தரமான படைப்பு... இந்தப் படைப்பு சாகித்ய அகாடமி வாங்கவில்லை என்றால், அது நல்ல புத்தகம் என்று நீங்கள் புரிந்துகொள்ளலாம். எனக்கு 40 கவிதைத் தொகுப்புகள் வந்துள்ளன.

37 வருடங்களாக கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன். 16 வயதில் என் முதல் கவிதைத் தொகுப்பு வந்தது. 2003-ல் கிடைத்த சம்ஸ்கிருதி சம்மான் விருது தவிர்த்து, இத்தனை வருடங்களில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் எந்த உயரிய விருதையும் நான் பெற்றது கிடையாது. பத்திரிகைகளின் சில அங்கீகாரங்கள், செயல்பாட்டுக்கான சில விருதுகள் பெற்றிருக்கிறேன். ஆனால், இலக்கியத்துக்காகக் கடந்த 18 வருடங்களில் எந்த அங்கீகாரத்துக்க்கும் நான் பரிசீலிக்கப்பட்டதே கிடையாது. இதற்கும் என் கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. விருதுகள் என்பவை பல சமயங்களில் உதவித்தொகையாக இருக்கின்றன. சில சமயங்களில் பென்ஷன். எனக்கு இதில் புகார் இல்லை. பிரச்னை என்னவென்றால், இங்கு விருது கொடுக்கும் பலருக்கு இலக்கியமே தெரியாது. அதனால், விருது வாங்கிப் பழக்கப்பட்டவர்களுக்கு கொடுத்துவிடுகிறார்கள். விருது வாங்குவதும் கொடுப்பதும் இப்போது பழக்கமாகிவிட்டது. விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம் `விருது வாங்குபவர் பல வருஷங்களாக எதுவுமே எழுதவில்லையே' என்று எனக்குத் தோன்றும். இங்குள்ள சில இலக்கிய விமர்சகர்களுக்கு மெமரி ஒரு கட்டத்தில் நின்றுவிடும். தமிழில் சிறந்த கவிஞர் யார் என்று கேட்டால் ‘ஆத்மாநாம்’ என்பார்கள். அதன் பிறகு எழுதியவர்களின் நினைவு அவர்களுக்கு வராது. இந்த மாதிரி கோமாளித்தனங்களையெல்லாம் பார்த்த பிறகு, எனக்கு விருது என்று யாராவது சொன்னால் நாம் தவறான லிஸ்ட்டில் சேர்ந்துவிட்டோமோ என்ற எண்ணம் வரத் தொடங்குகிறது. தமிழில் முக்கியமான எழுத்தாளர்களுக்கு எந்த விருதுமே இங்கு வழங்கப்பட்டதில்லை. சுந்தர ராமசாமிக்கோ, சுஜாதாவுக்கோ சாகித்ய அகாடமி விருது வழங்கப்படவில்லை என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? அதற்கெல்லாம் கூச்சமே இல்லாமல் இறங்கி வேலை செய்ய வேண்டும். கூச்சப்படுபவர்களுக்கு எதுவுமே கிடைக்காது.”

“சமகாலத்தில் நம்பிக்கையூட்டும் பெண் படைப்பாளிகளாக யாரைப் பார்க்கிறீர்கள்?”

“இந்தக் கேள்வியில் எந்த உள்நோக்கமும் இல்லையென்று நம்புகிறேன். பெண் படைப்பாளிகள் என்று நான் தனியாக யாரையும் பார்க்கவில்லை. எல்லோரையுமே கவிஞர்களாகத்தான் பார்க்கிறேன். கவிதை மேல் அவர்களுக்கு ஈடுபாடு இருக்கிறதா என்பதுதான் முக்கியம். எழுதிக்கொண்டிருக்கும் பாதிப் பேருக்கு கவிதைமேல், இலக்கியத்தின்மேல் எந்த ஈடுபாடும் இல்லை. இதில் ஆண் - பெண் பேதமெல்லாம் இல்லை. ஆனால், இலக்கியத்தின் மேல் தீவிரம் கொண்டு எழுதக்கூடிய ஆணும் சரி, பெண்ணும் சரி, உடனடியாக நம் கவனத்துக்கு வந்துவிடுகிறார்கள். அம்பை, பெண் எழுத்தாளர் என்பதற்காகவா கவனம் பெற்றார்? தமிழின் மிக முக்கியமான ஒரு படைப்பாளி அவர். ஆணாக, பெண்ணாக, மூன்றாம் பாலினத்தவராக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதுதான் முக்கியம். சலுகைகள் கொடுத்து படைப்புகளைப் பார்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. எழுதி எழுதித்தான் தன்னை நிரூபிக்க முடியும். வேறு ஊன்றுகோல் வைத்துக் கொண்டெல்லாம் நிரூபிக்க முடியாது.”

“கவித்துவத்தின் சாரம் கடலிலும் இருக்கிறது... ஒரு மழைத்துளியிலும் இருக்கிறது!” - மனுஷ்ய புத்திரன்

“தொழில்நுட்பத்தால் பதிப்புத்துறை பெரும் மாற்றங்களைக் கண்டிருக்கிறது. தமிழ்ப் படைப்புச்சூழலில் இது என்ன விளைவை ஏற்படுத்தியிருக்கிறது?”

“பதிப்பாளர்- எழுத்தாளர் உறவென்பது வெறும் வணிகம் சார்ந்த உறவு மட்டுமல்ல. நான் ஒரு பதிப்பாளராக ஒரு புத்தகத்தைப் போடுவதற்கு முன்பு, `இந்தப் புத்தகத்தைப் போடுவதற்கான நியாயம் ஏதாவது இருக்கிறதா... இந்தப் புத்தகத்துக்கு வாசகப் பரப்பில் ஏதேனும் மதிப்பு கிடைக்குமா?' என்றெல்லாம் பார்ப்பேன். நான் ஒரு பொருளைத் தயாரிக்கிறேன். நீங்கள் விலை கொடுத்து வாங்குகிறீர்கள். எனக்கு பொறுப்பிருக்கிறது. ஆனால் இன்று, அட்டைப்படம் தயாரானவுடன் சிலர் புத்தகத்தையே வெளியிட்டுவிடுகிறார்கள். முன்பு ஒரு படைப்பை எழுதினால் அச்சுக்குப் போகும் முன்பு அதை நான்கு பேரிடம் படிக்கக் கொடுத்து கருத்து கேட்பார்கள். இன்று அதெல்லாம் இல்லை. என்னைச் சிலர் சந்தித்து ‘புத்தகம் போடவேண்டும்... எவ்வளவு காசு வேண்டுமானாலும் தருகிறேன்’ என்பார்கள். ‘அது என் பாலிஸி இல்லை’ என்பேன். ‘வளரும் ஓர் எழுத்தாளருக்கு உதவக் கூடாதா?’ என்று கேட்பார்கள். தனக்கு எழுதப் படிக்கத் தெரியும் என்பதற்காகவே சிலர் புத்தகம் போட நினைக்கிறார்கள். லிட்ரசிக்கும் இலக்கியத்துக்கும் இங்கே வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது. சிலர் நாவல் எழுதி எடுத்துக்கொண்டு பதிப்பிக்க வருகிறார்கள். ‘உங்களுக்குப் பிடித்த நாவல் எது' என்று கேட்டால் ‘பொன்னியின் செல்வன்’ என்கிறார்கள். பிடித்த கவிஞர் யாரென்று கேட்டால் ‘பாரதியார்’ என்கிறார்கள். அதைத் தாண்டி வளரவேயில்லை.”

“சிம்புவோடு நடிக்கிறீர்கள்... பாடலாசிரியர் கனவு இன்னும் உயிர்ப்போடு இருக்கிறதா?”

“எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். ஏதாவது செய்யச் சொல்வார்கள். இன்றுகூட ஒரு நண்பர் வசனம் எழுதச் சொன்னார். செய்து பார்ப்போமே என்று தோன்றியது. ஒரு ‘ஆப்’பில் தொடர்கதை எழுதச் சொன்னார்கள். மறுத்தேன். திரும்பவும் கேட்டார்கள். ‘சரி எழுதலாமே’ என்று தோன்றியது. அதேபோல, ‘நடிக்கிறீர்களா’ என்று கேட்டபோது, முதலில் தயக்கமாகத்தான் இருந்தது. பிறகு நடித்துத்தான் பார்ப்போமே என்று தோன்றியது. சிம்புவோடு `பத்து தலை' படத்தில் நடிக்கிறேன். பாடல்களைப் பொறுத்தவரை, ‘உன்னைப் போல் ஒருவ’னில் எனக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. நல்ல பாடல்... கமலே பாடியிருந்தார். ஆனால், அந்தப் பாடல் படத்தில் பயன்படுத்தப் படவில்லை. ஆல்பமாக வந்து கவனம் பெறாமல் போய்விட்டது. நாம் தொடர்ந்து பாடல் எழுதலாம் என்று விருப்பத்தோடு இருந்தேன். ஆனால், சினிமாவைப் பொறுத்தவரை நாம் போய்த் தேடினால்தான் வாய்ப்பு கிடைக்கும். எனக்கு இயல்பாகவே அதில் கூச்சம் உண்டு.”

“ரொம்ப நாளாகச் சொல்லி வருகிறீர்கள், நாவல் எழுதுகிறேன் என்று... எந்த அளவில் இருக்கிறது?”

“மலைப்பாக இருக்கிறது. எப்படி உக்கார்ந்து இவ்வளவு எழுதுகிறார்கள் என்று தெரியவில்லை. நான் பத்து, பதினைந்து வரிகள் எழுதுவேன். அதோடு மைண்ட் கட்டாகிவிடும். இப்போது ஆயிரம் பக்கம் வந்தால்தான் நாவல் என்றாகிவிட்டது. என்னால் ஆயிரம் பக்கங்கள் கவிதை எழுத முடியும். அது துண்டு துண்டான மனநிலை. சீட்டு்க்கட்டை கலைத்துப் போடுவதைப் போல... ஆனால், கதை எழுத முடியாது. அது சாரட் வண்டியில் போவதைப்போல போய்க்கொண்டேயிருக்க வேண்டும். என்னால் ஒரு மணி நேரத்துக்கு மேல் அமர்ந்து எழுதவே முடியாது. சின்ன ஃபார்மிலேயே யோசித்துப் பழகிவிட்டேன். நாவல் எழுதுவதற்கென்று கடவுள் சிலரை நியமித்திருக்கிறார். நாம் சிட்டுக்குருவிபோல ஆங்காங்கே பறந்துகொண்டிருக்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.”

“இறுதியாக ஒரு கேள்வி... கலைஞர், ஸ்டாலின் இருவரிடமும் என்ன ஒற்றுமையை உணர்கிறீர்கள்?”

“கலைஞரிடம் பார்த்த அதே கனிவை ஸ்டாலினிடம் பார்க்கிறேன். ரொம்ப அக்கறையுடன் இருப்பார். கலைஞர் எப்போதுமே மனிதர்களைத் தவறவிடவே மாட்டார். யார் கூட இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பார். ஸ்டாலினும் அப்படித்தான் இருக்கிறார். நாம் பேசும்போதே நம் தேவைகளை ஸ்டாலின் மனதில் குறித்துக்கொள்வார். எனக்கு இரண்டு சந்தர்ப்பங்கள் மறக்க முடியாதவை. இதய அறுவை சிகிச்சைக்காக நாள் குறித்துவிட்டு பணமில்லாமல் தவித்து நின்றபோது, மருத்துவமனையின் வரவேற்பறையில் அமர்ந்தபடி ஸ்டாலினுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் அவரின் செயலாளர் அழைத்தார்... ‘உடனடியாக அப்போலோ செல்லுங்கள்... அறுவை சிகிச்சைக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன...’ என்றார். அடுத்த இரண்டு நிமிடங்களில் ஸ்டாலின் அழைத்தார். ‘எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன்... கவலைப்படாதீர்கள்’ என்றார். நேரடியாக மருத்துவமனைக்கு வந்தார்... மருத்துவர்களிடம் பேசினார். சிகிச்சை முடிந்து வீடு செல்லும் நாளன்றும் வந்தார்.

நான் துவரங்குறிச்சியில் இருந்த நேரத்தில் கோவிட் வந்துவிட்டது. அமைச்சர் நேருவுக்கு போன் செய்தேன். ‘நம் ஆஸ்பத்திரிக்கே வந்துவிடுங்கள்’ என்றார். சிறிது நேரத்தில், ஸ்டாலின் அழைத்தார். ‘நான் நேருவிடம் பேசிவிட்டேன்... காவேரிக்கு சென்றுவிடுங்கள்’ என்றார். இதெல்லாம் எளிதாக நடக்குமா... இந்த அளவுக்கு அன்பும் அக்கறையும் கிடைக்குமா... இதெல்லாம் அரசியலுக்கு அப்பாற்றப்பட்டவை. என்னைப்போல் கட்சியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். ஸ்டாலினை வெளியிலிருந்து பார்க்கும்போது கறாரான மனிதராகத் தோன்றும். உள்ளே அவர் வேறு. கனிந்த மனிதர்!